குறைகடத்தி உற்பத்தியில் கார்ப்பரேட்களின் கூட்டுக்கொள்ளைதான் ஆத்ம நிர்பாரா?
அனில் அகர்வால் (வேதாந்தா குழுமத்தின் முதலாளி) டிவிட்டரில் சென்ற மாதம் “இதோ இந்தியாவில் ஒரு “silicon valley” உருவாகிவிட்டது. 1.54 லட்சம் கோடிகள் என்ற அளவில் இந்திய வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் செய்யத் துணியாத முதலீடுகளை வேதாந்தாவும் – ஃபாக்ஸ்கானும் செய்துள்ளது. இந்தியாவில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுவிட்டது என்று தனக்கேயுரிய தரகு – ராகத்தில் பல்லவிப் பாடிச் சென்றுள்ளார்.
நாட்டின் குறைகடத்தி தொழில் உற்பத்தியில் ஏகபோக உரிமையைப் பெற்றுள்ள வேதாந்தா, கார்ப்பரேட் நிறுவனம் - ஃபாக்ஸ்கான் நிறுவனத்தோடு ஒட்டுண்ணித்தனமான ஊக ஒப்பந்தக் கூட்டணியில் கைகோர்த்துள்ளது. 20 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் துவங்கப்படவுள்ள இந்த ஊக தொழில் நடவடிக்கைக்கு சரிபாதி அளவிலான நிதியுதவியை ஊக்கத்தொகை என்ற பெயரில் 10 பில்லியன் டாலர்கள்(76,000 கோடி) வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது “அரசியல் ஒர் சாக்கடை” என்று வெகுமக்களால் தூற்றப்படுவதெல்லாம் ஆளும் வர்க்க அரசியலை தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் பல மாதங்களாக நடந்து வந்த அரசியல் நாடகத்தின் பின்னால் இருப்பது வேதாந்தாவும் - ஃபாக்ஸ்கான் நிறவவனங்களே என்பது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே பாஜக – சிவசேனை கூட்டணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்பட்ட போது ஃபாக்ஸ்கான் நிறவனம் தங்களது மாநிலத்தில் தொழில் தொடங்கும் வகையில் புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. 2019 ல் உத்தவ் தாக்கரே தலைமயில் பாஜகவை ஒதுக்கிவிட்டு பிற மாநிலக் கட்சிகளுடன் சிவ சேனை ஆட்சியமைத்தது. அந்தக் கூட்டணி முறிவுக்கு பிறகு பல்வேறு முதலீடுகள், ஜிஎஸ்டி இழப்பீடகள், கொரோனா பேரிடர் எனப் பற்பல விசயங்களில் மத்திய பாஜக அரசும், மகாராஷ்டிர சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசும் பெருமளவில் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வந்தனர். வழக்கம் போல பிஜேபியின் குதிரை பேர செயல்தந்திரத்தின் மூலமும், மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படும் மாநில ஆளுநர்களைக் கொண்டும் பெரும்பான்மையில்லாத உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்துவிட்டது. அவ்வகையில் மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி சென்ற ஜீலை மாதம் கவிழ்ந்தது. பிறகு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து சென்று பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சியமைத்தனர். இந்த ஆட்சிமாற்றத்திற்கான சதிவேலைகள் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் திரைமறைவில் முன்பு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) அமலுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் உத்தவ் தாக்கரே அரசு ஈடுபட்டது. ஏனெனில் ஏற்கனவே இந்த தரகு மூலதன கும்பல்களுக்கு சேவகம் செய்ய தெலுங்கானாவும், கர்நாடகாவும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தது. அவ்வாறு இருந்தபோதிலும், குஜராத் தேர்தல் நடக்கவிருப்பதை கணக்கில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த முதலீட்டிற்கான திட்டச் செலவு(Project Cost) மற்றும் மூலதனச் செலவு (Capital Cost) என எந்தவொரு செலவிற்கும் 50% ஊக்கத்தொகை வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து குறைகடத்தி தொழில் நிலையத்தை குஜராத்தில் தொடங்குவதாக தரகு மூலதன கும்பல்களான