குடும்பங்களின் கடன் சுமை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

தமிழில் : சகா

குடும்பங்களின் கடன் சுமை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

டிசம்பர் 2023-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுடன் ஒப்பிடும்போது குடும்பங்களின் கடன்சுமை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடன்சுமையைக் கூட்டிக் கழித்து பார்த்தால் வாங்கிய கடன் போக ஒவ்வொரு குடும்பமும் நமது நாட்டின் GDP அளவில் 5 சதவீதம் மட்டுமே நிதிசார் நிகர சேமிப்பாக (Household’s net financial savings) வைத்துள்ளது. 1947க்கு பிறகு இதுவரை இதுபோன்றதொரு போக்கு வெளிப்பட்டதே இல்லை என்பதை மோதிலால் ஓஸ்வால் என்ற நிதி சேவை வழங்கும் நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் 2023-ல் ரிசர்வ் வங்கியும் இதே போன்றதொரு புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதாவது 2022-23ம் நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் நிதிசார்ந்த நிகர சேமிப்பு(net financial savings) என்பது 5.1 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளதாக கூறியிருந்தது. இங்கு நிதிசார் நிகர சேமிப்பு என்பது பெற்ற கடன் அளவைக் கழித்தது போக எவ்வளவு தொகையை நிதிசார்ந்த வழியில் சேமித்துள்ளனர் என்பதையே குறிக்கிறது.கடந்த 47 ஆண்டுகளில் நிகர சேமிப்பு இந்தளவிற்கு குறைந்ததே இல்லை என்பதே ரிசர்வ் வங்கியின் மதிப்பீடாக உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய நிதியமைச்சகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ‘சேமிப்பு குறைந்ததற்கு காரணம் மக்கள் வாழ்வதற்கே கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்வது தவறு; மாறாக, அசையும், அசையாச் சொத்துக்கள்(real assets),  இன்னப்பிற நிதிசாராத வணிகச் சொத்துக்களை (வீடுகள், வாகனங்கள், தங்கம் - physical assets) வாங்குவதற்காக கடன் பெறுகிறார்கள்; அதன்படி “எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைப்பதற்கான சூழல் பிரகாசமாக இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் கடன் பெறுகிறார்கள்” என்றவாறு நிதி அமைச்சகம்’ தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டது.

2022-23ம் ஆண்டிற்கான தேசிய வருமானத்தின் திருத்தப்பட்ட அறிக்கை இந்தாண்டு(2024) பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. RBI மதிப்பீட்டின்படி நாட்டிலுள்ள குடும்பங்களின் நிதிசார் நிகர சேமிப்பு(net financial savings) (5.1%) என்பது 47 ஆண்டுகளுக்கு பின்னால் போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில்தான் நிதியமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடும் வெளிவந்துள்ளது. அதில் குடும்பங்களின் நிதிசார் நிகிர சேமிப்பு 5.3 சதவீதம் இருப்பதாக கூறப்பட்டிருப்பதை ஒப்புக்நோக்கும்போது இதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். 2011-12 முதல் 2019-20க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் சராசரியாக இருந்த நிதிசார் நிகர சேமிப்பு சதவீதத்தை(7.6%) காட்டிலும் குறைந்துவிட்டதையே திருத்தப்பட்ட மதிப்பீடு எடுத்துக்காட்டுகிறது. குடும்பங்களின் கடன் அளவு(household debt levels) திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சற்று குறைந்துள்ளதாக (38 சதவீதம்) கூறப்பட்டுள்ளது. அதாவது கொரோனா தொற்று பரவிய காலத்தில் (2020-21) 39.1 சதவீத அளவிற்கு குடும்பங்களின் கடன் சுமை இருந்ததென்றால் அதற்கடுத்தபடியாக 2022-23ம் ஆண்டில்தான் இவர்களே ஒப்புக்கொள்ளும் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் குடும்பங்களின் கடன்சுமை GDPயுடன் ஒப்பிடும்போது38 சதவீதமாக இருந்துள்ளது.

பிணையில்லாக் கடன்கள் அதிரிப்பு

“வங்கிகளின் புள்ளிவிவரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது குடும்பங்கள் பெறக்கூடிய கடன்களில் எவ்வித பிணையுமில்லாமல் பெறப்படும் கடன்களே மற்ற கடன்களைவிட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கடுத்தபடியாகத்தான் பிணையுடன் வாங்கப்படும் கடன்களின் அளவு உள்ளது. அதைத்தொடர்ந்து விவசாயக் கடன்களும் தொழில்கடன்களும் இருக்கின்றன” என்று மோதிலால் ஓஸ்வால் நிதியாராய்ச்சி மையத்தை சேர்ந்த நிகில் குப்தாவும், தனிஷா லாதாவும் கூறியுள்ளனர். 

குடும்ப வருமானம் மிக மிகக் குறைவாக அதிகரித்து வருவதுதான் குடும்பங்களின் நிதிசார் நிகர சேமிப்பு விகிதம் இந்தளவிற்கு(5% of GDP)  வீழ்ந்துபோவதற்கு காரணமாக மாறியுள்ளது என்று ஓஸ்வால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானம் அதிகரிக்காத போதும் குடும்பங்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை பெறுவதற்கான செலவினத்தை குறைத்தபாடில்லை. இது மட்டுமல்லாது, வங்கியில் பணமாக(நிதிசார்ந்த வழியில்) சேமிப்பதற்கு பதிலாக அசையும், அசையாச் சொத்துகளிலும்,(physical assets) ஊக வாணிபச் சொத்துகளிலும்(real assets) சேமிப்பது அதிகரித்துள்ளது என்பதை அவர்களது அறிக்கையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.

2022-23-ம் நிதியாண்டின் நிலைமை இப்படியிருந்ததென்றால் அதற்கடுத்த நிதியாண்டிலும் இதே போக்கு தொடர்வதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது என்பதே ஓஸ்வால் நிறுவனத்தின் மதிப்பீடாக இருக்கிறது. முதல் ஒன்பது மாதங்களில் (2023-24) நிதிசார் நிகர சேமிப்பு விகிதத்தில்(5%) எவ்வித மாற்றமும் இருக்கவில்லை.  முழு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வந்தாலும்கூட சேமிப்பு விகிதம் 5 முதல் 5.5 சதவீதத்திற்குள்ளாகத்தான் இருக்கும். இதன் விளைவாகத்தான் குடும்பங்களின் தனிப்பட்ட நுகர்வக்கான செலவினமும், குடும்பங்களின் முதலீட்டு போக்கும்கூட சென்ற நிதியாண்டில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது என்று ஓஸ்வால் நிறுவனம் கூறியுள்ளது.

நிதிசார் நிகர சேமிப்பின் நிலைமை(net financial savings)  இதுவென்றால் குடும்பங்களின் மொத்த சேமிப்பின்(நிதிசார்ந்த + நிதிசாராத; Gross savings) நிலைமையும் மக்களின் கையறு நிலையை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. அதாவது 2022-23ம் நிதியாண்டில் குடும்பங்களின் மொத்த சேமிப்பு(Household Gross savings) விகிதம் நாட்டின் GDP மதிப்பில் 10.5 சதவீதமாக இருந்ததென்றால் சென்ற நிதியாண்டின்(2023-24) முதல் ஒன்பது மாதத்தில் 10.8 சதமாக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த சேமிப்பு 0.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டாலும், குடும்பங்களின் கடன்சுமையும் 0.3 சதம் அதிகரித்து 5.8 சதவீதமாக இருக்கிறது. கூடவே, 2022-23ம் நிதியாண்டில் புதிதாக வாங்கிய கடன்களின்(Households’ annual borrowings) அளவும் 5.8 சதம் அதிகரித்திருக்கிறது. 1947க்கு பிறகு இவ்வாறு இரண்டாவது முறையாக நிகழ்கிறதென்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாதளவிற்கு நிதி மூலதனம் அல்லாத அசையும் அசையாச் சொத்துக்களை வாங்குவதன் மூலம் குடும்பங்களின் நிதிசாரா சேமிப்பு விகிதம்(physical savings) ஒருபுறம் அதிகரித்திருப்பதை ஒப்புக்கொள்ளும்போது, குடும்பங்களின் மொத்த சேமிப்பு (நிதி சார்ந்த+ நிதி சாராத) விகிதம் (18.4%) ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் சென்றுவிட்டதையும் நம்மால் ஒப்புக்கொள்ள முடியும்.

குடும்பங்கள், தொழில் நிறுவனங்கள், அரசாங்கம் உள்ளடங்கிய ஒட்டுமொத்த நாட்டின் சேமிப்பு (GDS) விகிதம்கூட 2013-14 முதல் 2018-19க்கு இடைப்பட்ட காலத்தில் 31 முதல் 32 சதவீதமாக இருந்ததென்றால் 2022-23ம் நிதியாண்டில் 30.2 சதமாக குறைந்துள்ளதாக ஓஸ்வால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளளது. குடும்பங்களின்நிதிசார் நிகர சேமிப்பு(Household’s net financial savings) விகிதம் எவரும் ‘எதிர்ப்பார்ககதளவிற்கு கடுமையாக’ வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையே இந்த அறிக்கை அழுத்தமாக பதிவு செய்ய முனைந்துள்ளது.

- சகா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/business/Economy/households-debt-surged-to-fresh-high-by-december-2023-report/article68044023.ece?fbclid=IwAR1FiFMgPMihMWB_EPbZ5PA-XF6kGUqxwSfrL_Wh2BKo54oA7Ya53vNbHEU