கார்ப்பரேட் நலன்களுக்காக தூய்மைப் பணியாளர்களை மலக்குழிக்குள் புதைக்கும் 'சமூக அநீதி' ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுவோம்!

சமரன்

கார்ப்பரேட் நலன்களுக்காக தூய்மைப் பணியாளர்களை மலக்குழிக்குள் புதைக்கும் 'சமூக அநீதி' ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுவோம்!

பாசிச மோடி கும்பலின் ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு சேவை செய்யும் வகையில்  மாநகராட்சி, நகராட்சிகளை தனியார்மயப்படுத்தி தூய்மைப் பணியாளர்களை நவீன கொத்தடிமையாக்கி வருகிறது திமுகவின் கார்ப்பரேட் மாடல் ஆட்சி.

கொரோனா பெரும் தொற்று காலத்தில் தூய்மை பணியாளர்களின் காலை நக்கி பிழைத்த ஆட்சியாளர்கள் தூய்மைப் பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைளான பணி நிரந்தரம், வாரிசுப் பணி, பழைய ஓய்வூதிய திட்டம், எட்டு மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து வருகிறது.  மேலும் நகராட்சி, மாநகராட்சிகளை தனியார்மயப்படுத்தும் அரசாணை-152 உள்ளிட்ட அரசாணைகளை வெளியிட்டு 8கோடி மக்களின் உயிரோடு விளையாடுகிறது கார்ப்பரேட் நிறுவனங்களின் காலை நக்கிப் பிழைக்கும் திமுக அரசு.

இவ்வாறு மாநகராட்சி, நகராட்சி துறைகளை தனியார்மயப்படுத்துவது திமுக ஆட்சிக்கு புதிதல்ல, ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, தலைநகரை சிங்கார சென்னையாக மாற்றப் போகிறேன் எனக் கூறி சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஒனிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு திறந்து விட்டார்.  பின்பு 2007 முதல் ஸ்வட்சதா மற்றும் சீனிவாசா வேஸ்ட் மேனேஸ்டெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு திறந்துவிட்டதும் இதே திமுக அரசுதான்.

மேலும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்குவதும், அவர்களின் மாத சம்பளத்தை கூட முதல் தேதியிலிருந்து ஐந்தாம் தேதிக்குள் தராமல் இழுத்தடிப்பது அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் தருவது, மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமைகளும் வழங்காமல், குறைந்த கூலிக்கு அவர்களின் மேலான உழைப்பை ஒட்ட சுரண்டி, தினக்கூலிகளாக, வாரக் கூலிகளாக, நவீன கொத்தடிமைகளாக மாற்றுவதில் திமுகவும் அதிமுகவும் ஒன்றே ஆகும்.

தாராளமயக் கொள்கைகளும் தொழிலாளர் விரோதப் போக்குகளும்

காங்கிரஸ் - பாஜக ஆட்சியாளர்களால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமுல்படுத்தப்பட்டு வரும் அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கும் - பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்களுக்கும் சேவை செய்யும் தாராளமயக் கொள்கைகளால், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக அரசுத்துறையின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள், தனியார் முதலாளித்துவ நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல், அனைத்து துறைகளிலும் அவுட்சோர்சிங் என்னும் தனியார்மயம் புகுத்தப்பட்டு தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பாசிச மோடி கும்பலின் 9 ஆண்டுகால ஆட்சி என்பது, பொதுத்துறைகளை கார்ப்ரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதோடு அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வை பறிக்கின்ற துரோகத்தையும் செய்கிறது.

குறிப்பாக தொழிற்சாலை சட்டம் 1948, தொழில் பழகுநர் சட்டம் 1961, பெண்களை இரவுப் பணியில் அமர்த்தும் சட்டம், ஓவர்டைம் சட்டம், காண்டிராக்ட் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் விரோத பாசிச சட்டங்களை மோடி கும்பல் அமல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை பறிப்பது, 8 மணி நேர வேலை உரிமையை பறிப்பது 12 மணிநேர வேலை நேரமாக அதிகரிப்பது, நிரந்தர வேலையை பறிப்பது, காண்டிராக்ட் எனும் அவுட்சோர்சிங் முறையை புகுத்துவது, மேலும் 44 தொழிலாளர் சட்டதொகுப்பை நான்கு பிரிவாக மாற்றுவதன் மூலம், இந்திய தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை மலிவான விலைக்கு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் ஒட்ட சுரண்டுவதற்கும், தொழிலாளர்கள் நவீன கொத்தடிமையாக்குவதற்கும், பாசிச மோடி கும்பல் புதிய காலனிய தொழிலாளர் விரோத சட்டங்களை செயல்படுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 43 வது பிரிவு மக்கள் அடிப்படையான எல்லாமும் பெற்று கண்ணியமாக வாழ்வதற்கான அளவிற்கு வாழ்நிலை ஊதியம் தரப்பட வேண்டும் என்கிறது. ஆனால், மோடி அரசு இந்த தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தி கேடிலும் கேடான வாழ்நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.

மோடி கும்பலின் பாசிச போக்குகளுக்கு எதிராகவும், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், போராடுவதாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட திமுகவின் ஸ்டாலின் ஆட்சி புதிய ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் 84 வது பக்கத்தில் 309வது வாக்குறுதியை தந்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் எல்லா வேஷங்களையும் களைத்து விட்டு அம்மணமாக பாசிச மோடி கும்பலின் சிஷ்ய பிள்ளைதான் என்பதை நிரூபித்து விட்டது.

(மோடி) 8 அடி பாய்ந்தால் சிஷ்யன் (ஸ்டாலின்) 16 அடி பாய்கிறார்; 150 ஆண்டுகால தொழிலாளர் போராட்ட வரலாற்றை சிதைக்கும் வகையில் இரத்தம் சிந்தி பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை கருவறுக்கும் வகையில், 12 மணி நேரமாக மாற்றி உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்களுக்கு பாதபூஜை செய்கிறது திமுகவின் ஸ்டாலின் ஆட்சி. தற்போது உழைக்கும் வர்க்கங்களின் போராட்டத்தால் பின்வாங்கியுள்ளது

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தினால் நிதி செலவாகிறது, அரசிடம் நிதிப்பற்றாக்குறை உள்ளது என கூறி பாசிச பாஜகவின் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்களுக்கும், உலக வங்கியின் ஆணைகளுக்கும் சேவை செய்யும் வகையில் 2003 ஆம் ஆண்டு இது வரை வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு 2004 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் தேர்தல் காலங்களில் வாக்கு வங்கியை உருவாக்க தொழிலாளர்கள் மத்தியில் புதிய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருகின்றன. பின்பு நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்து தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றி வருகின்றன.

முதலில் ஓய்வூதியம் என்பது தொழிலாளர்களுக்கு அரசு தரும் கருணையோ, தானமோ அல்ல, அது தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமையாகும்.  காரணம் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட கூலியின் ஒரு பகுதியாகும்.  இதை ஆளும் ஆட்சியாளர்கள் மூடிமறைத்துவிட்டு அரசிடம் நிதிப்பற்றாக்குறை உள்ளது என திமுகவின் நிதி அமைச்சர் பழைய பல்லவியை திரும்பப் திரும்ப பாடுகிறார்.

உண்மையில் நிதிப்பற்றாக்குறைக்கு அடிப்படை காரணம் என்ன?  அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, தூய்மைப் பணியாளர்களுக்கு மற்றும் அரசுத்துறை பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதால் அரசுக்கு நிதிச்சுமையும் நிதிப்பற்றாக்குறையும் ஏற்படவில்லை.

மாறாக அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது என்ற பெயரிலும், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானி, அதானி உள்ளிட்ட தரகு முதலாளித்துவ கும்பல்களுக்கும், மக்களின் வரிப்பணங்களை ஊக்க தொகை என்றும், வரிச்சலுகை என்றும், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளை கொட்டி குவிப்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை தள்ளுபடி செய்வதும், மற்றும் நீரவ் மோடி, லலித் மோடி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆளும்வர்க்க கும்பல்களும் செய்யும் மாபெரும் ஊழல்களும், இவர்கள் பொதுச்சொத்துக்களை சூறையாடுவதுமே நிதிபற்றாக்குறைக்கு அடிப்படை காரணமாகும்.

இதை மத்திய-மாநில ஆட்சியாளர்கள் மூடிமறைத்துவிட்டு உழைக்கும் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சொற்ப செலவினங்களை மிகைப்படுத்திக் காட்டி, ஏதோ நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதாக திராவிட மாடல் ஆட்சி குமுறுகிறது. ஆனால், ஈழத்தமிழினத்தை பூண்டோடு அழிக்க துணை போன முனை மழுங்கிய பேனாவுக்கு - பழந்தமிழ் பெருமைப் பேசி இன்றைய தமிழர்களின் அவலத்தை மூடி மறைத்த நயவஞ்சக பேனாவுக்கு - தவறான கட்சியிலிருக்கும் சரியான மனிதர் (the right man in the wrong party) என்னும் பட்டம் கொடுத்து இந்துத்துவ பாசிச பாஜகவை தமிழகத்தில் கால் பதிக்க வைத்த சந்தர்ப்பவாத பேனாவுக்கு ரூபாய் 81கோடியில் சிலை வைக்க காசு இருக்கிறது. கள்ளச்சாராயம் இறப்பை மூடிமறைக்க தலைக்கு ரூபாய் 10லட்சம் இழப்பீடு தர காசு இருக்கிறது. உழைத்து ஓடாய் தேயும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தர நிதி இல்லை எனக் கூறுகிறது இந்த 'சமூக அநீதி' ஆட்சி.

அதேபோல, சிக்கன நடவடிக்கை நிதிப்பற்றாக்குறை பற்றி நாட்டு மக்களுக்கு வாய்கிழிய வகுப்பெடுக்கும் பாசிச மோடி கும்பல், புதிய காலனிய சுரண்டலுக்கும் அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கும் நாட்டின் வளங்களை திறந்து விடுவதற்காக வெளிநாட்டு பயணம் என்ற பெயரில் கடந்த 2 ஆண்டில் மட்டும் 30கோடி செலவு செய்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்காக 2700கோடி செலவு செய்துள்ளது. ஆனால் தொழிலாளி வர்க்கத்திற்கு ஓய்வூதியத்தை தர மறுக்கிறது.  

உண்டு கொழுக்கும் எம்.ல்.ஏ., எம்.பிக்கு சாகும் வரை பென்ஷன், உழைத்து ஓடாய் தேயும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் மறுப்பு

மக்களின் வரிப்பணங்களை சூறையாடி ஊழல் செய்யும் எம்.பி., எம்.ல்.ஏக்களுக்கு ஒரு முறை வெற்றி பெற்றால் போதும் சாகும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  எம்.பி., எம்.எல்.ஏ மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும், காலம் நேரம் பார்க்காமல் மழை, வெயில், புயல், பெருந்தொற்று காலங்களில் தன் உயிரையே துச்சமென நினைத்து சாக்கடைகளையும், குப்பைகளையும், சுத்தம் செய்து நாட்டின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இதே பணியை செய்யும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் மறுக்கப்டுகிறது.

எம்.எல்.ஏ.க்களின் சலுகைகள்

  • கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 25 ஆயிரம் வழங்கப்பட்டது.  நிதிபற்றாக்குறை பேசும் ஸ்டாலின் ஆட்சியில் 30 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.
  • சட்டப்பேரவை, மேலவை முன்னாள் குடும்ப உறுப்பினர்களின் ஓய்வூதியம் அதிமுக ஆட்சியில் ரூ 12,500 இருந்ததை தற்போது ரூ. 15 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.
  • முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மருத்துவப் படி ரூ. 50 ஆயிரத்தை ஸ்டாலின் ஆட்சியில் 75 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.
  • படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் சட்டப் பேரவை இன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மேலவை உறுப்பினர்கள் பயணம் செய்ய இலவச அனுமதி.
  • மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களில் எம்.எல்.ஏ.,க்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ பயணம் செய்ய இலவச அனுமதி வழங்கப்படுகின்றன.
  • எம்.எல்.ஏ., ஹாஸ்டல், வீட்டிற்கு இலவச தொலைபேசி இணைப்பு, அரசு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சை, வெளியில் வாங்கும் மருந்துகளுக்கு இலவசம்
  • சட்டசபை கூட்டத் தொடர் காலத்தில் எம்.எல்.ஏவுடன் செல்லும் குடும்பத்தினருக்கான ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்
  • மற்றும் தற்போது எம்.எல்.ஏ. சம்பளம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் ஆகும்.

எம்.பி.க்களின் சலுகைகள்

  • ஓர் எம்.பி.யின் மாதச் சம்பளம் பயணப்படி அலுவல் செலவு சேர்த்து 2019ம் ஆண்டிலேயே ரூ.1,45,000. ரூ30,000 வரை ஓய்வூதியம் இப்போது அது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேலும், பதவிக் காலத்தில் இலவச ரயில் பயணம், இலவச விமானப் பயணம், வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி, தொலைபேசி இணைப்பு முதலான சலுகைகள்.

மாநகராட்சி - நகராட்சி உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகைகள்

  • மாநகராட்சி மேயர்களுக்கு மாதம் ரூ.30,000
  • துணை மேயர்களுக்கு ரூ.15,000
  • மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு (கவுன்சிலர்) ரூ.10,000
  • நகராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ. 15,000
  • துணை தலைவர்களுக்கு ரூ.10,000
  • நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5000

என மதிப்பூதியம் வழங்கப்படும் என தற்போது திமுக அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மக்களின் சொத்துக்களை சூறையாடும், ஊழல் செய்யும், எம்.எல்.ஏ. எம்பிக்களுக்கும் மற்றும் அதிகார வர்க்கத்திற்கும், மாத ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பண பலன்களும் அவர்களின் கதவை தட்டுகிறது. ஆனால் நாள்தோறும் உழைத்து ஓடாய் தேயும் தூய்மைப் பணியாளக்ளுக்கு அவர்களது ஓய்வூதியம், பண பலன்கள் அனைத்தும் இவர்கள் செத்தாலும் சென்றடைவதில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி நகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளராக இருந்து நிரந்தர பணியாளராக மாறிய ஊழியர்களுக்கு பி.எப், சரண்டர் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்படும் தொகைகளுக்கு முறையான ரசீது மற்றும் கணக்கு வழக்கு காட்டுவதில்லை.

இவ்வாறு சேலம் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்களிடம் இருந்து கடந்த 6 ஆண்டுகளாக மாதம் ரூ. 6 ஆயிரமும், தொகுப்பூதிய பணியில் இருந்து நிரந்தர பணியாளராக (2004ல்) நியமிக்கப்பட்ட ஊழியர்கள்களிடம் இருந்து மாதம் 1000 முதல் 2000 வரையும், கடந்த 16 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளுக்கு எந்த கணக்கு வழக்கும் இல்லை.

இவர்களுக்கு எவ்வளவு சம்பளம், எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறது. எதற்காக பிடித்தம் செய்யப்டுகிறது என்பதை பற்றி இது வரை முறையான அறிவிப்பு செய்யவில்லை. இதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.

மேலும் தூய்மைப் பணியாளர்கள் பணி ஓய்வு பெறும் போது, அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, மாத ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பணி கொடைகளும் லஞ்சம் இல்லாமலும், இடைத்தரகர்கள் இல்லாமலும், கந்துவட்டி கும்பலிடம் சிக்காமலும் ஒரு ரூபாய் கூட பெற முடியாது. இது மாநகராட்சிகளில் எழுதப்படாத சட்டமாக ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. பல தூய்மைப் பணியாளர்கள் இவர்களது கோரப் படியில் சிக்கி மரணமடைவதும் நடந்து வருகிறது.

குறிப்பாக 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அவர்களது பணி கொடை 5 லட்சம் என்றால், அந்த தொகையை பெறுவதற்கு 4 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை உருண்டோவிடுகிறது. அந்த தொகையை பெறுவதற்கு ஒவ்வொரு (பில்லுக்கும்) தொகைக்கும் இடைதரகர்களுக்கு கமிஷன் தர வேண்டும். அவர்களது பணி கொடை 5 லட்சம் வாங்குவதற்குள் சுமார்

ரூ. 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். இதுதான் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் அவலமாகும்.

ஆனால் எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் யாராவது தனது ஓய்வுக்கால பணிகொடைகளை இப்படி புரோக்கர்கள் மூலம் வாங்குவார்களா? அல்லது இப்படிதான் வாங்கி வருகிறார்களா? தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை தொடர்கின்றது?.

மோடி கும்பலின் தூய்மை இந்தியா திட்டமும் மலக்குழி மரணங்களும்

பாசிச மோடி கும்பல் தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்த நாட்டின் பிரதமரே குப்பைகளை சுத்தம் செய்வது போல ஊடகங்களும் ஆளும் வர்க்கங்களும் ஒரு பிம்பத்தை கட்டியமைத்தனர்.  ஆனால் தூய்மை இந்தியா, நவீன இந்தியா திட்டங்கள் மூலம் சுகாதார கேடுகளையும் மலக்குழி மரணங்களையும் தடுக்க முடிய வில்லை மாறாக அதிகரிக்கவே செய்கின்றன.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தரப்பட்ட தகவல்படி சுமார் ஒரு லட்சம் பேர் வரை மனித மலத்தை மனிதனே அள்ளும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும்.  இதில் 50 விழுக்காடு உபியில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்தல், மலக்கழிவு தொட்டிகளுக்குள் இறங்கி சுத்தம் செய்தல் ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு உயிர்பலியை அதிகரித்து கொண்டே இருக்கின்றன.  இவ்வாறு 2014 முதல் 2018 வரை மலக்குழி மரணங்களால் இந்தியாவில் 323 பேர் இறந்துள்ளதாகவும் இதில் தமிழகத்தில் மட்டும் 144 பேர் என ஆய்வுகள் கூறுகின்றனர். மேலும் ஒரு ஆய்வு கூறுவதாவது இந்தியா முழுவதும் தினந்தோறும் 3 அல்லது 4 பேர் இதே காரணத்திற்காக இறப்பதாக கூறுகிறது.

எத்தனையோ நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அணுப்பும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இன்னும் சாக்கடையை சுத்தம் செய்தல், மலக்குழியை சுத்தம் செய்தல், மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலை இந்தியாவில் மட்டும் இன்னும் நீடிக்கின்றன. இந்த கொடுமையான பணிகளை தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் மட்டுமே செய்யும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது.

எனவே கழிவு நீர், திடக்கழிவு, மலக்குழி மற்றும் பாதாள சாக்கடை மேலாண்மை உள்ளிட்ட துப்புரவு பணிகள் அனைத்திலும் நவீன எந்திரங்கள் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும்.  மேலும் தூய்மைப் பணியாளர்களை நாகரிகமாக நடத்துவது அனைத்து வகையான நவீன பாதுகாப்பு கருவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவை யாவும் போராடாமல் தீர்வுகாண முடியாது.

இவ்வாறு மனித கழிவை மனிதன் அள்ளும் அவலத்தை தடுக்கவும், அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், பொது கட்டிடங்கள், மருத்துவ மனைகள், ரயில் நிலையங்கள் இங்கெல்லாம் நவீனமய கழிவறைகள் கட்டியமைக்கப்பட வேண்டும் என 1949-ல் இருந்து எத்தனையோ பரிந்துரைகளும், கமிட்டிகளும் கட்டியமைக்கப்பட்டன,

அதில் கீழ்கண்ட பரிந்துரைகள் முக்கியமானவை

1)         1949-ல் உருவான பி.என் பார்வே கமிட்டி

2)         1955-ல் பேராசிரியர் மால்கானிகுழு

3)         1983-ல் என்.கே.பசு தலைமையில் குழு

4)         1993-ல் கொண்டு வந்த சட்டம்

5)         2013-ல் கொண்டு வந்த சட்டம்

இவை அனைத்தும் மனித கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை தடுக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை.

தொடரும் மலக்குழி மரணங்களின் அவலம்

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என மார்தட்டும் நாட்டில் -டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா, வளர்ச்சி இந்தியா என ஒப்பாரி வைக்கும் நாட்டில்- மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமை இன்னும் இந்தியாவில் நீடிக்கின்றன. இந்த இழிதொழிலில் ஈடுபடும் மக்களில் 98 விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 40 ஆண்டுகளில் மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு நடத்த தேசிய அளவில் ஏழு முறை ஆய்வுகள் செய்துள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் 1992ல் 5.58 லட்சம் பேரும், 2003ல் 6.76 லட்சம் பேரும், அதன் பிறகு 7.7 லட்சம் பேரும் என கூறியவர்கள், பின்பு 2013ல் வெறும் 13,639 பேர் தான் உள்ளனர் என குறைத்துக் காட்டி புள்ளிவிவர கணக்கில் மோசடி செய்தது தான் மிச்சமாகும். மேலும் இந்த ஆய்வுகள் மலம் அள்ளும் தொழிலாளர்கள் வாழ்வில் எந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக நரக வாழ்க்கையில்தான் தள்ளியது.

மனித மலத்தை மனிதர்களே அகற்றும் கொடுமைகளுக்கு எதிராகவும், மலக்குழி மரணங்களுக்கு எதிராகவும், தொடர் போராட்டம் நடத்திய தேசிய துப்புரவு பணியாளர் என்ற அமைப்பு கடந்த 2000 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் எதிரொலியாக கடந்த 2013ம் ஆண்டு மலம் அள்ளுவோர் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி கையால் மலம் அள்ளுவது 6.12.2013 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் இருந்து மீறப்பட்டால் பிரிவு8ன் படி இரண்டு ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என சட்டம் கூறுகிறது.

ஆனால் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் தந்துள்ள ஆய்வுகள் படி 1993 முதல் 2022 வரை 1054 பேர் மலக்குழி மரணங்கள் இறந்துள்ளனர். அதிலும் இளைஞர்கள் தான் அதிக அளவில் இறந்துள்ளனர் என கூறுகிறது. இன்னும் கணக்கில் வராத இறப்புகள் ஏராளமாகும்.

ஆனால் 2013ஆம் ஆண்டு கொண்டுவந்த மனிதக் கழிவை மனிதனே அகற்றும் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப் படவில்லை. அவர்களுக்கு உரிய இழப்பீட்டை முறையாக வழங்கியதும் இல்லை. இன்னும் கூறினால் மலக்குழி மரணங்களில் இந்தியாவிலேயே சமூகநீதி பேசும் தமிழ்நாடு தான் முதலிடம் பிடித்துள்ளது.

பாசிச மோடி கும்பல் கொண்டு வந்த தூய்மை இந்தியா வளர்ச்சி இந்தியா திட்டங்களும், இதற்கு சேவை செய்யும் திராவிட மாடல் திட்டங்களும் மனித மலத்தை மனிதனே தின்னும் அவலத்தையும் மனித சிறுநீரை மனிதனே குடிக்கும் அவலத்தையும், மலக்குழி மரணங்களையும் நீடிக்க செய்கின்றன.

தூய்மை பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உத்திரவாதப்படுத்தவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி, சுய உதவிக் குழுக்கள் மூலம் நீண்டகாலமாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தவும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை நிரந்தரப்படுத்தவும்,  கிராம ஊராட்சி பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக அறிவித்து பேரூராட்சி பணியாளர்களின் இணையான சம்பளத்தை பெற்றுத் தரவும், தூய்மை பணியாளர்கள் ஓய்வு பெறும்போது ரூ.50,000மும் குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.2000 வழங்க வேண்டுமென்ற அரசாணையை பிறப்பித்தும் அதை வழங்க மறுப்பதை எதிர்த்தும்,  மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சுகாதார பணியாளர்களை அதிகப்படுத்தவும் கோரி நடந்து வரும் தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டங்களை ஆதரிப்போம்.

எனவே தமிழகம் முழுவதும் கோவை, ஈரோடு, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களை வென்றெடுக்கவும்; மாநகராட்சி, நகராட்சி துறைகளைகளில் உள்ள தூய்மை பணி, மேற்பார்வை பணி, ஓட்டுநர், காவலர், குடிநீர் விநியோக பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் தனியார்மயப்படுத்தும்-கார்ப்பரேட்மயமாக்கும் திராவிட மாடலின் அரசாணை-152ஐ கிழித்தெறியவும்; திமுகவின் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தையும் நாட்டின் நெருக்கடிக்கு காரணமான தாராளமயக் கொள்கைகளையும், ஸ்மார்ட்சிட்டி-தூய்மை இந்தியா போன்ற பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோத புதிய காலனிய திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தையும் ஒன்றிணைப்பதன் மூலமே தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும்.

- சமரன்

(ஜூலை - ஆகஸ்ட் 2023 மாத இதழ்)