மார்க்சியமும் மொழியியலும் : ஒரு சுருக்கம்

பாரதி

மார்க்சியமும் மொழியியலும் : ஒரு சுருக்கம்

மொழியியல் குறித்து மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் தமிழில் வெளிவரும் தனிச்சிறப்பான நூலாகும் இது. மார்க்சிய ஆசான்களான லெனின், ஸ்டாலின் ஆகியோரது எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு செந்தளம் பதிப்பகத்தால் அழகுற தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. மொழியை இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் மிக அற்புதமாக இந்நூல் அணுகுகின்றது. மொழிக்கான தத்துவ வழிகாட்டுதலையும், அரசியல் வழிகாட்டுதலையும் தருகிறது இந்நூல்.

மொழி என்பது மூளையிலிருந்து பிறக்கின்றது. அது மக்களின் தொடர்புக்கான கருவியாக பணியாற்றுகின்றது. மொழி சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். சிந்தனை என்பது இயற்கைப் பொருள் மீதான புலனுணர்வுகளின் பிரதிபலிப்பு. எனவே மொழியையும் சிந்தனையையும் பிரிப்பது கருத்துமுதல்வாதமாகும். கருத்துமுதல்வாதிகளின் சிந்தனைகளும் கூட மூளை எனும் பொருளில் இருந்துதான் உதிக்கின்றன. “சிந்தனையின் நடைமுறை வடிவமே மொழி” என்கிறார் மார்க்ஸ். எனவேதான் ஒருவர் எந்த மொழியைக் கற்றாலும், பேசினாலும் தனது தாய் மொழியிலேயே புரிந்து கொள்கிறார்; சிந்திக்கிறார். 

மொழி என்பது அடிக்கட்டுமான அமைப்பைச் சார்ந்து எழுகிற மேற்கட்டுமானத்தின் பகுதி அல்ல. அதாவது அடிக்கட்டுமானம் மொழியைப் படைப்பதில்லை. ஏனெனில் மொழி சமூகம் முழுவதற்கும் பொதுவானது. மொழி சமூகம் உருவாகும் போதே உருவாகிறது; சமூகம் அழியும்போது மொழியும் அழிகிறது. இதன் மூலம், மொழியானது அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானது என்பதை அறியலாம். ஆதலால் அடிக்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற மாற்றம் மொழியின் அடிப்படைகளை மாற்றுவதில்லை; மாறாக மொழியின் சொற்தொகுதி மற்றும் இலக்கண அமைப்புகளில் மட்டுமே சிற்சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வேளாண்மயமாக்கல் காலகட்டத்தில் உருவான திருக்குறளுக்கும், களப்பிரர் ஆட்சி காலகட்டத்தில் உருவான ஐம்பெருங் காப்பியங்களுக்கும் இடையில் இலக்கண அமைப்பு மற்றும் சொற்தொகுதியில் மட்டுமே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும், மொழியின் அடிப்படையில் மாற்றம் ஏதும் நிகழவிலை என்பதையும் நாம் காணலாம். திருக்குறள் வெண்பாவாலும், ஐம்பெருங்காப்பியங்கள் தாழிசை, துறை மற்றும் விருத்தம் போன்ற பாவினங்களாலும் எழுதப்பட்டது;அவ்வளவே. பழைய மரபுக் கவிதைகளுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் தமிழ் இலக்கியத்தில் பெரும்பாய்ச்சல் நிகழ்த்திய பாரதியின் புதுக்கவிதைகளுக்கும், இன்றைய ஹைக்கூ கவிதைகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கூட உதாரணமாகக் கொள்ளலாம். இதையே தோழர் ஸ்டாலின், அக்டோபர் புரட்சிக்கு முன்பும் பின்பும் மொழியின் அடிப்படைகளில் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்பதை இந்நூலில் குறிப்பிடுகிறார். 

நூலினை பெற : மார்க்சியமும் மொழியியலும் வி.ஐ.லெனின், ஜே.வி.ஸ்டாலின் - தமிழில்: பாரதி

எனவே, சமூகத்தின் பொருளியல் உற்பத்தியின் அடிக்கட்டுமானத்திலிருந்து எழுகின்ற மதம், சாதி, நீதி, கலாச்சாரம் போன்றதல்ல மொழி என்பது தெளிவாகிறது. இதற்கு காரணம் மொழி வர்க்கச் சார்பற்றது; மொழி அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானது. இதைத்தான் தோழர் ஸ்டாலின் “மொழி என்பது எல்லா வர்க்கங்களாலும், எல்லா தலைமுறைகளாலும் உருவாக்கப்பட்டது” என்று சரியாக சுட்டிக் காட்டுகிறார். சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் இரண்டிற்குமே மொழி பொதுவானது. இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் மொழிப் பயன்பாடு மாறுமே ஒழிய, மொழி அன்று. சுரண்டும் வர்க்கம் எதிர்ப்புரட்சி என்று பேசினால், சுரண்டப்படும் வர்க்கம் புரட்சி என்று பேசும்;அவ்வளவே. எனவே மொழிக்கு வர்க்கத் தன்மை உண்டு என கருதுவதும், மொழியை மேற்கட்டுமானத்தோடு இணைத்துக் குழப்பிக் கொள்வதும் மார்க்சியத்திற்கு புறம்பானதும் மாபெரும் பிழையானதும் ஆகும். தோழர் ஸ்டாலின் “புதிய சோசலிச அமைப்பின் எழுச்சியால் அரசு, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய சில சொற்களில் மாற்றம் நிகழ்ந்ததே தவிர மொழியின் அடிப்படையில் ஏதும் மாற்றம் ஏற்படவில்லை” என்று எடுத்துக்காட்டுகிறார். நீர், நிலம், மீன், பறவை போன்ற பலசொற்கள் புரட்சிக்கு முன்பும் பின்பும் மாறாமல் தொடர்கின்றன என்று எளிமையாக விளக்குகிறார். 

ஆதலால், மொழியின் அஸ்திவாரமான சொற்தொகுதியும், இலக்கண அமைப்பும் மட்டுமே சமூக மாற்றங்களுக்கேற்ப சில மாறுதல்களுக்கு உட்படுகின்றனவே ஒழிய மொழியின் அடிப்படை மாறுவதில்லை; மாறவும் முடியாது. ஏனெனில் மொழிக்கு வர்க்கப் பேதமில்லை. இதன் அடிப்படையில் மொழியை உற்பத்திக் கருவியோடு ஒப்பிடுகிறார் ஸ்டாலின். மொழி மேற்கட்டுமானத்திலிருந்து அடிப்படையில் மாறுபட்டாலும் உற்பத்திக் கருவியிலிருந்து மாறுபடுவதில்லை. உற்பத்திக் கருவி எங்ஙணம் எல்லா வர்க்கங்களையும் சமமாக பாவிக்கின்றதோ, அங்ஙணமே மொழியும் எல்லா வர்க்கங்களையும் சமமாக பாவித்து பணியாற்றுகிறது. ஆனால் இதைத் தாண்டி உற்பத்திக் கருவிக்கும் மொழிக்கும் எவ்வித ஒற்றுமையுமில்லை என்கிறார் ஸ்டாலின். ஏனென்றால் மொழியானது சொற்தொகுதிகளையும், இலக்கண அமைப்புகளையும் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆக, மொழி சமூகம் முழுமைக்குமானது. இந்தப் பண்பிலிருந்து மொழி விலகுமானால் (அ) விலக்கி வைக்கப்படுமானால் மொழி அழியத் தொடங்குகிறது என்பது தெளிவு. 

மேற்கட்டுமானம் உற்பத்தியோடு நேரடியாக தொடர்புடையது அன்று; அது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. ஆனால் மொழி உற்பத்தியோடு நேரடியாக தொடர்புடையது. அதாவது மொழி அடிக்கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்காக காத்திருப்பதில்லை; மாறாக உற்பத்தியால் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப தன்னை பிரதிபலிக்கின்றது. விவசாயம், வர்த்தகம், தொழில்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப மொழியானது நேரடியாக தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. அவ்வாறு பிரதிபலிக்கவும், புதுப்பித்துக் கொள்ளவும் மொழி தவறுமானால் (அ) மொழியானது தடுக்கப்படுமானால் மொழி சீர்குலையும் என்பதை கூறத் தேவையில்லை. இது மொழி, மேற்கட்டுமானத்தின் ஓர் அம்சம் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

மொழிக்கு வர்க்கத்தன்மை உண்டு மற்றும் அது மேற்கட்டுமான அமைப்பின் ஒரு கூறு என்ற தவறான கருதுகோளுக்கு நாம் ஆட்படுவோமானால், குறிப்பிட்ட அந்த தேசிய இனத்திற்கு பொதுமொழி அவசியமற்றது என்ற அறிவுக்குப் புறம்பான முடிவிற்கு நாம் வரவேண்டியிருக்கும்என தோழர் ஸ்டாலின் எச்சரிக்கிறார். மொழி வர்க்கங்களிலிருந்து தனித்து நிற்பதில்லை. குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டும் சொந்தமானதும் இல்லை. அவ்வாறு மொழி வர்க்கங்களிலிருந்து தனித்து நிற்குமானால் அம்மொழி அழியத் தொடங்குகின்றது என்றே பொருள்படும். 

பூர்ஷ்வாக்கள் தங்களுக்கென சொந்தமான மொழியைக் கொண்டுள்ளனர்; அது பூர்ஷ்வாக்களால் உருவக்கப்பட்ட மொழி” என்ற மார்க்சின் மேற்கோள்களைக் காட்டி வாதிடுபவர்களுக்கு, ஸ்டாலின் “பூர்ஷ்வாக்கள் தங்களது வர்த்தக குறிச் சொற்களால் தேசிய மொழியை அசுப்படுத்துகிறார்கள்” என்ற பொருளில்தான் மார்க்ஸ் கூறினார் என்று மறுத்துரைக்கிறார். மேலும் “அரசியல் பொருளாதார பிடிப்பின் காரணமாக கிளை மொழிகள் (அ) குழு மொழிகள் தேசிய மொழியின் பிடிக்குள் வருகிறது” மற்றும் “ஒரே தேசிய மொழி அவசியம்; அதன் கீழ்ப்பட்ட வடிவங்கள்தான் கிளை மொழிகள்” என்ற மார்க்சின் கூற்றுகளை அவர்கள் மறந்துவிடுகிறார்கள் (அ) மறைத்துவிடுகிறார்கள் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார். இதே போன்று, “தொழிலாளர்களும், பூர்ஷ்வாக்களும் வெவ்வேறு கிளை மொழிகள் பேசுகிறார்கள்” என்ற எங்கெல்சின் கூற்றை பொதுமொழிக்குப் பொருத்தி மொழிக்கு வர்க்கத் தன்மை உண்டு எனப் புரட்டும் நபர்களுக்கு, ஸ்டாலின் “எங்கெல்ஸ் கூறியிருப்பது கிளை மொழிக்குத்தானே தவிர பொது மொழிக்கு அல்ல” என்று பதில் தருகிறார். மேலும் இதன் மூலம் அவர்கள் பொது தேசிய மொழியின் அவசியத்தை மறுப்பதையும் விமர்சனம் செய்கிறார் அவர். பூர்ஷ்வா வர்க்கச்சிந்தனைக்கும், பாட்டாளி வர்க்கச் சிந்தனைக்கும் சொற்கள்தான் மாறுகிறதே தவிர மொழி அல்ல என்பதை அறியலாம். பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கிய “பூர்ஷ்வா இரயிலை” அழித்துவிட்டு, ‘பாட்டாளி வர்க்க இரயிலை’ உருவாக்க வேண்டும் என்பது எந்தளவு முட்டாள்தனமானதோ அந்தளவிற்கு இது முட்டாள்தனமானது என்பது வெளிப்படை என எளிமையுடன் ஸ்டாலினால் விளக்கப்பட்டுள்ளது. 

