நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியும், வேலையின்மை பிரச்சினையும்
வழக்கமான ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணிகளை சரி செய்வதற்கான நேரம் இது - தமிழில் : விஜயன்
இரண்டு இளைஞர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் பலத்த பாதுகாப்பை மீறி, மக்களவைக்குள் நுழைந்து ஒரு வித்தியாசமான போராட்டத்தை நடத்தி உலக கவனத்தை கவர்ந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. அரசாங்கம் விசாரணையைத் தொடங்கி சிலரைக் கைது செய்த போதிலும், பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்லி வைத்தாற்போல வாய்திறக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். 146 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நிலைமை களேபரமானது.
"நாடாளுமன்ற அத்துமீறலின்" பின்னணியில் உள்ள இளைஞர் குழுவினர் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகளால் சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றிலும் ஒரு முத்திரையை பதித்துவிட்டு சென்றுள்ளனர். இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. "நாடாளுமன்ற பாதுகாப்பை தகர்த்து போராட்டத்தில் ஈடுபடுவது" என்ற திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிய குழுக்கள் அல்லது பெரிய சக்திகளின் ஈடுபாடு ஏதும் விசாரணையில் தெரியவந்துள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
டிசம்பர் 13, 2023 அன்று, இரண்டு போராட்டக்காரர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் குதித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பீதியடைந்தனர். எம்.பி.க்கள் வேகமாக அவர்களை சிறைபிடித்தனர். பிடிபடுவதற்கு முன்பு, இந்த போராட்டக்காரர்கள் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி மறைத்து எடுத்து வந்த குப்பிகளில் இருந்து வண்ண புகையை வெளியிட்டனர். அதேநேரம், சபைக்கு வெளியில் இருந்த இருவர், நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்தபடியே குப்பிகளைப் பயன்படுத்தி வண்ணப் புகையை வெளியிட்டனர்.
டி. மனோரஞ்சன், சாகர் சர்மா (மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள்), அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத் (நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகைக் குப்பிகளைப் பயன்படுத்தியவர்கள்), லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் (நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. ) ஆகியோர் மீது பயங்கரவாதம் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்(UAPA) பிரிவு 16 மற்றும் 18’ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, “அராஜக வழியில் தங்களது சட்ட விரோத கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முயன்றுள்ளனர். நேரலையாக நாடாளுமன்ற அமர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தை இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது.” என்று டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப் சிங் கூறினார். மேலும், இந்த சதிவேலையைச் செய்வதற்கு டெல்லி, குர்கான் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தியுள்ளனர் என்றும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த சதி வேலைக்கான கூட்டங்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தபோதிலும், சமீபத்திய பாதுகாப்பு பிரச்சினைக்கான உண்மையான காரணங்கள் இன்னும் தெளிவாக ஆராயப்படவில்லை. இதன் பின்னணியில் வெளிநாட்டுச் சதி அல்லது பயங்கரவாதிகளின் சதி உள்ளதா என்பதை விசாரணை குழு இன்னும் உறுதிபடக் கூறவில்லை. ஆனால், பல பிரபல ஊடகங்கள் இது நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்றது என்று கூறத் தொடங்கியுள்ளன. மேலும், பாஜக மற்றும் சங்பரிவாரில் உள்ள சில குழுக்கள் சமூக ஊடகங்களில் இடதுசாரி குழுக்களே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம் சாட்ட முயற்சிக்கின்றன, எனினும், இது மக்களின் கவனத்தையோ ஆதரவையோ பெறவில்லை.
சமீபத்திய நிகழ்வின் மீது நிறைய ஊடக கவனம் செலுத்தப்படுவதோடு, இதற்கு பின்னால் மறைந்துள்ள அடிப்படை காரணங்கள் பற்றிய கேள்விகளும் ஆராயப்படுகிறது. சுடப்படும் அபாயம் உள்ளிட்ட ஆபத்துகளை அறிந்திருந்தும் இந்த இளைஞர்கள் குழு “துணிச்சலான போராட்டத்தை” செயல்படுத்துவதற்கு துணிந்துள்ளனர்.
வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூரில் பிரச்சனைகள் மற்றும் விவசாய பிரச்சனைகள் போன்ற கடுமையான பிரச்சினைகளை சர்வாதிகார மோடி அரசாங்கம் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுவதோடு, மோடி அரசாங்கத்தின் மீதான தங்கள் அதிருப்தியை, ஆதங்கத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் எனும் நோக்கில் இந்த போராட்ட முறையை கையிலெடுத்துள்ளனர்.
இந்த “சாகசவாதம்” நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது: இந்த சாகச போராட்டம், இந்தியாவின் வேலையில்லாத இளைஞர்களிடையே மறைந்திருக்கும் நிராசையை, அரசியல் வல்லுநர்கள் கூட கவனிக்காத அதிருப்தியை, ஆதங்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர முயலுகிறதா? கேள்விகளே கேட்காத ஊடகங்கள், போராட்டங்களே இல்லாத சாலைகள், எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றம் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஜா என்பவர் இந்தியாவின் தற்போதைய நிலையைக் விமர்சித்திருந்தார்; இத்தகைய நிலைமைக்கான எதிர்வினையாக இப்போராட்டம் நடத்தப்பட்டதா? ஜனநயாக வழியில் தங்களது கோரிக்கைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக மோடி அரசாங்கம் எவ்வகையான அனுகுமுறைகளை கையாளுகிறது என்று சில அரசியல் விமர்சகர்கள் கருதுவதை எதிர்த்து அதாவது தவறாக வழிநடத்துதல், மடைமாற்றுதல் மற்றும் திசைதிருப்புதல் போன்றவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இவர்களின் துணிச்சலான போராட்டம் நடத்தப்பட்டதா? மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உள்ள சட்டங்களும் இன்னப்பிற அமைப்புகளும் பலவீனப்படுத்தப்பட்டு வருவதும்கூட இந்த இளைஞர்களின் நிராசைகளை அதிகப்படுத்தியிருக்கக்கூடும்.
இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை அளிக்கக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டிசம்பர் 13 சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் எவரும் காஷ்மீர், பஞ்சாப் அல்லது வடகிழக்கு போன்ற பொதுவான பிரச்சனையுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல, யாரும் முஸ்லீம் அல்லது சீக்கியர்கள் அல்ல. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த விவரம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள், விமர்சகர்களும் கூட இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்சொன்ன சமூகங்களைப், பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால், அதுவே இந்துத்துவா குழுக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க பிரச்சனை உருவாவதற்கு வழிவகுத்திருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இந்த அவதானிப்புகள் அனைத்துமே, நாட்டு மக்களின் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் மோடி அரசாங்கம் எவ்வாறு அணுகு வருகிறது என்பதை பற்றியே அதிகமாக வெளிப்படுத்துகின்றன. இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் நடந்துள்ளது என்பது சுவாரஸ்யமான விசயமாகும். மேலும், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதால், பாகிஸ்தானிய அல்லது காலிஸ்தானிய சதிச் செயல்கள் என்று தொடர்புபடுத்துவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்து.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குறைந்த நடுத்தர வருமானுமுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நிலையாக ஒரு வேலையில் பணியாற்றவில்லை என்றும் பெரும்பாலான செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மக்களவையில் வண்ணப் புகைக் குப்பியை வெளியிட்ட பரபரப்பை ஏற்படுத்திய மனோரஞ்சன், விவேகானந்தர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கோழி வியாபாரம் செய்வதில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். அவருடன் சாகர் ஷர்மாவும் இருந்தார், அவர் 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு நிதி சிக்கல்கள் காரணமாக பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட வேண்டியிருந்தது. மேலும், அவரது பெற்றோரின் கூற்றுப்படி சாகர் ஷர்மா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இது தொடர்பான சம்பவத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய நீலம் வர்மா, சமஸ்கிருதத்தில் எம்.பில் படித்தவர். அவரது தாயார் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது, தனது மகள் ஒரு பயங்கரவாதி அல்ல, மாறாக வேலையில்லாத் திண்டாட்டம், மனச்சோர்வு ஆகியவையே அவளை போராட்டத்திற்கு தள்ளியுள்ளதாக வலியுறுத்தினார். விவசாயிகள் பலரிடமிருந்தும், காப் பஞ்சாயத்து தலைவர்களிடமிருந்தும்கூட நீலம் வர்மா பங்கேற்ற போராட்டத்திற்கு அதரவு கிடைத்துள்ளது. கூடுதலாக, நீலம் வர்மாவுடன் கைது செய்யப்பட்ட அமோல் ஷிண்டே என்பவர், கொரோனா ஊரடங்கு காரணமாக இராணுவத்தில் சேரும் வாய்ப்பை இழந்தது குறித்து தனது குடும்பத்தினரிடம் ஆதங்கத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்யிருக்கிறார். அன்றிலிருந்து காவல்துறையில் சேருவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான மும்பையைச் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் அந்தோலன் (ஆர்எல்ஏ) என்ற தொண்டு நிறுவனம் லலித் ஜாவுக்கு சட்ட வழியில் துணை நிற்பதாக அறிவித்துள்ளது. லலித் ஜாவின் குடும்பத்தினரால் ஒரு வழக்கறிஞரை பெறுவதற்கான போதிய நிதி இல்லாத நிலையைக் கணக்கில் கொண்டு இந்த உதவிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு இந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கல்பனா இனாம்தார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் லலித் ஜா முன்னெடுத்த போராட்ட வழிமுறைகளை எங்கள் தொண்டு நிறுவனம் ஏற்கவில்லை என்றாலும், அவரும் அவரது கூட்டாளிகளும் முன்னிறுத்திய வேலையின்மை பிரச்சினையின் முக்கியத்துவத்தை தாங்கள் அங்கீகரிப்பதாக இனாம்தார் தெளிவுபடுத்தினார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பீகாரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லலித் ஜாவின் சொந்த கிராமத்தில் ஜா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேரையும் "புரட்சியாளர்களாக" சித்தரித்து RLA சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. மேலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தைக் காட்டும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காகவும் லலித் ஜா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருமே புகழ்பெற்ற இந்திய சுதந்திர போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங்கால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 94 ஆண்டுகளுக்கு முன்னர், ஏப்ரல் 8, 1929 இல், பகத் சிங்கும் படுகேஷ்வர் தத்தும் டெல்லியிலிருந்த மத்திய சட்டசபைக்குள் புகை குப்பிகளை வீசியதோடு ஒரு வியத்தகு துண்டுப் பிரசுரத்தையும் வெளியிட்டனர். யாருக்கும் தீங்கு விளைவிக்காமல், அவர்களின் இலட்சியத்தின் மீது கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் அவர்கள் பார்வையாளர்கள் அரங்கிலிருந்து இதைச் செய்தார்கள். "கேளாத செவிகளும் கேட்கும் வகையில் முழங்குவோம்" என்று இதே போன்றதொரு நிகழ்வில் முழங்கிய ஒரு பிரெஞ்சு அராஜகவாதியான வேலியண்ட் என்பவரின் வழியில் பகத்சிங்கும், படுகேஷ்வர் தத்தும் வீசிய துண்டுப்பிரசுரங்களில் இந்த மேற்கோள் குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்திய தகவலின்படி, லலித் ஜாவுடன் சரணடைந்த மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான மகேஷ் என்பவர், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான போது, 9 ஆம் வகுப்பிற்குப் பிறகு தான் முறையான பள்ளிக் கல்வியை தொடரவில்லை என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, 2014 பொதுத் தேர்தலுக்கு முன், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் என்ற அவரது முந்தைய வாக்குறுதியை ஒப்பிடும் போது இது குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது தெரிய வரும். இந்த மாற்றம் இருந்தபோதிலும், அவர் சார்ந்த அரசியல் கட்சியான பிஜேபிக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது தலைபோகிற பிரச்சனையாகவே இருந்து வருகிறது. பாஜக எம்பி வருண் காந்தி கூட ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் என்ற இலக்கை அடைய விரைவான நடவடிக்கைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான எண்ணிக்கை குறைந்து வருவதாகவே இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக, வேலையின்மை மற்றும் தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை அரசாங்கம் மிகவும் கடுமையாக ஒடுக்கி வருகிறது. ஜனவரி 2022 இல், உத்திரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) காவல்துறை, ரயில்வே தேர்வில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அதிருப்தியடைந்த மாணவர்களிடம் மிகவும் கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர். மாணவர்கள் தங்கியிருந்த இடங்களுக்குள் போலீசார் புகுந்து ரயில்வே பணிக்கான தேர்வில் உள்ள பிரச்சனைகள் குறித்து புகார் கூறுபவர்களை கடுமையாக தாக்கும் வகையிலான காணொளிகள் இணையத்தில் வெளியாகின.
இராணுவத்தில் தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்தன. வன்முறைப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் எவரும் அல்லது பொதுச் சொத்துகக்களை சேதப்படுத்துபவர்கள் எவரும் அரசுப் பணியில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்ததை அடுத்து அவை அமைதியடைந்தன. மேலும், பா.ஜ.க., ஆளும் மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் வேலைவாய்ப்பு கோரி போராடியதற்காக, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதோடு கைது செய்யப்பட்ட சம்பவங்களும்கூட பலமுறை நடந்துள்ளன.
மூன்று புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மோடி அரசு சுத்தமாக புரிந்துகொள்ளவேவில்லை. இந்த சட்டங்கள் நிறைய எதிர்ப்புகளை சந்தித்ததோடு, ஒரு வருடமாக நடந்த தொடர் போராட்டங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலட்சியம் என்று மோடி அரசாங்கம் கூறியது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விவசாய பிரச்சனைகளால் பல விவசாயிகள் இன்னும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். மோடி ஆட்சியில் 2014 முதல் 2022 வரை 1,00,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின்(NCRB) சமீபத்திய அறிக்கை காட்டுகிறது. அதாவது ஒன்பது ஆண்டுகளாக அனுதினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த நவம்பரில், ஹைதராபாத்தில் ஒரு இளம்பெண், பிரதமர் மோடியின் பேரணியின் போது, மின்விளக்குக் கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். “எந்த மதமாக இருந்தாலும், பிரதமர் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அவர் அப்படி சமமாக நடத்துவதில்லை. எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்குரியவன் என்பதுபோல தன்னை காட்டிக் கொள்ளக்கூடாது.” என்று கூறினார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாகவும், நடுத்தர மக்கள் வாழ்வதற்கே கடினமாக இருப்பதாகவும் அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். இதேபோல், ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார், எந்த அரசியல் கட்சியிலும் தொடர்பில்லாத இளைஞர்கள் மற்றும் பல சிறிய குழுக்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 6 மாதங்களாக மாநிலம் முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டங்கள், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத பிரச்சனைக்காக நடத்தப்பட்டு வருகிறது கவனிக்கத்தக்கது.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் பல எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரச்சனை மட்டுமே பெரும் பிரச்சனையாக ஊடகங்கள் காட்டி வருகின்றன. ஆனால், மணிப்பூரில் குக்கி-சோ சமூகத்தைச் சேர்ந்த 87 பேர் நடந்துவரும் இனப்படுகொலைக் காரணமாக கொல்லப்பட்டது பற்றி ஊடகங்கள் அதிகம் பேசவில்லை. இனக் குழுக்களுக்கு இடையேயான சண்டையில் இறந்தனர் என்றாலும் அவர்களின் துயரக் கதை அதிகம் கவனிக்கப்படவில்லை. இம்முறை, “முறைமீறியும், தரக்குறைவாகவும்” நடந்து கொண்ட கொண்டதற்காக அதிகப்படியான எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்படும் நிகழ்வை நாடாளுமன்றம் கண்டுள்ளது. இதுபோல பல தவறுகளைச் செய்துள்ள சில பாஜக எம்பிக்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பா.ஜ.க எம்.பி.க்களும் தவறான செயல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது: பிரதாப் சிம்ஹா அறியப்படாத நபர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்; மற்றொரு எம்.பி.யான டேனிஷ் அலியிடம்(முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்) ரமேஷ் பிதுரி என்பவர் வசையாடியதாக குற்றச்சாட்டு உள்ளது; பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஆறு மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சுமத்தியுள்ளனர்; லக்கீம்பூர் கேரி சம்பவத்திற்கு முன்பு அஜய் மிஸ்ரா தேனி என்பவர் போராடும் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது; மேலும், நாராயண் ரானே மற்றொரு எம்.பி.யான அரவிந்த் சாவந்த் பற்றி நாடாளுமன்றத்தில் வரம்பு மீறிய, தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், சிறு, குறு, மற்றும் நடுத்துர தொழில் துறை அமைச்சராக இருக்கும் ரானே, "பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பற்றி பேசுவதற்கு இங்கிருக்கும் எவருக்கும் யோக்கியதையில்லை, மாறாக பேசினால், உங்கள் யோக்கியதை என்னவென்பதைக் காட்டுவேன்," என்று பேசியுள்ளார்.
இந்த இளைஞர்களின் சொந்த ஊர்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் ஆளும் கட்சித் தலைவர்களால் காட்டப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தின் மீதான அவர்களின் அதிருப்தியையும், ஆதங்கத்தையுமே தொடர்ந்து எடுத்துக்காட்டுகின்றன.
தெளிவாக, இந்த இளைஞர்கள் டிசம்பர் 13 அன்று எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் விவாதத்தைத் கிளப்பியுள்ளன, இதுபற்றியெல்லாம் முக்கியமான பெரிய ஊடகங்களுக்குத் தெரியாது. நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், அவர்கள் ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்கள் மத்தியில் எழும் இதுபோன்ற விவாதங்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலமும், இந்த இளைஞர்கள் இதுபோன்ற போராட்ட வழிமுறையை தெரிவு செய்வதற்கு தூண்டிய அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வதன் மூலமும் நாட்டுக்கு நன்மை செய்ய முடியும்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை : https://theaidem.com/parliament-breach-and-the-issue-of-unemployment/
Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு