சமூக நீதிக்கு எதிரான - ஊழல் மலிந்த தேசிய தேர்வு முகமை

தமிழில் : விஜயன்

சமூக நீதிக்கு எதிரான - ஊழல் மலிந்த தேசிய தேர்வு முகமை

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. இதில் நீட்தேர்வு உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் மாநில உரிமை மட்டுமே பேசப்படுகிறது. நீட் உள்ளிட்ட தேர்வுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற செந்தளம் நிலைபாட்டிலிருந்து (இணைப்புகள் கட்டுரையின் இடையே கொடுக்கப்பட்டுள்ளன) வாசிக்க வேண்டுகிறோம். செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

தேசிய தேர்வு முகமைதான், ஆனால் மாநிலங்களின் பங்கேற்பும், சமூக நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்

நாடு முழுவதும் 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தமுள்ள 1,08,915 இடங்களில் நமக்கொரு இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்  நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் கனவில், நீட் ஊழல் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் நடப்பதற்கு யார் காரணம்? மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் தேசிய தேர்வு முகமையே இந்த மாபெரும் ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதை சரிசெய்வதற்கு NTA என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறது என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இந்தப் பிரச்சனையை சரிசெய்வதற்கு என்.டி.ஏ.வின் அனுகுமுறை என்ன? முதலில், மையப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்படும் தேர்வுகளில் இதுவரை நாம் வந்தடைந்த அனுபவங்களை விருப்புவெறுப்பின்றி மறுபரிசீலினை செய்ய வேண்டும். மையப்படுத்தப்பட்ட முறையில் நடக்கும் தேர்வுகள் நமது நாட்டில் நீண்ட காலமாக வழக்கில் இருந்து வந்துள்ளது. காலனிய இந்தியாவில் இடைநிலைப் பள்ளித் தேர்வுகளை தரநிலைப்படுத்துவதற்கு சோதனை அடிப்படையில் 1929-ம் ஆண்டு மையப்படுத்தப்பட்ட முறையில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. மேற்குலக நாடுகளின் தரநிலையை அடிப்படையாகக் கொண்டு இவை நடத்தப்பட்டன.

மையப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் சுதந்திரத்திற்கு பிறகு 1952-ம் ஆண்டு இரண்டு முக்கியமான இலக்குகளை மையமாக வைத்து மேம்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகும் இடைநிலைத் தேர்வுகளில் - அன்று உயர்தரமானதாக கருதப்பட்ட - மேற்குலக நாடுகளின் தரநிலையை உறுதி செய்வது முதல் இலக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், இந்த தேர்வு முறை அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்ட நாட்டின் சமத்துவ இலட்சியத்திற்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பின்னாளில் இந்த வாரியம் மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாடு முழுவதுமுள்ள மத்திய அரசின் பள்ளிகளில் பொதுத் தேர்வை நடத்துவதற்கான பொறுப்பும் சி.பி.எஸ்.சி. யிடமே ஒப்படைக்கப்பட்டது.

CBSE-உலகிலேயே மிகப் பெரிய தேர்வு வாரியம்

படிப்படியாக, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்ற பொறுப்பும் CBSE-யிடமே ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல், நாட்டில் பல்வேறு தேர்வுகளை CBSE நடத்தி வருகிறது: AIPMT எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, UG நீட் தேர்வு, தேசிய தகுதித் தேர்வு(NET), மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு(CTET), மத்திய பல்கலைகழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு(CUTET), அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு(AIEEE) – இது 2013ல் ஒருங்கிணைந்த நுழைவுத்(முதன்மைத்) தேர்வு (JEE Mains) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவை மட்டுமல்லாது, உயர் நிலை, மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 2018 வரை CBSE தான் உலகிலேயே மிகப் பெரிய தேர்வு வாரியமாக இருந்தது. பின்னர், 10வது, 12வது வகுப்புக்கான பொதுத் தேர்வைத் தவிர்த்து cbse-யால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் NTA எனப்படும் தேசியத் தேர்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

படிக்கவும் : புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!

படிக்கவும் : சமூக நீதியை ஒழித்து 'காட்ஸ்' நீதியை நிலைநாட்டும் கியூட் (CUET) தேர்வு

CBSE-யால் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் மோசடிகளும், முறைகேடுகளும் பட்டவர்த்தணமாக நடந்து கொண்டிருந்ததைக் காரணம் காட்டியதன் மூலம் அனைத்துத் தேர்வுகளையும் NTA  மூலம் நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. எனினும், இந்தளவிற்கான பிரச்சனை வெடித்த பொழுதும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு தேர்வுகளை நடத்தி வந்த CBSE மீது யாரும் குற்றம் சாட்டவில்லை; யாரும் பொறுப்பேற்கச் சொல்லவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு(UGC), மத்திய அரசின் இடைநிலைத் தேர்வு வாரியம்(CBSE), தில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரும் பல்கலைக்கழகம் போன்ற மத்திய அரசின் பல்கலைக் கழகங்கள் நடத்திய நுழைவுத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில் - NTA நடத்தும் தேர்வுகளில் நடந்தது போன்ற மெகா மோசடிகள், ஊழல்கள் நடக்காதளவிற்கு சரியாகவே கையாளப்பட்டன என்று சொல்லலாம்.

தேசிய தேர்வு முகமையின் தோல்வி

1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயல் திட்டத்தில்தான் முதன்முறையாக NTA என்ற அமைப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்காவில் எப்படி ETS என்ற கல்வித் தகுதித்தேர்வு முகமை செயல்படுகிறதோ அதுபோல தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்படக்கூடிய அமைப்பாக NTA உருவாக்கப்பட வேண்டுமென ஐஐடியின் இயக்குநர் குழு கடந்த 2010-ம் ஆண்டு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. இவ்வாறுதான் வெளிப்பார்வைக்கு ஒரு தன்னாட்சியான அமைப்பாக NTA உருவாக்கப்பட்டது. ஆனாலும், மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாடும் தொடர்ந்தது. இந்த அரசியல் தலையீடு பெரும்பாலும் பாதகமான விளைவுகளையே உண்டாக்கியது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் NTA வின் செயல்பாடுகளை ஆராயம் போது வெளிப்படைத்தன்மையிலும், நம்பகத்தன்மையிலும் அல்லது செயல்திறனிலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. NTAவில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடுகளையே இவை எடுத்துக்காட்டுகின்றன.  பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு(GRE), அந்நிய ஆங்கில மொழித்திறன் தேர்வு(TOFEL) போன்றவற்றை நடத்தும் கல்வித் தகுதித்தேர்வு முகமை(ETS) அல்லது மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வு(GMAT) நடத்தும் மேலாண்மை நுழைவுத் தேர்வு வாரியம்(GMAC) முதலான சர்வதேச தேர்வு முகமைகள் போன்று சுதந்திரமான அமைப்பாக NTAவை உருவாக்குவதாக துவக்கத்தில் சொல்லப்பட்டாலும், சொல்லப்பட்ட இலக்குகளை அடையமுடியாமல் NTA தோல்வியடைந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

நீட் தேர்வுத் தாள் தயாரிப்பதிலும்கூட எவ்வித் தொழில் நிபுனத்துவமும், தொழில் நேர்த்தியும் இல்லாமல் படுமோசமான தவறுகளை NTA இழைத்துள்ளது. எவ்வித தெளிவான வழிகாட்டுதல்களும் இல்லாமல் பலமுறை நீட் தேர்வுகளை தள்ளிவைத்ததைப் பார்க்கும் போது திட்டமிட்ட மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே நாளில் நீட் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்று அவசரகதியில் பல்வேறு குளறுபடிகளுடன் முன்கூட்டியே திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர். நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேர்தல் முடிவுகள் வெளியாகும் சமயத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டதை பார்க்கும் போது, தேர்வில் நடந்த முறைகேடுகளையும், குளறுபடிகளையும் மூடிமறைக்கும் நோக்கம் இருந்திருப்பதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். இதுமட்டுமல்லாது, இதற்கு பின்னால் நீட் கோச்சிங் என்ற பெயரில் பல கோடி இலாபம் சம்பாதிக்கும் நீட் பயிற்சி மையங்களின் லாபி வேலைகளும், கூட்டணிகளும் இருக்கலாம் என்பதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது. 

