செலவு உங்களது - ஆலை எங்களது : மைக்ரான் சிப் நிறுவனம்

தமிழில்: விஜயன்

செலவு உங்களது - ஆலை எங்களது : மைக்ரான் சிப் நிறுவனம்

குஜராத் சிப் தொழிற்சாலை; 70% செலவு இந்தியாவுடையதாம், ஆனால் ஆலை மைக்ரான் நிறுவனத்திற்குரியதாகுமாம் – விநோதமான வியாபார மாடல் 

பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு விஜயம் செய்த போது மைக்ரான் நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டதாக அறிவிப்பு வந்தது. இந்திய சிப் தயாரிப்பு தொழிற்துறையில் புதிய விடியல் என்றும், தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் பாய்ச்சல் என்றெல்லாம் தலைப்புச் செய்திகள் வெளிவந்தன. சிப் தயாரிப்பதற்கு இன்றியமையாத தொழில்நுட்ப திறன்களை இந்தியா கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை எந்த தலைப்புச் செய்திகளும் கூறுவதற்கு மறுத்துவிட்டன. மேலும், தயாரிக்கப்பட்ட சிப்புகளில் பழுது இருக்கிறதா என சோதிப்பது, அச்சிட்ட மின்சுற்றுப் பலகையில்(PCB) பொருத்துவது, பாதுகாப்பாக இருக்கும் வகையில் பேக்கிங் செய்வது போன்ற கீழ் நிலையிலான வேலைகள் செய்து தருவதற்காகவே மைக்ரான் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்ற உண்மையை  தொழிலநுட்ப அறிவுள்ள எந்தவொரு நபராலும் புரிந்துகொள்ள முடியும். சிப் வடிவமைப்பு, உருவாக்கம் போன்ற அடிப்படையான திறன்களை பயன்படுத்துவது பற்றியோ அல்லது சிப் தயாரிப்யதற்கென்றே உள்ள விசேச லித்தோகிராபிக் இயற்திரங்களை பயன்படுத்துவது பற்றியோ இந்த வியாபாரம் ஒப்பந்தம் பேசவில்லை.

மேற்குலக நாடுகள் மற்றம் ஜி-7 நாடுகளுடன் சேர்ந்து சட்டத்திற்கு உட்பட்டு உலக ஒழுங்கமைவை பின்பற்றுவதற்கு மறுத்ததற்காகவோ அல்லது ரஷ்யா மீது தடை விதிக்க மறுத்ததன் காரணமாகவோ அமெரிக்கா – இந்தியாவிற்கு இடையிலான உறவு சுமூகமாக செல்லவல்லை. மேற்குலக நாடுகளே உலக ஒழுங்கமைவிற்கான சட்டவிதிகள் அனைத்தையும் வகுக்கின்றன என்பது வேறு கதை. இந்திய பிரதமர் மோடியும் சரி, அமெரிக்க அதிபர் பைடனும் சரி கடுமையான போட்டியின் கீழ் தேர்தலை தங்களது நாடுகளில் சந்திக்க உள்ளனர். எனவே, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவை உடனடியாக சீராமைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தியாவின் முக்கியத் துறைகளுக்கு வேண்டிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து பெறுவதன் மூலம் புதிய இந்தியாவின் உதயத்தை அறிவிக்க வேண்டிய தேவை மோடிக்கு உள்ளது. சீனாவிலுள்ள அமெரிக்க தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளியேறுவதோடு, சீன சந்தையை விட்டே வெளியேறுவது என்ற நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சீனாவை அதிகம் சார்ந்திருப்பதால் வரக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான கருவியாகவும் இந்தியா விளங்கும் என பைடன் நம்புகிறார்.

