கல்வித் துறையில் செயல்படும் RSS-ன் துணை அமைப்புகள் புதிய கல்விக் கொள்கையை உளமார வரவேற்றுள்ளன
தமிழில்: விஜயன்

ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்புகள் புதிய கல்விக் கொள்கையை உளமார வரவேற்றுள்ளதுடன், அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
கல்வித் துறையில் செயல்படும் RSS-ன் துணை அமைப்புகள் புதிய கல்விக் கொள்கையை (NEP) உளமார வரவேற்றுள்ளன. இது "நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவு" என்றும், இது பாடநூல்களின் முழுமையான மறுஆய்வுக்கு வழிவகுத்து தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன. கொள்கையை அறிவிப்பது எந்தளவு முக்கியமோ, அதே அளவு அதனை நடைமுறைப்படுத்தலும் இன்றியமையாதது என்று அவை வலியுறுத்தியுள்ளன.
மனிதவள மேம்பாட்டு (HRD) அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மாற்ற அரசாங்கம் எடுத்த முடிவை அவர்கள் பெரிதாக வரவேற்கின்றனர். சங் பரிவார் (RSS மற்றும் அதன் கிளை அமைப்புகள்) பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாரதிய சிக்ஷன் மண்டல் (BSM) ஏற்பாடு செய்திருந்த “பாரத் போத்” (இந்தியாவை அறிதல்) எனும் கருத்தரங்கில் 2016-ஆம் ஆண்டு RSS ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருந்தது; "மனிதர்களை வெறுமனே ஒரு 'வளம்' என்று கருதுவது பொருத்தமற்றது" என்று திட்டவட்டமாக கூறியிருந்தது. இந்திய விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் இருந்ததைப் போல, அந்த அமைச்சகத்திற்கு "கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம்" என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதே RSS-இன் துணை அமைப்புகளின் விருப்பமாக இருந்தது. மேலும், நிகழ்த்துக் கலைகளைக் கற்பிக்கும் 150-க்கும் மேற்பட்ட கலாச்சார நிறுவனங்களையும் ஒரே அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தையும், கலாச்சார அமைச்சகத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவை முன்மொழிந்தன. எனினும், அரசாங்கம் இதற்கு இன்னும் உடன்படவில்லை.
RSS-இன் முக்கிய துணை அமைப்புகளில் ஒன்றான பாரதிய சிக்ஷன் மண்டல் (BSM), புதன்கிழமையன்று, NEP தொடர்பான கலந்துரையாடல்களில் தீவிரமாகப் பங்கேற்றதோடு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது, அதில்: "எங்களது பரிந்துரைகளில் ஏறத்தாழ 60 சதவீதம் புதிய கல்விக் கொள்கையில் (NEP) சேர்க்கப்பட்டுள்ளன. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்வது, ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக் (தேசிய கல்விக் குழு) அமைப்பது, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை நிறுவுவது, கல்வியில் நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்துவது போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்த மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாகும். கடந்த 90 ஆண்டுகளில் RSS அமைப்பின் உயர்மட்டக் கூட்டங்களில் இந்த விஷயம் குறித்து பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் RSS-இன் மற்றொரு துணை அமைப்பான ஷிக்ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ், 2016-ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு அளித்த பரிந்துரைகளில், "5-ஆம் வகுப்பு வரை தாய்மொழியே கல்விக்கான பயிற்று மொழியாக இருக்க வேண்டும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் மூன்றாவது விருப்ப மொழியாகவே கற்பிக்கப்பட வேண்டும்" என்று திட்டவட்டமாகப் பரிந்துரைத்திருந்தது.
SBAS (சமஸ்கிருத பாரதி அபியந்த சங்) போன்ற அமைப்புகளும் குழந்தைகள் "ஒழுக்க நெறிமுறைகள் சார்ந்த சரியான" விழுமியங்களைக் கற்பதை உறுதி செய்வதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
பாடசாலைகளில் சாதிய பிரச்சனைகள், இந்து-முஸ்லிம் பிரச்சினைகள் போதிக்கப்படும் விதத்தை எதிர்த்தது மட்டுமன்றி, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழுக்கள், பாடசாலை மட்டத்தில் இந்திய மொழிகளுக்குப் பதிலாக வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படக்கூடாது என்றும் பரிந்துரைத்திருந்தனர்."எந்த நிலையிலும் ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்பதுடன், அனைத்து ஆய்வுப் பணிகளும் நாட்டின் தேவைகளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்,” என்று அந்த அமைப்புகள் பரிந்துரைத்திருந்தன.
சங் பரிவாரைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த மாற்றங்களை ஆரம்பத்தில் செயல்படுத்துவதில் சில இடர்ப்பாடுகள் நேரலாம், ஏனெனில் சில தெளிவற்ற பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணமாக, பெற்றோர் இருவரும் ஆங்கிலம் பேசினால், ஒரு குழந்தையின் தாய்மொழி எதுவெனக் குறிப்பிடப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. எனினும், பன்மொழித் தன்மையையும் ஒரு அணுகுமுறையாக நாங்கள் முன்வைத்தோம். இந்தச் சிக்கல்கள் குறித்து நாங்கள் ஆராயும் வேளையில் தீர்வு எட்டப்படும்” என்றார்.
பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், பாரதிய சிக்ஷான் மண்டல் (பிஎஸ்எம்), சிக்ஷா சம்ஸ்க்ருதி உததான் நியாஸ் போன்ற ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய குழுக்களின் பல பரிந்துரைகள் புதிய கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:
o ஆரம்பக் காலக் குழந்தை பராமரிப்பை கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வருதல்.
o இசை மற்றும் நாட்டுப்புறக் கலைகளை முதன்மை பாடத்திட்டத்தில் சேர்ப்பது.
o இந்தியப் பண்பாட்டை மையமாகக் கொண்ட விழுமியங்கள் குறித்தான அடிப்படைப் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
o கல்லூரி கல்வியில் நெகிழ்வுத் தன்மையை அளித்தல், இதன் மூலம் கல்வியை இடையில் நிறுத்திய மாணவர்களும் சான்றிதழ் பெற முடியும்.
o வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு பாடங்களை விருப்பப் பாடங்களாக படிக்க வாய்ப்பு அளிப்பது.
o சமூக மற்றும் பொதுச் சேவையை கட்டாயமாக்குவது.
வரைவுக் கொள்கையில் இடம்பெற்றிருந்த “விசாலமான”(liberal) என்னும் சொல்லிற்கு பதிலாக “முழுமையான” (holistic) என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பாரதிய சிக்ஷான் மண்டல் பரிந்துரை செய்திருந்தது. புதிய கல்விக் கொள்கையும்(2020) இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியுள்ளது. உதாரணமாக, முன்பு “மிக விசாலமான கல்வியை நோக்கி” (Towards a more liberal education) எனத் தலைப்பிடப்பட்டிருந்த ஒரு அத்தியாயம் தற்போது “முழுமையான, பல்துறைக் கல்வியை நோக்கி” (Towards holistic and multidisciplinary education) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிக்ஷா சம்ஸ்க்ருதி உததான் நியாஸின் தேசியச் செயலாளர் அதுல் கோத்தாரி கூறுகையில், “தொடக்கக் கல்வியை தாய்மொழியில் போதிப்பது, பாடநூல் உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைப்பது, ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதாக அறிவித்தது போன்ற எங்கள் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு குழந்தையின் முன்னேற்றத்தை அந்த மாணவர் மூலமாக மட்டுமல்லாது ஆசிரியர்கள், வகுப்பறைத் தோழர்கள், பெற்றோர்களை உள்ளடக்கியும் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். புதிய கல்விக் கொள்கை பெரும்பாலும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.
இருப்பினும், கல்லூரிகளும் பிராந்திய மொழிகளில் கற்பிப்பதை கட்டாயமாக்கியிருந்தால் அது இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று அவ்விரு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தெரிவித்தனர். “கல்லூரியில் பல மாணவர்கள் சிரமப்படுகின்றனர், ஏனெனில் கற்பித்தல், நூல்கள், தேர்வுகள், மதிப்பீடுகள் என அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இதையும் மாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று பாரதிய சிக்ஷன் மண்டல் பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருந்தார்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) எனும் RSS-இன் மாணவர் அமைப்பு, புதிய கல்விக் கொள்கையை மனதார வரவேற்று, அது "இந்திய விழுமியங்களையும் அடையாளத்தையும் இந்தியக் கல்விக்குள் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரு தெளிவான வழிகாட்டி" என்று போற்றியது.
கடந்த சில ஆண்டுகளாக, புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் என்பது RSS-இன் உட்கட்சி கூட்டங்களில் ஒரு முக்கியமான விவாதப் பொருளாகத் தொடர்ந்து இருந்து வந்தது. அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத்கூட, குறைந்தது ஆறு பொது நிகழ்ச்சிகளில் இது குறித்து பேசியிருந்தார்.
RSS-இன் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் பாரதிய சிக்ஷன் மண்டல் (BSM), குறிப்பாக இந்தியக் கலாச்சாரத்தை மையப்படுத்திய கல்வி முறையை உருவாக்குவதிலும், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சொற்களைச் செம்மைப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வந்தது. BSM-இன் தலைவர் முகுல் காணித்கர் அவர்கள் முன்னதாகக் குறிப்பிடுகையில், குழந்தைகளுக்கு வரலாறு கற்பிக்கும் முறையை மாற்றுவது இன்றியமையாதது என்றார். "வாஸ்கோட காமா இந்தியாவிற்கு வருவதற்கான கடல் வழியைக் கண்டுபிடித்தார் என்று நாம் மாணவர்களுக்குப் போதிக்கிறோம். இது ஐரோப்பியர்களின் பார்வையில் சரியானது, ஆனால் நமக்கு பொருத்தமானதல்ல. இந்திய விழுமியங்களையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்கத் தொடங்க வேண்டும்," என்று அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
BSM-இன் மிக முக்கியமான பரிந்துரைகளில் ஒன்றான தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF) அமைப்பது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட கொள்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை முன்மொழிந்த BSM, "சமூகத்திற்குப் பயனளிக்கும், அர்த்தமுள்ள, வளமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கும் ஒரு புரட்சிகரமான யோசனை" என்று இதனை புகழ்ந்தது. பாரதிய சிக்ஷண் மண்டல் (BSM) ஏற்கனவே ரிசர்ச் ஃபார் ரிசர்ஜென்ஸ் ஃபவுண்டேஷன்(Research for Resurgence Foundation) எனும் ஆராய்ச்சி அமைப்பையும் இயக்கி வருகிறது. இது 2016-ஆம் ஆண்டு நாக்பூரில் நிறுவப்பட்டது முதற்கொண்டு, "நாடு கல்வியில் மீண்டும் உலகளாவிய தலைமைப் பண்பைப் பெறுவதற்கு உதவும் வகையில் இந்திய நோக்கில் ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்வியாளர்களின் கூட்டமைப்பை உருவாக்கும்" குறிக்கோளுடன் செயலாற்றி வருகிறது. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் RFRF-அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிஎஸ்எம் கூறி வருகிறது.
ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்புகள், கல்விக்கொள்கையை "புதிய கல்விக் கொள்கை" எனப் பெயர் சூட்ட வேண்டும் எனவும், பள்ளிகள், கல்லூரிகள் சார்ந்த அனைத்து அம்சங்களையும் முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன. குறிப்பாக, "சாஸ்திரிய" (செம்மொழி) மொழிகளுக்கான வரையறையை கொள்கையளவில் "மேலும் தெளிவுபடுத்த வேண்டும்" என அவை வலியுறுத்தின. இதன்மூலம் சமஸ்கிருதம் இந்தி மொழியுடன் சேர்க்கப்படும்போது தனது தனித்துவமான முக்கியத்துவத்தை இழக்காதிருக்கும். மேலும், சமஸ்கிருதத்தை "பிற மொழிகளின் ஆய்வுக்கான அடிப்படையாக" மத்திய அரசு குறிப்பாக ஊக்கவிக்க வேண்டும் என்றும் அவை விரும்பின.
இந்த அமைப்புகள், ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் வேண்டுகோள் விடுத்தன. ஏனெனில் “இது சமூகத்தில் அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் குறைக்கிறது” என்று கூறியிருந்தது. தொழிற்கல்வியை பிரதான கல்வியுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், உத்தரப்பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வி வாரியம் நடத்தும் “பாரத் கௌரவ்” திட்டத்தைப் போன்று இந்திய நாகரிகக் கதைகளை உள்ளடக்கிய அடிப்படைப் பாடத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவை பரிந்துரைத்தன. இந்த எல்லா பரிந்துரைகளும் புதிய கல்விக் கொள்கையில் ஏதாவது ஒரு வகையில் உள்ளடங்கியுள்ளன என்று அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார்.
விஜயன் (தமிழில்)