மாநில அரசுகளின் பங்கேற்பு அவசியம்

ஊழல் தலைவிரித்தாடுகிறது என்ற விசயத்தையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன; ஒட்டுண்ணி முதலாளித்துவ ஆட்சிகளில் இதுபோன்ற விசயங்கள் சர்வசாதரணமான ஒன்றுதான். இதுபோன்ற ஆட்சிகளில் மாநில அரசுகளின் அதிகாரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பறிப்பதற்கும், மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும் எல்லா வழிகளிலும் முயற்சி நடக்கும். உண்மையில் சொல்லப்போனால், நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசே நடத்துவது என்பது கூட்டாட்சி முறையை சீர்குலைப்பதற்கான அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளதென்று பல மாநில உரிமைக்காக போராடும் இயக்கங்கள், சமூக-அரசியல் இயக்கங்கள் கூறி வருகின்றன.

சுருக்கமாக, தேசிய அளவில் நடக்கும் தேர்வுகளில் மாநில அரசுகளின் பங்கேற்பை அதிகப்படுத்துவதென்பது முறைகேடுகளை தடுப்பதற்கு முதற்படியாகவும், முக்கியமான நகர்வாகவும் அமையும். பிராந்திய அளவிலான ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பள்ளிகளையும், மாணவர்களையும் பாதுகாப்பதற்கு மாநில அரசுகளின் தலையீடு அவசியமானதாகும். CBSE, JNU போன்ற நிறுவனங்கள் மாநில அரசுகளின் பங்கேற்பையும், பங்களிப்பையும் அனுமதித்ததன் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட உதவியதை கடந்த காலங்களில் பார்த்துள்ளோம்.

மாநில அரசுகளுடன் கைக்கோர்க்காத வரை நம்பகமான, வெளிப்படைத்தன்மையுள்ள தேர்வு முறைகளை கொண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை. செம்மையாகவும், நேர்த்தியாகவும், வடிவமைக்கப்பட்ட வினா வங்கிகளை அறிமுகப்படுத்துவதும்கூட முக்கியமான விசயம்தான். இவ்வாறு சொல்வதன் மூலம், மாணவர்களின் பகுப்பாய்வு செய்யும் திறனையும், படைப்பாற்றலையும் சோதிக்கும் கேள்விகளுக்கு பதிலாக எந்திரகதியாக மனப்பாடம் செய்து மேலோட்டமாக மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும் என்பது அர்த்தமல்ல. தேர்வு முறைகளை திறன்மிக்கதாக, வெளிப்படைத்தன்மையுடையதாக மாற்ற வேண்டுமெனில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேர்வுகளை கண்காணிக்க வேண்டும்.

மேற்சொன்ன ஆலோசனைகளை NTA கணக்கில் எடுத்துக்கொள்ளுமா? உயர் கல்வித் துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்திலிருந்து சொல்கிறேன், எல்லாப் பிராச்சனைகளையும் கொஞ்சமாவது சரிசெய்வதற்கு மேற்கண்டவைகளைத்தான் முதலில் செய்தாக வேண்டும்.

(கட்டுரையாசிரியர் இராஜன் குருக்கள் பற்றி

கேரள மாநிலத்தின் உயர் கல்விக்கான ஆலோசனைக் குழுவில் துணைத் தலைவராகவும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும், இந்திய அறிவியல் கழகத்தில் வருகைதரு போராசிரியராகவும் இருந்துள்ளார்.)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை : https://theaidem.com/en-the-immediate-need-for-improving-the-national-testing-agency/