தொழில்நுட்பம் என்பது பணமிருந்தால் உலக நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ளக்கூடிய பண்டமல்ல என்பதை காலம்போன காலத்தில் தற்போதாவது மோடி புரிந்து கொள்ளத் துவங்கியுள்ளார் எனலாம். வணிக நிறுவனங்களின், உலக நாடுகளின் அறிவுப் பொக்கிஷமாகவே தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இன்று, நாம் பயன்படுத்தும் சலவை இயந்திரம் முதல் விலையுயர்ந்த விமானங்கள் வரை, போர்க்களம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை என எல்லாமே மின்னணு சாதனங்களையே சார்ந்து உள்ளன. உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும், விலை குறைந்த ட்ரோன்கள் மட்டுமல்லாது விலையுயர்ந்த போர் விமானங்கள் மற்றும் ஏவுகனைகள் என அனைத்திலும் சில டாலர்கள் மதிப்பிலான சிப்புகளே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் டாங்கிகளும், துப்பாக்கிகளும் கூட ஏவுகனைகள் மற்றும் ட்ரோன்களுடன் சேர்ந்து இயக்கப்படும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேடார்கள் மற்றும் சேட்டிலைட்டுகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு அதிநவீன வழியில் போர் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட எந்த தொழிலைக் எடுத்துக்கொண்டாலும் சரி, எந்தவொரு சாதனங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, எல்லா சாதனங்களிலும் நவீன எலக்ட்ரானிக் சிப்புகளே “மூளை” யாக செயல்படுகிறது.

உலக அரங்கில் எந்த நாடுகளையும் இந்தியா சார்திருக்கக்கூடாது என விரும்பினால், தங்கள் நாட்டில் உள்ள மின்னணுத் துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவதற்கு துவங்க வேண்டும். புதிய தலைமுறை சிப்புகளை உருவாக்கும் வகையில் மின்னணுத் தறையின் திறனை மேம்படுத்துவது மிக முக்கியமான விசயமாகும். இப்போதே முடியாதென்றாலும், கூடிய விரைவில் மேம்படுத்துவதற்கான பணியில் இறங்க வேண்டும். மொகாலியில் நாம் உருவாக்கியிருந்த சிப் தயாரிக்கும் நிலையத்தை இழந்த பிற்பாடு மற்றொன்றை உருவாக்க தவறிய போது ஓர் அரிய வாய்ப்பை இழக்க நேரிட்டது. எனவே இப்போதே அதற்கான வேலையில் இறங்குவதே சரியானதாக இருக்கும். மின்னணுத் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய கருவியாக இருந்த மொகாலி நிலையம் மர்மமான முறையில் 1989-ல் தீக்கிரையாகியது. 

மைக்ரான் நிறுவனத்துடனான வியாபாரம் ஒப்பந்தம் என்பது என்ன? மைக்ரான் என்பது சிப் தயாரிப்பில் ஈடுபடுக்கூடிய ஒரு பகாசுர நிறுவனமாகும். சிப் தயாரிப்பின் மூலமாகவே இந்நிறுவனம் குறைகடத்தி தொழில்துறையில் உலகளவில் ஒரு முன்னணி நிறுனமாக வளர்ச்சி பெற்றது. இதுவரை சிப் தயாரிப்புத் தொழிலே செய்யாத பாக்ஸ்கான் நிறுவனத்துடன் சேர்ந்து வேதாந்தா நிறுவனம் சிப் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு பெரும் ஆரவாரத்தோடு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு ஒப்பிடுகையில் திறன்பெற்ற மைக்ரான் நிறுவனம் இந்தியாவில் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை துவங்கவிருப்பதாக அறிவித்திருப்பது நல்ல விசயம்தான். ஆனால், மைக்ரான் நிறுவன சிப் தயாரிப்பதற்கான(fabrication) தொழிற்சாலையை நிறுவப் போவதில்லை. மைக்ரான் நிறுவனத்தால் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து “சோதிப்பது, பேக்கிங் செய்வது, PCB போர்டுகளில் பொருத்துவது” போன்ற ஒட்டு வேலைகளை, பொட்டலம் போடும் வேலைகளை மட்டுமே குஜராத்தில் அமையவிருக்கிற தொழிற்சாலையில் செய்யப்போவதாக கூறியுள்ளது. அமெரிக்காவிலும், சீனாவிலும் உள்ள மைக்ரான் நிறுவனத்தின் சிப் தயாரிப்பு நிலையத்தில் உருவாக்கப்படும் சிப்புகளுக்கான ஒட்டு வேலைகள், பொட்டலம் போடும் வேலைகள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும். உள்நாட்டில் சிப் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதுதான் இந்தியாவின் இலட்சியமென்றால், மைக்ரான் நிறுவனத்துடனான இந்த வியாபார ஒப்பந்தம் நிச்சயமாக அதை செய்யப்போவதில்லை. சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தில், எங்கோ தயாரிக்கப்பட்ட சிப்புகளுக்கான ஒட்டு வேலைகள், பொட்டலம் போடும் வேலைகளுக்கு தேவைப்படும் கீழ் நிலையிலான தொழில்நுட்பங்களை மட்டுமே இந்தியா பெறுவதற்கு வாய்ப்புள்ளது. நாம் அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளோடு போட்டி போடுவதற்கு மாறாக மலேசியா போன்ற நாடுகளுடன் போட்டி போடவிருக்கிறோம். மற்ற நாடுகளுக்கு இதுபோன்ற வேலைகளை செய்து தருவதில் உலகளவில் 13 சதவீத சந்தையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நாடாக இருக்கும் மலேசியா இத்துறையில் நம்மைவிட வெகுதூரம் முன்னேறியுள்ளது என்றே கூற வேண்டும். சிப் தயாரிப்பில் கீழ்மட்ட தொழில்நுட்பங்களை கொண்டு செய்யும் பணிகளை மலேசியா, இந்தியா போன்று நாடுகளுக்கு இடமாற்றும் அதே வேளையில் வாசிங்டனில் உள்ள கிளே(clay) நகரில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீட்டில் ஒரு பிரம்மாண்டமான சிப் தயாரிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம் அதிநவீன சிப் தொழில் நுட்ப வளர்ச்சியை அமெரிக்காவில் உக்குவிப்பதே அமெரிக்க கம்பனிகளின் திட்டமாகும். சீனாவுடனான சார்புத் தன்மையை குறைப்பதற்கான இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே நேற்று மலேசியாவில் இதுபோன்ற ஆலைகளை அமைத்தனர். இன்று இந்தியா அதற்கான களமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அவ்வளவே.

மைக்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதையும், அதை யார் தரப்போகிறார்கள் என்பதையும் பார்ப்போம். இந்த ஆலையை நிறுவுவதற்கு மொத்தமாக 2.75 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் மானியமாக 50 சதவீத செலவையும், குஜராத் 20 சதவீத செலவையும் ஏற்கும் என கூறப்படுகிறது. முதலீட்டிற்கான மொத்த செலவில் மீதமுள்ள 30 சதவீத பணத்தை மட்டுமே மைக்ரான் வழங்கவிருக்கிறது. வெறுமனே 0.825 டாலர்கள் மட்டுமே செலவு செய்து, 2.75 டாலர்கள் மதிப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலை முழுவதையும் மைக்ரான் நிறுவனம் தனியுடைமையாக்கிக் கொள்கிறது என்பதே இதன் அர்த்தமாகும். மின்னணுத் தொழிற்துறை சார்ந்த தகவல்களை வழங்கக்கூடிய eeNews Europe போன்ற இணையதள பத்திரிகைகள் கூட “மட்டுமீறிய அளவில் மானியம்” ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். கர்நாடக தேர்தலில் மோடி பிம்பம் நொறுங்கியது, கலவர பூமியாக உள்ள மணிப்பூரில் அமைதி மலரவில்லை; கிழிந்த முகத்திரையை ஒட்டவைப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. மோடியின் சகாக்கள் அவரின் உத்தமர் வேடத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகவே இவ்வாறு செய்து வருகின்றனர். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் உள்ள அதிநவீன தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மைக்ரான் சிப்புகளுக்கு ஒட்டு வேலைகள், பொட்டலம் போடும் வேலைகளை பார்ப்பதற்காகவே அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமீறிய அளவில் மானிய வழங்கப்படுகிறது. இவையனைத்தும் கீழ் நிலையிலான தொழில்நுட்பங்களை பெறுவதற்காகவே என்பதே இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயமாகும்.

தொழில்நுட்பங்களை பெறுவதற்கும், தொழிற்சாலைகளை அமைப்பதற்காக மானியத்தை இந்தியா மட்டும் வாரி வழங்கவில்லை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் வழங்குகின்றன. சிப் தயாரிப்பு மற்றும் பிற அடிப்படையான பணிகளை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் 52 பில்லியன் டாலர்கள் மானியமாக வழங்கி வருகிறது. தேசிய நிதி மற்றும் சிப் தொழிற்துறை வளர்ச்சிக்கான தேசிய நிதி என பெரும் முதலீடுகளை செய்வதற்கு சீனாவில் இரண்டு பெரிய நிதியாதாரங்களை உருவாக்கி வைத்துள்ளனர். அவ்வகையில் சீன அரசாங்கம் சிப் தயாரிப்பு தொழிற்துறையில் 73 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுமே மின்னணுத்துறையில் புதிய தலைமுறை சிப்புகள் மற்றும் சாதனங்களை தயாரிப்பது, கணினியைப் பயன்படுத்தி சிப் வடிவமைப்பதற்கான உபகரணங்கள்(CAD tools), சிப்புகளில் மிக நுண்ணிய அச்சுகளை வரையக்கூடிய லித்தோகிராபிக் இயந்திரங்கள் உள்ளிட்ட பல அதிநவீன  தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதற்காகவே முதலீடு செய்துள்ளன. இந்நாடுகள் ஒட்டுவேலைகள், பொட்டலமிடும் வேலைகளை பார்ப்பதற்காக பெரிதாக முதலீடு செய்யவில்லை(வெறுமனே 5 சதவீதம்) என்றே கூறலாம். இதற்காக மானியம் வழங்கினாலும் கூட மிகக் குறைவாகவே வழங்குவார்கள், மொத்த முதலீட்டில் சிறு துண்டை மட்டுமே வழங்குவார்கள். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தி தளத்தில் கூறப்பட்டிருந்த தகவல் ஒன்றை யாகூ பைனான்ஸ் செய்தி தளம் மேற்கோள்காட்டியிருந்தது. அதாவது 190 சீன நிறுவனங்களுக்கு 1.75 பில்லியன் டாலர்களை வழங்கிய சீனா, அதில் தோராயமாக 20 சதவீதத்தை சீனாவின் முன்னணி சிப் தயாரிக்கும் நிறுவனமான SMICக்கே வழங்கியுள்ளது என கூறப்படுகிறது.

சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டுவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. எனவே, தனது இலட்சியத்தை அடைவதற்கு கடினமாக முயன்று உடனடியாக சிப் தயாரிப்பு தொழிற்துறையை துவக்கியாக வேண்டும். இதைச் சரியாக செய்ய வேண்டுமெனில், எதில் முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, எப்போது முதலீடு செய்வது போன்றவை குறித்தான சரியான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். மீண்டும் பழைய திட்டமிட்ட பொருளாதார முறைக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை. பொருளாதாரத்தை திட்டமிடுவது என்றாலே “சோசலிசம்”தான் என பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாடுகளுமே அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுப்பதற்கு திட்டங்களை தீட்டுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படை சக்தியாக விளங்கக்கூடிய மக்களையும் சேர்த்து பயிற்றுவிப்பது என்றே ஒவ்வொரு நாடுகளும் திட்டமிடுகின்றன. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மனம்போன போக்கில் எந்த கம்பனி முதலில் வருகிறது, அவர்கள் என்ன தருகிறார்கள் என்பதை வைத்து மட்டுமே தீர்மானிக்கக் கூடாது. மாறாக, நம் இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான வழி எது, அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வைத்தே திட்டமிட வேண்டும். 70 சதவீத அளவிற்கான பணத்தை கொடுப்பது மட்டுமல்லாது, நம் நிலம், நம் நாட்டின் மலிவான கூலி உழைப்பு என அத்தனையும் கொடுத்து அமைக்கப்படும் தொழிற்சாலையை ஒரு அமெரிக்க நிறுவனமே முழு நிலையத்திற்கும் உடைமையாளராக மாறுவது மட்டுமல்லாது சிப் தயாரிப்பில் கீழ் நிலையிலான வேலைகளை செய்வதற்கான தொழில்நுட்பத்தை மட்டுமே வழங்கப்போகிறது. அதாவது மலேசியா போன்ற நாடுகள் நம்மை விட வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்ட துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை நமக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்டு போடப்பட்டுள்ள இந்த வியாபார ஒப்பந்தம் உடைந்துபோன மோடி பிம்பத்தை ஒட்டவைப்பதற்கான வேலையே தவிர வேறில்லை.

Newsclick மற்றும் Globetrotter முதலான செய்தி நிறுவனங்களின் பங்களிப்புடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது

(கட்டுரையாளர் – பிரபிர் புர்கயஸ்தா)

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.counterpunch.org/2023/07/07/india-will-pay-70-of-cost-but-micron-will-own-100-of-the-plant-a-curious-business-model/?fbclid=IwAR0W_s2oD_7btHfCS24ienf4vg_FYS6DuPoHOTz-lkrQNR2Dzi1YDQEw9KQ