பூர்ஷ்வா கலாச்சாரம், பாட்டாளி வர்க்க கலாச்சாரம் என கலாச்சாரத்திற்கு வர்க்கப் பண்பு உண்டு” எனும் லெனினின் மேற்கோளை, மொழிக்குப் பொருத்தி அதற்கும் வர்க்கத்தன்மை உண்டு என்று வாதிடுவதையும் ஸ்டாலின் கண்டிக்கிறார். ஆம், கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் எவ்வித தொடர்புமில்லை. தேசிய மொழி என்பது தேசியக் கலாச்சாரத்தின் ஒரு வடிவம் அவ்வளவே. அதுவே கலாச்சாரத்தின் முழுவடிவமல்ல. மொழி இரு வர்க்கங்களின் கலாச்சாரத்திற்கும் பொதுவாகவே சேவை செய்கின்றது. ஒரு தேசிய மொழி பூர்ஷ்வா கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி சோசலிசக் கலாச்சாரத்திற்கும் கூட சேவை செய்யும் என்பது அவர்களுக்கு தெரியாதா? என்று சரியான வினாவைத் தொடுக்கிறார் ஸ்டாலின். இந்தியாவில், வர்க்கத்தன்மை கொண்ட இந்தியக் கலாச்சாரத்தை, வர்க்கத் தன்மையற்ற மொழிக்குப் பொருத்தி, அரசியல் ஆதிக்கத்திற்காக இஸ்லாமியக் கலாச்சாரம் எனும் பெயரில் உருதும், ஆங்கிலேயக் கலாச்சாரம் எனும் பெயரில் ஆங்கிலமும், இந்தியக் கலாச்சாரம் எனும் பெயரில் இந்தி-சமஸ்கிருதமும், அரேபிய மற்றும் ஆங்கில காலனிய ஆதிக்கவாதிகளாலும், தேசிய இன ஒடுக்குமுறை இந்திய அரசாலும் திணிக்கப்பட்டன. இன்றைய நவீனகாலனிஆதிக்க ஆட்சியிலும் இதுபோன்ற திணிப்புகள் தொடர்கின்றன. 

சொற்தொகுதி மற்றும் இலக்கண அமைப்பின் வளம் மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. ஆனால் அவை மட்டுமே மொழி அல்ல” என்கிறார் ஸ்டாலின். பழைய சமூக அமைப்புகள் மாறி புதிய சமூக அமைப்புகள் தோன்றும்போது, அவை அம்மொழியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. அதாவது பழைய சமூகத்தின் இடிபாடுகளிலிருந்து புதுவகை சமூகம் கட்டப்படுவதைப் போல மொழி தனது பழைய அம்சங்களிலிருந்து-சொற்தொகுதி, இலக்கண அமைப்பிலிருந்து வளர்ந்து-புதுப்பிக்கப்படுகிறதே தவிர-புதிய மொழியொன்று கட்டப்படுவதில்லை (அ) உருவாவதில்லை. இவற்றை மறுக்கும் ‘திடீர் மொழிப் புரட்சி’ போன்ற வரையறையை தோழர் ஸ்டாலின் கண்டிக்கிறார். அவ்வாறு மொழியில் திடீர் புரட்சி ஏதும் நிகழ வாய்ப்பில்லை. பழையதிலிருந்து புதியது வளர்கிறது; பழைய மொழி அழிந்து புதுமொழி உருவாவதில்லை. ஏனெனில் சோசலிசப் புரட்சி மேலிருந்து நடத்தப்பட்ட-தொழிலாளிகள், விவசாயிகளைக் கொண்டு நடத்தப்பட்ட புரட்சியாகும் எனவும், இது மொழிக்குப் பொருந்தாது எனவும் இந்நூலில் உரைக்கிறார் ஸ்டாலின். 

காலனிய ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை நிலவுகின்ற அரசமைப்பில், மொழிக் கலப்பு மற்றும் மொழி ஆதிக்கம் நிகழ்கின்றது. ஆனால் அவை புதிய மொழியை உருவாக்குவதில்லை; மாறாக அத்தகைய கலப்பில் வெற்றியடையும் மொழி வாழும்; தோல்வியடையும் மொழி வீழும் என்பது தெளிவு. இதையே “மொழிக் கலப்பால் மூன்றாவது மொழி உருவாவதில்லை” என கூறுகிறார் ஸ்டாலின். மொழிக் கலப்பு என்பது மொழி ஆதிக்கத்திற்கே என்பதில் ஐயமில்லை. அவ்வாறே மொழியின் தேக்க நிலைக்கு அரசின் மொழிக் கொள்கையும் பிரதான பாத்திரம் வகிக்கின்றது. 

காலனிய ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை நிலவுகின்ற அரசமைப்பில் நிகழும் மொழிக் கலப்பில், புது மொழி உருவாகாது என விளக்கிய ஸ்டாலின், மொழியின் இயக்கவியல் வளர்ச்சி பண்புகளை உலக சோசலிசப் புரட்சிக்கு பிந்திய கட்டத்திற்குப் பொருத்தி, அக்கட்டத்தில் புதுமொழி உருவாகும் என இந்நூலில் சரியாக ஆராய்ந்துள்ளார். அவ்வகையான காலகட்டத்தில் ஏகாதிபத்தியம், சுரண்டும் வர்க்கங்கள், தேசிய இன ஒடுக்குமுறைகள் தூக்கியெறியப்படுகின்றன. பரஸ்பர நம்பிக்கையுடன் தேசங்களின் கூட்டுறவு உருவாக்கப்படுகின்றன. தேசிய மொழிகள் பரஸ்பரம் தங்களை செழுமைப்படுத்திக்கொள்ளும். நூற்றுக்கணக்கான தேசிய மொழிகளை மட்டுமே கொண்ட தேசங்களுக்கிடையே, நீண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரக் கூட்டுறவின் மூலம், அந்த நூற்றுக்கணக்கான மொழிகளிலிருந்து வளம்மிக்க ஒன்றுபட்ட பிராந்திய மொழிகள் முதலில் உருவாகும். இப்பிராந்திய மொழிகள் அனைத்தும் ஒரு சர்வதேச மொழியாகவோ, ஆங்கில மொழியாகவோ, ஜெர்மன் மொழியாகவோ இருக்காது; மாறாக தேசியப் பிராந்திய மொழிகளின் சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு புது மொழியாக அது இருக்கும் என்கிறார் அவர். அடுத்து, உலக கம்யூனிச சமூகத்தில்-வர்க்கமற்ற-அரசுகளற்ற-தேசங்களற்ற-உலகம் முழுதும் ஒரே கம்யூனாக இருக்கும் கட்டத்தில், இந்தப் பிராந்திய மொழிகளின் கூட்டிணைவில் உருவான அப்புது மொழி நிலைபெறும் என்பதை முன் உணரலாம். 

இந்நூலின் இன்னுமொரு சிறப்பம்சமாக மூலமொழிக் கொள்கை (அ) மொழிக் குடும்பக் கொள்கையை மறுக்கிறார் ஸ்டாலின். “ஸ்லாவிய நாட்டினங்களின் மொழியியல் உறவுகள் மறுக்க முடியாததும், வெளிப்படையான உண்மையும் ஆகும். எனவே இந்த நாட்டினங்களின் மொழியில் உள்ள ஒற்றுமை பற்றிய ஆராய்ச்சியானது, மொழியியல் ஆராய்ச்சிக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆனால் இதற்கும் மூலமொழிக் கொள்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனநான் கூறத்தேவை இல்லை” என்கிறார் ஸ்டாலின். மூலமொழிக் கொள்கை என்பது, ஒரு மொழிக் குடும்பமானது ஒரு பொதுவான, புராதன மூலமொழியில் இருந்துபிரிந்து உருவானகிளை மொழிகளை உள்ளடக்கியது எனும் இந்தோ-ஐரோப்பிய சிந்தனைப் பள்ளியின் கொள்கையைக் குறிக்கும். உதாரணமாக, நவீன இத்தாலிய, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீசிய, ருமேனிய மொழிகள் எல்லாம் இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த சகோதரிமொழிகள் ஆகும். ஆரம்பத்தில் இவை வேறுபட்ட கிளை மொழிகளாகவே இருந்தன. பெரும்பாலான நவீனகிளை மொழிகள் அல்லது மொழிகளின் மூலமொழி ஒன்று இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லாத போதும், இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள் அனுமானத்தின் அடிப்படையில் ஒரு மூலமொழியை உருவாக்கினார்கள். இவர்களது பிரதான நோக்கம் ஒலிமாற்றங்களின் விதிகளுக்கு விளக்கம் அளிக்கவசதியாக இருக்கும் என்பதாகும். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று நிரூபிக்க சான்றுகள் ஏதும் இல்லை “ என்கிறார் ஸ்டாலின். மனித குலத்தின் புராதன மொழியின் உச்சரிப்பு சொற்கள் சால், பெல், யோன், ரோஷ் ஆகிய அசை சொற்களின் அடிப்படையில் உருவாகியது என்ற N.Y.மார் எனும் மொழியியலாளரின் நான்கு பகுப்பாய்வுக் கொள்கையை கருத்துமுதல்வாதம் என விமர்சிக்கிறார். மேலும் மொழியின் அடிப்படை இலக்கணமுறையே என சொல்வது வடிவவாதம் (formalism) என்றும், அதுவே மொழியின் தேக்கத்திற்கு காரணம் என்ற அவரது வாதத்தையும் மறுக்கிறார் ஸ்டாலின். மொழியின் தேக்கத்திற்கு காரணம் அரசின் கொள்கையே அன்றி இந்த வடிவவாதம் அல்ல என்கிறார். ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சொற்தொகுதியும் இலக்கண அமைப்பும் உண்டு; அவற்றை ஒப்பீடு செய்து மொழிக்குடும்பம் என வரையறுப்பதையும் தவறு என இதன்மூலம் அறிகிறோம். அவ்வாறே இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் மற்றும் திராவிட மொழிக்குடும்பம் என வகை செய்து, அவற்றை ஒரு அம்சமாக, இனங்களுக்கு பொருத்தி ஆரிய-திராவிட (கருத்துமுதல்வாத) இனவியல் கோட்பாடு மார்க்ஸ் முல்லர் , வில்லியம் ஜோன்ஸ் எல்லீஸ், கால்டுவெல் போன்ற காலனி ஆதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டது. ஆகவே, இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் மற்றும் திராவிட மொழிக் குடும்பம் போன்ற மொழிக் குடும்ப கொள்கைகள், காலனி ஆதிக்கத்தை திசைதிருப்பவும்-அதை நியாயப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளை நிலைநிறுத்த, காலனியாதிக்க வாதிகளால் உருவாக்கப்பட்டதாகும். எல்லா மொழிகளும் மனித மூளையிலிருந்தே உருவானதால், மொழிகளுக்குள் ஒற்றுமைக் கூறுகள் இருப்பது இயல்பே; இந்த ஒற்றுமைக் கூறுகள்- பொதுவான அமைப்புக் கூறுகள்-உச்சரிப்புகள் இருப்பதாலேயே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி உருவாகும் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு புறம்பானதாகும். இவை காலனி ஆதிக்கத்திற்குசேவை செய்யும் இனவியல் - மொழியியல் கோட்பாடுகளேயாகும் என்பதில் ஐயமில்லை. 

அப்படியெனில் வர்க்கங்கள் மொழியின் வளர்ச்சியை பாதிப்பதில்லையா எனும் கேள்விக்கு ஸ்டாலினின் பதில் பின்வருமாறு:

மொழி வர்க்கச் சார்பற்றது எனினும், வர்க்கங்கள் தங்களுக்கே உரிய சொற்களையும் வெளிப்பாடுகளையும் மொழிக்குள் புகுத்துகின்றன; மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்கின்றன. எனினும், இவை பொது மொழியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் என்று பொருள் இல்லை. மற்றும் இவைமொழியில் மிகச் சிலவேயாகும். மீதமுள்ள ஏராளமான சொற்களும், வெளிப்பாடுகளும், அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானவை மட்டுமின்றி வர்க்கப் பண்பு கொண்ட அவ்வகை மிகச் சிலவேயான சொற்களும் கூட பொது மொழியின் இலக்கண விதிகளின் படியே பயன்படுத்தப்படுகின்றன”. 

தொகுத்துக் கூறுவதெனில், மொழிக்கான வரையறைகளை பின்வருமாறு பெறமுடிகிறது. 

1.    அடிக்கட்டுமானத்தின் மீதுள்ள மேற்கட்டுமானமல்ல மொழி. 

2.    மொழியையும் மேற்கட்டுமானத்தையும் இணைத்துக் குழப்புவது மிக மோசமான பிழையாகும். 

3.    ஒரு தேசத்தில் வர்க்க முரண்பாடுகள் நிலவுவதால், தேசிய மொழி என்பது தேசத்தின் நிலையான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 

4.    மொழியின் ஒற்றுமையும், அதன் தடையற்ற வளர்ச்சியுமே, நவீன முதலாளித்துவத்தின் பரந்த விரிவான வியாபாரத் தொடர்புக்கும், பல்வேறு வர்க்கங்களான மக்கள் தொகையை வகைப்படுத்துவதற்கும் மொழி அவசியமானதாகும். 

5.    மொழியானது தொடர்புச் சாதனம் என்பதால், அது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானது. 

6.    கிளை மொழிகளும், குழு மொழிகளும் அனைத்து மக்களுக்கும் பொதுவான மொழிக்குத் துணைபுரிகின்றன, அந்த பொது மொழியிலிருந்தே அவை பிறக்கின்றன. 

7.    மொழியின் வர்க்கத்தன்மை குறித்துப் பேசுவது மார்க்சியத்திற்கு புறம்பானது. 

8.    மொழி கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வழியாக விளங்குவதால், சமூகப் போராட்டத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஒரு கருவியாக விளங்குகிறது. 

9.    மொழிக் கலப்பு என்பது மொழியின் ஆதிக்கத்திற்கானது. இது தேசங்கள் உருவாகாத காலத்தில் நிகழ்கிறது. காலனிய-தேசிய இன ஒடுக்குமுறை நிகழ்கின்ற அரசுகளில் மொழியும் ஒடுக்கப்படுகின்றது. தேசங்கள் உருவாகும்போது மொழிக் கலப்பும், மொழித் திணிப்பும் தடுக்கப்பட்டு மொழி பாதுகாக்கப்படும். 

10.    தேசத்தில் இனக்கூறு மற்றும் சமுதாயக் கூறு என்ற இரண்டு கூறுகளும் அடங்கியுள்ளன. பொது மொழியும் பிரதேசமும் இனக்கூறுகளாகும்; இவற்றில் மொழியே பிரதானமானது. நிலப்பிரபுத்துவப் பொருளாதாரத்தை முழுமையாக வெற்றிகொள்ளும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு சமுதாயக் கூறு. 

11.    மூலமொழிக் கொள்கை (அ) மொழிக் குடும்பக் கொள்கை என்பது இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்திற்கு புறம்பானது. 

தோழர் லெனினின் இரு கட்டுரைககளும் பல தேசிய இனங்களைக் கொண்ட ஓர் அரசில், ஒரு குறிப்பிட்ட தேசிய மொழிக்கு சிறப்புரிமை வழங்குவதையும், கட்டாய அலுவல் மொழியை பலவந்தமாகத் திணிப்பதையும் மறுக்கிறது. தேசிய இனங்கள் நாட்டின் ஒரு முனையில் இருந்து, இன்னொரு முனைக்கு வர்த்தகம் மற்றும் வேலையின் பொருட்டு செல்வதால், அவர்கள் தாங்களாகவே பிற மொழியை கற்க நேரிடும். ஆகவே மொழியை பலவந்தமாகத் திணிப்பது தவறானது என்கிறார் லெனின். அவ்வாறு திணிப்பது (அ) பலவந்தப்படுத்துவது அந்தச் சிறப்புரிமை பெற்ற மொழி மீது வெறுப்பை உருவாக்குகிறது; சொந்த தேசிய மொழி மீதான உணர்வு-வெறியாகவும் மாறுகிறது

இந்திய அரசு, தேசிய இனங்களின் சிறைக் கூடமாக விளங்குகிறது. இந்தச் சிறைக் கூடத்தில் தேசிய மொழிகள் அனைத்தும் சிறைப்பட்டுள்ளன. ஆங்கிலமும்-இந்தியும் மட்டுமே சிறப்புரிமை பெற்ற ஆட்சி மொழிகளாக உள்ளன; இவை பலவந்தமாக பிற தேசிய மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளும் அழிவதற்கான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்தநிலை நீடிக்குமானால், தமிழ்மொழி இனி மெல்ல சாவதையும், மேற்கு மொழிகள் இங்கு மேன்மை பெறுவதையும் தடுக்க இயலாது. செம்மொழிக்கான அனைத்து தகுதியும் கொண்டது தமிழ்மொழி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் செம்மொழி அந்தஸ்தை பெற்றதினாலேயே தமிழ்மொழி வாழும் மொழி,வளரும் மொழி என்று பொருள் இல்லை. உண்மையில் தமிழ், சமூகத் தொடர்பற்ற மொழியாக மாறிவருவதால் அது செம்மொழிக்கான தகுதியை இழந்து வழக்கொழிந்த மொழியாகி வருவதை மூடிமறைக்கவே செம்மொழி விருது-மாநாடு நாடகங்கள் நடத்தப்பட்டன. யுனெஸ்கோ நிறுவனம், 21 ஆம் நூற்றாண்டு இறுதியில் உலகில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாகும் என்கிறது. இந்தியாவில் தேசிய மொழிகள் வழக்கொழிந்த மொழிகளாக அழிந்து வருவதற்கு, புதியகாலனிய மற்றும் தேசியஇன ஒடுக்குமுறை அரசமைப்பே காரணம் ஆகும்.

ஒரு மொழி வழக்கொழிந்து போவதற்கு பலகாரணங்கள் உண்டு. அரசியல் காரணமாக, பிற இனத்தவர் படையெடுப்பால் தாக்கப்பட்டு, நாடிழந்து அடிமைகளாய் வாழும் காலத்தில் வேறுவழியின்றி அந்நிய மொழித் திணிப்பினை ஏற்று மக்கள் தங்கள் மொழியினை காலப்போக்கில் கைவிட்டு புதிய மொழிகளை ஏற்கநேர்கிறது. கிரேக்கம், இலத்தீன் ஆகிய இருமொழிகளுமே வழக்கொழிந்து போவதற்கு அரசியல் முக்கிய காரணம். கிரேக்க நாடு அடிமைப்பட்டிருந்ததால் செம்மொழியான கிரேக்க மொழி அழியும் நிலைக்குச் சென்றது. ரோமப் பேரரசின் அழிவுக்குப் பின் பலதேசங்கள் விடுதலை பெற்றதால், செம்மொழியாக இருந்தாலும் தேசம் இல்லாததால் இலத்தீன் அழிந்தது. செம்மொழியான சமஸ்கிருதம், சமூகத் தொடர்பற்ற-வெறும் வேதமொழியாக-அர்ச்சனை மொழியாக இருப்பதால் அதுவும் அழிந்தது. செம்மொழிகளில் சீனம்மட்டுமே சோஷலிச புரட்சிக்குப் பின்புபாதுகாத்து வளர்க்கப்பட்டது. இலங்கையின் தமிழீழ மற்றும் மலையக மக்கள் உள்ளிட்ட, பிறநாடுகளுக்கு புலம்பெயர்ந்து உழலும் தமிழ் மக்களின் பண்பாட்டிலும், பயன்பாட்டிலும் தமிழ் நிலவுவது கேள்விக்குரியதே. சமீபத்தில்கூட, வெள்ளை மாளிகையில் அமெரிக்கவாழ் தமிழ் மாணவி ஒருவர், தாய் மொழியை மறந்து ஆங்கில மொழியை கற்பது சுமையாக உள்ளது என கண்ணீர் மல்க கவிபாடினார். 

நமது தமிழ்மொழி சோழர் ஆட்சியில் வடமொழி ஆதிக்கத்திற்கும், தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் போன்ற மொழிகளின் ஆதிக்கத்திற்கும் ஆட்பட்டன. பிறகு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் ஆங்கிலமொழி ஆதிக்கத்திற்கு வழிகோலியது. 1802 முதல், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களின் பொருட்டு, இந்தியப்பகுதிகளின் அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்ட ஒரு ஒற்றை அரசு வடிவம் உருவாக்கபட்டது. இந்த அனைத்திந்திய உருவாக்கம் இந்திமொழி ஆதிக்கத்தை நிறுவ தொடங்கியது. 1836 இல், இந்திய கல்வித்துறையின் தலைவராக இருந்த மெக்காலேவின் அடிமைக் கல்விமுறை கல்வித்துறையில் ஆங்கில ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. 1854 இல், சார்லஸ் வுட்ஸ் குழுவின் நவீன கல்விமுறைக்கான பரிந்துரையில், பயிற்று மொழியில் ஆங்கிலமொழி ஆதிக்கத்தை வலியுறுத்தியது. 1857க்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு காலனிய நாடாக, தனது நேரடி அதிகாரத்தின் கீழ்கொண்டு வந்தது. அன்றுமுதல் இன்று வரை, காலனிய ஆதிக்கமும், அதற்கான இந்த அனைத்திந்திய உருவாக்கமும், அனைத்து தேசிய இன-மொழி உரிமைகளை காலில் போட்டு நசுக்கி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தி வருகின்றது. 1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு, காலனி ஆதிக்கம் மறைமுகமாக, புதிய காலனிய வடிவில் இங்கு தொடர்கிறது. ஆங்கிலம்-இந்தி மட்டுமே ஆட்சி மொழிகளாக உள்ளன. பிற மொழிகள் அனைத்தும், அனைத்து துறைகளிலும் நசுக்கப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் புதிய காலனிய அடிமை நாடாகவும், இந்திய தரகு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசாகவும் உள்ளது. புதிய காலனிய நலன்களில் இருந்து ஆங்கிலமும், தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து இந்தி-சம்ஸ்கிருதமும் தமிழ்மொழி உள்ளிட்ட தேசிய மொழிகளை விழுங்கி வருகிறது. 

1990 களுக்கு பிறகு வந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலும், அதற்கு ஏதுவான கல்விமுறையும், பாடத்திட்டங்களும், அனைத்து இந்திய மொழிகளையும் ஒடுக்கிவருகின்றது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பிந்தைய கணிணி யுகத்திலும் அந்நியமொழி ஆதிக்கம் தொடர்கிறது. மத்திய அரசு தனது ஒருங்குறிக் கொள்கையால் (unicode policy) தமிழில் கிரந்தத்தையும், கிரந்தத்தில் தமிழையும் கலக்க முயற்சித்து வருகின்றது. அமெரிக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் ரோமன் வடிவ ஒருங்குறியால் மொழிகளை-தேசங்களை-நாடுகளை ஒடுக்கிவருகின்றன. இந்த அடிமைத்தனத்தை எதிர்த்து மாநில அரசுகள் பேசத் தயாரில்லை. ஏனெனில் அவைகளும் காலனி ஆதிக்க அடிமை அரசுகளே. இந்தி மொழி எதிர்ப்பில் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் ஆங்கிலமொழி ஆதிக்கத்தை நிறுவ அரும்பாடுபட்டு வருகின்றன. இந்தி, சம்ஸ்கிருத எதிர்ப்பு மட்டும் பேசி ஆங்கில மொழி எதிர்ப்பை கைவிடுகின்றன. இது ஒரு மொழி ஆதிக்கத்திற்கு எதிராக இன்னொரு மொழி ஆதிக்கத்தை ஆதரிப்பதாகும். இழிவான ஆங்கில மோகமாகும். காலனிய அடிமைத்தனமாகும். திராவிட கட்சிகளின் மொழிக் கொள்கையில் ஏற்பட்ட இந்த ஊனத்திற்கு பெரியார் பிரதான பங்கு வகித்தார். அவரே, பார்ப்பனிய எதிர்ப்பின் பேரால் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு பல்லக்கு தூக்குவது-இந்தி எதிர்ப்பின் பேரால் ஆங்கில மொழியை ஆதரிப்பது-குருகுலக் கல்வி எதிர்ப்பின் பேரால், மெக்காலே கல்வியை ஆதரிப்பது போன்ற கேடான ஏகாதிபத்திய வழிபாடுகளை துவக்கி வைத்தார். சட்டசபையில் ஆட்சி மொழி குறித்த விவாதத்தின் பொழுது, எந்த நிலையிலும் ஆங்கிலத்தை விட்டுவிடாதீர்கள் என அண்ணாதுரைக்கு ஓலை அனுப்பினார் பெரியார். அதன் தொடர்ச்சியாகவே அண்ணாதுரை “Hindi never; English ever” என்று ஆங்கில மொழி ஆதிக்கத்தை நிறுவ சபதமேற்றார். பிரிட்டிஷ் விசுவாசியான ‘குல்லுக பட்டர்’ ராஜாஜியின் முழக்கமும் இதுவே. இதனால் இன்றும் கூட ஆங்கில மொழியே அறிவிற்கு உகந்த மொழி எனும் ஆங்கில மோகம் விஷச்செடியாய் வளர்ந்து நிற்கிறது. ஆங்கிலம் உலக மொழி.எனவே அதை கற்பது வேலைவாய்ப்பிற்கு பயன்படும் என்ற மாயை நிலவுகிறது. 1950களில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தம் மாபெரும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியது. அதைவிட மோசமான நிலைமைகள் 2008 நெருக்கடியால் ஏற்பட்டு இன்னும் மீண்டபாடில்லை அந்த நாடுகள். உலகமய-தாராளமய-தனியார்மய கொள்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் இட ஒதுக்கீடு என அனைத்தையும் பலி கேட்கிறது. இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதையே வேலையாகக் கொண்டு அலைகின்றனர் என்கிறது ஒரு நாளிதழ். அவர்களின் எதிர்காலம் இருண்டு போயுள்ளது. இந்த நிலைமைகள் மொழிக்கும் வேலைவாய்ப்பிற்குமான தொடர்பை தோலுரிக்கின்றது. தாய் மொழியை கற்பதால் என்ன பலன் என கேட்பதும், தாயை நேசித்தால் என்ன பலன் என கேட்பதும் ஒன்றே. ஆங்கில மோகம் எனும் விஷச் செடியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டாமா? உலக மொழிகள் அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் தாய் மொழிதான் ஆட்சி மொழி-அறிவை வளர்க்கும் மொழி என உணர வேண்டாமா? பெற்ற தாயை நேசிக்காமல் பிறிதொரு பெண்ணை நேசித்து என்ன பயன்?  

ஆகவே இங்குள்ள கல்வி முறை, பயிற்று மொழி,பாடத்திட்டம் அனைத்தும் ஏகாதிபத்திய சார்பு உள்ளடக்கத்தைக் கொண்டதாகும். எனவே ஆங்கில மொழி ஆதிக்க உள்ளடக்கத்தை மாற்றாமல் வெறும் பயிற்று மொழி வடிவத்தை மட்டுமே மாற்றக்கோருவது, இந்த அமைப்பிற்குளாகவே மொழிக்கு விடிவுகிட்டும் எனும் மூட நம்பிக்கையாகும். குருகுலக்கல்வி பார்ப்பன-சத்ரியர்களின் ஏகபோகமாக இருந்தது: சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஏகலைவன்களின் விரல்கள் வெட்டப்பட்டன. பிறகு வந்த மெக்காலே கல்விமுறை, உள்ளத்தால் வெள்ளையனையும் உடலால் இந்தியனையும் கொண்ட அடிமை குமாஸ்தாக்களை உருவாக்கியது; ஏகலைவன்களின் மூளையை ஆங்கிலம் கொண்டு மழுங்கடித்தது. பிறகு ராஜீவ் ஆட்சியில் வந்தபுதிய கல்விக்கொள்கை பில்கேட்ஸுக்கான வேலையாட்களை உருவாக்கியது. இன்றைய மோடி ஆட்சி அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக்கொள்கையோ உள்ளத்தால் இந்துமத வெறியையும், உடலால் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கொத்தடிமை வேலை செய்ய, குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும் குருகுலக் கல்வி அவ்வளவுதான். “எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்” என்று ஆசைப்பட்ட பாரதியின் கனவு, “எங்கும் ஆங்கிலம்-எதிலும் ஆங்கிலம்” எனநொறுங்கி வருகின்றது. 

இவ்வாறு, தமிழும் பிற இந்திய மொழிகளும் வழக்கொழிந்த மொழிகளாகி வருகின்றன. மடியும் நிலைநோக்கி பயணிக்கின்றன. ஆறு செம்மொழிகளில் நான்கு மொழிகள் வழக்கொழிந்த மொழிகளாகிமடிந்தன. தமிழுக்கும் இக்கதிவர வேண்டுமா? அதை தடுக்கவே அரசியல் எனும் ஆயுதம் நமக்கு தேவைப்படுகின்றது. மொழிகள் வழக்கொழிந்துபோவதே மொழிகளின் மரணத்திற்கு காரணம் ஆகும். ஆகவே அரசியல் குறித்து பேசவேண்டியுள்ளது. 

மொழி என்பது அடிக்கட்டுமானமும் அல்ல, மேற்கட்டுமானமும் அல்ல. அது சமூகம் முழுமைக்கும் பொதுவானது” என்றால், மொழி ஏன்வழக்கொழிந்து மடிந்து போகின்றது ?

சமூகம் அழியும் போது,மொழி வழக்கொழிந்து பின்பு மடிகின்றது (When the society dies, the language dies); ஆனால், சமூகம் உயிரோடு இருக்கும்போது கூட மொழி வழக்கொழிந்து மடிந்து போகின்றது (When the society lives, the language dies). ஏன்? இதற்கு காலனி ஆதிக்கம் மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை தவிர வேறு காரணம் இருக்க இயலாது.

மொழி சமூகம் முழுமைக்குமானது. இந்தப்பண்பிலிருந்து மொழி விலகுமானால் (அ) விலக்கிவைக்கப்படுமானால் மொழி அழியத் தொடங்குகிறது” எனவும், “ஒருமொழி அழிவதற்கு அரசின் மொழிக்கொள்கை முக்கிய காரணம்” எனவும் இந்நூலில் ஸ்டாலின் கூறியதை இங்கு நினைவு கூர்வோம். 

தனது தாய்மொழியாம் தமிழ் மொழியை விலக்கிவைத்து (விலக்கிவைக்கப்பட்டு), அந்நிய மொழியான ஆங்கிலமே, தமிழ்ச் சமூகத்தின் சமூகவாழ்க்கை முழுவதிலும் நீக்கமற நிறையுமானால் தமிழ் வழக்கொழிந்து அழியும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?. அதாவது சமூக உற்பத்தி, வாணிபம், விஞ்ஞானம், கல்வி, கலை, வரலாறு, சமயம், பண்பாடு ஆகிய எல்லாத் துறைகளிலும் ஆங்கிலமே நீடிக்குமானால், ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, தொடர்பு மொழியாக ஆங்கிலமே இருக்குமானால் எங்ஙனம் தமிழ்மொழி வாழும்? வளரும்? இங்கு ‘ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்விவரை ஆங்கிலமே கற்பிக்கப்படுகிறது. தமிழ்வழி பள்ளிகள் பெயரளவிற்கு இருக்கின்றன. அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற சூழல் உள்ளது. அரசுத்துறையின் கீழ்நிலைப் பணியாளர்களை வேலைவாங்குவதற்காக மட்டும் தான் தமிழ் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது. பயிற்று மொழி என்பது கல்வியைக் கற்றுத்தரும் ஊடகம். கல்வியை உற்பத்தி முறையின் தேவையோடு தொடர்புபடுத்திக் காணவேண்டும். இன்றைய ஏகாதிபத்தியச் சார்பான உற்பத்திமுறைக்கு ஏற்பவே நம் கல்வியின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுடனான கூட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியே இன்றைக்கு இந்திய முதலாளிய உற்பத்தியையும் நிலப்பிரபுத்துவ உற்பத்தியையும் மேலாதிக்கம் செலுத்துகிறது. அதாவது அரசியல் பொருளாதாரம் பண்பாடு, சமூகம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் அந்நிய மொழி ஆதிக்கம் செலுத்தி, தாய்மொழி- தமிழ்மொழி நீக்கப்படுவதன் மூலம் மொழி வழக்கொழிகின்றது. இந்தியாவின் உற்பத்தியில் அந்நிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவரும் உற்பத்தி இன்று அதிகமாக பெருகியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயக் கொள்கையும், புதிய தொழில் கொள்கையும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததாக உள்ளன. இத்தகைய உற்பத்தி முறைக்கேற்ற கல்வியே கீழிருந்து மேல்நிலைவரை அமைக்கப்பட்டுள்ளது. இது மொழிவழியிலான புதியகாலனி ஆதிக்கமாகும். எனவே, ஒரு தேசிய இனத்தின் சமூக வாழ்க்கை முழுதும் அந்நிய மொழியில் நடைபெறுமானால் அந்த தேசிய இனத்தின் தாய்மொழி வழக்கொழிந்து மரணம் அடையும் என்பது தெளிவு.

இந்த அவல நிலையைப் போக்கிட வேண்டுமெனில், தமிழ் மொழி அந்நிய மொழி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். தமிழ்மொழி உள்ளிட்ட தேசிய மொழிகளை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பது என்பது தேசிய இனங்களின் விடுதலையோடு நேரடியாக தொடர்பு உடையதாகும். அதாவது பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசு மட்டுமே இந்த பணியை நிறைவேற்றும். அதற்கு, அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்தையும், அதற்கு பாதம்தாங்கும் இந்திய தரகு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க அரசாக உள்ள விரிவாதிக்க இந்திய அரசையும், புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் பலவந்தமாக தூக்கியெறிவது ஒன்றே வழியாகும். அத்தகு தேசங்களின் உருவாக்கமே மொழி ஆதிக்கங்களை அகற்றி, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மொழிகளை வளர்த்து பாதுகாக்கும். அத்தகைய அரசமைப்பில் தான், கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டத்தை, காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளவும், சிங்கமராட்டியர்தம் கவிதைக்கு சேரத்து தந்தங்களை பரிசளிக்கவும், வங்கத்திலே ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யவும் இயலும். அப்போது தான் அமுதையொத்த தமிழும், தேனைவிஞ்சும் அதன் இனிமையும் தமிழர்கள் அனைவரின் நாவிலும், வாழ்விலும் நின்று வளம்பெறும். 

மாறாக, பழந்தமிழ் பெருமை பேசுவதாலோ, செம்மொழிச் செருக்கில் சில்லிட்டுக் கிடப்பதாலோ நமது தாய்மொழி வளர்ச்சி பெறாது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் மாநில அரசின் இருமொழிக் கொள்கை எனும் தமிழின-மொழி விரோதக் கொள்கைகளை எதிர்த்து, “ஒரு மொழிக் கொள்கை- தாய் மொழிக் கல்வி “ எனும் இலக்கின் பொருட்டு திரட்சியாக சமர்புரிவது நமது பிரதான கடமையாகும். அத்தகைய கடமையை நிறைவேற்றுவதற்கு தத்துவ-அரசியல் வழிகாட்டியாக இந்நூல் திகழும் என்பது திண்ணம். மொழியியலாளர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வாசிக்க வேண்டிய நூலாகும் இது. சமகாலத்திற்கு தேவையான இந்த தனிச்சிறப்பான நூலை வெளியிடும் செந்தளம் பதிப்பகத்திற்கு நன்றியும் வாழ்த்தும்.

-- பாரதி

(செந்தளம் பதிப்பகம் வெளியிட்ட மார்க்சியமும் மொழியியலும் நூலின் முன்னுரையிலிருந்து)