இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வு முரண்பாடுகள் வரலாற்றிலேயே இல்லாத அளவு அதிகமாகிவிட்டது - 2014 முதல் 2023 வரையான காலகட்டத்தில் மிகக் கூர்மையடைந்துவிட்டது.

தமிழில் : வைகறை நேசன்

இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வு முரண்பாடுகள் வரலாற்றிலேயே இல்லாத அளவு அதிகமாகிவிட்டது -  2014 முதல் 2023 வரையான காலகட்டத்தில் மிகக் கூர்மையடைந்துவிட்டது.

இந்தியாவின் ஒரு நூற்றாண்டு கால தரவுகள், வருமான, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பிரிடிஷ் காலனியாதிக்க காலகட்டத்தைக் காட்டிலும், மோசமாகிவிட்டன என உலக பொருளாதார ஏற்றத்தாழ்வு சோதனைக் கூடம் (World Inequality Lab) அறிவிக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது, சுதந்தரத்துக்குப் பின் 1980வரை குறைந்து கொண்டிருந்தது - அதற்குப் பின்னர், "இப்போது விண்ணை முட்டும் வேகத்தில் அதிகமாகியது" எனும் அதன் ஆய்வுகள், தற்கால இந்தியாவை "கோடீஸ்வரர்களின் ராஜ்யம்" என வரையறுக்கிறது.

நியூடில்லி: பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார ஏற்றத்தாழ்வு சோதனைக் கூடம், வருமான, சொத்து  ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புதிய தடம் பதித்த ஒரு பணியாக, இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைகள் பற்றிய ஒரு ஆய்வை தருகிறது. "இந்தியாவின் பொருளாதார, சொத்து  ஏற்றத்தாழ்வுகள்,1922-2023: கோடீஸ்வர ராஜ்யத்தின் தோற்றம்" ( Income and Wealth Inequality in India, 1922-2023: The Rise of the Billionaire Raj) என்ற அந்த நூல், 1922லிருந்து 2023வரையான ஒரு நூற்றாண்டு கால கட்டத்தின் பொருளாதார, சொத்து  தரவுகளை ஆய்ந்ததில், "2022-23 வாக்கில், இந்தியரின் முதல் 1 சதவீதத்தினரது சொத்து  வளம், நாட்டின் மோத்த சொத்துவளத்தில், (22.6சதத்தில் இருந்து 40.1 சதமாகி) வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அது தென் ஆஃப்ரிக்காவையும், பிரேசிலையும், அமெரிக்காவையும் விட அதிகமானது." என்கிறது.  

"கோடீஸ்வரர்களின் ராஜ்யம்" (ஜேம்ஸ் கிராப்ட்ரீ எழுதிய இதே பெயரைத் தாங்கிய நூலில், இந்தியாவில், 2010க்குப் பின்னரான கோடீஸ்வரர்களின் கோடிக் கணக்கானோரின் எழ்மைக்கு ஒவ்வாத, அதிவேக வளர்ச்சியை குறிக்கப் பயன்படுத்தப் படும் சொல்லாடல்) இப்போது பிரிட்டிஷ் காலனிய ராஜ்யத்தை விட அதிக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உடையதாக இருக்கிறது." என்கிறது.

அது வேறு இரண்டு பார்வைகளை முன்வைக்கிறது. ஒன்று, சொத்து  வளம் எனும் நோக்கிலிருந்து ஒப்பிடுகையில், வருமான வரி குறைந்து வருவது. இரண்டாவது, அரசின் தரமிழந்த பொருளாதாரத் தரவுகள் கண்ட "சமீப காலத்திய வீழ்ச்சி." 

1980க்குப் பின்னர், பொருளாதார ஏற்றத்தாழ்வின் வளர்ச்சி கூர்மை அடைந்தததெனில், "2014லிருந்து 2023வரையான கால கட்டத்தில், முதல் 1 சதவீத நிலையினரின் பொருளாதார ஏற்றத்தாழ்வானது, சொத்து  வளத்தின் மிகுதியில் குறிப்பாக வெளிப்படுகிறது."

அது ஐந்து முக்கிய தீர்ப்புகளை முன்வைக்கிறது:

1. "சுதந்தரத்துக்குப் பின்னர், பொருளாதார ஏற்றத் தாழ்வு, 1980 வரை, குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகோ, 2000 ஆண்டு முதற்கொண்டே, அது விண்ணை முட்டும் வேகத்தில் உயர ஆரம்பித்தது. ஆய்வு செய்யப் பட்ட காலகட்டம் முழுதும், முதல் நிலையினரின் வருமானம்,  சொத்து  இரண்டுமே ஒரே மாதிரி வேகத்தில் உயர்ந்தன"

2. 2014 முதல், 2023 வரையான கால கட்டத்தில், மேல்தட்டு பொருளாதார ஏற்றத்தாழ்வு, குறிப்பாக, சொத்து  வளம் குவிவதில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 2022-23வாக்கில், முதல் 1 சதவீதத்தினரின் பொருளாதார ஏற்றததாழ்வு உயர்ந்த வேகம், (மொத்த சொத்தில் 22.6 சதத்திலிருந்து 40.1சதமாக உயர்ந்து) இந்திய வரலாற்றிலேயே அதிக நிலையை எட்டியது. இந்தியாவின் வருமானத்தில் முதல் 1 சதவிதத்தினரின் பங்கு என்பது, உலகத்திலேயே மிக அதிகமானதாகும். அது தென் ஆஃப்ரிக்கா, பிரேசில், அமெரிக்காவை விடவும் விஞ்சி நிற்கிறது.

3. அவர்களது முந்தைய நூலில் சொல்லப் பட்டது போல, வருமான வரி வீதமானது,  நிகர சொத்து  வளத்தின் நோக்கிலிருந்து ஒப்பிடுகையில், குறைந்து வருவதன் சான்றையும் யூகித்துக் கண்டறிகிறது இந்த ஆய்வு.

4. பரந்து பட்ட மக்கள் உடல் நல கட்டமைப்புகள், கல்வி, சத்துணவு போன்றவை மேம்படுத்தப் பட்டு, மேல்தட்டு நபர்கள் மட்டுமல்ல, சராசரி இந்தியனும்,  தொடரும் உலகமயமாக்கலின் பலன்களை அனுபவிக்க அர்த்தமுள்ள வகையில், வருமானம், சொத்து இரண்டும் இணைந்த அடிப்படையில் மாற்றி அமைக்கப் படும் வரி விதிப்பு முறை, வழி செய்யவேண்டும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்கப் போராடும் வகையாக மட்டுமல்லாது, முதல் 167 குடும்பங்களின் நிகர சொத்துக்கள் மீதான 2% சூப்பர் டாக்ஸ் எனும் ஒரு வரி விதிப்பாலேயே, தேசிய வருமானத்தில் 0.5% அதிகமாகி, இத்தகைய மதிப்பு மிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க ஏதுவாகும். 

5 இந்த ஆய்வறிக்கை, இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய வெகுவாகவே தரமற்ற தரவுகள், அண்மையில், மேலும் தரம் தாழ்ந்துவிட்டதாக வலியுறுத்துகிறது. ஆகவே, இந்த புதிய மதிப்பீடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கொஞ்சம் குறைவாகவே மதிப்பிடுவதாக இருக்கலாம். இதன் ஆசிரியர்கள், நிதின் குமார் பாரதி, லூகாஸ் சான்ஸல், தாமஸ் பிக்கெட்டி, அன்மோல் சோமாஞ்சி ஆகியோர். இவர்கள் "தேசிய வருமான கணக்குகள், சொத்து கூட்டுத் தொகைகள், வரிப் பட்டியல்கள், பணக்காரர் பட்டியல்கள், வருமானம் பற்றிய கள ஆய்வு, நுகர்வு, சொத்து இவைகளையும், இந்தியாவின் நீண்டகாலமாக நிகழந்து வரும் வருமானசொத்து ஏற்றத்தாழ்வுகளையும், இசைவாக ஒன்றிணைத்து பார்த்தது பற்றிய வரையறுப்பு இது."   

முன்பு எப்போதும் போன்று, தரவுகளை அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருப்பதை இப்போது தவிர்த்துவிட்ட இந்திய அரசு,  கடந்த சில ஆண்டுகளில், தரவுகளை தரவே இயலாத நிலையில், பொருளாதார அம்சங்களை குறிப்பிடும் பசி, ஊட்டச் சத்து குறைபாடு பற்றிய பன்னாட்டு மதிப்பீடுகளை எதிர்த்து, மறுப்பதில் மட்டும் தன் திறமையைக் காட்டுகிறது. இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி தரவுகளே, (GDP - Gross Domestic Production), பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசனையாளர் அரவிந்த் சுப்ரமணியம், "இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி எப்படி அதிகரித்திருக்கக் கூடும்?" என வியப்பு தெரிவிக்கிறார். இந்தியா கடந்த 140 வருடங்களில் இல்லாதவாறு, பத்தாண்டுகால மக்கள் தொகை கணக்கெடுப்பை முதல் முறையாக 2021ல் கோவிட்-19 பெருந்தொற்றை காரணம் காட்டி தவறவிட்டது. கோவிட் இறப்பு தரவு, உலக நல்வாழ்வு அமைபின் (WHO - World Health Organisation) தரவுகளோடு ஒப்பிடுகையில் பத்து மடங்கு வேறுபட்டிருந்தது. கோவில் பாதிப்பு எண்ணிக்கையில், உலக நல்வாழ்வு அமைப்போடு முரண்பட்ட ஒரே நாடு இந்தியா.

- வைகறை நேசன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/uncategorised/indias-inequality-at-historic-high-wealth-concentration-shot-up-sharpest-between-2014-5-and-2022-3