தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையும் முதலாளித்துவ தேசிய வாதமும்
ஏஎம்கே
திருச்சி மாவட்ட முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் "இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தமிழீழ நாடு பெறுவது! தமிழீழ நாடு பெறுவது ஆயுதப் போராட்டத்தின் மூலமே!" என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் வைக்கப்படுள்ளன. குறிப்பாக ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனை புரட்சிக்கு புதிய எல்லைகளை வகுத்து தருவதாகவும், எனவே ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசாக பிரிவதும், தொழிலாளர் வர்க்க கட்சி, இன அடிப்படையில் தனித்தனியாக கட்டப்படுவதும், இச்சகாப்பத்தத்தில் செய்யப்பட வேண்டியவை என்றும் அது கூறுகிறது. இக்கருத்துக்கள் மார்க்சிய - லெனினியத்திற்கும் முற்றிலும் புறம்பானவை. பாட்டாளி வர்க்க நலனுக்கு விரோதமானவை இது எவ்வாறு என்று பரிசீலிக்கும் முன்பாக தேசிய இனப் பிரச்சனை பற்றியும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியும் பொதுவான மார்க்சிய - லெனினிய கண்ணோட்டம் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் தேசம், தேசிய இனப் பிரச்சனை என்றால் என்ன. சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஏன் எழுகிறது, அதன் பொருளென்ன என்பவற்றைப் பார்ப்பது அவசியம் அடுத்து தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் இப்பிரச்சனை என்ன வடிவம் எடுக்கிறது, அது எவ்வாறு தீர்க்கப்படுகிறது, இப்பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் என்ன நிலை மேற்கொள்ளவேண்டும், பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு கட்டப்பட்ட வேண்டும் என்பனவற்றையும் மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனை வெளிச்சத்தில் பார்ப்போம். இறுதியாக திருச்சி முற்போக்கு இளைஞர் அணி பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் காணப்படும் தவறான கருத்துக்களை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
தேசம், தேசிய இனப்பிரச்சனை என்றால் என்ன? தேசம், தேசிய இனம் என்றால் என்ன?
ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன. அவற்றின் முடிவில் அதாவது முழு பொது உடமை சமுதாயத்தில் தேசங்களும் மனிதர்களுக்கிடையே தேசிய இன வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு முன்பு தேசங்கள் இல்லையா என்றால் பண்டைய பழங்குடி சமூகங்களீன் அழிவில் தேசிய இனங்களுக்கான சில கூறுகள்தாம் தோன்றி நாளாவட்டத்தில் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்தின் இறுதியில் அதாவது முதாலாளித்துவம் வளர்ச்சியடையும் கட்டத்தில்தான் மக்கள் தேசங்களாக உருவாகின்றனர். தேசிய இயக்கங்கள் தோன்றுகின்றன. தேசிய இயக்கங்கள் முதலாளித்துவத்துடனும் சரக்கு உற்பத்தியுடனும் தொடர்புடையது என்றும் தேசம் என்பது இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தைச் சேர்ந்த வகையினம் என்றும் ஏன் கூறுகிறோம்? சரக்கு உற்பத்தியும் சரக்கு பரிவர்த்தனையும் துரிதமாக நடந்தேறுவதற்கு மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளும், ஸ்தல சந்தைகள் ஒன்றோடொன்றுடன் பிணைக்கப்படுதலும் அவசியம். மனித உறவுகளுக்கு மிக முக்கிய சாதனம் மொழியாதலால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையே பரிவர்த்தனை உறவுகள் மிக விரைவில் வளர வாய்ப்புள்ளது. எனவே சரக்கு உற்பத்தி வளரத் தொடங்கியதும் அது ஒரு மொழிப் பகுதியில் பற்றி படர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழிப் பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாக வழியிருந்தால் சரக்கு உற்பத்தியின் பெருக்கத்திற்கும் அப்பெருக்கத்தை அடிப்படையாக கொண்ட வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் அபிவிருத்திற்கும் மிகவும் உகந்தது. எனவே முதலாளித்துவம் தனது சந்தை நலன்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்ற விரும்புவதுடன் அப்பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாகவுமிருக்க விரும்புகிறது. அம்மொழியின் ஐக்கியத்தையும் அதன் தங்குதடையற்ற வளர்ச்சியையும் விரும்புகிறது. ஆகவேதான் எல்லா இடங்களிலும் தேசிய இயக்கங்களும் தேசிய அரசு அமைத்தலுக்கான முயற்சிகளும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன. தேசிய இயக்கங்களின் பொருளியல் அடிப்படையைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்."உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும்தான்."(லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)
இனி தேசிய இன பிரச்சனை என்றால் என்ன? அது ஏன் எழுகிறது என பார்ப்போம். ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன. இம்முரண்பாட்டையே தேசிய இன பிரச்சனை என்கிறோம். எனவே இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இருப்பதைப் பார்க்கமுடியும். வளரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றனவா இல்லையா, அந்நாட்டின் அரசமைப்பு முறை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையுறாக இருக்கின்றதா இல்லையா என்ற விஷயங்கள் இப்பிரச்சனை தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.
தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது. முதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்த காலகட்டம். இக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உறவுகள் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் நிலப்பிரபுத்துவ அரசமைப்பு முறைகள் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் உருவாவதை தடுக்கின்றன. தேசிய இன ஐக்கியத்தை தடுக்கின்றன. ஆகவே வெற்றியடைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்புகளை தகர்த்துவிட்டு ஜனநாயக அரசுகளை நிறுவின. இந்நிகழ்ச்சிப்போக்கில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்தன. இவ்வாறு இப்பிரச்சனை பழையவகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பகுதியாக தீர்க்கப்பட்டன. ஒரே அரசின் எல்லைக்குள் பல தேசிய இனங்கள் வாழும்போதுகூட அங்கு ஜனநாயக அரசு நிலவினால் தேசிய இனங்கள் அமைதியாக சேர்ந்து வாழ முடியும் அல்லது அமைதியாக பிரிய முடியும் என முதலாளித்துவம் நிரூபித்தது. (உம். சுவிட்சர்லாந்து, நார்வே) அடுத்து தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகபுரட்சிகள் நிறைவு பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய இடங்களிலெல்லாம் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்புமுறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்துவந்த தேசிய இன பரப்புகளுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்தது (உ.ம். ஜாரிச ரஷ்யாவில் போலந்து, உக்ரேன்) இம்முரண்பாடுகள் தேசிய இனப் பிரச்சனையாக உருவெடுத்தன. அதே சமயம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்துவிட்டபடியால் முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால், உலக முதலாளித்துவ புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கட்டம் தொடங்கிவிட்டது. எனவே பழைய வகை முதலாளித்துவ புரட்சி கட்டத்தின் போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக்கடமைகளை பாட்டாளிவர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறது. ஆகவே தேசிய இனப்பிரச்சனைகளும் உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக மாறுகின்றன. அக்டோபர் புரட்சியினால் தீர்த்துவைக்கப்பட்டன. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் பிரிந்து செல்லும் ஜனநாயக உரிமை உத்திராவாதம் செய்யபடுகின்ற ஜனநாயக அமைப்பில் பல தேசிய இனங்கள் சமத்துவமாக வாழ முடியும், இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. முன்பு முதலாளித்துவத்தின் கீழ் விதிவிலக்காகயிருந்த இன சமத்துவ அரசுகள் தற்போது பொது விதியாக மாறுகின்றன.
அடுத்து ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இன பிரச்சனை வேறொரு வடிவத்திலும் எழுந்தது. முதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமதுகாலனி, அரைக்காலனி நாடுகளாக மாற்றின. இதன் மூலம் அக்காலனி, அரைக்காலனி நாடுகளின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும், பொருளாதார, சமூக வளர்ச்சியையும் தடுத்தன. உலக முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும், ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தன. இவ்வாறு தேசிய இன பிரச்சனையானது காலனி, அரைக்காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையேயான முரண்பாடாக வடிவெடுத்தது. இதனை எதிர்த்து காலனி, அரைகாலனி நாடுகளில் தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றின. ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தமாக இருப்பதால் அந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே இவ்வியக்கங்கள் உலக பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகமாறின, இப்புரட்சி முற்றுப் பெற்ற இடங்களில் இத்தேசியயின பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டன. (உ-ம். மக்கள் சீனம்) இந்த மூன்றாவது காலகட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்பு முடிவுக்கு வரும்போதுதான் இக்கட்டம் முடிவுக்கு வரும்.
இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறது. ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் - மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்து) அத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்தைலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. தேசிய இன ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமை, எழுத்துரிமை, மற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. அனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறது. எனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இன சமத்துவத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும்.
சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது. ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது 'தேசிய உரிமைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும். பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் அத்துடன் இது ஏகாதிபத்திய சக'ப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.
இந்த கண்ணோட்டம் மேற்குறிப்பட்ட திருச்சி முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் வெளியிடப் பட்டுள்ள பிரசுரத்தில் தென்படவில்லை, அது தேசிய இன பிரச்சனைகளை தனித்துப் பார்ப்பதுடன் ஒவ்வொரு இனமும் தனித்தனியாக பிரிவது மட்டுமே ஒரே தீர்வாக கருதுகிறது. ஒவ்வொரு நாடுகளுக்குமுள்ள சிறப்பியல்புகளைக் கணக்கில் கொள்ளாமல் தனித்தேசிய அரசுகள் என்பதை உலகப்பொது விதியாக்குகிறது. ஆகவே இது பற்றிய லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் அப்பிரசுரம் ஏகாதிபத்திய சகாப்த்திற்கான தீர்வாக பேசுவதால் அச்சகாப்த்தத்தில் இப்பிரச்சனையின் தீர்வு பற்றிய மார்க்சிய லெனினிய கருத்தோட்டத்தையும் பார்ப்போம்.
தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறைமுதலில் எந்த ஒரு நாட்டின் இனச்சிக்கலையும் பற்றி ஆராயும்போது அதைத் திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் வைத்து அதாவது அந்தநாடு எந்த வரலாற்றுக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என்ற பின்னனியில் ஆராயவேண்டும். ஒரு நாட்டிற்கு ஒரு கட்டத்தில் பொருந்திய தீர்வு இன்னொரு கட்டத்தில் பொருந்திவராது.ஒரே வரலாற்றுக் கட்டத்திலுள்ள இரு நாடுகளில் ஒரு நாட்டை இன்னொரு நாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறப்பியல்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.தேசிய இயக்கங்களை பொறுத்தவரையில் முதலாளித்துவத்தின் இரு காலக்கட்டங்களை வேறு படுத்தி பார்க்க வேண்டும்.பல்வேறு நாடுகளின் தேசிய சிக்கல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நாடுகளின் வளர்ச்சிக் கட்டங்கள் ஒப்பிடக் கூடியவைதானா என பார்க்க வேண்டும். ஒரு நாட்டுக்கு பொருந்திய தீர்வு அப்படியே வேறொரு நாட்டுக்குப் பொருந்தாது.
ஏகாதிபத்திய சகாப்த்தத்தில் தேசிய இன பிரச்சனைமுதலாளித்துவம் ஏகாதிபத்தியம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த பின் முதலில் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளே பிறநாடுகளை ஒடுக்கும் ஏகாதிபத்தியங்களாக மாறிவிட்டன. ஆகவே உலகம் முழுவதும் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் பிரிந்து விட்டன. ஆகவே காலனி, அரைக்காலனி நாடுகள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடையும் பிரச்சனையும் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையே.தேசிய விடுதலை யுத்தங்கள் உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தை மட்டுமின்றி ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.எந்தகாலனி, அரைக்காலனி நாடுகளிலும் நடக்கும் புரட்சிகளும் பழையவகைப்பட்ட பூர்சுவா ஜனநாயகப் புரட்சியல்ல. புதியவகைப்பட்ட ஜனநாயக்ப் புரட்சியே பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடக்கும் உலக சோசலிச புரட்சியின் பகுதியே. எனவே காலனி, அரைக்காலனி நாட்டு தேசிய இனப்பிரச்சனைகள் புதிய ஜனநாயகப் புரட்சியின் பிரச்சனையாக அதன் பகுதியாக மாறி விடுகின்றன.காலனி, அரைக்காலனி நாடுகளின் தேசிய இனப்பிரச்சனைகள் இரு அம்சங்கள் கொண்டவையாக மாறுகின்றன. அந்த குறிப்பிட்ட நாடு முழுவதும் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைவதும் அந்நாட்டு எல்லைக்குள் உள்ள அனைத்து தேசிய இனங்களும் சமத்துவம் அடைவதும் என்பவையே அந்த இரு அம்சங்கள். லெனின் ஏகாதிபத்தியத்தின் விதிகளைப் பற்றி ஆய்வுகளை முடிக்கும் முன்பாக போல்சுவிக்குகள் தேசிய இனப்பிரச்சனையை பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக பாராமல் பழைய பூர்சுவா - ஜனநாயக புரட்சியின் பகுதியாகப் பார்த்தனர் என்றும், ஏகாதிபத்திய யுத்தமும் ருசியாவில் அக்டோபர் புரட்சியும் தேசிய இனப் பிரச்சனை பழைய பூர்சுவா ஜனநாயகப் புரட்சியின் பகுதியாகயிருந்த நிலையை மாற்றி பாட்டாளிவர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக ஆக்கிவிட்டன என்றும் ஸ்டாலின் 'மீண்டும் தேசிய இனப்பிரச்சனை குறித்து' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அக்டோபர் புரட்சியானது "தேசிய இனப் பிரச்சனையின் எல்லையை விரிவுபடுத்திற்று. ஐரோப்பாவில் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்தல் என்ற குறிப்பான பிரச்சனையாக இருந்ததை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்கள், காலனிகள், அரைக்காலனிகளை ஏகாதிபத்திடமிருந்து விடுவிக்கும் பொதுவான பிரசனையாக ஆகிவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார்.
மேற்கூறிய லெனினதும் ஸ்டாலினதும் ஆய்வுகளின் அடிப்படையில் மாவோ சீனாவில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றி ஒரு திட்டவட்டமான கொள்கையை உருவாக்கினார். சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏகாதிபத்தியத்திடமிருந்து சீனாவை விடுவித்தல் என்ற தேசிய வடிவத்தை எடுப்பதை அவர் பார்த்தார். அத்துடன் சீன நாட்டினுள் சிறுபான்மை தேசிய இனங்கள் சிறு அளவிலே இருப்பினும் அவற்றின் பிரச்சனையையும் அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. சீனாவின் தேசியத்திற்கு இரு அம்சங்கள் உண்டு என அவர் கூறுகிறார். "ஒன்று சீன தேச விடுதலை, இரண்டாவது சீனாவிலுள்ள தேசிய இனங்கள் அனைத்தின் சமத்துவம். சீனாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சுதந்திர ஐக்கியப்பட்ட சீனக் குடியரசு (அனைத்து தேசிய இனங்களின் சுதந்திர ஐக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்த பிரபு - எதிர்ப்பு புரட்சியின் வெற்றிக்குப்பின் ஸ்தாபிக்கப்படும் என்ற சன்யாட்ச்சனின் விளக்கத்தை அப்படியே மாவோ ஏற்றுக்கொள்கிறார்) (மாவோ தேர்வு நூல் - முன்னுரை பகுதி கூட்டணி அரசாங்கம் பற்றி பக்கம்225) சீனாவிலுள்ள அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களின் விடுதலையும் சீனத்தேசத்தின் ஒரு அம்சமாகயிருப்பது எவ்வாறெனில் ஏகாதிபத்தியத்திற்கும் காலனி நாடுகளுக்கும் உள்ள முரண்பாடு என்பதும் ஒரு தேசிய இனப் பிரச்சனையாக விளங்குவதால்தான் சாரமாக கூறுவதெனில் ஏகாதிபத்திய காலத்தின் ஆளும் விதிகளை லெனின் முழுமையாக ஆய்வு செய்து வகுத்தபின் அதாவது 1916க்கு பின் இரு முக்கிய முடிவுகளுக்கு வந்து சேருகிறார்.ஏகாதிபத்தியத்திற்கும் காலனி, அரைக்காலனி நாடுகளுக்குமுள்ள முரண்பாடு தேசிய இனப்பிரச்சனையே அந்நாடுகள் விடுதலையடையும் பிரச்சனை சுயநிர்ணய உரிமை பிரச்சனையே (சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்)மேற்கூறிய தேசிய இனப் பிரச்சனை உட்பட உலகின் அனைத்து தேசிய இனப்பிரச்சனைகளும் சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளும் உலகப் பாட்டாளிவர்க்க புரட்சியின் ஒருங்கிணைத்த பகுதிகளே பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்தான் தீர்க்கப்பட முடியும் ஆகவே பாட்டாளி வர்க்கம் இனங்கள் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமைக்காகவும் இன சமத்துவத்திற்காகவும் போராட வேண்டும். 'சுயநிர்ணயம் உட்பட பற்பல ஜனநாயக கோரிக்கைகளும் சார்பற்ற முழுமையல்ல; பொதுவான - ஜனநாயக (தற்போது - பொதுவான சோசலிச) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியே" (சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத் தொகுப்பு). ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒவ்வொரு தேசிய இனவாரியாக தனித்தனி அணி கட்டுவதே பாட்டாளி வர்க்க கடமையாக திருச்சி பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதால் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளாக லெனினியம் போதிப்பது என்ன என்பதையும் பார்ப்போம்.
பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி முற்றுப் பெறாத நாடுகளில் பாட்டாளி வர்க்க கடமை பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி முற்றுபெறாத நாடுகளில் அரசமைப்பு ஜனநாயக ரீதியில் சீரமைக்கப்படாத நாடுகளில் அதாவது கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவிலும் தேசியக் கொள்கை விஷயத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் பணி இருவகைப்பட்டதாக இருக்க வேண்டும் என லெனின் கூறுகிறார்.எல்லாத்தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது, பூர்ஷ்வா வர்க்கம் அனைத்துத் தேசிய இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடாது. தொழிலாளி வர்க்க ஜனநாயகமாவது முரண்பாடற்ற முறையில் மனப்பூர்வமாக இனசமத்துவத்திற்காகப் போராட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி மக்களும் தங்களது வர்க்கப் போராட்டத்தில் நெருக்கமாக பிரிக்க முடியாது ஒன்றுபடுவது. அவ்வரசின் வரலாற்றில் எம்மாறுதல் நிகழ்ந்தாலும், பூர்ஷ்வாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப்பட்டாலும் இந்த ஒற்றுமை நீடிப்பதாக இருக்க வேண்டும். இந்த லெனினிய நிலை ஒவ்வொரு இனமும் தனித்தனியே பிரிதல், தனித்தனி அணி என்ற கருத்துகளை மறுக்கிறது. ஏகாதிபத்திய சகாப்த விதிகளைப் பற்றி லெனின் முழுமையாக ஆய்வு செய்தபின் இந்த மேற்கூறிய கடமைகள் மாறிவிட்டதாகக் கூற முடியுமா? ஒடுக்கும்தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் ஒடுக்கப்படும் தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் லெனின் கூறுவது என்ன? 1916ல் லெனின் எழுதிய சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் ஒடுக்கப் பட்ட தேசங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகப் பாட்டாளிவர்க்கத்தால் போராடமல் இருக்க முடியாது. அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடமல் இருக்க முடியாது. மற்றொரு பக்கத்தில் ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர்களுக்கும் இடையிலான முழுமையான நிபந்தனையற்ற ஒற்றுமையை நிறுவன ஒழுங்கமைப்பு உட்பட ஆதரித்துக் காத்து செயல் படுத்துவது ஒடுக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்த சோசலிஸ்டுகள் குறிப்பாக செய்ய வேண்டியதாகும் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார். ஒடுக்கும் தேசிய இனத்தைச்சார்ந்த பாட்டாளிவர்க்கம் தமது இன சுரண்டும் வர்க்கங்களின் பேரினவாதத்தையும் பிற இனங்கள் மீதான அடக்குமுறையையும் பிற இனங்களை கட்டாயமாக ஒரு அரசில் பிடித்து வைத்திருப்பதையும் பிரதேச விஸ்தரிப்புகளையும் விட்டுக்கொடுக்காது எதிர்க்க வேண்டும். அந்த அரசு எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையை கோரவேண்டும். இதைச்செய்யாத ஒரு மார்க்சியவாதி சர்வதேசியவாதியல்ல. அதேசமயம் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி தனது கிளர்ச்சிகளில் தேசங்களின் மனப்பூர்வமான ஐக்கியத்தை வலியுறுத்த வேண்டும். தனது தேசத்தின் அரசில் விடுதலையை ஆதரித்துக் கொண்டே அருகாமையிலுள்ள அரசுடன் ஐக்கியப் படுவதையும் ஆதரிப்பது சாத்தியமே அவர் சிறு தேசிய குறுகிய மனப்பான்மையும், தனித்துவப் போக்குகளையும் எதிர்த்துப் போராடவிட்டால் அவரும் ஒரு சர்வதேசிய வாதியல்ல. "ஒடுக்கும் தேசத்தின் சமூக - ஜனநாயகவாதி பிரிந்து செல்லும் சுதந்திரத்தையும் ஒடுக்கப்பட்ட தேச சமூக ஜனநாயகவாதி ஐக்கியப்படும் சுதந்திரத்தையும் வலியுறுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால் சர்வதேசத்திற்கும் தேசங்களின் ஒன்றினைப்பிற்கும் வேறெந்த பாதையும் கிடையாது. இருக்க முடியாது என்பது புரியவரும். (லெனின் - சுயநிர்ணய உரிமைப்பற்றி விவாதத்தொகுப்பு) திருச்சி பிரசுரம் பிரிவினை மட்டுமே ஒரே தீர்வாக பேசுகிறது தனித்தனி அணிகளைப்பற்றி பேசுகிறது தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளி வர்க்கம் எவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து மாறுபட்ட விதத்தில் அணுகவேண்டும் என்ற பாகுபாட்டை மறந்துவிட்டது. ஆகவே தேசிய இனப் பிரச்சினையில் பாட்டாளிவர்க்க கண்ணோட்டமும் பூர்ஷ்வா கண்ணோட்டமும் பற்றி பிரிவினை எந்த சூழ்நிலையில் ஆதரிக்கலாம் என்பதுபற்றி பாட்டாளிவர்க்கக்கட்சி எவ்விதம் கட்டப்படவேண்டும் என்பதுபற்றி லெனினியக் கோட்பாடு களையும் கூறிவிட்டால் தேசிய இனப்பிரச்சனைப்பற்றிய முக்கியமான கருத்துக்களை விளக்கியவர்களாகி விடுவோம்.
தேசிய இனப்பிரச்சனையில் முதலாளித்துவ கண்ணோட்டமும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டமும் ஒடுக்கப்பட்ட இனங்களில் முதலாளிவர்க்கம் முதல் பாட்டாளிவர்க்கம் வரை பலவித வர்க்கங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றன. முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளிவர்க்கமும் இருவேறு நலன்களிலிருந்து இப்பிரச்சனையை அணுகுகின்றன. தத்தமது வர்க்க அபிவிருத்திப்போக்கில் இதற்கான தீர்வுகளை முன்வைக்கின்றன.எல்லாத்தேசிய விருப்பங்களையும் ஆதரிப்பதுதான் செயல் பூர்வமானது என பூர்ஷ்வா வர்க்கம் கூறுகிறது ஆனால் பாட்டாளிவர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் பூர்ஷ்வாக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஆதரிப்பதில்லை தேசிய அமைதியைப் பெறுவதற்காக (இந்த அமைதி பூர்ஷ்வாக்களால் பூரணமாக ஏற்படுத்த முடியாது முழு ஜனநாயகம் மூலமே அடைய முடியும்). சம உரிமைகள் பெற வேண்டிவர்க்கப் போராட்டத்திற்கு சிறந்த நிலமைகள் தோற்றுவிக்க வேண்டி தொழிலாளிவர்க்கம் பூர்ஷ்வாக்களை இப்பிரச்சினையில் ஆதரிக்கிறது.தமது தேசிய இனத்திற்கு விசேஷ உரிமைகள், விசேஷ ஆதாயங்கள் இவைதாம் பூர்ஷ்வாவர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் அடைய விரும்புவது பாட்டாளி வர்க்கம் எந்த இனமாயினும் அது ஒடுக்கும் இனமாயினும் ஒடுக்கப்பட்ட இனத்திற்கும் விசேஷ உரிமைகள் தனிச் சலுகைகள் அனைத்தையும் எதிர்க்கிறது.பூர்ஷ்வா வர்க்கம் தனது தேசிய கோரிக்கைகளுக்கு எப்போதும் முதலிடம் அளிக்கிறது தமது சொந்த இனத்து குறிக்கோள்களை பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோள்களுக்கு மேலானதாக வைத்து அந்த வர்க்கத்து அபிவிருத்தியை தடைசெய்யப் பார்க்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான பாத்திரத்தை தனது தேசிய கோரிக்கைகளுக்கு கீழ்ப்படுத்தப் பார்க்கிறது பாட்டாளிவர்க்கத்திற்கு தேசிய கோரிக்கைகள் வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு கீழ்ப்பட்டவைதாம் ஜனநாயகப் புரட்சியானது ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒடுக்கும் இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அதனுடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா என முன்கூட்டியே கூற முடியாது. முடிவு இரண்டில் எதுவானாலும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் தனது வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழி செய்வதுதான் பாட்டாளிவர்க்கத்துக்கு முக்கியமானது ஆகவே பாட்டாளிவர்க்கம் எந்த இனத்திற்கும் உத்திரவாதம் அளிக்காமல் இன்னொரு தேசிய இனத்திற்கு பாதகமான முறையில் எதையும் செய்யாமல் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறது.எந்த ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் மற்ற தேசிய இனங்களின் நிலைமை (அல்லது அவர்களுக்கு நேரக்கூடிய பாதகம்) எதுவாயினும் தனது சொந்த நலன்களுக்கு வேண்டிய உத்திரவாதங்கள் மட்டும்தான் தேவை பாட்டாளி வர்க்கத்திற்கு அனைத்து இனங்களின் சமத்துவமும் அனைத்து இனங்களின் விடுதலையுமே குறிக்கோள் சுயநிர்ணய உரிமை என்ற தீர்வுதான் மிகவும் ஜனநாயகமானத் தீர்வைபெற சிறந்த உத்திரவாதமளிக்கிறது. வேறு எந்த குறிப்பிட்ட வளர்ச்சிப் பாதையைப் பற்றியும் உத்திரவாதமளிக்க முடியாது ஏனெனில் சாத்தியமான எல்லாப்பாதைகள் வழியாகவும் பாட்டாளிவர்க்கம் தனது வர்க்க லட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது.பூர்ஷ்வாக்கள் பாட்டாளிகளுக்கு குந்தகமான முறையில் பிற தேசிய இன பூர்ஷ்வாக்களுடன் உடன்பாட்டுக்கு வர தயாராக இருப்பார்கள் ஆனால் தமது இன பாட்டாளிவர்க்கம் மட்டும் தனது இன பாதகையின் கீழ்தான் அணிதிரளவேண்டும் பிற இன பாட்டாளிகளுடன் ஒன்றுபடக் கூடாது என்பது பூர்ஷ்வாக்களின் நிலை ஒரு முதலாளியுடன் வேறொரு இன முதலாளிக்குள்ள முரண்பாட்டில் அவர்களது கருவியாக செயல்பட பாட்டாளி வர்க்கம் தயாரில்லை தேசிய ஒடுக்கு முறைகளை விட்டுக் கொடுக்காது எதிர்க்கின்ற அதே நேரத்தில் பூர்ஷ்வாக்களுக்கெதிராக அனைத்து இன பாட்டாளி வர்க்க ஒற்றுமையை பலப்படுத்தி முரண்பாடற்ற ஜனநாயகம் சோசலிசம் ஆகிய உணர்வுகளை ஊட்டுகிறது, பாட்டாளி வர்க்கத்திற்கு ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெற வேண்டுமென்பது மட்டுமல்ல அந்த ஜனநாயக புரட்சி சோசலிச புரட்சிக்கு அஸ்திவாரமாக விளங்கவும் வேண்டும் அனைத்து இன பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்துவதாக பூர்ஷ்வாக்களின் சதிகளையும் தனித்துவ போக்குகளையும் முறியடித்து சோசலிசத்தை நோக்கி முன்னேற உத்திரவாத மளிக்கிறது.பூர்ஷ்வா வர்க்கத்திற்கு பிற இனங்களின் மீதான அடக்கு முறையைப்பற்றி கவலையில்லை என்பது மட்டுமல்ல தமது இனம் மீதான அடக்குமுறைக்குப் பிரிவினை தனியரசு என்பது மட்டுமே ஒரே தீர்வாக இவர்கள் வைப்பர். ஒரு குறிப்பிட்ட இனம் பிரிந்து போவதற்குச் சரி என்று தெளிவாகப் பதில் சொல்லும்படியும் இதுதான் செயல் பூர்வ நடவடிக்கை எனவும் பூர்ஷ்வாக்கள் கூறுவர் ஒரு குறிப்பிட்ட இனம் பிரிந்து போவது சரி என்று சொல்வதுதான் செயல்பூர்வமான தீர்வு எனக்கூறப்படுவதை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிர்ந்துபோகும் உரிமை உண்டு என மட்டும் அது கூறுகிறது பாட்டாளி வர்க்கம் அனைத்து இனங்களினதும் விடுதலைக்காக நிற்கிறது பிரிவினை மட்டுமே ஒரே தீர்வு என பாட்டாளி வர்க்கம் கருதவில்லை எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகின்ற உரிமையை ஒப்புக்கொள்வது குறிப்பிட்ட இனம் பிரிந்து போகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேஷ உரிமைகளையும் எல்லாத் தனித்துவ போக்குகளையும் நீக்கும் நோக்கத்துடன் அணுகி சீர்தூக்கிப் பார்ப்பது இதுதான் பாட்டாளி வர்க்க நிலைபாடு.
பிரிவினை என்ற திட்டவட்டமான கோரிக்கை எழும்போது என்ன நிலை மேற்கொள்வது சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கையும் பிரிவினை என்ற கோரிக்கையும் ஒன்றல்ல. தேசிய இனங்கள் ஒரு குறிப்பிட்ட அரசு எல்லைக்குள் வலுக்கட்டாயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பிரிந்து சென்று தனியரசு அமைத்து கொள்வதற்கு அரசியல் சுதந்திரம், பிரிந்து செல்லும் உரிமை என்பதே சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்லும் உரிமை இருக்கிற தென்பதாலேயே பிரிந்துதான் சென்றாக வேண்டு மென்பதில்லை. ஒரு தேசம் விரும்பினால் இவ்வுரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம், தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உத்திரவாதம் இது பாட்டாளி வர்க்கம் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கும் அந்த ஒடுக்குமுறைகள் தனது அணியின் ஒற்றுமையைச் சிதைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் இந்த உரிமைக்காகப் போராட வேண்டும் அது மட்டுமின்றி பாட்டாளிவர்க்கம் தன் தலைமையிலான அரசை நிறுவிய பின்பும் அரசமைப்பை ஜனநாயக ரீதியில் சீரமைக்கவும் முழுமையான ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் அந்த அரசின் எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமையை அளிக்க வேண்டும். இதுதான் இன அடக்கு முறைக்கு முடிவுகட்டி இன சமத்துவத்தை நிலைநாட்டும் வழி. ஆனால் ஒடுக்கப்பட்ட இன முதலாளி வர்க்கம் எல்லா நேரங்களிலும் பிரிவினை ஒன்றே இன ஒடுக்குமுறைக்கு ஒரே தீர்வாக வைக்கிறது. இன விடுதலை என்றாலே தனியரசுதான் என கூறுகிறது. இதுதான் ஒரே தீர்வு என்பதை பாட்டாளிவர்க்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. சில குறிப்பிட்ட நேரங்களில் ஓர் குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட இனத்தில் பிரிவினைக் கோரிக்கை எழும்போது அவ்வாறு பிரிவது அவ்வினத்து பரந்துபட்ட மக்களின் நலனுக்கும் பொதுவான ஜனநாயக புரட்சி நலனுக்கும் உகந்ததாக இராது என கருதினால் அக்கோரிக்கையை நிராகரிக்கும் அதே சமயம் அந்த இனத்திற்கு பிரிந்து செல்ல உரிமை உண்டு என்பதையும் விடாது முன் வைக்கும். எச்சூழ்நிலையில் பிரிவினைக் கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கலாம் இவ்விஷயத்தில் சர்வதேச அனுபவமும் லெனினியமும் போதிப்பது என்ன? பூகோள பொருளாதார உறவுகளின் முக்கியத்து வத்தையும் பெரிய மார்க்கெட்டில் பெரிய அரசின் அனுகூலங்களையும் பொதுமக்கள் தமது அன்றாட அனுபவத்திலிருந்து நன்கறிவர். எனவே எப்போது தேசிய ஒடுக்கு முறைகளும் தேசிய தகராறுகளும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையைச் சகிக்க முடியாத தாக்குகின்றனவோ எந்தவிதப் பொருளாதாரத் தொடர்புகளையும் தடை செய்கின்றனவோ அப்போது மட்டுமே மக்கள் பிரிவினையைக் கையாள்வார்கள். அப்போது பிரிவதனால் முதலாளித்துவ வளர்ச்சியின் நலன்களும் வர்க்க போராட்ட சுதந்திரத்தின் நலன்களும் சிறந்த பயன் பெறுகின்றன. (லெனின் - தேசங்களின் சுயநிர்ணய உரிமை) "வர்க்கப் போராட்டத்தைத் தடையின்றி நடத்துவதற்கு நார்வேயின் சுயநிர்வாக உரிமையானது எந்த அளவுக்கு வகை செய்தது என்பதைப் பற்றியும் அல்லது ஸ்விஷ் உயர்குடி மக்கள் ஆட்சியுடனான முடிவற்ற மோதல்களும் பூசல்களும் எந்த அளவிற்குப் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாக விளங்கின என்பது பற்றியும் லெனின் நார்வே சுவிடனிலிருந்து பிரிந்தது பற்றி பேசும் போது குறிப்பிடுகிறார். (தேசங்களின் சுயநிர்ணய உர்மை) அயர்லாந்தைப்பற்றி மார்க்ஸ் குறிப்பிடும்போது ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தின் நேரடியான, நிச்சயமான நலன்களுக்கேற்றது அயர்லாந்துடனான தனது இன்றையத் தொடர்ப்பை அது அறுத்துக் கொள்வதுதான் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் கை ஓங்கி வந்தால் ஐரிஸ் ஆட்சியை ஒழித்துக்கட்டுவது சாத்தியம் என்று நீண்டகாலம் நான் நம்பி வந்தேன் உண்மை இதற்கு நேர் எதிரானது என்று ஆழ்ந்த ஆராய்ச்சி இப்போது என்னைத்திடமாக நம்பச்செய்து விட்டது. அயர்லாந்தை விட்டுத்தொலைக்கும் வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது எனக் கூறுகிறார். இந்த மார்க்சிய - லெனினிய கருத்துகளிலிருந்தும் சர்வதேச அனுபவங்களிலிருந்தும் பின்வரும் முடிவுகளுக்கு செல்ல முடியும். தேசிய இன ஒடுக்கு முறையும் தேசிய தகராறுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்வையே சகிக்க முடியாததாக்கிவிடும் போது, ஒடுக்கும் இன அரசுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்திற்குமான முடிவற்ற மோதல்களும் பூசல்களும் ஒடுக்கப்பட்ட இனத்தின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் தடைசெய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டபோது,அனைத்து இன பாட்டாளி, பிறமக்களும் ஒன்றுபட்ட வர்க்க போராட்டம் நடந்த இயலாத அளவிற்கு அரசமைப்பு இடையூறாக உள்ளபோது, அதாவது பிரிவதுதான் வர்க்கப்போராட்டத்தின் நலன்களுக்கு சிறந்த பயனளிப்பதாக மாறிவிட்டபோது. இந்த மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது தான் நாம் பிரிவினையை ஆதரிக்க முடியும், அத்துடன் வேறொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் சுயநிர்ணய உரிமை உட்பட எத்தேசிய இனக் கோரிக்கையும் சார்பற்ற முழுமை அல்ல சுயநிர்ணயம் உட்பட பற்பல ஜனநாயக கோரிக்கைகளும் சார்பற்ற முழுமையல்ல பொதுவான ஜனநாயக (தற்போது பொதுவான - சோசலிச) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியே. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பகுதியானது முழுமைக்கு முரணாக நிற்கலாம் அவ்வாறெனில் அது நிராகரிக்கப்பட வேண்டும் ஒரு நாட்டின் குடியரசு இயக்கம் பிற நாடுகளின் புரோகித அல்லது நிதிக்கும்பலின் கருவியாகமட்டும் இருக்கக்கூடும், அவ்வாறெனில் அக் குறிப்பிட்ட இயக்கத்தை நாம் ஆதரிக்ககூடாது ஆனால் அதற்காக சர்வதேச - சமூக ஜனநாயகத்தின் வேலைத் திட்டத்திலிருந்தே குடியரசுக்கான கோரிக்கையை எடுத்துவிடுவது நகைபிற்குறியது அல்லவா? (லெனின் - சுயநிர்ணய உரிமை விவாதத்தொகுப்பு) இதிலிருந்து என்ன தெரிகிறது? பொதுவானதத்திற்கு குறிப்பானது உட்பட வேண்டும் பொதுவான உலக ஜனநாயக இயக்கத்தின் பல கோரிக்கைகளுள் ஒன்றுதான் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையும் எனவே குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்து பிரிவினைக் கோரிக்கை பொதுவான ஜனநாயக புரட்சி நலனுக்கு முரண்படுமேயானால் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது அவ்வாறு மார்க்ஸ் செக்கோஸ்லேவேகியாவின் தனி நாட்டுக் கோரிக்கையை எதிர்த்தார். போலந்து ஜாராட்சியிலிருந்து பிரிவதை ஆதரித்தார். பின்னர் வரலாற்று நிலைமைகள் மாறிவிட்டபின் லெனின் போலந்து பிரிவினையை எதிர்த்தார் இவை பிரச்சனையை வரலாற்று ரீதியில் ஸ்தூலமாக ஆய்வு செய்ததிலிருந்து பெறப்பட்ட முடிவுகள். அவ்வாறே பாட்டாளிவர்க்கம் ஒவ்வொரு தேசிய இனப்பிரச்சனையையும் வரலாற்று ரீதியில் ஆய்வுசெய்தல் என்ற லெனினிய அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும்.
பல இன அரசின் எல்லக்குள் பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வாறு கட்டுப்பட வேண்டும்? நிச்சயமாக ஒரு அரசின் எல்லைக்குள் ஒரே பாட்டாளி வர்க்கக்கட்சி கட்டும்போதுதான் புரட்சியின் வெற்றியை உத்திரவாதம் செய்ய முடியும். அப்போது வெவ்வேறு இன முதலாளிகளும் ஜனநாயக புரட்சியை இறுதிவரை செல்லாமல் தடுக்கச் செய்யும் முயற்சிகளை முறியடிக்க முடியும். அத்துடன் இது சமூக வளர்ச்சியின் தேவையுமாகும் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பல இன மக்களையும் ஒன்று கலக்கச் செய்கிறது. பெரு நகரங்களில் ஏராளமான எண்ணிக்கையில் பல இன பாட்டாளிகள் ஒன்று குவிக்கப்படுகின்றனர். சமூகத்தின் இயல்பான வளர்ச்சி தேசிய இன தடை மதில்களை தகர்ப்பதாக உள்ளது இந்த இயல்பான போக்கிற்கு முட்டுக்கட்டையாக உள்ளது ஒடுக்கும் இனம் ஒடுக்கப்படும் இனம் உட்பட அனைத்து இனங்களையும் சேர்ந்த முதலாளிகளே பிரிந்துபோகும் உரிமையையும் இன சமத்துவத்தையும் உயர்த்தி பிடிக்காவிடில் பேரின பாட்டாளிவர்க்கம் தமது இன ஆளும் வர்க்கங்களின் வாலாகவே முடியும். தனது சுயேச்சைப் பாத்திரத்தை இழந்துவிடும். அதுபோல ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி கட்சிகள் என்ற கொள்கையை ஒடுக்கப்பட்ட இன பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்ளுமேயானால் அதுவும் கட்டாயம் தமது இன முதலாளிகளுக்கு வாலாகவே முடியும். சுயேச்சையான பாத்திரத்தை ஆற்றமுடியாது புரட்சியின் கட்டம் சோசலிசப் புரட்சியாகவோ, ஜனநாயக புரட்சியாகவோ எதுவாக இருப்பினும் கட்சியானது பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் கட்டப்படுகின்றது. உண்மையான பாட்டாளிவர்க்க கட்சி அனைத்து பாட்டாளிகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஒரு கட்சி எனும் போது அதன் மையம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? தனித்தனி தேசிய உறுப்பு கட்சிகளின் ஒருங்கினைப்பு மையமாகவா? கூடாது. கட்சி அவ்வாறு ஒரு சமஷ்டியாக இருப்பது சோசலிசத்தையும் தேசிய வாதத்திற்கு கீழ்ப்படுத்துவதே (லெனின் நூல் தொகுப்பு - 18 பக் 411, 12) "ரஷ்யாவின் பொருளாதார அரசியல் நிலைமைகள் முழுமையும் கோருவது என்னவெனில் சமூக - ஜனநாயகம் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளிகளை விதிவிலக்கின்றி (அரசியல்) தொழிற்சங்கக் கூட்டுறவு, கல்வி நிறுவனம், இன்னும் இது போன்ற அனைத்து பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களிலும் நிபந்தனையின்றி ஐக்கியப்படுத்த வேண்டும். கட்சியானது கட்டமைப்பின் சமஷ்டி முறையைக்கொண்டிருக்கக்கூடாது தேசிய - சமூக ஜனநாயக குழுக்களைக் கொண்டதாக இருக்கக் கூடாது.(லெனின் - தேசிய இனப்பிரச்சனை ஆய்வுரைகள்) இவ்வாறு சமஷ்டியாக கட்சியை ஆக்குவது பாட்டாளிகளின் முழுமையான ஐக்கியத்தை விடதமது சொந்த பூர்ஷ்வாக்களுடனான ஐக்கியத்தை மேலானதாக வைப்பதாகிறது. ஆகவே பாட்டாளிவர்க்க கட்சியானது ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது கட்டப்பட வேண்டும். இதுகாறும் கூறியவையே தேசிய இனப்பிரச்சனையை பற்றிய முக்கிய மார்க்சிய லெனினிய கருத்தோட்டங்கள் ஆகும். இவற்றின் வெளிச்சத்தில் திருச்சி மு.இ.அ என்ற பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள முக்கிய தவறுகளை முதலிலும் சிறிய தவறுகளை அடுத்ததாகவும் எடுத்துக்கொண்டு பரிசிலிப்போம்.
திருச்சி மு.இ.அ பிரசுரத்தில் காணப்படும் சில முக்கிய பகுதிகள்"இன்றுள்ள இலங்கை அரசு என்பது ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்டு உலக ஏகாதிபத்திய அமைப்பினுள் நிலவுகின்ற அரசு எல்லையே என்பதையும் இதைப்பகுதி பகுதியாக அழித்து விடுவதற்கான புரட்சிகர நடைமுறைகள் புதிய புதிய வளர்ச்சிகளை பெற்று வருவதையும் அவர்கள் காணத்தவறினர் முதலாளி - தொழிலாளி நிலக்கிழார் - உழவர் என்ற முரண்பாடுகள் எல்லா வர்க்க சமுதாயத்திலும் அடிப்படை முரண்பாடுகளாக இருக்கும் என்றாலும் இன்றைய உலக ஏகாதிபத்திய அமைப்பினுள் உலக ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட அரசு எல்லைகளுக்குள் அந்த அரசு எல்லைகளுக்குள் ஏற்றத் தாழ்வான வளர்ச்சிகளும் பல்வேறு தேசிய இனங்களும் நிலவுகையில் இந்த அடிப்படை முரண்பாடுகள் வர்க்கங்கள் இடையே உள்ள முரண்பாடுகளாகவே அப்படியே வெளிப்படும் என்பதும் மார்க்சிய - லெனினியத்திற்கு முற்றிலும் மாறானது. உலக ஏகாதிபத்தியத்தால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட அரசு எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குமிடையே உள்ள அடிப்படையான முரண்பாடு கூர்மையடைந்து முதன்மையான முரண்பாடாக மாறி புரட்சிகர போராட்டம் நடத்துவதற்கு புதிய எல்லைகளை வகுத்து கொடுத்துள்ளது. இப்புதிய எல்லைகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமைதாங்கி ஒடுக்கும் தேசத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்து விடுதலையைப் பெறுவதுதான் உண்மையிலேயே ஒடுக்கும் தேசத்தின் உழைக்கும் மக்களுக்கு ஒடுக்கப்படும் தேசத்தின் உழைக்கும் மக்கள் சாட்டுகின்ற உண்மையான புரட்சிகரமான ஒருமைப்பாட்டு உணர்வும் சர்வதேச புரட்சிகர கடமையாகும். "ஏகாதிபத்திய வல்லரசுகளையோ ஏகாதிபத்திய படைகளையோ நேரடியாக எதிர்த்து நின்றால்தான் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகும் என்று நினைக்கின்ற அரை வேக்காட்டு மார்க்சிய - லெனினியவாதிகள் உண்மையில் புரட்சிகர மக்களின் கடும் பகைவர்கள். ஏகாதிபத்தியம் என்பது உலக அமைப்பு என்பதை எள்ளளவும் புரிந்துகொள்ளத் தவறியவர்கள். ஒரே அரசு எல்லைக்குள் வாழும் தேசிய - இனங்கள் வெவ்வேறு அணிகளை கட்டுவதன் மூலம் ஒருமைப்பாட்டை பேண முடியும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை." இவையே பிரசுரத்தின் அடிப்படையாக விளங்கும் கருத்தோட்டத்திற்கு இன மாதிரியான எடுத்துக்காட்டுகள் இக்கருத்துக்களின் சாரம் என்ன?இது ஏகாதிபத்திய சகாப்தமாக இருப்பதால் ஏகாதிபத்தியம் உலக அமைப்பாக இருபதால் பல இனங்களைக் கொண்ட காலனி, அரைக்காலனி நாடுகளில் ஒடுக்கும் தேசத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலைக்காகப் போராடுவதுதான் முதன்மையான சர்வதேச புரட்சிகர கடமை.அப்படிப்பட்ட பல இன அரசின் எல்லைக்குள் வாழும் தேசிய இனங்கள் வெவ்வேறு அணிகளைக் கட்ட வேண்டும் அதன் மூலமே ஒருமைப்பாட்டை பேண முடியும்.பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வலுக் கட்டாயமாக ஏகாதிபத்தியத்தால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மிடையேயுள்ள முரண்பாடு ஓர் அடிப்படையான முரண்பாடு அந்த அடிப்படை முரண்பாடு கூர்மையடைந்து முதன்மையாக மாறியுள்ளது. அதனால் புரட்சிகர போராட்டத்திற்கு புதிய எல்லைகள் தோன்றியுள்ளன. அடிப்படை முரண்பாடுகள் வர்க்கங்களிடையேயுள்ள முரண்பாடுகளாக அப்படியே வெளிப்படும் என கருதுவது தவறு. இக்கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசீலிப்போம்.1. ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒவ்வொரு இனமும் தனித்தனியாக பிரிவதுதான் சர்வதேச புரசிகர கடமை என்பது பற்றி; பிரிவினை என்பதை முதலாளி வர்க்கம் மட்டுமே ஒரே தீர்வாகக் கருதும் பாட்டாளிவர்க்கம் பிரிந்துபோகும் உரிமைக்காக போராடவேண்டும். சில குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் மட்டுமே பிரிவினையை ஆதரிக்க வேண்டுமென்பது மார்க்சிய - லெனினியத்தாலும் சர்வதேச அனுபவத்தாலும் திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்ட பின்பும் இக்கருத்தை ஏகாதிபத்திய சகாப்தத்திற்கான புதியதோர் கண்டுப்பிடிப்பாக ஆரவாரத்துடன் வைத்துள்ளனர். லெனினியம் என்பது ஏகாதிபத்திய சகாப்தத்தின் மார்க்சியமே குறிப்பாக லெனின் ஏகாதிபத்தியக் காலத்தின் ஆளும் விதிகளை ஆய்வு செய்து தொகுத்ததன் பின்பே பாட்டாளி வர்க்க புரட்சிகர நடைமுறைக்கு உகந்த விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தார், ஏகாதிபத்திய சகாப்தத்தில் உலகம் ஒடுக்கும் ஏகாதிபத்திய தேசங்களாகவும் ஒடுக்கப்படும் காலனி, அரைக்காலனி தேசங்களாகவும் பிரிந்து நிற்கின்றது என்பதும் இம்முரண்பாடு தேசிய இன பிரச்சனையின் ஒரு வடிவமே என்பதும் லெனினாலும் ஸ்டாலினாலும், மாவோவாலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோ காலனி அரைக்காலனி நாடுகளின் தேசியம் என்பது அந்த குறிப்பிட்ட நாடு ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதும் அந் நாட்டினுள் அடங்கியுள்ள தேசிய இனங்கள் விடுதலைப் பெற்று அங்கு இன சமத்துவம் நிலை நாட்டப்படுவதும் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டது என சுட்டிகாட்டுகிறார். அத்தகைய காலனி நாடுகளில் பல இனங்கள் வாழும்போது பல சிறுபான்மை இனங்கள் பெருபான்மை இனத்தால் ஒடுக்கப்படுகின்றன என்பது உண்மையே எனவே ஒடுக்கப்படும் இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டியுள்ளது. அதே சமயம் அந்நாடுகளில் ஒடுக்கும் இனங்களே கூட ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படுகின்றன. அந்த இனங்களின் விடுதலையும் கூட சேர்ந்ததே அந்த நாட்டுப்புரட்சியாகும். இதைவிடுத்து ஒடுக்கும் தேசத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசத்தின் விடுதலையே புரட்சியாகப் பேசுவது உண்மையில் புரட்சியை திசைதிருப்புவதாகும். அத்தகைய நாடுகளில் ஒடுக்கப்பட்ட இனங்களின் மீது இரு சுமைகள் உள்ளன என்பது உண்மையே இரு சுமைகள் உள்ளதால்தான் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை அந்நாட்டிலிருந்து விரட்டியடித்து அந்நாட்டின் அரசமைப்பை ஜனநாயக ரீதியில் சீரமைப்பதும் அதற்காக அனைத்து இனங்களுடன் ஒன்று படுவதும் ஒடுக்கப்பட்ட இனத்தின் கடமையாகின்றது. ஏனெனில் அந்த நாட்டில் இன ஒடுக்கு முறை நிலவுவதற்கு ஏகாதிபத்திய ஆதிக்கமும் ஒரு முக்கிய காரணம். ஏகாதிபத்தியத்தால் செயற்கையாகத் தோற்றுவிக்கபட்ட அரசு எல்லைகள் பற்றியெல்லாம் இப்பிரசுரம் பேசுகிறது. இன ஒடுக்கு முறைக்கு ஏகாதிபத்தியமே ஒரு முக்கிய காரணம் என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டாலும் அதிலிருந்து என்ன முடிவுக்குச் செல்கின்றனர்? ஏகாதிபத்திய நுகத்தடியை உடைத்தெறிகின்ற புதிய ஜனநாயக புரட்சியின் பகுதியாகத்தான் தேசிய இன ஒடுக்குமுறை முடிவுக்கு வரும் என்ற முடிவுக்குச் சென்றார்களா? இல்லை! ஒவ்வொரு இனமும் தனித்தனியாக பிரிவது தான் புரட்சியாம்!!? சில சூழ்நிலைகளில் ஒரு இனத்தின் பிரிவினை கூட புரட்சியாகவிளங்கக்கூடும். ஆனால் இவ்வாறு தனித்தனியாகப் பிரிவதுதான் புரட்சி என்று பொது விதியாகக் கூறுவது எவ்வாறுசரியானது? அரைக்காலனி அரைநிலபிரபுத்துவ நாட்டில் ஒடுக்கப்பட்ட இனத்தில் தேசிய முதலாளி வர்க்கமும் உள்ளது. அது புற நிலையில் தேசிய விடுதலையில் பங்கு கொள்ளும் அவசியம் உள்ளது. அதே சமயம் ஒவ்வொரு கட்டத்திலும் புரட்சியை பாதியிலேயே தடுத்து நிறுத்தவும் புரட்சிக்கு துரோகம் விளைவிக்கவும் பார்க்கும். ஏனெனில் இது பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தமாக இருப்பதால் புரட்சிகர இயக்கங்கள் பாட்டாளி வர்க்க ஆட்சியில் போய் முடிந்துவிடும் என்ற உண்மையான அச்சமே காரணம். குறிப்பாக தேசிய முதலாளி வர்க்கத்தின் பிற்போக்கான வலது பகுதி புரட்சிகர இயக்கங்களை பயன்படுத்தி ஆளுகைபுரியும் ஏகாதிபத்தியத்திட மிருந்து பேரம் பேசி தனக்கு அதிக சலுகைகள் பெறுவதற்கும் அல்லது வேறொரு ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாகி தனியரசு அமைத்துக் கொள்ளவும் முயலும். அத்தகைய ஒடுக்கப்பட்ட இனங்களில் தரகு முதலாளி வர்க்கமும் உண்டு. அவ்வர்க்கம் எப்போதுமே எந்த மக்கள் இயக்கத்தையும் காட்டி ஏகாதிபத்தியத்திடமிருந்து சலுகைகள் பெற முனைப்பாக இருக்கும். ஏதாவது ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் தனியரசு அமைத்துக் கொள்ளவும் மிகவும் தயாராக இருக்கும். இத்தகைய தரகு முதலாளித்துவ சக்திகள், தேசிய முதலாளிகளின் வலது பகுதி இவர்களின் முயற்சிகளுடன் தேசிய முதலாளிகளின் தனிச்சலுகை விருப்பங்களும், குறுகிய தேசிய வாத கண்ணோட்டமும் சேர்ந்து கொண்டால் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான சக்திகளின் ஒற்றுமை முயற்சி தடைப்படும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் திசை திருப்பப்படும், பாட்டாளி வர்க்கக் கட்சியின் தந்திரம் இவற்றை கணக்கிலெடுத்துக் கொண்டதாக இருத்தல் வேண்டும். எனவே தனித்தனி இனப்பிரிவினை என்ற முழக்கம் அது பாட்டாளி வர்க்கத் தலைமை எனக் கூறிக் கொண்டாலும் மேற்கூறப்பட்ட தரகு முதலாளிகளின் வலது தேசிய முதலாளிகளின் துரோக முயற்சிகளுக்கும், அவர்களை தத்தமது பிடியில் வைத்துக் கொண்டு வெவ்வேறு ஏகாதிபத்தியங்களும் வெவ்வேறு தேசிய இன அடிமை அரசுகளை ஸ்தாபித்து நாட்டை கூறுபோட்டுக் கொள்ள செய்யும் சக்திகளுக்குமே மிகவும் உகந்த முழக்கமாகும். ஆகவே இது மீள முடியாதபடி ஏகாதிபத்திய பிடியில் நாட்டை அடிமை படுத்தும் முழக்கமே தவிர வேறல்ல. இது எவ்விதத்திலும் புரட்சியாகாது. பல இனங்களை கொண்ட நாட்டில் ஒரு புரட்சிகர கட்சி அந்த அரசை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் ஆளும் வர்க்கங்கள் வர்க்க நலன்களிலிருந்து தனது கொள்கைகளை உருவாக்கி மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்தின் மூலம் நாடு முழுவதையும் ஆண்டு வருகின்றன. ஆகவே அந்தகுறிப்பிட்ட நாடு முழுவதும் ஆளுகை புரியும் சமூக விதிகளைப் புரிந்துக் கொண்டு பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியானது அந்நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த புரட்சிகர யுத்த தந்திரத்தை (strategy) வகுத்து நிறைவேற்றும் போதே வெற்றி காண முடியும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ ஆட்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்ட இனங்கள் அனைத்தையும் 'தனித்தனி நாட்டு' முழக்கத்தால் ஒன்று படுத்த முடியாது. 'சுயநிர்ணய உரிமை' அனைத்து இனங்களின் சமத்துவம் என்ற முழக்கத்தால் தான் ஒன்றுபடுத்த முடியும். பொதுவான வர்க்கப் போராட்டத்திற்கு தேசிய இனப் பிரச்சனையை உட்படுத்தும் போதுதான் அதாவது புதிய ஜனநாயக புரட்சியின் அச்சாணியாக விளங்கும் விவசாய புரட்சிக்கு தேசிய இனப் பிரச்சனையை உட்படுத்தும் போதுதான் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கப்படும் இனமக்களையும் வர்க்கங்களையும் ஒன்றுபடுத்த முடியும். ஆகவே தான் காலனி அரைக்காலனி நாடுகளுக்கு பூர்ஷ்வாஜனநாயக புரட்சி நிறைவு பெறாத நாடுகளுக்கு - இருவகை கடமைகளை லெனின் முன் வைக்கிறார். ஒன்று எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக் கொள்வது. இரண்டாவது குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி மக்களும் தங்களது வர்க்கப் போராட்டத்தில் நெருக்கமாக ஒன்றுபடுவது. இக்கடமைகளை ஏகாதிபத்தியத்தின் விதிகளை ஆய்வு செய்து தொகுத்தப் பின்னரும் 1916 கட்டுரையிலும் முன் வைக்கிறார். எனவே இப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள தீர்வு ஏகாதிபத்திய சகாப்தத்திற்கான 'புதிய புரட்சிகர எல்லைகள்' பகுதி பகுதியாக அழிக்கும் புரட்சிகர நடைமுறையின் 'புதிய வளர்ச்சி' என்றெல்லாம் கூறிக் கொண்டாலும் உண்மையில் இது ஏகாதிபத்திய சகாப்தத்தில் வாழும் மக்களின் புரட்சிகர கடமைகளை திசை திருப்பும் 'புதிய வாதத்திற்கு இரையாவதே, ஏனெனில் இவர்கள் ஏகாதிபத்திய சகாப்தத்தின் இரு முக்கிய கூறுகளை மறந்து விட்டனர். அவையாவனஇச்சகாப்தத்தில் புரட்சிகளுக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமைதாங்க முடியாது, பாட்டாளி வர்க்கம் மட்டுமே தலைமை தாங்க முடியும். முதலாளித்துவ வர்க்கத்தால் பூர்த்திச்செய்ய முடியாது விடப்பட்டுள்ள ஜனநாயக பணிகள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் மட்டுமே பூர்த்தியாகும். பாட்டாளி வர்க்கம் ஜனநாயக புரட்சியை எடுத்து செய்வதன் நோக்கம் ஏகாதிபத்திய அடிவருடிகளை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு அதற்குபதில் 'தேசிய முதலாளி'களிடம் ஆட்சியை ஒப்படைத்து ஒரு முதலாளித்துவ சமூகத்தை கட்டி வளர்க்க வேண்டுமென்பதல்ல, மாறாக இந்த ஜனநாயக புரட்சியிலிருந்து சோசலிசப் புரட்சிக்கு மாறிசெல்ல வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையில் தான் பாட்டாளி வர்க்கம் இதில் இறங்குகிறது. இதெல்லாம் எவ்வாறு இருப்பினும் சரி, ஒவ்வொரு இனத்தின் தனித்தனி விடுதலை பற்றி மட்டுமே பேச வேண்டும். ஏனெனில் அந்தந்த இனத்தின் விடுதலை என்பது அந்தந்த இனத்துப் பணியே, இதில் ஒரு இனத்திற்காக இன்னொரு இனத்தின் பாட்டாளி வர்க்கம் பாடுபட முடியாது. என்று பிரசுரத்தை எழுதியவர்கள் கருதி கொண்டிருப்பார்களேயானால் அது பச்சையான இனவாதமே தவிர, முதலாளித்துவ சித்தாந்தமே தவிர வேறல்ல.பல இனங்களைக் கொண்ட நாட்டில் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அணிகட்ட வேண்டும் என்பது பற்றி: முதலில் வெவ்வேறு அணிகள் என்று இவர்கள் எதைக் கூறுகிறார்கள்? தொழிற்சங்கங்கள், மக்கள்படை போன்ற மக்கள் திரள் அமைப்புகளையா? பாட்டாளிவர்க்க கட்சியையா? "கோபன்ஹேகன் மாநாடு தொழிற்சங்கங்களை தேசிய இன வாரியாக பிரிப்பதை திட்டவட்டமாக கண்டித்துள்ளது. அத்துடன் ஆஸ்திரியாவின் அனுபவம் காட்டுவது என்னவெனில் இவ்விஷயத்தில் தொழிற்சங்கங்களுக்கும் பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிக்குமிடையே' ஒரு வேறுபாட்டை வகுப்பது சாத்தியமற்றது என்பதையே. (லெனின் நூல்திரட்டு 20, பக்.76) ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க கட்சி அனைத்து இன பாட்டாளிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும் என்பது மார்க்சியம் - லெனினியத்தால் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அனுபவமும் எங்கெல்லாம் அவ்வாறு கட்டபடவில்லையோ அங்கெல்லாம் புரட்சிகர சக்திகள் சீர்குலைக்கப் படுவதை எடுத்துக் காட்டுகிறது. ரஷ்யாவிலும் யூத தொழிலாளர்களுக்கு தனி அமைப்பு கட்ட முயன்ற மார்க்சிய வாதிகள் என்ற பெயர் தாங்கிய யூத தேசிய வாத குழுக்கள் இருந்தன. லெனினும் போல்ஷ்விக் கட்சியும் இந்த நச்சுக்கருத்தை எதிர்த்து விடாது போரிட்டு வந்தனர். ஒரு நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் ஒற்றுமை புரட்சியின் வெற்றிக்கு மட்டுமல்ல அன்றாட போராட்டத்தை தொடர்வதற்கே கூட இன்றியமையாததாகும். "பாட்டாளிவர்க்கம் அனைத்து தொழிலாளிவர்க்க ஸ்தாபனங்களிலும் விதிவிலக்கின்றி அனைத்து தேசிய இன தொழிலாளிகளும் நெருங்கிய முழுமையான கூட்டு இல்லாமல் சோசலிசத்திற்கு தனது போராட்டத்தை தொடருவதோ தனது அன்றாட பொருளாதார நலன்களை பாதுகாப்பதோ இயலாது" "அனைத்து தேசிய இன பாட்டாளி வர்க்கத்தின் முழுமையான ஐக்கியத்தை விட "தம் சொந்த" பூர்சுவா வர்க்கத்துடனான அரசியல் ஐக்கியத்தை மேலானதாக வைக்கின்ற தொழிலாளர்களே தமது சொந்த நலன்களுக்கு எதிராகவும், சோசலிசத்தின் நலன்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்தின் நலன்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் எனப்து தெளிவு என்று லெனின் திட்டவட்டமாக கூறியுள்ளார். (தேசிய இன பிரச்சனைகள் - ஆய்வுரைகள்) இவ்வாறு இருப்பினும் வெவ்வேறு தேசிய இனங்களும் வெவ்வேறு அணிகளை கட்டவேண்டும் என்ற கருத்து ஏகாதிபத்திய சகாப்தத்திற்கான புதிய கண்டுபிடிப்பு என்பதுபோல் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய சகாப்தமாக இருப்பதால்தான் அனைத்து இன மக்களதும் ஒற்றுமை மிகவும் அவசியப்படுகிறது. காரணங்கள் என்ன?1. ஏகாதிபத்தியம் எனபது காலனி, அரைக்காலனி நாடுகளில் உள்ள பல இனங்களையும் மக்களையும் ஒரு சேர அடக்கி ஆளும் உலக அமைப்பு எனவே இதனை எதிர்த்து பல இன மக்களும் இன்னும் சொல்லப் போனால் பல நாட்டு மக்களுமே கூட ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா போன்ற நாட்டின் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக நின்று அனைத்து இனங்களின் சுயேச்சையான வளர்ச்சியையும் தடுத்துக் கொண்டிருப்பதாலும் அவர்கள் கையில் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் உள்ளதாலும் அந்த அதிகாரத்தை வீழ்த்துவதற்கு ஐக்கியப்பட்ட பாட்டாளிவர்க்க கட்சித் தேவை, இவ்வாறு கூறும்பொழுது நாடு முழுவதும் கட்சி கட்டப்பட்டப்பின்தான் புரட்சியென்றோ அனைத்து மூலைகளிலும் ஒரே நேரத்தில் மக்கள் போராடினால்தான் அரசை வீழ்த்த முடியமென்றோ பொருள் கொள்ளக் கூடாது. இங்கு தேசிய இனங்களின் வளர்ச்சியில் சமச்சீரற்ற நிலை உள்ளது போலவே பாட்டாளி வர்க்க உணர்வு மட்டத்திலும் சமச்சீரற்ற நிலை நிலவுகிறது. ஆகவே கட்சியில் பலத்திலும் வளர்ச்சியிலும் கூட சமச்சீரற்ற நிலை இருக்கும். ஆனால் இதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்துவதை பாட்டாளி வர்க்க கட்சியின் குறிக்கோளாக வைக்க மறுப்பது என்பது புறநிலை அவசியத்திற்கு எதிரானது ஆகும்.2. முதலாளித்துவ வளர்ச்சி விதிப்படி பெருநகரங்களில் பல இன மக்களும் ஒன்றுகுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு குவியும் மக்கள் ஒன்றுபட்டு விடாதபடிக்கு ஆளும் வர்க்கங்கள் இன அடிப்படையில் பிரித்து மோதவிடுகின்றன. இச்சதிகளை முறியடித்து பல இன மக்களை ஒன்றுபடுத்தி ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடுவது அவசியம் அப்போதுதான் பாட்டாளி வர்க்கம் தேசிய வாதத்தில் மூழ்கிவிடாமல் வர்க்க உணர்வையும் சர்வதேசிய உணர்வையும் பெறமுடியும்.3. ஒவ்வொரு இனத்தையும் சேர்ந்த முதலாளிகள் அனைத்து இன மக்களது ஒற்றுமையை குலைப்பதற்காக தமது இன மக்களுக்கு பிற இனங்கள் மீது அவ நம்பிக்கையையும் வெறுப்பையும் விதைக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்தி தேசிய வாதத்தை அவர்கள் மத்தியில் புகுத்துகின்றனர். அத்துடன் ஒடுக்கப்பட்ட இன முதலாளிகள் இன ஒடுக்குமுறைக்கெதிரான மக்களது போராட்டத்தில் பங்கு பெற்றாலும் அதனைக் காட்டி ஆளும் வர்க்கங்களிடமிருந்து பேரம் பேசி சில சலுகைகள் பெறவும், ஏகாதிபத்தியங்களுக்கு நேரடியாக ஊழியம் புரியவ்ம், வாய்ப்பு ஏற்பட்டால் ஆதிக்கத்தில் இல்லாத வேறொரு ஏகாதிபத்தியத்தின் துணையுடன் அதற்கு அடிவருடியாக தனியரசு அமைத்துக் கொள்ளவும் முயலுவர். குறிப்பாக ஆதிக்கத்தில் இல்லாத தரகு முதலாளிகளும், தரகர்களாக வளர ஏங்குகின்ற தேசிய முதலாளிகளும் இதற்கு முயலுவர். இவர்களது முயற்சிகள் முறியடிக்கப்படவிடில் புதிய ஜனநாயக புரட்சி இடைவழியிலேயே நின்றுவிடும். எனவே அனைத்து இனமக்களையும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையில் அணிதிரட்ட மறுப்பது இந்த பூர்ஷ்வாக்களின் சூழ்ச்சிக்கே இரையாவதாகும். இது புரட்சியை சீர்குலைத்து விடும். எனவே தேசிய இன ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டவும் உதாவாது, ஏனெனில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு இச்சகாப்தத்தில் முதலாளிகள் தலைமையில் தீர்வுகாண முடியாது. பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சியின் பகுதியாகத்தான் தீர்வுகாண முடியும். புதிய ஜனநாயகப் புரட்சி என்பது முதலாளி வர்க்கங்கள், அனைத்தையும் ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டதில்லை. எனினும் முதலாளி வர்க்கங்களில் புரட்சிகர பங்காற்ற முன் வருகின்றவர்களையும் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் இணைத்துக் கொள்வதை நோக்கமாக கொண்டதெனினும், அது முதலாளி வர்க்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்து ஒரு முதலாளித்துவ சமூகத்தை கட்டி வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டதல்ல என்பதையும் சோசலிசத்திற்கு முன்னேறிச் செல்வதை நோக்கமாக கொண்டது என்பதையும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இவ்விடத்தில் வேறொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும். இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து இன மக்களின் ஒருமைப்பாடு என்பது பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் கூறுகின்ற 'தேசிய ஒருமைப்பாடு' அல்ல அது அனைத்து தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதற்கான ஏகாதிபத்திய தேசியவாதமே இந்தியாவிலுள்ள அனைத்து இனங்களும் வலுக்கட்டாயமாக ஒரே அரசின் கீழ் பிடித்து வைகப்பட்டிருப்பதை நாம் எதிர்க்கிறோம். அதற்காக அனைத்து இன மக்களும் தமது ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றுபடக் கூடாது என்பதல்ல. பிற்போக்கு 'தேசிய ஒருமைபாடு' பற்றிய அச்சக் கண்ணோட்டத்திலேயே அனைத்து இன உழைக்கும் மக்களின் ஒற்றுமையையும் ஒரு இன ஆதிக்கமாகவே இருக்கும் என்று சிலர் பார்க்கக்கூடும். இன அடக்குமுறைக்கு ஒரு வர்க்க அடிப்படை எப்போதும் உண்டு. சுரண்டும் வர்க்கங்களின் ஆதிக்கத்திலிருந்தே, ஜனநாயகமற்ற அரசமைப்பு முறையிலிருந்து இன அடக்கு முறை ஏற்படுகிறது. முரண்பாடற்ற ஜனநாயகம் மட்டுமே இன பாரபட்சங்களுக்கும் இன அடக்குமுறைக்கும் எதிரான உத்திரவாதமாகும். ஆகவேதான் பாட்டாளி வர்க்கம் எப்போதும் முரண்பாடற்ற முழு ஜனநாயகத்திற்காகவும் இனங்களின் சமத்துவத்திற்காகவும் நிற்கவேண்டும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப்பிடிக்க வேண்டும் இன பாரபட்சம் தனது அணிகளில் அல்லது தனது தலைமையிலான சமுதாயத்தில் ஏற்பட்டுவிடாமல் உத்திரவாதம் செய்வதற்குத்தான் பாட்டாளி வர்க்கம் தனது கட்சியை ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது கட்டவேண்டும், தனது தலைமையிலான அரசமைப்பை பிரிந்துபோதல் உட்பட சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஜனநாயக அரசாக கட்டவேண்டும். இது தேசிய இன ஒடுக்கு முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மட்டுமல்ல, சோசலிசத்தை கட்டி வளர்க்கவும் தேசங்களின் பரிபூர்ண ஐக்கியத்திற்கும் கூட அவசியமாகும். இந்தியா போன்ற ஏகாதிபத்தியத்தால் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட நாடுகளில் அனைத்து இன மக்களது ஒற்றுமையின் அவசியத்தைப்பற்றி இதுகாறும் கூறினோம். இந்த ஒற்றுமை சாத்தியமா? குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் ஒடுக்கும் இனமே ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் இனமாக இருப்பதால் இத்தகைய ஒற்றுமைக்கு புறநிலை ரீதியான வாய்ப்புகள் உள்ளன. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய மக்களது போராட்டம் இதற்கு ஓர் உதாரணமாகும். அப்போராட்டம்கூட அனைத்து இன மக்களும் சேர்ந்து நடத்தியபோதுதான் முன்னேற முடிந்தது என்பதையும் அவ்வாறு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அன்றைய போராட்டத்தலைமை இன சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிவந்தது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது மற்றோர் உதாரணம் பார்ப்போம் கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினரான தமிழரின் மொழி உரிமைகளும் பிற உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து அவர்கள் போரிட வேண்டியுள்ளது. அதேசமயம் கன்னட மொழியும்கூட மும்மொழித் திட்டத்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிறது. இப்பாதிப்பை எதிர்த்து கன்னடமக்கள் போர்குரல் கிளப்பியதால்தான் அவர்களை ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு தமிழர் மீது திருப்பிவிட்டுவிட்டனர். ஆகவே தமது உரிமைகளுக்காக போராடுகின்ற சிறுபான்மைத் தமிழர்கள் இந்தி ஆதிக்கத்திற்கெதிராக கன்னட இனத்தவருடன் ஒன்றுபட வேண்டிய அவசியம் இருப்பது போலவே வாய்ப்பும் ஏற்படுகிறது. அதேபோல ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தி இனத்தவருடன் ஒன்றுபடவும் வாய்ப்பு உள்ளது. இந்த புறநிலை வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அகநிலைச் சக்திகள் உள்ளனவா என்பதே பிரச்சனை, அதாவது சரியான தேசியக்கொள்கைத் திட்டத்தைக்கொண்ட பாட்டாளிவர்க்க கட்சி அனைத்து இன மக்கள் மத்தியிலும் கட்டப்படுகிறதா என்பதே பிரச்சனை அத்தகைய அகநிலைச்சக்திகள் நீண்டகாலத்திற்கு தவறிவிடும்போது அத்தகைய வாய்ப்புகள் பின்னுக்குப்போய்விடலாம் என்பது உண்மையே. இலங்கையில் தற்போதுள்ளது போன்ற சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அத்தகைய வாய்ப்புகள் அற்றுப்போய் விடலாமென்பது உண்மையே. அதற்காக தேசிய இன முரண்பாடுகள் நிலவும் நாட்டில் எச்சூழ்நிலையிலும் உழைக்கும் மக்களின் அனைத்து இன ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவே முடியாது எனக் கருதுவது அறியாமை மட்டுமல்ல, அத்தகைய வாய்ப்புகளுக்காக முயலவும் தயாரின்மையும் ஆகும். விஷயங்கள் இவ்வாறிருக்கையில் அனைத்து இன மக்களது ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் "வெவ்வேறு அணிகள்" கட்ட வேண்டும் என்று கூறிவிட்டு திருச்சி பிரசுரம் அதுதான் ஏகாதிபத்திய சகாப்தத்தில் பல இனங்களிடையே ஒருமைப்பாட்டை பேண உதவும் என்று ஒருமைபாட்டுக்கே புது இலக்கணம் தந்துள்ளது. கார்ல்மார்க்ஸ் அயர்லாந்து இங்கிலாந்திலிருந்து பிரிவதை ஆதரித்த நேரத்தில் கூட அதனை அயர்லாந்து தொழிலாளர்களுக்கு மட்டுமான ஆலோசனையாக வைக்காமல் குறிப்பாக ஆங்கிலத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆலோசனையாக வைக்கிறார். அவர்களின் சர்வதேச ஒருமைப்பாட்டுணர்வுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இதுதான் தேசியவாதக் கண்ணோட்டத்திற்கும் பாட்டாளிவர்க்க சர்வ தேசிய கண்ணோட்டத்திற்குமுள்ள வேறுபாடு. ஒவ்வொரு இனமும் தனித்தனியே அரசமைத்துக் கொள்வதுதான் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே தீர்ப்பு எனக் கருதுபவர்கள் தனித்தனிப் பாட்டாளிவர்க்க கட்சி, தனித்தனி அமைப்புகள் என்று சிந்திப்பது தவிர வேறென்ன செய்வார்கள்? தொகுத்து கூறுவோம்;ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்தால் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பல இன அரசின் கீழுள்ள அனைத்து இன மக்களும், புறநிலை அவசியம் உள்ளபடியாலும், இயல்பான சமூக வளர்ச்சிப் போக்கின்படியும், புரட்சிக்கு துரோகம் செய்ய முயலும் பூர்ஷ்வாக்களின் சதிகளை முறியடிக்கவும் இம்மூன்று காரணங்களாலும் ஒரே பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையில் அணிதிரள வேண்டும்.இத்தகைய நாடுகளில் ஒடுக்கும் இனமே கூட ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் இனமாக இருப்பதால் ஒற்றுமைக்கான புறநிலை வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் மக்கள் திரட்டப்பட்டிருக்கும் போது இன பாரபட்சங்களுக்கு எதிரான உத்திரவாதம் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டையும், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் நிபந்தனையின்றி கடைப்பிடிப்பதே. இன ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் போன்ற ஜனநாயக விரோத அமைப்பு முறைகளிலிருந்தே உருவாகிறது. ஆகவே ஓர் இனம் தனியாகப் பிர்ந்து சென்றுவிட்டாலும், ஜனநாயக புரட்சியைத் தொடர்ந்து எடுத்துச் சென்று சோசலிசத்தை கட்டி அமைக்காவிடில் ஏகாதிபத்தியம் (சமூக ஏகாதிபத்தியம் உட்பட) வேறொரு வழியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். இன ஒடுக்குமுறை முடிவு பெறாது. ஆகவே பாட்டாளி வர்க்கத் தலைமையில் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் சென்று சோசலிசத்தையும் கம்யூனிஸத்தையும் நிறுவுவதைப் பொறுத்ததே பெரும்பான்மை இனத்தாரின் ஆதிக்கம் ஏற்படாமல் தடுக்கும் விஷயம். அதேசமயம் இன ஒடுக்குமுறையை ஒழிக்கின்ற ஜனநாயக அரசை கட்டியமைப்பதும் சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு ஒரு முன் நிபந்தனையாகும். உலகு தழுவிய சோசலிச வெற்றிக்குப் பிறகு வர்க்கங்கள் ஒழியும்போது அரசுகளும் ஆட்சிகளும் கூட ஒழிந்துவிடும். அப்போது தேசங்களும் கூட ஒழிந்துவிடும். அப்போது தேசங்களும் ஒழிந்து அனைத்து இனங்களும் சங்கமித்துவிடும். ஆனால் வர்க்கங்கள் ஒழியும்வரை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற முழுமையான ஜனநாயகம் ஓர் இடைப்பட்ட கட்டமாக உள்ளது. அதேபோல் இனங்கள் ஒழிவதற்கும் இன சமத்துவம் என்பது ஒரு இடைக்கட்டமாக உள்ளது. எனவே தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற இடைக்கட்டம் தேசங்களின் சமத்துவம் சுயநிர்ணய உரிமை இவற்றின் அடிப்படையில் நிறுவப்படுகிறது, நிறுவப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கும் தேசிய இனங்களுக்கு மிடையேயுள்ள முரண்பாடு அடிப்படையான முரண்பாடு என்பது பற்றியும் அடிப்படை முரண் பாடுகள் வர்க்க முரண்பாடுகளாக அப்படியே வெளிப்படாது என்பது பற்றியும்: முதலில் ஒரு பொருளின் வளர்ச்சியில் குறிப்பான முரண்பாட்டை எவ்வாறு பார்ப்பது என்பது பற்றியும் அடிப்படை முரண்பாடு என்பது என்ன, அதன் தன்மை முதன்மை முரண்பாடு என்பது என்ன. அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பவை பற்றியும் மாவோவின் ஆய்வு முறைகளை சுருக்கமாக பார்ப்போம். பின்னர் தேசிய இனப் பிரச்சனையை எத்தகைய முரண்பாட்டில் வைப்பது எனப்து பற்றியும் அதனை எவ்வாறு வர்க்க கண்ணோட்டத்தில் அணுகுவது என்பது பற்றியும் பார்ப்போம்:
முரண்பாட்டைப் பற்றி மாவோவின் ஆய்வு முறையிலிருந்து பெறப்படும் முடிவுகள்:
1. ஒவ்வொரு இயக்க வடிவத்திற்கும் அதற்கேயுரிய குறிப்பான முரண்பாடு தான் ஒரு பொருளை வேறொன்றிலிருந்து வேறுபடுத்தி காட்டும் சாரமாக உள்ளது. அவ்வாறு வெவ்வேறு இயக்க வடிவத்தின் குறிப்பான முரண்பாட்டைப் பற்றி ஆய்வதே வெவ்வேறு விஞ்ஞானமாகும். சமூக விஞ்ஞானத்தின் குறிப்பான ஆய்வுக்குறிய குறிப்பான முரண்பாடு உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடும் வர்க்கங்கள் வர்க்க போராட்டம் இவையுமே ஆகும். அதாவது சமூக வளர்ச்சியின் சாரமாக அமைந்திருப்பவை, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமுள்ள முரண்பாடும் வர்க்கங்களூக்கிடையேயுள்ள முரண்பாடும் (முரண்பாடு பற்றி)
2. ஒரு சமூக புரட்சி போன்ற சிக்கலான நீணட நிகழ்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றுள் அந்நிகழ்ச்சிப்போக்கின் சாரத்தை தீர்மானிப்பவையே அந்நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையான முரண்பாடாக விளங்குகின்றன. (உ.ம) சீன பூர்ஷ்வா ஜனநாயக புரட்சியில் ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்கும் உள்ள முரண்பாடு, நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்கள் திரளுக்கும் உள்ள முரண்பாடு, ஆளும் வர்க்கத்திற்கிடையே உள்ள முரண்பாடு இன்னும் இதுபோன்ற பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்கும் உள்ள முரண்பாடும், நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்கள் திரளுக்குமுள்ள முரண்பாடும் அடிப்படையான முரண்பாடாக விளங்குகின்றன. (Basic) (சீன புரட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும்).
3. ஒரு நிகழ்ச்சிப்போக்கு முடிவுக்கு வரும்வரை அந்நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையான முரண்பாடும் அதனால் தீர்மானிக்கப்படுகின்ற அப்போக்கின் சாரமும் மாறுவதில்லை. அது மாறாமலிருக்கும் போதே அந்நிகழ்ச்சிப் போக்கு பல உள்கட்டங்களை கொண்டதாக இருக்கிறது.
4. உள்கட்டங்கள் ஏற்படுவதற்குக் காரணம் அந்நிகழ்ச்சிப் போக்கில் காணப்படும் பல பெரிய, மற்றும் சிறிய முக்கிய முரண்பாடுகளில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு நேரத்தில் முதன்மையாகிறது. வேறொன்று தற்காலிகமாகத் தீர்க்கப்படுகின்றது. அல்லது தணிக்கப்படுகின்றது அல்லது இன்னும்மொன்று புதிதாகத் தோன்றுகின்றது.
5. இவ்வாறு முக்கிய முரண்பாடுகளில் ஒன்று ஒரு நேரத்தில் முதன்மையாவது 4 விதங்களில் நடந்தேறுகிறது.அ) அடிப்படையான முரண்பாட்டில் ஒன்று முதன்மையாக விளங்குவது.(உ.ம்) நிலப்பிபிரபுத்துவத்திற்கும் மக்கள் திரளுக்குமுள்ள முரண்பாடுஆ) அடிப்படையான முரண்பாட்டில் ஒன்று குறிப்பான கூர்மையான வடிவத்தில் முதன்மையாவது, சீனா மீது ஜப்பான் ஆக்கிரமித்தபின் (உ.ம்) பொதுப்படையாக ஏகாதிபத்தியத்திற்கும் சீன மக்களுக்குமுள்ள முரண்பாடு குறிப்பாக ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்குமுள்ள முரண்பாடு என்ற வடிவத்தில் முதன்மையானது போல,இ) ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியம் உள்நாட்டு பிற்போக்காளர்கள் இவை ஒரு புறமும் பரந்துபட்ட மக்கள்திரள் மறுபுறமும் என்ற வடிவத்திலும் பல முக்கிய முரண்பாடுகளின் கூட்டுத்தொகுப்பு கூடவும் முதன்மையாக வரும்.(உ.ம்) 1917ல் சியாங்கைஷேக் ஏகாதிபத்திய திட்டப்படி புரட்சிகர சக்திகள் மீது நேரடியுத்தம் தொடங்கியதுபோல, 1927 ரஷ்ய புரட்சிக்கு பின் சோவியத் அரசை கவிழ்க்க பல ஏகாதிபத்தியங்களும் உள்நாட்டு பிற்போக்கு கும்பல்களும் ராணுவ தலையீட்டை செய்ததுபோல.
ஈ) அடிப்படையேயில்லாத முக்கிய முரண்பாடுகூட முதன்மையாக வரும்.(உ.ம்) சீனாவில் யுத்தபிரபுக்களுக்கிடையேயான யுத்தம், உலகளவில் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான யுத்தம்.
தேசிய இனப்பிரச்சனையை எந்த இனத்தில் வகைப்படுத்துவது? இவைகளையும் இவைபோன்ற மற்ற வாதங்களையும் சோதித்துப் பார்ப்பதற்கு சிறந்தவழி இப்பிரச்சனை பற்றி சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களின் கொள்கையை ஆராய்வதுதான். மார்க்சிய வாதத்துக்கு இந்த சோதனை கட்டாயமானது புறநிலையை எடுத்துக்கொண்டு நாம் பிரச்சனையை அணுகவேண்டும், இவ்விஷயத்தில் வர்க்கங்களுக்கிடையேயான உறவுகளை நாம் ஆராய வேண்டும் என லெனின் தேசிய இனப் பிரச்சனையை அணுக வேண்டிய வரம்பு பற்றி பேசும்போது குறிப்பிடுகிறார்.(தேசியங்களின் சுயநிர்ணய உரிமை) இந்தியாவில் இன ஒடுக்கலின் வர்க்கத்தன்மை என்ன? இன ஒடுக்கல் ஏன் தோன்றுகிறது? இங்குள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்கிடுவதற்காக தேசங்கள் உருவாக்கம் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் எல்லா ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அக்கறையுள்ளது. இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடமாக ஆக்கியதே ஒரு ஏகாதிபத்திய ஆட்சிதான். இந்தியாவிலுள்ள அனைத்து இனங்களையும் சுரண்டுவதற்காக அவற்றை அடக்கி ஒடுக்கி வைக்கவேண்டிய தேவை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுகிறது. இது சிறுபான்மை இனங்கள் மீது பெரும்பான்மை இனத்தை ஏவி விடுவதன் மூலமே சிறப்பாக செய்யமுடியும். பெருதரகு முதலாளித்துவ வர்க்கங்கள் இந்தியாவின் சந்தை முழுவதையும் தமது கையில் வைத்திருப்பதற்காகவும் பிற தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுக்கு சந்தை உறுதிப்படாமலும் அவற்றையும் சேர்த்து சுரண்டுவதற்காக இந்தி மொழி பேசும் இனம் தவிர்த்து பிற இனங்களின் உரிமைகளை நசுக்குகிறது. அந்த இனங்களின் சுதந்திரமான வளர்ச்சியைத் தடுக்கின்றது. நிலப்பிரபுத்துவ உறவுகள் கூட தேசங்கள் உருவாவதற்கு இடையூறாக உள்ளது. இவ்வாறு ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் தரகு முதலாளித்துவம் இம்மூன்றுமே தேசிய இன ஒடுக்குமுறைக்கு காரணிகளாக விளங்குகின்றன. இம்மூன்று சக்திகளுக்கும் அடிப்படையாக இருப்பது ஏகாதிபத்தியத்திற்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடு நிலபிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடு என்ற இரு முரண்பாடுகள் இவ்வாறு இம்மூன்று சக்திகளும் இரண்டு முரண்பாடுகளும் சேர்ந்து பரஸ்பர செயல்பாட்டினால் தேசிய இனப்பிரச்சனை தோன்றுகிறது. அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ நாட்டில் பல்வேறு முரண்பாடுகள் பரஸ்பர வினை புரிவதால் ஏற்படுகின்ற சிக்கலானத் தோற்றத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை தனியாக பகுத்தாயவும் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தாய்வதும், தொகுத்தாய்வதும் என்ற பார்வையில்லாததால்தான் அடிப்படை முரண்பாடுகளோ முதன்மை முரண்பாடோ வர்க்கங்களுக் கிடையேயுள்ள முரண்பாடுகளாக அப்படியே வெளிப்படாது என்ற இயக்க மறுப்பியல் கண்ணோட்டம் தோன்றுகின்றது. முரண்பாடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து சிக்கலாக தோன்றினாலும் அடிப்படை முரண்பாடும் முதன்மை முரண்பாடும் வர்க்கமுரண்பாடுகளே, ஒரு சமூகத்தின் முரண்பாடுகளை பார்ப்பது அதன் சாரத்தை தீர்மானிக்கின்ற உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளுக்கிடையேயுள்ள முரண்பாடு, வர்க்கபோராட்டம் இவற்றை வைத்துத்தான் என்று மாவோ சிந்தனை நமக்கு புலப்படுத்துகின்றது. இந்தியாவில் தேசிய இன ஒடுக்கு முறையின் சாரம் என்ன? இந்தியாவை ஆளுகின்ற அரைக்காலனித்துவ அரை நிலப்பிரபுத்துவ அரசு தேசிய இனங்களுக்கு சமத்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கிறது. இதன் விளைவாக, இந்திமொழி பேசும் இனங்களைத் தவிர்த்த பிற இனங்கள் பல்வேறு வகையான இன ஒடுக்குமுறைகளுக்கு ஆட்படுகின்றன. அவற்றின் மொழி பண்பாட்டு மற்றும் பிற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு அவை இரட்டைத் தளைகளால் கட்டுண்டு கிடக்கின்றன. அதிகார வர்க்க தரகுபெரு முதலாளித்துவமே இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் அதன் எப்பகுதியிலும் முதலாளித்துவ வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான ஒரு சக்தியாக விளங்குகின்றது. இதன் விளைவாக இவ்வினங்களின் தொழில் வளர்ச்சியின் தேவைகள் பாதிக்கப்பட்டு உற்பத்தி சக்திகள் விலங்கிடப்படுவதற்கு ஓர் அடிப்படையான காரணமாக இருக்கிறது. இவ்வினங்களின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சி மேலும் குறுக்கப்படுகிறது. இவ்வாறு கூறுவதால் இந்தி மொழி பேசும் இனங்களின் உள்ளார்ந்த சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சி தங்குதடையின்றி நடை பெறுகிறது என பொருள் கொள்ளலாகாது. ஏனெனில் அவற்றின் வளர்ச்சியும் அரைக்காலனித்துவ அரைநிலப்பிரபுத்துவ அரசால் தடைப்படுகிறது. ஆயினும் இந்திமொழி பேசும் இனங்களைத் தவிர்த்த பிற இனங்கள் இரட்டைத் தளைகளால் கட்டுண்டுகிடப்பதால் அவற்றின் வளர்ச்சி மென்மேலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்திமொழி பேசும் இனங்களுக்குள்ளேயும் கூட வளர்ச்சி சம சீரற்றதாகவே இருக்கின்றது. இவையாவும் ஒரு அரைக்காலனித்துவ அரைநிலப்பிரபுத்துவ நாட்டின் அரசியல் பொருளாதார வளர்ச்சி சமசீரற்றதாயிருப்பதன் விளைவேயாகும். இவை ஏகாபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்தும் நிலப்பிரபுத்துவ ஆட்சியிலிருந்தும் தரகு முதலாளித்துவத்திலிருந்தும் தோன்றுகின்றன. எனவே தேசிய இனப் பிரச்சனைக்கு கூட அடிப்படையாக விளங்குவது வர்க்க முரண்பாடே தேசிய இனப் பிரச்சனையின் சாரம் எந்த வர்க்கங்கள் கையில் ஆட்சி அதிகாரம் உள்ளது. எவ்விதமான அரசுமுறை நிலவுகிறது, எந்தெந்த இனங்கள் ஒடுக்கப் படுகின்றன. சுரண்டப்படுகின்றன. என்ற பிரச்சனையே ஆகமுன்பு கூறியது போல இந்தியாவில் ஏகாதிபத்தியம் தரகு முதலாளித்துவ, நிலப் பிரபுத்துவம் ஆகிய மூன்று சக்திகளுக்கும் பரந்துபட்ட இந்திய மக்களுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் கூட்டு விளைவுகளின் ஒன்றுதான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இடையேயும், தேசிய இனங்களுக்கிடையேயும் தோன்றுகின்ற முரண்பாடு, இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் உள்ள, ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் உள்ள இரு அடிப்படை முரண்பாடுகளே. தொகுத்துக் கூறினால் மாவோவின் ஆய்வு முறைப்படி இந்திய சமூகத்தின் வளர்ச்சியின் சாரத்தை தீர்மானிக்கின்ற இரு முரண்பாடுகளான நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்கு முள்ள முரண்பாடும், ஏகாதிபத்தியத்திற்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடுமே இந்தியாவின் அடிப்படை முரண்பாடுகளாகும். ஒடுக்கும் தேசத்தின் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்குமுள்ள முரண்பாடு " என்ற திருச்சி பிரசுரம் வரையறுத்துள்ள முரண்பாடு ஒரு தனி வகைப்பட்ட வர்க்க முரண்பாடாக அமையாது; அடிப்படை முரண்பாடாகவோ அல்லது ஒரு குறிப்பான முரண்பாடாகவோ கருத முடியாது. இவ்வாறு சொல்லும்போது ஏகாதிபத்தியம் ஒரு தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்கள் என்ற கூட்டணிக்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடு கூர்மையான வடிவத்தில் ஒரு தேசிய இன முரண்பாடக்கூட கடுமையாக உருவெடுத்து முதன்மையாக வரக்கூடும் என்பதை மறுக்கவில்லை. அதேசமயம் அவ்வாறு முதன்மையாக வருவதென்பது குறிப்பான சூழ்நிலையை வைத்து முடிவுக்கு வரும் விஷயமே தவிர அக்கட்டத்தில் வருமென்றோ அல்லது கட்டாயம் வந்தே தீருமென்றோ ஆரூடம் கூறமுடியாது. அத்துடன் மாவோவின் ஆய்வுமுறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றோர் விஷயம் புதிய ஜனநாயகப்புரட்சி என்பது ஒரே நிகழ்ச்சிப்போக்கு. அது ஒரு புரட்சியின் கட்டம். அதாவது. இக்கட்டம் முடியும் வரைக்கும் அதன் சாரத்தை தீர்மானிக்கின்ற அடிப்படை முரண்பாடுகள் தீருவதில்லை. இதில் பல உயர்கட்டங்கள் இருக்கலாம். அக்கட்டங்களின்போது பல புதிய முரண்பாடுகள் உதிக்கலாம், மறையலாம். முதன்மை அடையலாம் ஆயின் அந்நிகழ்ச்சிப்போக்கின் சாரம் அக்கட்டம் முழுவதும் மாறுவதில்லை. இவ்வாறு பார்காமல் அடிப்படை முரண்பாடுகளைத் தனித்தனியாகவும் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு முரண்பாடு தீர்க்கப்படுவதாகவும். அதாவது ஒவ்வொன்றிற்கும் ஒரு புரட்சி நடத்த வேண்டும் என்று பார்ப்பது இயக்கவியல் சிந்தனையல்ல. ஏகாதிபத்திய வல்லரசுகளையோ ஏகாதிபத்திய படைகளையோ நேரடியாக எதிர்த்து நின்றால்தான் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகும் என்று நினைகின்ற அரைவேக்காடு மார்க்சிய லெனினியவாதிகள் உண்மைதான்!, உலகில் எந்தமூலையில் நடக்கும் புரட்சிகர போராட்டங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள்தான் அவை ஏகாதிபத்திய அமைப்புகெதிரான போராட்டங்களாக இருக்கின்றனவா என்ற அளவுகோல்தான் அவற்றை புரட்சிகர போராட்டம் என்பதை சோதிப்பதற்கான அளவுகோலாகும். அதேசமயம் ஒரு நாட்டை ஏகாதிபத்தியம் மறைமுகமாக ஆளுகின்றதா அல்லது நேரடியாகவோ ஆக்கிரமிப்பு மூலமோ ஆளுகின்றதா என்ற வேறுபாடு பாட்டாளி வர்க்க கட்சியில் செயல்தந்திரத்தின் எம்மாறுதலையும் கொண்டுவராதா? ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட நாட்டை நேரடியாக ஆளும்போதோ இராணுவத்தை அனுப்பும்போதோ அந்த குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கும் அந்த குறிப்பிட்ட நாட்டு மக்களுக்கும் உள்ள முரண்பாடு முதன்மையாகிறது. பிற ஏகாதிபத்தியங்களுக்கும், அந்நாட்டு மக்களுக்குமுள்ள முரண்பாடுகளும் பிற உள்நாட்டு முரண்பாடுகளும், இரண்டாம் நிலையடைகின்றன, அப்போதுகூட ஒரு இனப்பிரிவினை அல்லது அனைத்து இனங்களும் தனித்தனியே பிரிதல் என்பது கட்டாயமாக புரட்சிகர முழக்கமாக இருந்தாக வேண்டுமென்பதில்லை. அம்முழக்கம் பிற ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியாக கூட இருக்கும். ஏகாதிபத்தியம் மறைமுகமாக ஆளும்போது உள்நாட்டுப் பிற போக்கிற்கும், மக்களுக்குமுள்ள முரண்பாடு முதன்மையாகின்றது. இப்போதுகூட எல்லா சூழ்நிலைகளிலும் பிரிவினை என்ற முழுக்கம் புரட்சிகரமான முழக்கம் என்று சொல்ல முடியாது. இதை பார்க்க மறுப்பது இந்தியா போன்ற நாடுகளில் தற்போது முதன்மையாக உள்ள நிலப்பிரபுத்துவத்திற்கும் இந்தியமக்களுக்குமான முரண்பாட்டை கூர்மைப் படுத்துவதுதான் அதாவது விவசாயப் புரட்சியை முன் எடுத்து செல்வதுதான் தற்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு பணியாகும் என்பதை பார்க்க மறுப்பதாகும். இது விவசாயப்புரட்சியை சீர்குலைத்துவிடும் இப்பிரசுரத்தில் விவசாயப்புரட்சி புறகணிக்கப்படுவதை பற்றி மேலும் பிறகு பார்ப்போம். இவையே திருச்சி பிரசுரத்தில் காணப்படும் முக்கியமான தவறுகள் இவையெனில் பிரசுர நெடுகிலும் ஏராளமான மார்க்சிய லெனினியத்தின் ஆய்வு முறைக்கு விரோதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். இலங்கையில் இன்றுள்ள சூழ்நிலையில் லெனினிய அணுகுமுறைப்படி ஆய்வு செய்து தமிழீழக் கோரிக்கை சரியானது என நமது கட்சி ஆதரிக்கிறது. ஆனால் திருச்சி பிரசுரத்தில் ஸ்தூலமான ஆய்விலிருந்து தொடங்காமல் பிரிவினைதான் உலக பொது விதி என்ற நோக்கில் இப்பிரச்சனை அனுகப் பட்டுள்ளது. அதே சமயம் சிங்கள இன உழைக்கும் மக்களிடையே சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள கூடிய இயக்கம் தோன்றினால் ஒன்றுபட்டு போராட வாய்ப்பு ஏற்பட்டால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய ஜனநாயக அரசை நிறுவ போராட வேண்டும் என்ற நிலையெடுப்போம் இக்கண்ணோட்டம் அப்பிரசுரத்தில் இல்லவேயில்லை. சிங்களவர்க்கும் தமிழருக்கும் தற்போதைக்கு ஒற்றுமைக்கு வாய்ப்பில்லையெனினும் அவர்களை ஒன்றுபடுத்துவது பற்றி எந்த சிந்தனையுமே பிரசுரத்தில் காணப்படவில்லை. இலங்கை வரலாற்றைக் கூறும் போது எவ்வாறு ஆங்கில ஏகாதிபத்தியம் திட்டமிட்டு தமிழர் சிங்களவர் இனமோதல் ஏற்படுத்தினான் என்பதுபற்றி பிரசுரம் கூறவில்லை. அத்துடன் தற்போதைய ஈழத்தமிழ் தேசிய வாதத்தின் குறுகிய வெறி சந்தர்ப்பவாத சரணாகதி வாதங்களை இதில் அம்பலப்படுத்தவில்லை. அடுத்து இந்தியாவை பற்றி பேசும்போது இந்திய ஒடுக்குமுறை அரசுக்கும் தேசிய இனங்களுக்குமிடையேயான அடிப்படை முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகிறது. எந்த எல்லைக்குள் உலக ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கையும் ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியான தரகு முதலாளிய நிலவுடமையரின் செல்வாக்கையும் வீழ்த்தமுடியுமோ அந்த எல்லைகளுக் குள்ளேயே புரட்சிகர போராட்டத்திற்கான அணிகளை திரட்டுவதும் இயக்கத்தை கட்டுவதும் உடனடித் தேவையாகின்றது எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியே பிரிவதற்கான போராட்டம் தொடுப்பது உடனடி தேவை. ஒரே வரலாற்று கட்டத்திலுள்ள இரு நாடுகளில் ஒரு நாட்டை இன்னொரு நாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் விசேஷ அம்சங்களை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் எனற லெனினிய அணுகுமுறை இது விஷயத்தில் கைவிடப்பட்டு விட்டது. இவர்களுக்குத்தான் தனித்தனியே பிரிவது என்பது ஏகாதிபத்திய சகாப்தத்தின் பொதுவிதியாயிற்றே. இந்தியா ஆளும் வர்க்கங்களைப் பற்றி குறிப்பிடுபோது இந்தியும் அதற்கு உறவுடைய மொழிகளையும் பேசிவருகின்ற இனங்களை சேர்ந்த நிலவுடமையர்கள் வர்த்தகர்கள் வங்கித் தொழில் செய்வோர் ஆகியோரையும் சிறுமுதலாளி வர்க்கத்தையும் சேர்த்துக் கொண்டு இத்தரகு முதலாளிவர்க்கம் ஆண்டுவருகிறது. இந்தியாவை ஆளுகின்ற தரகு முதலாளிய நிலவுடைமை வர்க்கங்கள் எல்லா தேசிய இனங்களிலிருந்தும் வந்தவர்கள் என்பதையும் ஆனால் இவர்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகள் வடநாட்டு குஜராத்தி, மார்வாடி பணியா பார்சி தரகுமுதலாளிகளும் வடமாநில நிலக்கிழார்களும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் பொருளென்ன? தமிழ் நாட்டு பெரு நிலப்பிரபுக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதே வட இந்தியாவில் உள்ள சிறு முதலாளிவர்க்கத்துக்கு கூட ஆட்சியில் பங்கு உண்டாம் ஆனால் தென்னிந்திய நிலப்பிரபுக்களுக்கு இல்லையாம் இந்திய அரசு என்பது இந்தியா முழுவதுமுள்ள நிலவுடமை உறவுகளை பாதுகாத்து வருகின்ற அரசாகும். பெருநிலப்பிரபுக்களின் பிரதிநிதியாகாவும் செயல்படுகின்ற அரசாகும் என்பதை பார்க்க மறுப்பது தமிழின பெருநிலப்பிரபுக்களைக்கூட தேசிய இனப் பிரச்சனையில் இவர்கள் கூறும் தனி அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக் கேட்டுச் செல்லும் அதாவது அவர்கள் எதிரிகள் இல்லை. தேசிய விடுதலைக்கு அச்சாணி உழவர் புரட்சியே என இப்பிரசுரம் கூறிக் கொண்டாலும் அது நிலபிரபுத்துவ எதிர்ப்பு விவசாய புரட்சியை திருப்பவே உதவும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.
- ஏஎம்கே
மார்ச், 1984