உலக மேலாதிக்கமும் சுங்க வரிகளும்: திசை மாறிய இந்தியாவின் பயணம்

விஜயன் (தமிழில்)

உலக மேலாதிக்கமும் சுங்க வரிகளும்: திசை மாறிய இந்தியாவின் பயணம்

“செல்வமும் வளங்களும் வசதிபடைத்தோரிடம் குவிந்திருக்கலாம், ஆனால் உயிர்வாழ்வின் மெய்யான ஆழத்தை உணர்ந்தவர்கள் ஏழைகளே. ஒரு தேசம் இந்த அடிப்படை உண்மையை மறக்குமானால், அது நாசத்தை நோக்கியே பயணிக்கிறது எனலாம்,” ஜூலியஸ் நைரேரி (முன்னாள் டான்சானியா அதிபர்).

அமெரிக்காவில், காப்பு வரிக் கொள்கைகளை மீண்டும் கொண்டுவரும் முடிவை டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் பேரார்வத்துடன் வரவேற்கின்றனர். அவர்கள் இதனை அமெரிக்காவின் தற்சார்புக்கும் கௌரவத்துக்கும் வலு சேர்க்கும் உறுதியான நடவடிக்கையாகப் பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், அதன் நிஜமான விளைவோ முற்றிலும் மாறுபட்டது. இந்தச் சுங்க வரிகள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும். அவை நுகர்வோருக்கான விலையை ஏற்றிவிடும், வெளிநாடுகளில் விற்பனை செய்யும் நிறுவனங்களைப் பாதிக்கும், பணவீக்கத்தின் தீவிரத்தை அதிகமாக்கும், மேலும் உலக அரங்கில் அமெரிக்காவின் முக்கியத்துவத்தைக் குன்றச் செய்யும். அதிகக் கடன் சுமை, சமமற்ற செல்வப் பகிர்வு, மற்றும் சரிவடையும் உற்பத்தித் துறை ஆகிய மிகப்பெரும் சவால்களை அமெரிக்கா ஏற்கனவே எதிர்கொண்டு வருகிறது. சுங்க வரிகள் இந்தப் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சூழல் இன்னும் கடினமானதாக மாறும். சுங்க வரிகளை அமெரிக்கா உயர்த்தினால், இந்தியாவின் ஏற்றுமதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும், மேலும் சர்வதேச விநியோகத் தொடர்கள் சீர்குலையும். அமெரிக்காவுடனும், ரஷ்யாவுடனும் ஒரே நேரத்தில் இணக்கமான உறவைப் இந்தியா பேண முயல்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்காக அது சீனாவையும் சார்ந்திருக்கிறது. இந்தியா எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதாயங்களைத் திரட்ட முயல்கிறது. ஆனால் முடிவில், இரு தரப்பிலும் காய் நகர்த்த முற்படுவது இந்தியாவை நலிவடையச் செய்து, சர்வதேச அரங்கில் அதன் செல்வாக்கைக் குறைக்கும்.

மோடியின் வெகுசன கவர்ச்சி அரசியலும் பொருளாதார எதார்த்தமும்

மோடி அடிக்கடி அமர்க்களமான ஜாடைகளையும், முகபாவனைகளையும் வெளிப்படுத்துகிறார்— அதிகாரத்தையும் நட்புறவையும் காட்சிப்படுத்த தொலைக்காட்சிகளில் கண்கவர் காட்சியாக தோன்றுவதற்கு உலகத் தலைவர்களை ஆரத் தழுவுவது போல பிரம்மாண்டமான சைகைகளைச் செய்கிறார். எவ்வாறாயினும், ஒரு நாட்டை வழிநடத்துவது தொலைக்காட்சியில் கண்கவர் படங்களைக் காண்பிப்பதை விட உன்னதமானது. அரசியல் என்பது பொறுப்புணர்ச்சி, அறநெறிகள், தற்சார்பு, மற்றும் மக்களுக்கான உறுதியான தொலைநோக்கு பற்றியதாகும். ஜவஹர்லால் நேரு தெளிவான கோட்பாடுகளைக் கொண்டிருந்தார். இந்திரா காந்தி இந்தியாவின் சுதந்திரத்தை எக்காலத்திலும் பாதுகாத்தார். ஆனால் மோடியோ மெய்யான வியூகங்களை விட வெகுசன ஆதரவையும் (popularity) ஒளிப்பட வாய்ப்புகளையுமே அடிக்கடி தேடியலைகிறார்.

2019 இல் ஹூஸ்டனில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் “அப் கி பார், ட்ரம்ப் சர்க்கார்” என்று முழங்கியதே இதற்கு சிறந்த உதாரணமாகும். வேறொரு நாட்டின் தேர்தலில் ஒரு வேட்பாளரை வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம், தலையிடாக் கொள்கையை பின்பற்றி வந்த மரபை இந்தியா மீறியது. இது இந்தியாவை ஒரு தற்சார்புள்ள தேசமாக அல்லாமல், அமெரிக்க அரசியலில் பங்கெடுக்கும் ஒரு தரப்பாகவே காட்டியது. தற்போது, டிரம்ப் கூடுதல் சுங்க வரிகளை விதிப்பதென்ற நோக்குடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், இந்தியா தனது கடந்தகாலச் செயல்பாடுகளால் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

பொருளாதார வலிமை குறித்த தவறான கண்ணோட்டம்

இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்று ஆளுங்கட்சி அடிக்கடி முழங்கி வருகிறது. ஆனால் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) பற்றியது மட்டுமே. தனிநபர் அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாம் நோக்குவோமானால், சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கூட இந்தியா வெகுவாகப் பின்தங்கியுள்ளது தெரிய வரும். ஏறத்தாழ 82.0 கோடி இந்தியர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் வழங்கப்படும் இலவச அல்லது மலிவான உணவுத் திட்டங்களின் மூலம் மட்டுமே உயிர் வாழும் நிலையில் இருக்கின்றனர். இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் ஏறத்தாழ 23 சதவீதமாக உள்ளது, இது உலகிலேயே அதிகபட்ச விகிதங்களில் ஒன்றாகும்.

தலைவர்கள் முன்வைக்கும் கூற்றுகளுக்கும் பெரும்பான்மையான மக்கள் உண்மையில் எதிர்கொள்ளும் எதார்த்தத்திற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் தொழில்நுட்பம், நிதித் துறை, மற்றும் வசதி படைத்த நுகர்வோருக்கே கை கொடுக்கிறது. உற்பத்தித் துறை முன்னேறவில்லை, மேலும் விவசாயிகள் கடன் சுமை, போதிய வருமானம் இன்மை மட்டுமல்லாது சுற்றுச்சூழல் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். முறைசாரா வேலைகளில் இருக்கும் மக்கள்—சுமார் 90 சதவீதம் பேர்—நல்ல ஊதியத்தையோ அல்லது எந்தவிதப் பணிப் பாதுகாப்பையோ பெறுவதில்லை.

எக்காலத்திலும், ஜனநாயகத்தை மதிப்பிடுவதற்கு வெறும் பணத்தின் அளவை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது என்று பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வலியுறுத்தியுள்ளார். மக்கள் எத்தகைய சுதந்திரங்களையும் அடிப்படைத் தேவைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அது கவனிக்க வேண்டும். அந்தத் தளத்தில், இந்தியா மேம்பட்டு வளரவில்லை. பெரும்பாலான மக்களுக்கு சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், கண்ணியமான வேலைவாய்ப்புகள் இல்லையென்றால், ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தும் என்னப் பயன்(?).

காஷ்மீர், பாகிஸ்தான், மற்றும் எதார்த்தத்தை ஏற்க மறுப்பதால் ஏற்படும் இழப்புகள்

இந்தியாவின் பொருளாதாரச் சூழல் காஷ்மீர் போன்ற தீராத பிரச்சனைகளாலும் பாதிப்புக்குள்ளாகிறது. அரசாங்கம் சரத்து 370-ஐ நீக்கியதுடன் காஷ்மீரை ஒரு உள்நாட்டு விவகாரம் என்று அறிவித்தது. ஆயினும், உலக நாடுகள் இன்னமும் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. காஷ்மீரில் அதிகளவில் இராணுவக் குவிக்கப்பட்டுள்ளது, தொடர்ச்சியான மனித உரிமைகள் மீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன, பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் சீர்குலைந்து போயுள்ளன. நீண்டகால இணைய முடக்கங்கள், சுற்றுலாத் துறையில் சரிவுகள், மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை ஆகியவை அங்கு நீடிக்கவே செய்கின்றன.

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்காமல் தவிர்ப்பது அமைதியைக் கொண்டுவருவதில்லை; மாறாக, அது ஆபத்தையே அதிகப்படுத்துகிறது. பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிரான முரட்டுத்தனமான அணுகுமுறைகள் இந்தியாவைத் தொடர்ச்சியான மோதல்களுக்குள் சிக்க வைக்கின்றன. போர் மூளாவிட்டாலும் கூட, போர்த் தயாரிப்புப் பணிகளுக்கான செலவினம், முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற மனப்பான்மை, ஆக்கிரமிப்பு ஏற்பட்டுவிடுமோ, ஜனநாயகம் வீழ்ந்துவிடுமோ என்பது போன்ற ஐயம், ஆகியவற்றின் காரணமாக இந்தியா பெரும் விலை கொடுக்க நேரிடும் நிலை உருவாகும். இந்தியாவின் இழப்பு போர்க்களத்தில் நிகழ்வதல்ல, அது சர்வதேச மதிப்பைத் தொலைப்பதிலும் ஜனநாயகத்தை நலிவடைந்து போவத்தில்தான் நிகழ்கிறது.

சுங்க வரிகளும், புதிய பனிப்போரும்

ட்ரம்பின் சுங்க வரிகள் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான, அமெரிக்க மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய பனிப்போர் போன்ற, ஒரு பெரும் மோதலின் ஒரு பகுதியாகும். இந்தியா தன்னைச் சீனாவின் போட்டியாளராகவும் அமெரிக்காவின் நேச நாடாகவும் நிலைநிறுத்த விரும்புகிறது. எனினும், இந்தச் சிந்தனை அபாயகரமானது. இந்தியா, தான் விற்பதை விடச் சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது, குறிப்பாக மருந்துத் துறை மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கியத் தொழில்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்கிறது. சீனா மீதான சுங்க வரிகள் சீனப் பொருட்களைச் சார்ந்திருக்கும் இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் அளவிற்கு சீனாவை அவ்வளவாகப் பலவீனப்படுத்துவதில்லை.

இந்தியா அமெரிக்காவுடன் மிக நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டால், அது ஒரு சமமான பங்காளியாக இருப்பதற்குப் பதிலாக அமெரிக்காவின் இலக்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் இக்கட்டான சூழல்நிலையையும் எதிர்கொள்கிறது. சாதகமான சூழ்நிலைகளில் கூட்டாளிகளை மாற்ற அமெரிக்கா ஒருபோதும் தயங்குவதில்லை. ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறியது போல், “உலகமயமாக்கல் ஒரு சிலருக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்குமே பலன் அளிக்க வேண்டும்.”. உலகம் அனைவருக்குமானதல்ல என்பதையே சுங்க வரி விதிப்புகள் காட்டுகின்றன, இதனால் இந்தியா அதிகச் சிக்கல்களைச் சந்திக்கும்.

அதிகரிக்கும் சமூக கொந்தளிப்புகள்

பொருளாதாரச் சிக்கல்கள் சமூகத்தில் கொந்தளிப்பைக் ஏற்படுத்தக்கூடும் என்பதே மிகப் பெரிய அபாயமாகும். அதிகரிக்கும் வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை, வின்னை முட்டும் விலைவாசி ஏற்றம் விரைவிலேயே வெகுஜனக் கிளர்ச்சிகளாக உருமாறலாம். சாதாரண அரசாங்க முடிவுகள் அல்லது சமூகப் பதட்டங்கள் எவ்வாறு பாரிய அளவிலான போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதை இந்தியா ஏற்கனவே பார்த்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வும், குறுகிவரும் சுதந்திரங்களும் அதிகரிக்கும்போது, வன்முறைக்கம், அமைதியின்மைக்கான வாய்ப்பும் அதிகமாகிறது. வெகுசன கவர்ச்சி கொண்ட தலைவர்கள் பிளவுகளைத் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், ஆனால் பரவலான பசியையும் துயரத்தையும் அவர்களால் ஒருபோதும் தீர்க்க முடியாது.

பொருளாதாரங்கள் நலிந்து வீழும்போது, சமூகக் கட்டமைப்புகள் சிதைந்து போகலாம் என்று வரலாறு எடுத்துக் காட்டுகிறது. முன்னாள் டான்ஜானியா அதிபர் ஜூலியஸ் நியரேரே நினைவூட்டியது போல், “செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், இல்லையேல் அது சமுதாயத்திற்கே அச்சுறுத்தலாக மாறிவிடும்.”. இந்தியாவில், கோடீஸ்வரர்கள் மேலும் செல்வந்தர்களாகிறார்கள், ஆனால் சேரிகளும், குப்பங்களும் விரிவடைகின்றன, மேலும் அதிக விவசாயிகள் தற்கொலையால் மாண்டு போகின்றனர். அரசாங்கம் வறுமையின் மெய்யான மூல காரணங்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளை செய்கிறது.

ஆய்வின் மெய்யான கடமை

சமூக ஆய்வின் மெய்யான கடமை தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதல்ல, மாறாக எதார்த்தத்தைப் அம்பலப்படுத்துவதாகும். இந்தியா தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. வெளிநாட்டு வெகுசன ஆதரவை நம்பி, உள்நாட்டில் சர்வாதிகார ஆட்சியைக் கையிலெடுத்திருப்பதன் மூலம், சர்வேதச அங்கீகாரத்தை இழந்துள்ளது. வறுமை, ஏற்றத்தாழ்வு, மனித மாண்பைப் புறக்கணித்ததுடன், வெகுசன கவர்ச்சி அரசியலை உண்மையான முன்னேற்றமாக காட்டி வருகிறது.

இந்தியாவின் வருங்காலப் பாதை சுங்க வரிகளாலோ, பொருளாதாரம் எவ்வளவு வளர்ந்துவிட்டது என்பதை காணுங்கள் என்பது போன்ற அர்த்தமற்ற பேச்சுகள், அல்லது இராஜதந்திரத்தில் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளின் அடிப்படையில் அமையக் கூடாது. தொழிற்சாலைகளைப் புனரமைப்பது, சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வது, காஷ்மீருக்கு மெய்யான ஜனநாயகத்தைக் கொண்டு வருவது, மேலும் வல்லரசு நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட மறுப்பதே வளர்ச்சிக்கான தீர்வாக அமையும்.

பொருளாதாரங்களை நியாயமானதாகவும், வலிமையானதாகவும், அனைவருக்கும் உரியதாகவும் ஆக்குவதே மெய்யான வளர்ச்சி என்று ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார். இந்தியா இதைச் செய்யவில்லை. மாற்றம் இல்லையெனில், அடுத்த பத்தாண்டுகள் பெருமையை அல்ல, மாறாகப் பன்மடங்கு சிக்கல்களையே கொண்டு வரும். இந்தியா தற்போது வேறொரு தேசத்திடமும் தோற்கவில்லை, மாறாகத் தனது தவறான கற்பனாவாதக் கொள்கைகளின் காரணமாகவே தோற்றுக்கொண்டிருக்கிறது.

கட்டுரையாசிரியர்: ரஞ்சன் சாலமன், அரசியல் விமர்சகர்

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/08/tariffs-power-and-indias-mislaid-compass/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு