உக்ரேனியர்களின் கல்லறைகள் மீது கூத்தாடும் இந்திய தனியார் நிறுவனங்கள்

இந்தியா ரஷ்யாவின் போருக்காக 20 பில்லியன் டாலர்களை இவ்வகையில் வழங்கியுள்ளது, சராசரி இந்தியருக்கு குறைந்த எண்ணெய் விலைக்காக அல்ல, மாறாக ஒரு சில நிறுவனங்களின் அதிக லாபத்திற்காகவும் விண்ட்ஃபால் ஆதாயங்களுக்காகவுமே. இச்சூழலில், உக்ரேனில் ரஷ்யாவின் போருக்கு, தேசநலன் என்று இந்தியா உதவியதை நியாயப்படுத்துவது போலி தேசபக்தியும் அப்பட்டமான ஏமாற்றுமாகும்.

உக்ரேனியர்களின் கல்லறைகள் மீது கூத்தாடும் இந்திய தனியார் நிறுவனங்கள்

ரஷ்ய எண்ணெய் மூலம் இந்தியாவில் யார் லாபம் அடைகிறார்கள்? சாமானியர்கள் அல்ல தனியார் நிறுவனங்களே

நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு இணையானதொரு (வர்த்தக) தந்திர போரும் பின்னணியில் நடக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இந்த (வர்த்தக) தந்திர போர் சதுரங்க விளையாட்டைப் போன்றது. அங்கு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுடன் போரிட ரஷ்யாவின் வளங்களை பலவீனப்படுத்த விரும்புகின்றன, ஆனால் உலகம் ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதால் ஏற்படும் அபாயங்களைக் அவை குறைக்க முயற்சிக்கின்றன. உலகிற்கு ரஷ்யாவின் எண்ணெய் தேவை. மேலும் ரஷ்யாவிற்கு போரை நடத்துவதற்கு அதன் எண்ணெயில் இருந்து பணம் தேவைப்படுகிறது. ஆனால் ரஷ்யாவிற்கு தேவையான பணத்தை கொடுக்க உலகம் விரும்பவில்லை. குறுகிய காலத்தில் இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது? அதுதான் இந்த (வர்த்தக)தந்திர போர்.

இன்று முதல் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகள் ரஷ்ய எண்ணெயின் விலைக் கட்டுப்பாட்டை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஒரு பீப்பாய்க்கு 60டாலருக்கு மேல் விலையில் ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்வதற்குத் தேவையான காப்பீடு மற்றும் கடல்சார் சேவைகளை வாங்கவோ அல்லது வழங்கவோ கூடாது என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர். பொருளாதார அடிப்படையில், அவர்கள் ரஷ்ய எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்கானதொரு (வாங்குபவருக்கான) கார்டெல்லை உருவாக்கியுள்ளனர். இது உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு திறனைக் குறைக்கும்.

ரஷ்யாவின் வருடாந்திர வருவாயில் கிட்டத்தட்ட பாதி எண்ணெயில் இருந்து வருகிறது, அது எண்ணெய் வர்த்தகத்தை மிகவும் சார்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மீதான முழுமையான தடையானது எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயரும். இது உலகம் முழுவதையும் மோசமாக பாதிக்கும். எனவே, மேற்கு நாடுகளின் கூட்டமைப்பு, ரஷ்யா தனது எண்ணெயை விற்க அனுமதிக்கும் (வாங்குபவருக்கான) கார்டெல்லின் யோசனையை எதிர்த்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமெனில் அதற்கு கடல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு சேவைகளை மேற்கத்திய நாடுகள்தான் பிரதானமாக வழங்குகின்றன. மற்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடிய அதிகபட்ச விலையை விதிக்க, எண்ணெய் ஏற்றுமதித் தொழிலில் அதன் மேலாதிக்கத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை மேற்கத்திய கூட்டமைப்பு வகுத்தது. அதாவது, இந்த ஏற்றுமதி சேவைகளை வழங்கும் மேற்கத்திய நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் இப்போது அரசாங்க ஆணைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. நிறுவனங்களின் இந்த ‘தேசியசார்பு’ தனியார் நிறுவனங்களின் மேற்கத்திய கோட்பாட்டிற்கு எதிராக நிற்கிறது. ஆயினும்கூட, மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த சிக்கலான - பொருத்தமற்ற முன்மொழிவு உக்ரைன் மீதான ரஷ்யா போரின் சேதங்களைத் தடுக்க திராணியற்று 'எது நடந்தாலென்ன' என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

இந்தியா தனக்கு சாதகமாக்கியுள்ளது

இவை அனைத்திற்கும் மத்தியில், உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா ரஷ்யாவின் எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடாக இருந்து வருகிறது. ரஷ்யாவை மிகப்பெரிய எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக மாற்றும் இந்தியா, போருக்கு முன்பு இருந்ததை விட 10 மடங்கு அதிகமாக எண்ணெயை வாங்குகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் கருத்துப்படி, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் ரஷ்யாவிற்கு எண்ணெய்க்காக கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர்களை இந்தியா செலுத்தியுள்ளது, இது கடந்த பத்து ஆண்டுகளில் செலுத்தியதை விட அதிகம். ரஷ்யாவின் போருக்கு எதிராகப் பேசும் அதே வேளையில், அப்போருக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியாவின் பாசாங்குத்தனத்தைக் கண்டு மேற்கத்திய நாடுகள் குமுறுகின்றன. மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெயைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய அளவில் வாங்குவது தேசத்தின் நலன் என்று இந்தியா கூறுகிறது.