வேதாந்தாவும் – ஃபாக்ஸ்கானும் அறிவித்தது. இந்த ஒப்பந்தம் மகாராஷ்டிர மாநில அரசிடமிருந்து குஜராத் அரசின் கைக்கு மாறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவே மோடி அரசு அம்மாநிலத்தின் அரசாங்கத்தையே கலைத்துள்ளது. எதிர்கட்சிகளிடமும், மக்களிடமும் வரும் எதிர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் “தாங்களும் அந்த கார்ப்பரேட்களுக்கு 39,000 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இருந்தபோதிலும் குஜராத் அரசின் ஊக்கத்தொகை மட்டுமலலாது இன்ன பிற சலுகைகளையும் ஏற்று அங்கு சென்றுவிட்டார்கள். எனினும் நான் மோடிஜியிடம் நேரடியாக சென்று பேசியிருந்தேன். 20 பில்லியன்(1.5 லட்சம் கோடிக்கு மேல்) டாலர்கள் மதிப்பிலான தொழில் துவங்குவதற்கான திட்டங்களை மகராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்குவதாக அவர் உத்திரவாதம் அளித்துள்ளார்” என்று தற்போது முதலமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
75 ஆவது சுதந்திர ஆண்டுவிழாவின் நிகழ்ச்சியில் பேசிய போது ஆத்மநிர்பார் என்றும் தன்னிறைவு இந்தியா என்றும் நிதி மூலதன கும்பல்கள் போட்டுத்தந்த மெட்டுக்கேற்ப மோடி தாளம் போட்டிருந்தார். மேலும், அந்த தாளத்திற்கேற்ப அனில் அகர்வால் (வேதாந்தா குழுமத்தின் முதலாளி) டிவிட்டரில் சென்ற மாதம் “இதோ இந்தியாவில் ஒரு “silicon valley” உருவாகிவிட்டது. 1.54 லட்சம் கோடிகள் என்ற அளவில் இந்திய வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் செய்யத் துணியாத முதலீடுகளை வேதாந்தாவும் – ஃபாக்ஸ்கானும் செய்துள்ளது. இந்தியாவில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுவிட்டது என்று தனக்கேயுரிய தரகு – ராகத்தில் பல்லவிப் பாடிச் சென்றுள்ளார்.
உலகில் உள்ள இயற்கை வளங்களில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தனவைகளாக உள்ள, அலுமினியம், துத்தநாகம்(Zinc),காரீயம்(lead), வெள்ளி(silver), கச்சா எண்ணெய், எரிவாயு, இரும்புத் தாது(Iron ore), எஃகு(steel), தாமிரம், மின்னாற்றல், நிக்கல்(Nickel), இரும்பைக் கொண்டு ஆக்கப்படும் கலப்பு உலோகங்கள்(Ferro alloys), ஒளியிழைகள்(Optical fibres), கண்ணாடி பொருட்களைக் கொண்டு செய்யப்படும் காட்சியகங்கள்(Glass displays), குறைகடத்திகள் முதலான அனைத்து மூலப்பொருள்களின் உற்பத்தி அரங்கையும்(sphere of production) தனது பிடியில் வைத்துள்ள கார்ப்பரேட்டாக அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் இருந்து வருகிறது. இறுதியாக சொல்லப்பட்ட கண்ணாடி காட்சியகங்கள், குறைகடத்திகள் உற்பத்தியில் ஒன்றுகுவிப்பை கொண்டு வருவதற்கே குஜராத்தை விருந்தாக படைத்துள்ளது இந்த மோடி அரசாங்கம்.
கார்ப்பரேட்டுகள் என்ற சொல்லாடலே மேற்சொன்னது போன்று முதலாளித்துவ தொழிற் உற்பத்தியின் அத்துனை வாழ்வுத் துறையிலும் ஈடுபடக்கூடிய தொழிலகங்கள்(Factories), தொழிற்சாலைகள்(Industries), தொழிற்நிலையங்கள்(Enterprises), தொழிற்கட்டுகள்(Firms) என்பன போன்ற அனைத்து கம்பெனிகள்(companies), துணை நிறுவனங்கள்(subsidiaries) ஒருங்கிணைந்த நிதி/வங்கி மூலதனக் கும்பல்களுடன்(financial consortiums) ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ள பரஸ்பர தொடர்பை அடையாளப்படுத்தக்கூடிய ஏகபோகங்களின் தொகுதியையே(syndicates or cartels) குறிக்கிறது. இதையே இன்றைய தரகு வர்க்க அறிவுஜீவிகள் conglomerate என்ற பெயரில் வணிக/தொழில் கூட்டிணைப் பேரமைப்பு என்றும், வேறு வேறான பல அமைப்புகள் சேர்ந்தமைந்த ஒரு பெரிய கூட்டு நிறுவனம் என்றவாறு ஏகபோக நிதி மூலதன கும்பல்கள் இருப்பதையே மூடிமறைக்கும் வகையில் நீர்த்துப்போன வரையறையை வழங்குகிறார்கள்.
மேலும் இந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் கூட தைவான் நாட்டைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டாலும் அதில் உள்ள பெரும்பாலான பங்குகள் அமெரிக்கா, சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி நாட்டைச் சேர்ந்ததாகவும், அந்நாடுகளுக்கே பெரும்பாலான ஏற்றுமதிகளைச் செய்து வருவதாகவும் இருக்கிறது. இப்படி ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் என்பது பல நாடுகளைச் சேர்ந்த நிதி மூலதன கும்பல்களில் ஒருங்கிணைந்த மறுஉருவகமாகவே இருந்து வருகிறது.
ஏகாதிபத்திய விருந்திற்கு இந்திய நாட்டை படையல் போடுவதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினரே என்பதை மீண்டும் குஜராத்தில் நிரூபித்துள்ளனர், “Gujarat Semiconductor Policy - குஜராத் குறைகடத்திகள் கொள்கை, 2022 – 2027” என்ற ஒன்றை சென்ற ஜீலை மாதத்தில் அவசரகதியில் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த கொள்கையின் படி, தொழில்நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் மொத்த நிலங்களில் முதல் 200 ஏக்கர் நிலங்களுக்கு சந்தையில் விற்கப்படும் விலையில், கால்வாசி விலைக்கே கையகப்படுத்திக் கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. 1000 லிட்டர் நல்ல தரமான தண்ணீர் வசதியை 5 ஆண்டுகளுக்கு 12 ரூபாய் கொடுத்து உறிஞ்சிகொள்வதற்கு வகைசெய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை நிலையான(fixed price) 2 ரூபாய் விலைக்கு சூறையாடிக் கொள்ளலாம். குத்தகைக்கோ, விலைக்கோ வாங்கப்படும் எந்த ஒரு நிலத்திற்கும் முத்திரை தாள் வரி(Stamp duty) என்பது 100% “ஓசி”யாக பெறும் வகையில் விலக்களிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தை உறிஞ்சி கொழுக்கும் ஒரு அட்டையை போல இந்த “ஓசிகள்” பொதுவாக மனித வளத்தையும், இயற்கை வளத்தையும், கார்ப்பரேட்டுகள் உறிஞ்சி கொழுப்பதற்கு அளிக்கப்பட்டவை என்றாலும் வேதாந்தா – ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு கூடுதலாக பல சலுகைகளை மோடி அரசும், பாஜகவும் தந்துள்ளது. சிப்புகளை(chips) தயாரிக்கும் ஆலைகள் அதிகமான அளவிற்கு மின்சாரத்தையும், நீராதாரங்களையும் சுரண்டிவிடும் என்பது கார்ப்பரேட் உலகுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாகும். அவ்வகையில் ஒரு நாளைக்கு மட்டும் 40 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சிவிடும் என ராய்ட்டர்ஸ் செய்தி தளத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது 3,00,000 மக்கள் தொகை வாழக்கூடிய ஒரு நகரத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுமோ அதை இந்த ஆத்மநிர்பார் தரகு - முதலாளி மட்டுமே எடுத்துக்கொள்கிறான். மேலும், இவனுக்கு 1000 ஏக்கர் (405ஹெக்டர்கள்) நிலம் “ஓசி”யில் தரப்பட்டுள்ளது(99 ஆண்டு குத்தகைக்கு).
கார்ப்பரேட்டுகளின் Joint venture என்ற கூட்டுக் களவானித்தனத்தை, கூட்டுக் கொள்ளையை, ‘கூட்டு முயற்சி’ ‘ஆத்மநிர்பார்’ என்று சொல்வதையும், ஒட்டுண்ணித்தனமான ஊக மூலதனத்தை துணிகர மூலதனம்(Venture capital) என்று மார்தட்டிக்கொள்கிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு