இந்திய விவசாய உற்பத்தியில் முதலாளிகள் இருக்கிறார்களா?

இந்தியாவில் நிலவும் உற்பத்தி உறவுகள் குறித்தும், உபரி மதிப்பு பறித்தெடுக்கப்படும் முறைகள் குறித்துமான ஒரு விமர்சனப்பூர்வமான கருத்துரை’ – பேராசிரியர் குருபிரசாத் கார்.

இந்திய விவசாய உற்பத்தியில் முதலாளிகள் இருக்கிறார்களா?

இந்திய விவசாயத்துறையில் நிலவும் உற்பத்தி உறவுகள் எந்த வகையிலும் விவசாயத்தில் ஒரு முதலாளித்துவ முறையை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. விவசாயத்தில் ஈடுபட்டு வரக்கூடிய ஏராளமான நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் மத்தியிலிருந்து பாட்டாளிகளும், முதலாளிகளும் உருவாகும் செயல்முறையை முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையில் இருக்கக்கூடிய நிலப்பிரபுக்கள் உட்பட பல்வேறு வர்க்கங்கள் முடக்கியே வருகின்றன. சிறு, குறு விவசாய பொருளுற்பத்தியிலிருந்து வரக்கூடிய உபரி மதிப்பை கணிசமான அளவிற்கு ஏகாதிபத்திய மூலதனத்துடன் பின்னிப் பினைந்துள்ள கந்துவட்டி மூலதன கும்பல்களும், வணிக மூலதன கும்பல்களுமே அபகரித்துகொள்வதால் தொடர்ச்சியாக எளிய சரக்கு உற்பத்தி கட்டத்திலேயே இந்திய விவசாயத்தை முடக்கிவிடுகிறது.

‘மக்கள் தொகை பெருக்கம், பொருளாதார தேக்கநிலை’ போன்றவற்றால் ஏற்படும் நெருக்கடி உற்பத்தி உறவுகளில் முற்போக்கான மாற்றம் நிகழ்வதற்கு சில சாதகமான சூழ்நிலைமைகளை தோற்றுவித்திருக்கக்கூடும். ஆனால், மேற்குறிப்பிட்ட காரணங்களால், சமூகத்தின் உற்பத்தி உறவுகளில் அடிப்படையான எந்த மாற்றத்தையும் தோன்றுவதற்கு அனுமதிக்கவில்லை. விவசாயத்தில் ஈடுபடக்கூடிய மொத்த மக்களின் எண்ணிக்கை, வேளாண் விளைபொருள்களின் வணிகமயமாக்கம், குத்தகை முறைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்றவற்றில் சில அளவு ரீதியிலான மாற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ளது என்பது உண்மைதான், என்றாலும் கூட இதே அம்சங்களை திட்டவட்டமான நிலைமைகளில் வைத்து பகுப்பாய்வு செய்யும் பொழுது இந்த சிற்சில அளவு ரீதியிலான மாற்றங்களுக்கும் கூட அரை-நிலப்பிரபுத்துவ சக்திகளே காரண கர்த்தாவாக இருந்து செயல்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

ஆக, நிலப்பிரபுத்துவத்திற்கும், பரந்துப்பட்ட மக்களுக்குமான முரண்பாடு இன்றளவும் அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றாக விளங்குகிறது எனலாம். நிலச் சீர்திருத்த கொள்கையை அமல்படுத்தி இந்த முரண்பாட்டை தீர்ப்பதன் மூலமாக மட்டுமே உற்பத்தி உறவுகளில் ஓர் முன்னேறிய மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

உற்பத்தி முறை குறித்த ஆய்வில் “பிரதான முரண்பாடு” என்பதற்கு மாறாக “அடிப்படையான முரண்பாடு” என்று பயன்படுத்துவதே பொருத்தமானதாகும்

கடந்த நாற்பது ஆண்டுகளாக பல பிரபல ஆய்வாளர்கள் மத்தியில் என்ன வகையான உற்பத்தி உறவுகள் இந்தியாவின் விவசாயத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறித்தான காரசாரமான விவாதம் நடைபெற்று வந்தது. U.பட்நாயக் 1990ல் எழுதிய புத்தகம் ஒன்றில் தற்போது பிரபலமாக அறியப்படுகின்ற ‘உற்பத்தி முறை குறித்தான விவாதம்’ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்தியாவில் நிலவும் உற்பத்தி உறவுகள் மற்றும் உபரி மதிப்பு திரட்டப்படும் முறைகள்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட விரிவான ஆய்வுக் கட்டுரை இரண்டு பாகங்களாக EPW வார இதழில் ஏப்ரல் 2, 2011 அன்று வெளியானது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம்(NSSO) புதிதாக சேகரித்திருந்த பெருமளவிலான புள்ளி விவரங்களை பயன்படுத்தி இந்திய சமுதாயத்தில் எந்த வகையான உற்பத்தி உறவு மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதை கண்டறிவதற்கு அமித் பசோலா மற்றும் திபங்கர் பாசு(2011a) முதலானோர் புதிதாக முயற்சி எடுத்துள்ளனர். நிலப்பிரப்புத்துவ உறவுகள் மறைந்துகொண்டே வருகிறது என்பதை நிறுவிய பிறகு “ஒரு வர்க்கமாக நிலப்பிரபுக்களின் பொருளாதார பலமும், சமூக அதிகாரமும் மங்கி கொண்டே வருகிற வேளையில், அவர்களின் அரசியல் அதிகாரத்தை தகர்ப்பதற்கான ஒரு நிலச் சீர்திருத்த திட்டம் இன்றளவுமா அவசியமானதாக இருக்கிறது? இந்தியாவில் இன்றும் கூட பரந்துபட்ட மக்களுக்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையிலான முரண்பாடு தான் பிரதான முரண்பாடாக இருக்கிறதா?”(அமித் பசோலா மற்றும் திபங்கர் பாசு 2011b) என்று வெளிப்படையாகவே ஒரு விசித்திரமான கேள்வியை முன்வைக்கின்றனர்,

தற்போதைய இந்திய சமூகத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கும், பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்க முடியாது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர். மார்க்சிய அரசியலைப் பொறுத்தவரையில் அவர்கள் முன்வைத்த கேள்வியே பொருத்தமானதாக இல்லை என்பதே இங்கு முதலில் குறிப்பிடப்பட வேண்டிய விசயமாகும். அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் மேலாதிக்கம் செலுத்தும் நாட்டில் கூட சில குறிப்பான நிலைமைகளில் ஏகாதிபத்தியத்திற்கும், ஒரு நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு பிரதான முரண்பாடாக உருவாகக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1937 ல் சீனாவை ஜப்பான் தாக்கிய போது அவ்வாறு தான் நடந்தது. இந்திய நாட்டிற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடே இல்லை என்று கூட ஒருவர் வாதிடலாம். எனினும், நிலப்பிரபுத்துவத்திற்கும், பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு என்ற கருதக்கூடிய பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்திய நாட்டிற்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடுகளில் ஒன்று எனக் கருதுவதோடு எந்த குறிப்பான கட்டத்தில் வேண்டுமானாலும் இந்த முரண்பாடு பிரதான முரண்பாடாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறி வருகின்றனர். இந்திய சமூகத்தில் இந்த இரண்டு முரண்பாடுகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்துள்ளதுள்ளதோடு, சமூகத்தின் ஒட்டுமொத்தமான பண்பையும், இயக்கப் போக்கையும் தீர்மானிக்கக்கூடியவையாக இருக்கின்றன என்றும் அவர்கள் கருதுகின்றனர். 

எனவே, இந்திய சமூகத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான  முரண்பாடு அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றா இல்லையா என்பதுதான் பொருத்தமான கேள்வியாக இருக்க முடியும். எப்படிப்பார்த்தாலும், ஆய்வாளர்கள் முன்வைத்த பல்வேறு வாதங்களின் மூலம் தற்போது இந்தியாவின் விவசாயத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளே மேலாதிக்கம் செலுத்துகிறது என்ற முடிவுக்கு வந்தடைந்தனர். எனவே, மூலதனத்திற்கும், உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடுதான் பிரதான முரண்பாடாக இருக்க முடியும் என்கின்றனர். இந்த முடிவை எட்டிய பிறகு, நிலத்தை பகிர்ந்தளிப்பதன் மூலம் இந்திய சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் பணியில் முதன்மையானதாக விளங்கும் நிலச் சீர்திருத்தத்திற்கான கோரிக்கையை இயல்பாகவே நிராகரிக்கும் நிலைக்குச் சென்றனர். (அமித் பசோலா மற்றும் திபங்கர் பாசு 2011b)

இந்திய விவசாயத்துறையில் முதலாளித்துவ உற்பத்தி முறை

இந்தியாவின் விவசாயத்துறையில் நிலவும் உற்பத்தி உறவுகள் பிரதானமாக முதலாளித்துவ தன்மையுடையதாகவே இருக்கிறது என்று நிறுவுவதற்கு கடந்த காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டது என்பது உண்மையே. எனினும், மேற்குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையில் NSSO அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களை பயன்படுத்தி தங்கள் நிலையை நிறுவுவதற்கு முயற்சித்திருப்பது புதுமையான ஒன்றுதான்.  விவசாயத்துறை மற்றும் தொழில்துறையில் நிலவிவரும் பலதரப்பட்ட உற்பத்தி உறவுகள் குறித்து அவர்களின் ஆய்வுக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருந்தாலும், நமது பகுப்பாய்வையும், அதன் முடிவுகளையும் விவசாயத்துறையை ஒட்டியதாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மேலாதிக்கம் செலுத்துகிறதா இல்லையா அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகள் ஒழிந்து வருகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அவர்கள் தந்த விளக்கமும், ஆய்வு முறையும் மார்க்சிய வழிப்பட்டதல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்கு முயலுவோம்.

ஆய்வாளர்கள் ஏன் அந்த முடிவிற்கு வந்தார்கள் என்பதற்கு முன்வைக்கப்படும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

  1. நிலப்பிரபுக்களின் அதிகாரம் சரிந்து வருதல்,
  2. நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்,
  3. குத்தகை முறையின் முக்கியத்துவம் குறைந்து வருதல்,
  4. உபரி மதிப்பு பிரதானமாக கூலி உழைப்பின் மூலமாகவே திரட்டப்படுதல்.

முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை போலல்லாது ஒரு நாட்டிற்குள்ளாகவே கூட நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் பல்வேறு வடிவங்களை எடுக்க முடியும். குறிப்பாக சொல்வதானால், வேறெங்கிலும் காணப்படாத சாதியக் கட்டமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படுகிறது. அரை நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு சேவை செய்யும் வகையில் ஒரு வலுவான காரணியாக இன்றும் கூட செயல்பட்டு வருகிறது.

எந்த வடிவங்களை எடுத்தாலும், பின்தங்கிய உற்பத்தி முறையின் வழியாக(Uneconomic means) உபரி மதிப்பு திரட்டப்படுவதென்பதே நிலப்பிரபுத்துவ பொருளாதார கட்டமைப்பின் சாராம்சமாகும். சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி உறவுகளில் முதலாளித்துவ முறைக்கே உரிய பல்வேறு அம்சங்கள் ஏன் காணப்படவில்லை என்பது குறித்து ஆராய்வதன் மூலமாக நிலப்பிரபுத்துவத்தை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்பதே இதன் பொருளாகும்.

பண்ட உற்பத்தியின் பொதுத்தன்மையே முதலாளித்துவ உற்பத்தி உறவின் சாரம்சமாகும். இதில் உழைப்பு என்பது கூட சந்தையில் விற்கப்படும், வாங்கப்படும் பண்டமாக மாறி விடுகிறது. இதில் பிரதானமாக முதலாளிகள், பாட்டாளிகள் என்ற இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான உறவே முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பின் உற்பத்தி உறவுகளாக விளங்குகிறது. பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுவதன் மூலமாக உபரி மதிப்பை முதலாளி வர்க்கம் திரட்டுகின்றது. உற்பத்தியை பெருக்குவதற்காகவும், திரட்டிய உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவதற்கும் பகுதியளவை மறுஉற்பத்திக்காக முதலீடு செய்கிறது. இந்த அம்சத்தை எடுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது, அனைத்து வர்க்க சமுதாயத்திலும், பொதுவான அம்சமாக இருக்கக்கூடிய ஒன்றான, உபரி மதிப்பை திரட்டுவதற்கான முறைகளில் மட்டும் முதலாளித்துவம் மாற்றம் கொண்டு வரவில்லை, மாறாக சமூகத்தில் உற்பத்தி சக்தியை மேம்படுத்துவதில் முற்போக்கான பங்கும் வகிக்கிறது. லெனின் வார்த்தையில் சொல்வதானால்,

“முதலாளித்துவ முறையின் கீழ் உழைப்பு சமூகமயமாவது என்பது பின்வரும் நிகழ்முறைகளின் மூலமாகவே நடந்தேறுகிறது. முதலில், இயற்கை பொருளாதாரத்தின் சிறப்புக் கூறுகளாக இருந்து வந்த சிறிய உற்பத்தி அலகுகளின் ஒழுங்கற்ற நிலைமை பண்ட உற்பத்தியின் வளர்ச்சியின் ஊடாக ஒழித்துக் கட்டப்படுகிறது. பின்னர் சிறியளவிலான உள்ளூர் சந்தை, மாபெரும் தேசிய சந்தையுடன்(பின்னர் உலக சந்தையுடன்) இணைக்கப்படுகிறது. தனிநபரின் பிழைப்புக்காக செய்யப்பட்ட உற்பத்தி, ஒட்டுமொத்த சமூகத்திற்கான உற்பத்தியாக மாற்றப்படுகிறது….” (லெனின் 1899)

முதலாளித்துவத்தின் துவக்க காலக்கட்டத்திலான தோற்றம் பல்வேறு வழிகளில் நடப்பதற்கு வாய்ப்பிருந்தாலும், உலகு தழுவிய அளவில் முதலாளித்துவம் எடுக்கும் வடிவம் என்பது இதுதான்.  குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒழித்துக்கட்டுவது என்ற புரட்சிகர பாதையில் பயணிக்காமல் நிலப்பிரபுக்களையே முதலாளித்துவ நிலவுடைமையாளர்களாக மாற்றியதன் மூலம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்த முதலாளி வர்க்கம், மிகுந்த சமரசமான பாதையில் பயணித்தது. ரஷ்யாவிலும் சரி ஜெர்மனியிலும் சரி இதுதான் நடந்தது. எப்படியிருந்த போதிலும், இரு நாடுகளிலுமே முதலாளித்துவ உற்பத்தி முறையை வளர்த்தெடுப்பது என்பதே இறுதி இலட்சியமாக இருந்தது. விவசாயத்துறையில் முதலாளித்துவ முறை கீழிருந்து வளர்த்தெடுக்கப்பட்டதற்கான மேலும் சில உதாரணங்களும் காணக்கிடைக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய ஜப்பானிலும், அமெரிக்காவிலும் இந்த முறையில் முதலாளித்துவ முறை வளர்த்தெடுக்கப்பட்டது. அங்கு  சிறு உடைமை விவசாயிகள் மத்தியிலிருந்து முதலாளித்துவ முறையிலான விவசாய உற்பத்தி வளர்த்தெடுக்கப்பட்டது. ஜப்பானை பொறுத்தமட்டில் அரசின் தொடர் உதவிகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்பது தெரிய வருகிறது.

இந்தியாவில் நிலவுடைமை முறை வீழச்சியடைந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் முன்வைத்ததை நாம் ஏற்க வேண்டுமென்றால் குறைந்தது பிரஷ்யப் பாதையைப் பின்பற்றி இந்திய விவசாயத்துறையில் முதலாளித்துவ வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.  ஆனால் அதற்கான கூறுகளும் இங்கு காணப்படவில்லை. மறுபடியும் அவர்கள் கூறுவது போல சிறு உடைமை முறையிலான விவசாய உற்பத்தி இந்தியாவில் அதிகரித்து வருகிற அம்சத்தை எடுத்துக் கொண்டாலும்கூட, அவர்கள் மத்தியிலிருந்து முதலாளித்துவ பானியிலான உற்பத்தி முறை தோன்றுவதற்கான வாய்ப்புகள் சிறு அளவில் இருக்கவே செய்கின்றன, ஏனெனில் சில நாடுகளில் இந்த வழியில் கூட முதலாளித்துவ முறை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய விவசாயத்துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதை ஒருவர் நிறுவ வேண்டுமெனில், சிறு உடைமை முறையிலமைந்த விவசாய உற்பத்தி போக்குகள், இதுவரையில் மேலாதிக்கம் செலுத்தி வந்த முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளை எவ்வாறு புரட்சிகரமாக மாற்றியமைத்து வருகிறது என்பதோடு இந்தியாவின் விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை எவ்வாறு ஆழப்படுத்தி வருகிறது என்பதையும் திட்டவட்டமான நிலைமைகளில் எடுத்துக் காட்ட வேண்டும். மக்களின் உழைப்பு(சமூக உழைப்பு) சந்தையில் வாங்கி, விற்கப்படும் பண்டமாக மாறுவிடுவெதன்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை அம்சமாகும். இதுவே உடைமை உறவுகளில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை எடுத்துக்காட்டக்கூடியதாகும். விவசாயத்தை பொறுத்தமட்டில் இந்த மாற்றம் நிலத்தை குறிக்கிறது. விவசாயத்தில் பிரதான உடைமை வடிவமாக இருந்து வரக்கூடிய நிலமே பண்டமாக மாறிவிடுவதை இது குறிக்கிறது. இந்த வழியில் முதலாளித்துவ முறை உருவாகவில்லையெனில், சிறுபண்ட உற்பத்தியாளர்களின் உபரி பறிக்கப்படாமலிருக்கும் பொழுது மட்டுமே முதலாளித்துவ முறை வளர்வதற்கான சாதகமான நிலைமை உருவாகிறது எனலாம். இங்ஙனம், முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ச்சி பெற்று வருகின்றன என்று ஒருவர் நிறுவ வேண்டுமெனில், இந்திய விவசாயத் துறையில் மேற்குறிப்பிட்ட போக்கு பிரதான அம்சமாக நிலவுவதை எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆய்வை மேற்கொண்டவர்கள் இவ்வாறு எடுத்துக்காட்டவில்லை. மாறாக, நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், வெவ்வேறு காலங்களில் ஏழை மற்றும சிறு விவசாயிகளும், சில வேளைகளில் நடுத்தர விவசாயிகளும் கூட சுதந்திரமான கூலி அடிமைகளாக(முதலாளித்துவ சமூகத்தில் இருப்பது போன்று) ஈடுபடும் போக்கு மேலோங்கி வருவதோடு வைத்து சமன்படுத்தியுள்ளனர். பின்னர், “கூலியடிமை முறையின் மூலம் தொழிலாளர்களின் உபரி மதிப்பு பிழிந்தெடுக்கப்படுவது போன்றுதான் மேற்குறிப்பிட்ட விவசாயிகளின் உபரி மதிப்பும் பிழிந்தெடுக்கப்படுகிறது” என்ற முடிவிற்கு வந்தடைந்துள்ளனர். (அமித் பசோலா மற்றும் திபங்கர் பாசு 2011a)

முதலாளித்துவ உற்பத்தி முறையில் விவசாயம் செய்யக்கூடிய ஒரு முதலாளி வர்க்கமே உருவாகவில்லை என்பதோடு மட்டுமல்லாது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் உடைமையும் உழைப்பும் சந்தையாதிக்க சக்திகளின் மூலமாக பறித்தெடுக்கப்படுவதும் கூட ஆய்வை மேற்கொண்டவர்களின் கண்ணை உறுத்தவே செய்துள்ளது. இதன் காரணமாகவே, வர்க்க சமுதாயத்தின் பொதுப் பண்பாக இருக்கக்கூடிய உழைப்பு சுரண்டல் என்ற ஒற்றை அம்சத்தின் மீது மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவித்ததன் மூலமாக, அதுவே இந்திய விவசாயத் துறையில் முதலாளித்துவ உறவுகள் தோன்றியதற்கான காரணம் என்று நிறுவ முயன்றிருக்கிறார்கள்.

பசோலா மற்றும் பாசு முன்வைத்த பலவீனமான வாதங்கள்

இந்திய விவசாயத் துறையில் முதலாளித்துவ  உற்பத்தி உறவுகளே மேலோங்கியிருக்கிறது என்பதை நிறுவுவதற்கு ஆய்வாளர்கள்(பசோலா மற்றும் பாசு) முன்வைத்த வாதங்களில் உள்ள பலவீனமான அம்சங்களை ஆராய்ந்து பார்ப்போம். 2.5 ஏக்கர்கள் வரையிலான நிலத்தை உடைமையாக வைத்திருந்த விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 1961ல் 8 சதவீதம் என்பதாக இருந்த நிலையிலிருந்து 2003 ல் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். அதே கால அளவில், பெரு நிலவுடைமைகளை சொந்தமாக வைத்திருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 60 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த போக்கு சரிவை நோக்கியிருந்தாலும், இன்னமும் கூட, கனிசமான விவசாய நிலங்கள் பெரு நிலவுடைமையாளர்களின் கைகளில்தான் குவிந்துள்ளன.

பெரும்பாலும் சிறு விவசாயிகள் மூலமாகத்தான் இந்தியாவில் விவசாயம் தற்போது நடைபெற்று வருகிறது என்பதே முக்கியமான அம்சம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, முதலாளித்துவ முறையிலான உற்பத்தி உறவுகள் இந்திய விவசயாத்தில் ஒருவேளை தோன்றுமானால், அதற்கு சிறு விவசாயிகளே காரணமாக இருக்க முடியும் என்கின்றனர்.

சிறு குறு நிலங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்தியின் பண்புக் கூறுகள் என்ன?

  1. விளைச்சலில் பாதி சந்தையில் விற்கப்படும்.
  2. பெரிய பண்ணையில் ஒரு ஏக்கருக்கு கிடைக்கக்கூடிய விளைச்சலை விட சிறிய பண்ணையில் அதிக விளைச்சல் இருக்கும்.
  3. சிறு, குறு விவசாயிகள் கூட விவசாயக் கூலிகளை வேலைக்கு சேர்த்துக்கொள்வர். மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட அம்சம் நிச்சயமாக முதலாளித்தவத்தையே எடுத்துக் காட்டுகிறது என்பதில் எந்த சந்தேகமும இல்லை. இரண்டாவது அம்சத்தை பொறுத்தமட்டில் கீழிருந்து முதலாளித்துவம் வளர்வதற்கான சாத்தியக் கூறுகளை எடுத்துக் காட்டுகிறது எனலாம். ஆய்வாளர்களே சுட்டிக்காட்டியிருந்த, இந்திய விவசாயத்தில் நிலவும் இன்னும் சில முக்கியமான அம்சங்களை அராய்ந்து பார்த்தோமானால், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை நோக்கி வளர்ந்து வருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதே தெரிய வருகிறது.
  4. மிகப் பெரும்பான்மையான விவசாயிகள் தொடர்ச்சியாக உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதோடு, தங்களது உழைப்புச் சக்தியையும் பிறருக்கு விற்கிறார்கள்.
  5. தங்கள் நிலத்திலே உழைப்பது, பிறருக்கு உழைப்பை விற்பது, கால்நடைகள் வளர்ப்பது மற்றும் சிற்சில பண்ட உற்பத்திகள் மூலமாக கிடைக்கும் மொத்த வருமானத்தையும் சேர்த்தாலும் ஊரகப் பகுதிகளில் வாழும் 96 சதவீத குடும்பங்களின் வருமானம் என்பது குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஆகும் செலவினங்களை கூட ஈடுகட்ட முடியாதளவிற்குத்தான் இருக்கிறது.
  6. கடந்த பத்தாண்டுகளில் கடன்சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல சொல்லொன்னா துயரங்களும், ஏன் தற்கொலைகளும் கூட ஏற்பட்டுள்ளது. அமைப்பு சார்ந்த வழிகளிலிருந்து வழங்கப்பட்டு வந்த கடன்களும் குறையத் தொடங்கியதால் கந்து வட்டிக்காரர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது நாளடைவில், விவசாயத்திலிருந்து வரக்கூடிய உபரி மதிப்பை கந்துவட்டிக்காரர்கள் உறிஞ்சிக் குடிக்கும் போக்கை தீவிரபடுத்தியது.

ஆஸ்பக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எக்கானமி(இந்திய பொருளாதாரத்தின் அம்சங்கள்) என்ற இதழில்(மலர் : 46, 2008) வெளிவந்த புள்ளிவிவரங்களின் மூலம் கந்துவட்டிக் கொடுமையின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளலாம். விவசாயிகளின் நிலைமை குறித்தான மதிப்பீட்டு ஆய்வில் (The Situation Assessment Survey Of Farmers – NSSO அறிக்கை 495-499) கண்டறிந்த புள்ளி விவரங்களோடு, அமைப்பு சாராத வழியில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து வந்தடைந்த சில நம்பத்தகுந்த உத்தேசமான தகவல்களும் அந்த இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது 2002-03 ல் வட்டியாக செலுத்தப்பட்ட தொகை மட்டுமே 41,000 கோடி என்றும், அதுவரை மொத்தமாக விவசாயத்தில் செய்த முதலீடு என்பதே 33,508 கோடிதான் என்றும், அதில் 7,874 கோடி மட்டுமே புதிதாக செய்யப்பட்ட முதலீடு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கூலியமைப்பு முறையின் மூலமாகவே உபரி மதிப்பு பிரதானமாக பறித்தெடுக்கப்படுகின்றது என்ற ஆய்வாளர்கள் கூற்றை ஏற்போமேயானால், விவசாயத்தில் உபரியை திரட்டி, மறு உற்பத்தியில் முதலீடு செய்கின்ற முதலாளிகள் அல்லது வருங்காலங்களில் முதலாளிகளாக உருவாகக்கூடியவர்கள் எங்குமே இல்லாதது ஏன்?

இந்த கேள்விக்கு ஆய்வாளர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, இந்திய விவசாயத் துறையில் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் முன்வைத்த வாதம் பலமானதாக இல்லை. இங்கு, ரஞ்சித் ராவ்(1973) அவர்கள் கூறியதை மேற்கோளிட்டு காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“முதலாளிகள் இல்லாமல் எப்படி முதலாளித்துவ முறை இருக்க முடியாதோ அதே போல, விவசாயத்திலும் முதலாளிகள் (பணக்கார விவசாயிகள்-மொ.ர்) இல்லாமல் முதலாளித்துவ பாணியிலான விவசாய முறை இருக்கவே முடியாது. எனவே அவ்வாறு பேசுவது அடிமுட்டாள்தனமாகும். மேலும், முதலாளி என்று பொதுவாக சொல்வதற்கும், விவசாய உற்பத்தியில் ஈடுபடக்கூடிய முதலாளி என்று குறிப்பாக சொல்வதற்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை.”

அ) முதலில், கொடுபடாத கூலியின் மூலமாக பிழிந்தெடுக்கப்படுகின்ற உபரி மதிப்பிலிருந்து வெறுமனே 10.5 சதவீதமளவிற்கான பணத்தை மட்டுமே உற்பத்தி சக்திகளை பெருக்குவதற்கு பெரு நிலவுடைமை வர்க்கம் (10 ஹெக்டருக்கும் அதிகமான நிலத்தை உடைமையாக வைத்திருப்பவர்கள்) பயன்படுத்துகிறது.(இந்தியா முழுவதும் இதுதான் பொதுவான போக்காக இருக்கிறது. பஞ்சாபில் மட்டும் இந்த விகிதம்(22.3%) சற்றே அதிகமாகவுள்ளது. எனவே, இந்த வர்க்கங்கள், பெருமளவிலான உபரி மதிப்பை மீண்டும் உற்பத்தி சக்திகளை பெருக்குவற்காக முதலீடு செய்வதில்லை என்பது தெரிகிறது.

ஆ) ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்த தகவல்களின்படி பார்த்தால் கூட சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் தங்களது குறைந்தபட்ச தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவது தெரிகிறது. எனவே, உபரி மதிப்பை திரட்டுவது என்ற கேள்வியே இங்கு எழத் தேவையில்லை.

நிலமற்ற கூலிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களது நிலத்திலோ அல்லது பிறரது நிலத்திலோ கடுமையாக உழைப்பதன் மூலமாக உபரியை உருவாக்குகிறார்கள் என்பது உண்மைதான். என்றாலும்கூட, இந்திய விவசாயத் துறையில் முதலாளி வர்க்கம் என்று அங்கீகரிக்கவே முடியாத பல்வேறு வர்க்கங்களால்தான், அவ்வாறு சேர்ந்த உபரியின் பெரும்பகுதி அபகரித்துக் கொள்ளப்படுகிறது என்பதும் உண்மையாகத்தான் இருக்கிறது. இவ்வாறு உற்பத்திக்கு எவ்வகையிலும் உபரியை பயன்படுத்தாத பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த பல்கூட்டு சுரண்டல்காரர்களால்தான் பெரும்பகுதியான உபரி மதிப்பு அபகரித்துக் கொள்ளப்படுகிறது. ஏகாதிபத்திய மூலதன செயல்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ள கந்து வட்டிக்காரர்கள், விவசாயத்திற்கு தேவையான சாதனங்களை வழங்கக்கூடிய வியாபாரிகள், வணிகர்களே முதன்மையான பல்கூட்டு சுரண்டல்காரர்களாக விளங்குகிறார்கள். உலகமயமாக்கலின் கொள்கைக்கு பிறகு ஏகாதிபத்தியவாதிகளுடனான இவர்களின் பினைப்பு மேலும் அதிகரிக்கவே செய்தது. இந்திய மாநிலங்களில் எங்கெல்லாம் விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ வணிகமயமாக்கல் அதிகமாக இருந்ததோ, அங்கெல்லாம் ஏகாதிபத்திய மூலதனத்தின் செல்வாக்கு மென்மேலும் அதிகரித்தது. இவர்களோடு சேர்ந்து கந்துவட்டி முறையின் ஆதிக்கமும் கொடிகட்டி பறந்தது. முதலாளித்துவ வணிகமயமாக்கல் எந்தெந்த மாநிலங்களிலெல்லாம் அதிகமாக இருந்ததோ, அங்கெல்லாம்தான் கடந்த 15 ஆண்டுகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளது. அகில இந்திய சராசரியான 57 சதவீதத்தோடு ஒப்பிடுகையில் ஆந்திர பிரதேஷம், கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா, கேரளா முதலான மாநிலங்களில் உற்பத்தியாகும் மொத்த விளைச்சலில் 69 சதவீதம் முதல் 81 சதவீதம் வரை சந்தையில் கொண்டு சென்று விற்கப்படுத்தல் மூலம் வணிகமயமாக்கல் நிகழ்ந்துள்ளது. இதே மாநிலங்களில்தான் அதிகளவிற்கு விவசாயிகளின் தற்கொலைகளும் நடந்துள்ளன. மேற்குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கங்கள் நிலவுடைமையாளர்களாகவும் இருக்கலாம், நிலமில்லாதவர்களாகவும் இருக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.

ஆய்வாளர்கள் முன்வைத்ததுபோல விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இருப்பதை எதையுமே மேற்கண்ட நிலைமைகள் உணர்த்தவில்லை. மேற்கண்ட நிலைமைகள் வெறுமனே விவசாயிகள் எளிய நிலையிலான பண்ட உற்பத்தியில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதையே சாரம்சமாக எடுத்துக் காட்டுகிறது. தாம் இருந்துவரும் கையறு நிலையில் இதை மட்டுமே அவர்காளல் செய்ய முடியும். எனினும், இது ஏகாதிபத்தியம் தோன்றுவதற்கு முன்பிருந்த நிலைமைகளில் எப்படி சில நாடுகளில் முதலாளித்துவம் தோன்றியதோ அது போல முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை தோற்றுவிப்பதற்கு மாறாக சந்தை போட்டிகளின் காரணமாக விவசாயிகளை மேலும் பல பிரவுகளாக கூறுபோடுவதற்கே வழிவகுக்கும்.

தமது கருத்தை நிரூபிப்பதற்காக, அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை நீடிப்பதற்கு நிலப்பிரபு வர்க்கமே ஒரே காரணம் என்று எண்ணியதை வைத்தே ஆய்வை நடத்தியுள்ளனர்.  ஆனால், அரை நிலப்பிரபுத்துவம் என்பதே பகுதியளவில் மூலதனத்துடன் ஒன்றிணைந்திருப்பதையே குறிக்கிறது. இந்த ஒன்றிணைவு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை அடித்தளமாகக் கொண்டு சில முதலாளித்துவ அம்சங்கள் தோன்றுவதற்கு வழிவகை செய்துள்ளன. இதுபோன்ற சிற்சில முதல்லாளித்துவ அம்சங்களைத்தான் இந்திய விவசாயத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் தோன்றியுள்ளதென கூறிக்கொள்கின்றனர். இந்த ஒன்றிணைவு முதலாளித்துவ அம்சங்களை மட்டும் தோற்றுவிப்பதில்லை மாறாக நிலப்பிரபுக்கள் அல்லாத முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையை சேர்ந்த ஆளும் வர்க்கங்கள் பலவற்றையும் சேர்த்தே தோற்றிவிக்கிறது. இவைகள்தான் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை உண்மையில் முடக்கி வருகின்றன. இந்தப் போக்கு காலனியாதிக்க கட்டத்திலேயே தோன்றிவிட்டது.

“சிறு உடைமையாளர்களின் பண்ட உற்பத்தி வணிக மூலதனத்தாலும், கந்துவட்டி மூலதனத்தாலும்தான் பிரதானமாக சுரண்டப்படுகிறது. இந்த சுரண்டல் குறைந்த கூலிக்கு உபரியை அபகரிக்கும் கூலியடிமை முறையின் மூலமாக நடைபெறவில்லை மாறாக பரிவர்த்தனையில் உருவாக்கப்பட்டுள்ள சமமற்ற விஷமத்தனமான முறையால் நடைபெறுகிறது; அதாவது உற்பத்தி சந்தை, கூலி சந்தை மற்றும் கடன் சந்தை என அத்துனை இடங்களிலும் சுரண்டும் வர்க்கங்களையே நம்பியிருக்குமாறும் அதில் அவர்களே மென்மேலும் பலனடையுமாறும் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையே இந்த விஷமத்தனமான சமமற்ற பரிவர்த்தனையின் சாராம்சம்” என்று (2011a) ஆய்வாளர்களே எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளனர்.

சந்தை உருவாகியுள்ளது என்பது முதலாளித்துவ அம்சத்தையே வழக்கமாக எடுத்துக்காட்டினாலும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் சுதந்திரமான கூலியமைப்பு முறை தோன்றுவதை தடுக்கின்ற, அடிமாட்டு விலைக்கு தங்களது உற்பத்திப் பொருள்களை விற்க வேண்டிய நிலைக்கு ஏழை விவசாயிகளை தள்ளுகின்ற அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளின் கை இன்றளவும் ஓங்கி இருப்பதையே ஆணித்தரமாக இவை எடுத்துக் காட்டுகிறது என பல்வேறு பொருளாதார அறிஞர்களும் (A. பகதூரி 1983, K. பரத்வாஜ் 1974) எடுத்தியம்பியுள்ளனர். இவ்வாறு முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையிலமைந்த சுரண்டும் வர்க்கங்கள் இந்த சந்தைகளை தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு விவசாயிகள் மத்தியிலிருந்து பாட்டாளிகள் உருவாவதையும், இயற்கையான போட்டியின் மூலம் படிப்படியாக முதலாளிகள் உருவாவதையும் தடுக்கின்றனர். 

ஆஸ்பக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி (மலர்:46,2008) இதழில் இந்த அம்சங்கள் பற்றி பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது;“… விவசாயிகள் சந்தையில் விற்பதற்காக உற்பத்தி செய்கிறார்கள், ஆனால் அவர்களால் அதிலிருந்து உபரியை திரட்ட முடியவில்லை என்பதோடு மட்டுமல்ல பற்றாக்குறையான வளங்களில் பெருந்திரளான விவசாயிகள் ஈடுபட்டு வந்தபோதிலும் அவர்களால் அதிலிருந்து வெளியேறவும் முடியவில்லை. விவசாயிகளின் இந்த கையறு நிலையை பயன்படுத்திக் கொண்டு, நிலம், கடன், இடுபொருட்கள் மற்றும் உற்பத்திக்கான சந்தையை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ள நிலவுடைமை வர்க்கங்களால் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதற்கு உபரியை திருப்பிவிடாமலேயே உபரியை பறித்தெடுத்துக் கொள்ள முடிகிறது. நீங்கள் நாடு முழுவதும் கூட பயணம் செய்து பாருங்கள், இந்த உபரியை ஊரகப் பகுதியில் உள்ள ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு ஆடம்பரச் செலவுகள் செய்வது, அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பது, சிறு நிலங்களை வாங்குவது, வர்த்தகம் செய்வது/பதுக்கலில் ஈடுபடுவது/ஊக வணிகத்தில் ஈடுபடுவது, இதர தொழில்கள் மற்றும்(கட்டிட கட்டுமான ஒப்பந்தங்கள், தொழிலாளர்களை கான்டிராக்ட் முறையில் சப்ளை செய்வது, சரக்குந்து-பேருந்து போக்குவரத்து தொழில் செய்வது, திரையரங்குகள், ஹோட்டல்கள், பொறியியல்/மருத்துவக் கல்லூரிகள், திருமண மண்டபங்கள கட்டுவது), குற்றச் செயல்களில் ஈடுபடுவதோடு தங்களது சமூக பொருளாதார பலத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக தேர்தல்களில் செலவு செய்வது பேன்றவற்றில் எப்படிப் வாரியிறைக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். போதிய மூலதனமில்லாமல், நலிவடைந்து வரும் சிறு தொழிலகளுக்கு இந்த உபரி மூலதனம் செலவிடப்படாமல் ஊரகப் பகுதிகளில் உள்ள இந்த ஆளும் வர்க்கங்களின் கைகளிலே கணிசமான அளவு தங்கிவிடுகிறது.”(பக்கம்-53)

எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வந்தாலும் நிலப்பிரபுத்துவ பிரிவினரோடு கைகோர்த்துக் கொண்டு, முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முந்தைய உற்பத்தி முறையைச் சேர்ந்த அனைத்து ஒட்டுண்ணி வர்க்கங்களும் ஒன்றுசேர்ந்துதான் ஆகப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ சக்திகளாக உருவெடுத்துள்ளனர். இவர்கள்தான் இந்திய விவசாயத் துறையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முடக்கி வருகின்றனர்.

இரண்டு அம்சங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்துள்ளனர்;

1. சரிந்து வரும் நிலப்பிரபுக்களின் அதிகாரம்; தேசிய மாதிரி கணக்கெடுப்பில் (NSS அறிக்கை எண்.491) கனிசமான அளவிற்கு நிலவுடைமையில் இன்னமும் ஏற்றத்தாழ்வு நீடிக்கவே செய்கிறது என்பது தெரிய வந்துள்ளது. நிலவுடைமை அடுக்கின் உச்சாணிக் கொம்பிலுள்ள 9.5 சதவீத குடும்பங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் மொத்த நிலத்தில் 56.6 சதவீதமளவிற்கான நிலங்களை தங்களது உடைமைகளாக வைத்துள்ளனர். மீதமுள்ள மிகப் பெரும் எண்ணிக்கையிலான அதாவது 90.5 சதவீத குடும்பத்தினர்களிடம் வெறுமனே 43.4 சதவீத அளவிலான நிலங்கள் மட்டுமே உடைமையாக உள்ளது.

2. விவசாயத்தில் ஈடுபடக்கூடிய விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை; விவசாய உற்பத்தியில் ஈடுபடக்கூடிய விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது என்றும், அதே நேரத்தில் சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2007-08ல் வெளிவந்த NSS அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1983ல் இருந்ததை காட்டிலும் அதிகமானளவிற்கு தற்போது 64.2 சதவீதம் பேர் சொந்த நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். விளைச்சலுக்குத் தேவையான பொருட்களை அதிக விலைக்கு விற்கப்படும் வணிக முறையால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. செலவை குறைப்பதற்கு கூலிக்கு வேலையாட்களை சேர்த்துக்கொள்வதற்கு பதிலாக குடும்பதிலிருப்பவர்களே வேலை செய்யும் போக்கு உருவாகி வருகிறது. 

எனவே ஆய்வாளர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்ட, முதலாளிதுவ முறையின் சிறம்பம்சமான சுதந்திரமான கூலித் தொழிலாளர்களாக மேற்கண்ட தொழிலாளர்கள் உருவாகவில்லை என்பதே நிரூபனமாகிறது. மாறாக இத்தொழிலாளர்கள் சுதந்திரமானவர்களாக, நிலத்தோடு முற்றிலும் பிணைக்கப்பட்டவர்களாக, நிலத்தோடு அரைகுறையாக பிணைக்கப்பட்டவர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

இந்திய முதலாளித்துவ விவசாய முறையின் கோட்டை என கருதப்படும் பஞ்சாபில் உள்ள விவசாயக் கூலிகளின் நிலை குறித்து சமீபத்தில் வைசவ் பாரதி அவர்கள் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். பஞ்சாபில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை என்பது கணிசமான அளவிற்கு விவசாயக் கூலிகளையும் உள்ளடக்கியதுதான் என்ற மறுக்க முடியாத உண்மை எடுத்துக் காட்டியிருந்தார். நிலப்பிரபுக்களாலும், கந்துவட்டிக்காரர்களாலும் உருவாக்கப்பட்ட கடன் என்னும் புதைகுழியில் சிக்கியவர்களாக விவசாயக் கூலிகள் மாறினர். பழைய முறையில் நிலத்தில் பிணைக்கப்பட்டவர்கள் என்று இவர்களை எப்படி சொல்ல முடியாதோ அதே போல முதலாளித்துவத்தின் கீழ் உள்ள சுரந்திர கூலியடிமைகள் என்றும் இவர்களை சொல்ல முடியாது.

நிலப்பிரபுத்துவத்தோடும், அரை நிலப்பிரபுத்துவத்தோடும் ஒப்பிடுகையில் முதலாளித்துவ உற்பத்தி உறவு முன்னேறிய வழியில் சமூக உற்பத்தியை வழிநடத்திச் செல்வதில் முற்போக்கு பாத்திரம் வகிக்கிறது. பல்வேறு வர்க்கங்கள் மற்றும் உற்பத்தி உறவுகளை கண்டறிவதற்கு ஆய்வாளர்கள் மார்க்சிய கோட்பாடுகளை நேரடியாகவே பின்பற்றியுள்ளனர். நாட்டின் சமூக அரசியல் அரங்கில் சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லக்கூய, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை தோற்றுவிப்பதற்கு வேண்டிய முற்போக்கான சக்திகளில்லாமல் முதலாளித்துவத்தை தோற்றுவிக்க முடியாது என்றும்தான் மார்க்சிய கோட்பாடுகள் கூறுகின்றன. ‘அதிகமான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதால் ஏற்படும் நெருக்கடியும், பொருளாதார தேக்க நிலையும்’ ஒட்டுமொத்தமாக அரை நிலப்பிரபுத்துவ பொருளாதார கட்டமைப்பில் பல மாற்றங்களை தூண்டிவிடக்கூடும் என்பது உண்மைதான், என்றாலும்கூட முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கு அவசியத் தேவையாக உள்ள பண்பு வகையிலான மாற்றங்களை அவற்றால் நிச்சயமாக தோற்றுவிக்க முடியாது என்பதும் உண்மையாகும்.

பன்னாட்டு ஏகபோக மூலதனமும், பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவமும்

இன்று இந்திய விவசாயத் துறையில் காணப்படும் பலதரப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கான அம்சங்கள் காலனியாதிக்க காலத்திலும்கூட இருந்துள்ளது என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். பன்னாட்டு ஏகபோகங்களின் மூலதன ஆதிக்கத்தின் கீழ் செயல்படும் உலகு தழுவிய ஏகாதிபத்திய அமைப்பு முறையை ஒதுக்கிவிட்டு எந்தவொரு பின்தங்கிய நாடுகளின் உற்பத்தி முறையையும் இன்று ஆராயக்கூடாது. இதில் நாம் இரண்டு முக்கியமான அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது;

  1. நிலத்தையும், கூலியையும் பிரதானமாகக் கொண்டு சொற்ப அளவிலான மூலதன உருவாக்கம் மட்டுமே நடைபெறுகின்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறைகளை பின்தங்கிய நாடுகளில் பாதுகாப்பதற்கே ஏகாதிபத்திய நாடுகள் விரும்புகின்றன. இதன்மூலம், தங்களது நாடுகளில் முன்னேறிய உற்பத்தி சக்திகளை கொண்டு திரட்டப்படுகின்ற உபரி மூலதனத்தை (லெனின் 1916) வைத்து தொடர்ந்து இலாபம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்திக் கொள்கின்றனர். இதை சாதிப்பதற்காக ஏகாதிபத்தியவாதிகள் வகுத்துக் கொண்ட அரசியல் ரீதியிலான போர் தந்திர திட்டம் பற்றி மூன்றாம் அகிலம் பின்வருமாறு விளக்கியுள்ளது; “நிலப்பிரபுக்கள், வணிக முதலாளிகள், கந்துவட்டி முதலாளிகள் (லேவாதேவிக்காரர்கள்) உள்ளிட்ட முதலாளித்துவத்திற்கு முந்தைய பொருளாதார சமூக கட்டமைப்பைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களுடன் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக முதலில் கூட்டணி ஒன்றை ஏகாதிபத்தியம் உருவாக்கிக் கொள்கிறது. முதலாளித்துவ முறைக்கு முந்தைய வழியிலான சுரண்டல் முறை எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் (குறிப்பாக கிராமங்களில்) அது தொடர்ந்து நடைபெறுவதற்காக ஏகாதிபத்தியங்கள் பாதுகாப்பளிக்கின்றன. இவ்வறு செய்வதன் முலம் சமூக மாற்றத்திற்கு எதிரான தங்களது பிற்போக்கான கூட்டாளிகள் தொடர்ந்து நீடித்து வருவதற்கான அடித்தளத்தை உருவாக்கித் தருகின்றனர் எனலாம்.” (என். சென் குப்தா, 1977)
  2. வெறுமனே முதலாளித்துவ முறைக்கு முந்தைய ஆளும் வர்க்கத்துடன் நேரடியாக கூட்டு சேர்வதன் மூலமாக, பழைய உற்பத்தி முறைகளின் அனைத்து வடிவங்களையும் பாதுகாப்பதென்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனியாதிக்கத்தின்கீழ் வைத்திருந்தது போன்று அதாவது ஏகாதிபத்திய கட்டம் தோன்றுவதற்கு முன்பிருந்த காலனியாதிக்கத்தில் வேண்டுமானால் இது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால், புதிய காலனியாதிக்க சுரண்டலமைப்பு முறையில் ஏகபோக மூலதனத்தால் அவ்வாறு இலாபம் ஈட்ட முடியாது. கொள்ளை இலாபத்தை தொடர்ந்து ஈட்ட வேண்டுமெனில் குறிப்பிட்ட அளவிற்கு மூலதனத்தை உற்பத்தியில் முதலீடு செய்வது, விவசாயத்தில் கிடைத்த விளைபொருட்கள் சந்தையில் விற்கப்படுவதன் மூலம் வணிகமயமாக்குவது, நிலத்தோடு, கூலியையும் வாங்கி விற்பதற்கான சந்தையை உருவாக்குவது போன்று சந்தையாதிக்கத்திற்கு தேவையான பல வகையான அமைப்பு முறைகளையும் பின்தங்கிய நாடுகளில் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், இது போன்ற புதிய மாற்றங்களுக்கேற்ப தங்களது சுரண்டல் முறைகளையும், உபரியை பறித்தெடுக்கும் முறையையும் கூட இதுபோன்ற நாடுகளில் உள்ள முதலாளித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கங்கள் மாற்றியமைத்துக் கொண்டனர்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு 1947ல் வெளியேறிய போது இதுதான் நடந்தது. குறிப்பாக, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க பசுமைப் புரட்சி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு பிறகு, விவசாயத்தில் மூலதனம் திருப்பிவிடப்பட்டது, வேளாண் விளைபொருட்கள் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன, விவசாய இடுபொருட்களுக்கான சந்தை கூட உருவானது என இன்னும் பற்பல மாற்றங்கள் பாரிய அளவில் நடந்தேறியதை பொருளாதார அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், இவையாவும், முதலாளித்துவ உற்பத்தி முறையின் அம்சங்கள் இல்லை என எவரும் மறுக்கப்போவதில்லை. எனினும், இது நடந்தவற்றில் ஒரு பகுதி மட்டுமே இங்கு கூறப்பட்டுள்ளது.

“மற்றொரு பகுதி என்னவெனில், சர்வசாதரணமாக நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பும், அரை நிலப்பிரபுத்துவ வடிவில் தொடர்ந்து நீடிக்கவே செய்தது. எனினும், அது ஏகாதிபத்தியம் ஊடுருவுவதற்கு முன்பிருந்த அசல் வடிவில் நீடிக்கவில்லை. மாறாக, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தின் கூறுகளை பல்வேறு விகிதாச்சாரங்களில் உள்ளடக்கியது போன்று ஒன்றுகலந்த வடிவில் நீடிக்கத் தொடங்கியது. அதாவது சிலநேரங்களில் கிட்டத்தட்ட முதலாளிகளுக்கு நிகரான வளர்ச்சிகளைக் வெளிப்படுத்தியும், அதே சில நேரங்களில் முதலாளித்துவத்திற்கு முந்தைய (நிலப்பிரபுத்துவ) முறையிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளது என்று சொல்லுமளவிற்கு ஆகப் பிற்போக்கான வடிவத்திலும் நீடிக்கத் தொடங்கியது எனலாம்.”(என். சென் குப்தா, 1977)  

கண்கூடான உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ள வேண்டுமெனில், சமீப காலங்களில் நம் நாட்டு விவசாயிகளை காவு வாங்கி வரும் கந்து வட்டி கொடுமைக்கும், குறைந்த விலைக்கு சந்தையில் விளைபொருட்கள் விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளிய வணிகமயமாக்கலுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை பார்க்க வேண்டும். 1970கள் மற்றும் 80களில் அமைப்பு சார்ந்த வழியில் விவசாயிகளுக்கு அதிகமான கடன்கள் கொடுக்கப்பட்டதால் கந்து வட்டிக் கொடுமை ஓரளவிற்கு குறைந்திருந்தது. ஆனால் 1990களுக்கு பிறகு புதிய தாராளமய கொள்கையை அமல்படுத்தச் சொல்லி வந்த ஆணையைத் தொடர்ந்து அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் வழியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கடன் குறைக்கப்பட்டது; விவசாயத்தில் வணிகமயமாக்கலை தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களும் நிறையத் தீட்டப்பட்டன; இதைத் தொடர்ந்து கந்து வட்டிக் கொடுமையும், வன்கொடுமையாக தலைவிரித்தாடத் தொடங்கியது. இந்த முறை கந்துவட்டியில் ஈடுபடுபவர்களின் சொரூபம் மட்டுமே மாறியிருந்தது, அதாவது வெவ்வேறான நபர்கள் இத்தொழிலை கையில் எடுத்துள்ளனர் என்று ஆய்வாளர்களே எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு இடங்களில், விவசாய விளைபொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகள், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பலர் என இத்தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலைக்கும், கந்து வட்டி கொடுமைக்கும், விவசாயத்தில் வணிகயமாக்கலின் தாக்கத்திற்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. “1961 முதல் 1981 வரை கந்து வட்டிக்கு கடன் கொடுப்பது கனிசமாக குறைந்து கொண்டே வந்தது. இந்த போக்கு 1980 களின் துவக்க காலங்களில் தலைகீழாக மாறிவிட்டது. அதன் பிறகிருந்தே ஊரகப் பகுதியில் கந்து வட்டிக்காரர்களின் அட்டூழியம் பட்டவர்த்தனமாக அரங்கேறத் துவக்கியது எனலாம்…... முன்பிருந்த கந்து வட்டிக்காரர்களுக்கும் நிலத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது, ஆனால் புதிதாகத் தோன்றியுள்ள கந்து வட்டிக்காரர்களுக்கு அத்தகைய தொடர்பேதும் இருக்கவில்லை.” என ஆய்வாளர்களே எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

பன்னாட்டு ஏகபோக (நிதி) மூலதன கும்பல்களின் ஆணைக்கு அடிபணிந்து அமல்படுத்தப்பட்ட புதிய தாராளக் கொள்கைகளின் தொடர்ச்சியாக அரசின் முதலீடுகள் குறையத்தொடங்கியதால், விவசாயத்தில் மூலதன உருவாக்கமும் சரியத் தொடங்கியது என்கிற மற்றொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சன்கதி (sanhati.com) வலைதளத்தில் தான் எழுதிய கட்டுரையில் “திட்டமிட்ட பொருளாதாரம் துவங்கப்பட்டதோடு இணைந்து விவசாயத்தில் மூலதன உருவாக்கமும் அதிகரிக்க தொடங்கியது. இதற்கு அரசு அதிக அளவில் முதலீடு செய்ததே காரணம். 1980களுக்கு பிறகு அரசின் முதலீட்டுக்கான செலவினங்கள் அப்பட்டமாக குறையத் தொடங்கியதால் தனியார் முதலீடுகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமான முதலீடுகளின் வளர்ச்சிப் போக்கையும் அது பாதித்தது. மக்கள் தொகை பெருக்கமும், பற்றாக்கறையான நில வளமும், குறைந்து வரும் அரசின் செலவினங்களோடு சேரும் பொழுது நிலவுடைமைகள் மென்மேலும் துன்டாடப்படுவதற்கு வழிவகுத்தது. இதன் காரணமாக 90களின் துவக்கத்திலிருந்தே விவசாய உற்பத்தி பாதிப்பை சந்திக்கத் தொடங்கியது. விளைச்சலும் கடந்த இருபது ஆண்டுகளாக தேக்கநிலையில்தான் இருந்து வருகிறது” என்று தேபரிஷி தாஸ் (2010) முடிவிற்கு வந்துள்ளார். 

இந்தியாவில் சமூக முன்றேத்திற்கான திறவு கோலாக இன்றும் இருப்பது நிலச் சீர்திருத்தம் மட்டுமே

நிலச் சீர்திருக்க பிரச்சினையைப் பொறுத்தமட்டில், நிலத்திதை பகிர்ந்தளிப்பதன் மூலமாக செய்யப்படும் நிலச்சீர்திருத்த திட்டம் நிலத்தை சிறுது சிறிதாக கூறுபோடுவதோடு, தற்சமயத்தில் விவசாயத்திற்கு ஆகும் செலவினங்களை கொண்டு பார்க்கும் பொழுது பொருளாதார அடிப்படையில் நல்ல பலன் தரக்கூடிய வழியாக இருக்காது என்பதை குறிப்பாக எடுத்துக்காட்ட முயற்சித்திருக்கிறார்கள். இதன் மூலம் எந்த உபரி மூலதனமும் கிடைக்காது என்பதால் அதை கொண்டு தொழில்மயமாக்கலுக்கும் பங்களிக்க முடியாது. இந்த அம்சத்தில்தான் ஆய்வாளர்களின் நிலைப்பாடு தெளிவாக நிலச் சீர்திருத்தக் கோரிக்கைக்கு எதிராக இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால் முற்றுமாக நிராகரிக்கும் நிலைக்கே செல்கிறது எனலாம். 

கீழ்க்கண்ட அம்சங்களை நினைவில் கொள்வோம்;

அ) நிலம் எவ்வளவு சிறியதாகவும் இருந்தாலும், எண்ணிலடங்கா சிறு விவசாயிகளின் கடினமான உழைப்பின் மூலமாக உருவாக்கப்படும் உபரி மதிப்புதான் அரை நிலப்புரப்பதுவ சுரண்டல்காரர்களை கொழுக்க வைப்பது மட்டுமல்லாது ஏகாதிபத்திய மூலதன கும்பல்களையும் கொழுக்க வைக்கிறது.

ஆ) பெரு நிலவுடைமைகள் ஒன்றும் உபரி மதிப்பை அதிகளவில் உற்பத்தி செய்வதில்லை.

எனவே, நிலப்பிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலமாக பாதிப்பு ஏதும் வந்துவிடப்போவதில்லை என்பதே எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய விசயமாகும்.

பகிர்ந்தளிப்பது மட்டுமல்ல, மாறாக ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பு முறையுடன் பின்னிப்பிணைந்துள்ள, (உலகமயமாக்கலுக்கு பிறகு இந்த பிணைப்பு மேலதிகமாக வலுப்பட்டுள்ளது) நிலபிரபுத்துவ சுரண்டல் அமைப்பு முறையின் அத்தனை வடிவங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கருவறுப்பதும்தான் புரட்சிகரமான நிலச்சீர்திருத்தம் எனப்படுகிறது. இதுவே இங்கு மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விசயமாகும். நேரங்காலம் பார்க்காது எந்நேரமும் விவசாயிகளின் உயிரை காவு கேட்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள சமமற்ற, விஷமத்தனமான சந்தை கட்டமைப்புடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதே, நட்டத்திற்கு பயிர் செய்யும் நிலையில் இன்றைய விவசாயம் இருப்பதற்கு காரணமாகும். எனவே, அரை நிலப்பிரபுத்துவத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கிய பிறகு நிலச்சீர்திருத்தம் எப்பயனையும் தராது என்று எப்படி நாம் சொல்ல முடியும்? அதே நேரத்தில், நிலப்பிரபுக்களின் நிலவுடைமைகளை ஒழிப்பதுதான் நிலச் சீர்திருத்தத்தின் சாராம்சமே தவிர, ஒட்டுமொத்த நிலவுடைமைகளையும் ஒழிப்பதல்ல. சரியான தலைமை முறையின் கீழ், உழுபவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படும் பொழுது நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை ஒழிப்பதன் மூலமாக, எல்லோருக்கும் சமமாக நிலம் பிரித்தளிக்கப்படும் என்பது மட்டுமல்ல புதிய செல்வ வளங்களை தோற்றுவிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, இருக்கிற வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதே புரட்சிகரமான நிலச் சீர்திருத்தத்தின் முக்கியமான விசயமாகும்.

வேளாண் சமூகத்தை நிலச் சீர்திருத்த கொள்கையின் மூலம் மட்டுமே ஜனநாயகப்படுத்த முடியும். இதைசெய்யாமல் உண்மையான கூட்டுறவை அல்லது கூட்டுப் பண்ணை உருவாக்கத்தை சாத்தியப்படுத்த முடியாது. ஆய்வாளர்கள் முன்வைத்ததற்கு மாறாக நிலச் சீர்திருத்தத்திற்கு பிறகு தொழில்மயமாக்கலுக்கு வேண்டிய மூலதனத்தை விவசாயப் பொருளாதாரம் உருவாக்கும் என்பதோடு மட்டுமல்லாது தொழில்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான தேவையையும்கூட விவசாயம் உருவாக்கும் என்பதையும் சீனப் புரட்சி தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. சமூக முன்னேற்றத்திற்கு நிலச் சீர்திருத்தம் எந்தளவிற்கு பயனைத் தரும் என்று கேள்வி எழுப்பியிருந்த ஆய்வாளர்கள், ரஷ்யாவிலும், சீனாவிலும் என்ன நடந்தது என்பது குறித்து EPW வார இதழில் வெளியான கட்டுரையை வாசிக்கும்படி நம்மை சொன்னவர்கள்தான், சன்கதி (sanhati.com) வலைதளத்தில் சுருக்கமாக அவர்கள் வெளியிட்டிருந்த கட்டுரையில் ரஷ்யாவில் நடந்த நிலச் சீர்திருத்தத்தை மட்டும் குறிப்பிட்டு எழுதியுள்ளதை பார்க்கும்போது நமக்கு வியப்பையே ஏற்படுத்துகிறது.

– பேராசிரியர் குருபிரசாத் கார்.

(கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளிவிவரத் துறை ஆய்வகத்தில் போராசிரியராக பணிபுரிகிறார்.

குறிப்புகள்:

Basole, A, and Basu, D (2011a) “இந்தியாவில் உற்பத்தி உறவுகளும், உபரி பறித்தெடுக்கப்படும் முறையும்: பகுதி I - விவசாயத்தொழில்”, எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி, தொகுதி. XLVI, எண் 14, பக் 41-58.

Basole, A, மற்றும் Basu, D (2011b) “இந்தியாவில் உற்பத்தி உறவுகளும், உபரி பறித்தெடுக்கப்படும் முறையும்: பகுதி II - முறைசாரா தொழில்”, எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி, தொகுதி. XLVI, எண் 15, pp 63-79.

Basole, A மற்றும் Basu, D (2009) " சுருக்கம்: இந்தியாவில் உற்பத்தி உறவுகளும், உபரி பறித்தெடுக்கப்படும் முறையும்”:http:// Sanhati.com.

பாதுரி, ஏ (1983) “பின்தங்கிய விவசாயத்தின் பொருளாதார அமைப்பு”, அகாடமிக் பிரஸ்,லண்டன்.

பாரதி, வி (2011) “கடன் மற்றும் தற்கொலைகள்: பஞ்சாபின் விவசாயத் தொழிலாளர்கள் பற்றிய களக் குறிப்புகள்”, எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி, தொகுதி. XLVI, எண் 14, pp 35-40.

பரத்வாஜ், கே(1974) "இந்திய விவசாயத்தில் உற்பத்தி நிலை - பண்ணை மேலாண்மை ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு ஆய்வு", அவ்வப்போது வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரை எண். 33, அப்ளைடு எகனாமிக்ஸ் துறை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம், கேம்பிரிட்ஜ்.

தாஸ், தேபரிஷி (2010), “இந்தியாவில் விவசாய முதலீடுகளின் சில அம்சங்கள்”, http:// Sanhati.com.

“இந்தியாவின் மட்டுமீறிய வளர்ச்சி”, இந்திய பொருளாதாரத்தின் அம்சங்கள் எண்.46, 2008.

லெனின், வி.ஐ. (1899) "ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி", தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி.3.

லெனின், வி.ஐ. (1916) “ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்”, தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி.22, பி 274.

பட்நாயக், உத்சா (1990) "இந்திய உற்பத்தி முறை குறித்தான விவாதம்",. சமீக்ஷா அறக்கட்டளைக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் மூலம் வெளியிடப்பட்டது, 1990.

சென் குப்தா, N(1977) “விவசாய உற்பத்தி முறை குறித்து மேலும்”, எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி, தொகுதி. 12, எண் 26, pp A55 -A63.

சௌ, ரஞ்சித்(1973) "இந்திய விவசாயத்தில் முதலாளித்துவத்தின் தோற்றம் மற்றும் உள்ளடக்கம் குறித்து", எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி, தொகுதி.8, எண் 13, பக் A27-A30.

- விஜயன் 

(தமிழில்) 

மூலக்கட்டுரை : https://senthalam.com/en/588

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு