இந்தியாவின் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் அமெரிக்கா

தமிழில்: விஜயன்

இந்தியாவின் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் அமெரிக்கா

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடை குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் WTOவில் கேள்வி எழுப்பியுள்ளன

கோதுமை மற்றும் பாஸ்மதி அல்லாத சன்னரக  வெண்ணிற அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா எவ்வளவு காலம் நீட்டிக்கவிருக்கிறது என்பது பற்றி உலக வர்த்தக கழக்கத்தின் விவசாயக் குழு கூடி விவாதிக்கயிருக்கிறது. இந்தத் தடையை இந்தியா எப்போது முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது அல்லது இத்தடைக்கு ஏதேனும் கால அவகாசம் உள்ளதா போன்றவை குறித்து இந்தியாவிடம் இக்குழு விளக்கம் கேட்கவிருப்பதாக தெரிகிறது. இந்த தடை மற்ற நாடுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது மட்டுமல்லாது உலகளவில் உணவு வர்த்தகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இக்குழு விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2023 இல், பாஸ்மதி அல்லாத சன்னரக வெண்ணிற அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா அறிவித்தது. உலக வர்த்தக கழகத்தில் அங்கம் வகிக்கக்கூடிய  சில நாடுகள் இந்தியாவின் இத்தடைக்கான காரணம் கேட்டு குடைத்தெடுத்துள்ளன. இந்தியா மீண்டும் அரிசி ஏற்றுமதியைத் தொடங்க வேண்டும் என்று அந்நாடுகள் அழுத்தமாக கூறத் தொடங்கிவிட்டன. கோதுமை மற்றும் குருனை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது குறித்தும் அப்பொழுது கேள்வி எழுப்பப்பட்டது.

செப்டம்பர் 27-28 தேதிகளில் நடைபெறும் உலக வர்த்தக கழகத்தின் கூட்டத்தில் இந்தக் கேள்விகளுக்கு இந்தியா தரப்பிலிருந்து பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களின் விவசாயக் கொள்கைகள் குறித்து பேசுவார்கள்.

அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாஸ்மதி அல்லாத சன்னரக வெண்ணிற அரிசி ஏற்றுமதிக்குக்கு தடை விதித்தது ஏன் என்று இந்தியாவிடம் கேள்வி எழுப்பியுள்ளன. இந்திய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அரிசி தாணிய கையிருப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதே அவர்களின் முதன்மையான வாதமாக இருந்தது. இந்திய நாளிதழ்களில் வந்த செய்திகளை இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டில்(2023-2024 ) இந்தியாவில் 134 மில்லியன் டன் அளவிற்கு அரிசி உற்பத்தியும், 36 மில்லியன் டன் அளவிலான அரிசி தாணியக் கையிருப்பும் இருக்குமென்று அமெரிக்க விவசாயத் துறை அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி பேசியுள்ளனர். இந்திய மக்களின் அரிசி தானியத் தேவை எவ்வளவு? அரிசி தானியக் கையிருப்பாக இந்தியாவிடம் எவ்வளவு உள்ளது? என்பன போன்ற கேள்வுகளும் எழுபப்பட்டன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, உக்ரைன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கோதுமை மற்றும் குருனை அரிசி ஏற்றுமதிக்கு சென்ற ஆண்டு ஏன் தடை விதிக்கப்பட்டது என்று இந்தியாவிடம் கேள்வியெழுப்பின. மே 2022 இல் கோதுமை ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியதோடு, செப்டம்பர் 2022-ல் குருனை அரிசி ஏற்றுமிதிக்கும் தடை விதித்தது. இந்தத் தடை எப்போது விலக்கப்படும் என்பதையும் அந்நாடுகள் கேட்டறிய விரும்பினர். உணவுக் கிடைப்பதே நெருக்கடியாக மாறியுள்ள தற்போதைய சூழலில் ஏற்றுமதி தடை குறித்து மற்ற நாடுகளுக்கு தெரிவிப்பது அவசிமான விசயம் என்று அந்நாடுகள் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

காட் ஒப்பந்தத்தின்படி ஏற்றுமதி தடைகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அவற்றையெல்லாம் இந்தியா முறையாக பின்பற்றியுள்ளதா?  என்றும் குறிப்பாக ஏற்றுமதித் தடையை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் எனக் கூறும் WTOவின் விதிப் பின்பற்றுவதை இந்தியா உறுதி செய்துள்ளதா என்றும் அந்நாடுகள் கேட்டுள்ளனர். 

இந்திய மக்களுக்கு கோதுமை கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது என்பதை காரணம்காட்டி 2022-ம் ஆண்டு மே மாதம் கோதுமை ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது. அனல் காற்றின்(Heat wave) தாக்கம் கோதுமை விளைச்சலை குறைத்துள்ளது; இதன் காரணமாகவே தடை தொடர்வதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 அன்று குருனை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. இதன் விளைவாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இந்திய மக்களுக்கு போதுமான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என இந்தியாவின் தரப்பில் கூறப்படுகிறது.

அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை  உணர்த்துவது என்ன?

இத்தடை சர்வதேச அளவில் சந்தை செயல்பாடுகளை நிலைதடுமாறச் செய்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோர்களுக்கோ இந்த நடவடிக்கை நல்ல பலனை தருவதாக தெரியவில்லை. 

இந்தியாவின் பலவீனமான உணவுக் கொள்முதல் கட்டமைப்பு 

இந்திய விவசாயிகளிடமிருந்து போதுமான உணவு தானியங்களை அரசாங்கம் வாங்குவதில்லை. சில மாநிலங்களில், சில பயிர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. பல மாநிலங்களில், விவசாயிகள் விளைவிக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்களின் தலையெழுத்து செல்வாக்குமிக்க கமிஷன்காரர்களாலே தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறிருக்க சந்தையில் உணவுப் பொருட்களின் விலையையோ, விநியோகத்தையோ அரசால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவின் உணவு தானியக் கொள்முதல் கட்டமைப்பு பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது.

அரிசி தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு இத்தடை பாதிப்பை ஏற்படுத்துகிறது

இந்தியாவிடமிருந்து அரிசி வாங்கும் மற்ற நாடுகளையும் இந்தத் தடை பாதிக்கிறது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகள் இந்தியாவில் விளையும் அரிசியையே தங்களது உணவுத் தேவைக்காக நம்பியுள்ளன. இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் அதிக விலை கொடுத்தாலும் குறைந்த அளவிலான அரிசியை பெற வேண்டிய நிலைக்கு அந்நாடுகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் அல்லது மியான்மர் போன்று பிற அரிசி உற்பத்தியில் ஈடுபடக்கூடிய நாடுகளை நாடிச் செல்ல வேண்டிய நிலைக்கும் தயாராகி வருகின்றனர். எப்படியிருந்தபோதிலும் இந்த நாடுகளுக்கு தேவைப்படும் போதுமான அரிசியோ, அல்லது நல்ல தரமான அரிசியோ, இந்தியாவில் கிடைப்பது போன்ற விலை குறைந்த அரிசியோ கிடைக்காமல் போவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது.

மற்ற சில நாடுகள், உள்நாட்டிலேயே அதிக அரிசியை விளைவிக்கவும் அல்லது அரிசி கையிருப்பை அதிகமாக்குவதற்குமான முயற்சிகளில்கூட இறங்கி வருகின்றனர். எவ்வாறாயினும் அந்நாடுகளின் தேவைகளை இதுபோனற நடவடிக்கைகள் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது.

இத்தடை விலைவாசி உயர்வையும் குறைக்காது, விவசாயிகளுக்கும் பலன் தராது

சர்வதே பொருளாதார உறவுகள் குறித்து ஆய்வு செய்யும் ICRIER என்ற இந்திய நிறுவனம் நடத்திய ஆய்வில், 2008 இல் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏற்றுமதிக்கான தடை விலைவாசி உயர்வை அதிகம் பாதிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. விலைவாசியின் ஏற்ற இறக்கம் என்பது தேவைக்கும் வழங்கலுக்குமான சமநிலை, பணவீக்கம் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் போன்ற பல விஷயங்களைச் சார்ந்துள்ளது. அவ்வகையில் இந்த தடையால் இந்தியாவில் அரிசி விலையில் பெரிய மாற்றம் இருக்காது. 

இந்தத் தடை விவசாயிகளுக்கும் பலன் தராது. வெளிநாட்டில் விற்க முடியாததால் விளைவித்த அரிசிக்கு அதிக பணம் கிடைக்காமல் போகலாம். மேலும் அரிசிச் சந்தையைக் கட்டுப்படுத்தும் தனியார் வியாபாரிகளிடமிருந்தும், அரிசி ஆலை அதிபர்களிடமிருந்து வரும் நெருக்குதல்களையும் சந்திக்க நேரிடும். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது அரிசியை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,400-க்கு விற்றதாகவும், இது அரசு விலையான ரூ.1,815-ஐ விட மிகக் குறைவு என்றுக் கூறியதும் கவனிக்கத்தக்கது.

இந்தத் தடையால் வணிக முதலாளிகளுக்கும் செல்வாக்குமிக்க கமிஷன்காரர்களுக்குமே அதிக லாபம் கிடைக்கும்

வணிக முதலாளிகள் மற்றும் செல்வாக்குமக்க கமிஷன்காரர்களால் குறைந்த விலைக்கு உணவு தானியங்களை கொள்முதல் செய்து பதுக்கி வைத்துக்கொண்டு தடை முடிவுக்கு வந்த பிறகோ அல்லது சந்தையில் அரிசி குறைவாக இருக்கும் போதோ விற்று அதிக லாபம் பார்க்க முடியும்.

எத்தனால் உற்பத்தியில் ஈடுபடும் ஆலை முதலாளிகள் வேண்டுமானால் இத்தடையால் பயனடையக்கூடும். எத்தனால் தயாரிப்பதற்கு குருனை அரிசியைப் பயன்படுத்துகிறார்கள். தங்களுக்கு குருனை அரிசி அதிகம் கிடைக்கும் என்பதற்காக ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்றும்கூட அரசிடம் கேட்டிருக்கலாம்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் விவசாயிகளின் நலன்களுக்கென்ற பெயரில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அரிசியை ஏற்றுமதி செய்து வணிக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் மத்திய அரசின்  தலைமை கணக்குத் தணிக்கையாளர்(CAG) வெளியிட்ட அறிக்கையில் அம்பலமாகியுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்க விசயமாகும்.

விஜயன்
(தமிழில்) 

basedon: https://www.thehindubusinessline.com/economy/questions-raised-at-wto-on-indias-export-ban-on-non-basmati-rice/article67349136.ece/amp/

& https://thewire.in/government/what-the-rice-export-ban-by-india-has-achieved