தேசத்தின் நலன்களுக்காக ரஷ்ய எண்ணெயை மலிவான விலையில் வாங்குவதாக இந்தியா கூறும்போது, அதன் மூலம் இந்திய மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம். சராசரி இந்தியரைப் பொறுத்தவரை, பெட்ரோல் அல்லது டீசல் விலை மாறாமல் உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு டெல்லியில் டீசல் விலை ரூ.87 ஆகவும், தற்போதைய விலை ரூ.90 ஆகவும் இருந்தது. ரஷ்ய எண்ணெய் விலை குறைந்ததால் சாமானியர்களுக்கு விலை அதிகரிக்கவில்லை என்று அரசு வாதிடலாம். அது முழு உண்மையல்ல.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி மற்றும் பலர்

ரஷ்ய எண்ணெய்யை இந்தியாவில் யார் வாங்குகிறார்கள் என்பதுதான் முக்கியம். கிட்டத்தட்ட முக்கால்வாசி மலிவான ரஷ்ய எண்ணெயை தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நயாரா எனர்ஜி வாங்குகின்றன. இந்த நிறுவனங்கள் மலிவான எண்ணெயை வாங்கி, அதை சுத்திகரித்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பெரிய லாபத்தில் மீண்டும் விற்கின்றன. ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் வாங்குவதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இப்போது ரஷ்யாவிடமிருந்து வருகிறது, இது போர் தொடங்குவதற்கு முன்பு 5 சதவீதமாக இருந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயில் ஒரு சிறிய பங்கை மட்டுமே பெறுகின்றன. ஆனால் இந்த பொது சுத்திகரிப்பு நிலையங்கள் சராசரி இந்தியரின் எரிபொருள் தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வழங்குகின்றன. எனவே, சுத்திகரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், சாமானிய மக்களுக்கு எரிபொருளை வழங்கும் நிறுவனங்களை விட மலிவான ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதியைப் பெறுகின்றன. தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் வேளையில், மலிவான ரஷ்ய எண்ணெய் இறக்குமதியின் பலனை சராசரி இந்தியரால் பெற முடியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

போலி தேசநலன், தனியார் நிறுவனங்களுக்கு லாபம்

தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவது இறையாண்மை தேச நலன்களுக்காக என்று பேசப்பட்டது. இந்தியாவின் நலனும் இந்திய தனியார் நிறுவனங்களின் நலனும் ஒன்றல்ல. இதில் திட்டமிட்டே ஒன்று போல் காட்டின. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் பூரியின் (அதிகம் பேரால் பார்க்கப்பட்ட) CNN நேர்காணலில் இந்தக் குழப்பம் சிறப்பாக வெளிப்பட்டது. அவர் முதலில் இறையாண்மை தேச நலன்களுக்காக ‘ரஷ்ய எண்ணெய் வாங்குகிறேன்’ என்றார், நேர்காணல் செய்பவர் குறுக்கிட்டபோது தடுமாறி ‘தனியார் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குகின்றன’ என்று பின்வாங்கினார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் பெரும் ஏற்றுமதி லாபம் ஈட்டியதாகக் கூறப்படும் தனியார் நிறுவனங்கள் மீது அரசாங்கம் ‘விண்ட்ஃபால் ஆதாயங்கள்’ வரியை (பங்குச்சந்தைப் போல் நிலையற்ற ஏற்ற இறக்கமான வரிமுறை) விதித்தது. ஆனால் இலாபத்தின் ஒரு பங்கின் மீதான சொற்ப வரி, இந்த நிறுவனங்கள் முதலில் இறையாண்மையை பலியாக்கி ஏன் லாபம் ஈட்டியது என்பதை விளக்கவில்லை. அரசுக்கு கிடைக்கும் சில ஆயிரம் கோடி வரி வருவாயை விட, பில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு மலிவான பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பது நல்லது அல்லவா? போருக்கு முன்பு ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்காத இரண்டு தனியார் நிறுவனங்கள் திடீரென அதில் முக்கால் பங்கை தள்ளுபடி விலையில் வாங்கியது எப்படி என்பதுதான் இந்த ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் வழுக்கும் கதை.

புதிய விலை வரம்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டால், இந்தியாவின் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் விலையை மேலும் குறைக்கும் என்பதால், இன்னும் அதிக லாபம் கிடைக்கும். இந்தியாவின் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ‘பூவா தலையா’ டாஸில் வென்ற குஷியான சூழ்நிலையில் உள்ளனர். சாராம்சத்தில், இந்தியா ரஷ்யாவின் போருக்காக 20 பில்லியன் டாலர்களை இவ்வகையில் வழங்கியுள்ளது, சராசரி இந்தியருக்கு குறைந்த எண்ணெய் விலைக்காக அல்ல, மாறாக ஒரு சில நிறுவனங்களின் அதிக லாபத்திற்காகவும் விண்ட்ஃபால் ஆதாயங்களுக்காகவுமே. இச்சூழலில், உக்ரேனில் ரஷ்யாவின் போருக்கு, தேசநலன் என்று இந்தியா உதவியதை நியாயப்படுத்துவது போலி தேசபக்தியும் அப்பட்டமான ஏமாற்றுமாகும். உண்மையில், இது உக்ரேனியர்களின் கல்லறைகள் மீது கூத்தாடும் சில இந்திய தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவுகிறது.

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை : theprint.in /opinion/who-in-india-is-profitting-from-russian-oil-not-the-common-man-but-private-companies/1248999/