சிந்தூர் நடவடிக்கை - மரண வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமே!
தி வயர் - தமிழில்: செந்தாரகை

மரண வியாபாரிகளுக்கு சிந்தூர் நடவடிக்கை ஒரு அவசரகால நெருக்கடியல்ல, அவர்கள் வியாபாரத்திற்கான வரப்பிரசாதமே
ஆபரேஷன் சிந்தூர் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்களில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாட்கள் இடைவிடாது ஏவுகணைகள், அதிநவீன குண்டுகள், ஆளில்லாப் போர் விமானங்கள் (ட்ரோன்கள்) எனப் பல போர் ஆயுதங்கள் மாறி மாறி குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், ஒரு கும்பல் மட்டும் சற்றும் கவலையின்றி இருந்தது; பெரும் இராணுவ கார்ப்பரேட் நிறுவன அதிபர்களும், ரே-பான் கண்ணாடி அணிந்துகொண்டு, மினுமினுப்பான உடையில் வலம் வரும் அவர்களின் பிரதிநிதிகளும்தான் எந்தவித கவலையுமின்றி காணப்பட்டனர்.
இந்தப் மரண வியாபாரிகளுக்கு, ஆபரேஷன் சிந்தூர் ஒரு தீவிர மோதலாக அல்லாமல், செல்வம் ஈட்டுவதற்கான அரியதொரு வாய்ப்பாகவே காட்சியளித்தது. இது, ஒரு நேரடி ஆயுதக் கண்காட்சியைப் போன்றிருந்தது. அங்கே, தானாக இயங்கும் தாக்குதல் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) வழிகாட்டலில் இயங்கும் குண்டுகள், ரகசியக் கண்காணிப்புக் கருவிகள் போன்ற புதிய, அதிநவீன இராணுவத் தொழில்நுட்பங்களை அரங்கேற்றவும் காட்சிப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.
ஒவ்வொரு துல்லியமான தாக்குதலும், வானில் வட்டமிட்ட ஒவ்வொரு ஆளில்லாப் போர் விமானமும், இலக்கை சரியாக குறிவைத்து பிடித்த ஒவ்வொரு ராடார் சாதனமும், தங்கள் ஆயுதங்கள் நிஜப் போரில் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதற்கு அசைக்க முடியாத சான்றாக அமைந்தன. இது புது டெல்லியில் உள்ள இராணுவ அதிகாரிகளையும், ஆயுதக் கொள்முதலுக்கான நிர்வாகக் குழுவினரை மட்டுமல்லாது, ராவல்பிண்டியில் உள்ளவர்களையும் பெருமளவில் கவர்ந்ததுடன், இரு நாடுகளையும் மேன்மேலும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடத் தூண்டியது.
கவனமாகத் திட்டமிட்டு, தொடுக்கப்பட்ட துல்லியத் தாக்குதல் போரில், அதன் இறுதி முடிவு ஒரு பொருட்டே அல்ல. தோல்வி குறித்த அச்சமே முக்கியமானது என்கிறார்கள். பிற நாடுகளின் மரண வியாபாரிகளும், அவர்களின் எண்ணற்ற முகவர்களும் இந்த அச்சத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து லாபம் ஈட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, போர் என்பது பணம் குவிக்கும் ஒரு வழி; எப்போதும் நியாய தர்மத்தைவிட லாபமே மேலானது.
ஆகவே, அச்சத்தில் உறைவதற்கோ அல்லது அமைதியை விரும்புவதற்கோ மாறாக, இந்த மரண வியாபாரிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்த முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போது, மேலும் பல ஆயுதங்களையும், மிக அதிநவீன இராணுவத் தொழில்நுட்பங்களையும் விற்பதற்கான புதிய ஒப்பந்தங்கள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்நோக்கி கொண்டாடினர்.
முக்கியமான ஆயுத மேம்பாடுகளுக்கும் நீண்டகால பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கும் தயாராகி வரும் இந்தியா
இந்தச் சூழல், பல இராணுவ தளவாடங்கள் மட்டுமல்லாது ஆயுதங்களின் இலாபகரமான மேம்பாடுகளுக்கும் நவீனமயமாக்கல்களுக்கும் வாய்ப்புகளையும் திறந்துவிட்டுள்ளது. இவை பெரும்பாலும், உபகரணங்களைத் தொடக்கத்தில் உற்பத்தி செய்த வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்பட்டன. இருப்பினும், கொள்ளை இலாபம் பெறுவதென்பது நீண்டகாலப் பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீரமைப்பு (MRO) ஒப்பந்தங்களைப் பெறுவதில்தான் இருந்தது. பாதுகாப்பு உபகரணங்களின் வாழ்நாள் முழுவதும் சீராகச் செயல்படுவதை உறுதிசெய்யும் நோக்கம் கொண்ட இந்த ஒப்பந்தங்கள், அதிக இலாபங்களை ஈட்டித் தருவதோடு பல ஆண்டுகள் நீடித்தன.
இந்த MRO ஒப்பந்தங்கள் ஒருமுறை செய்யப்படும் கொள்முதலுக்கு மாறாக ஆயுத சப்ளையர்கள் தங்கள் வாடிக்கையாளர் நாடுகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வகையில் நீண்டகால உறவுகளையும் உருவாக்கின. இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறையில் முன் நிச்சயிக்கப்பட்ட திருமண உறவுகளைப் போன்றவை; இதில் இரு தரப்பினரும் பல ஆண்டுகளுக்கு ஒருவரையொருவர் சார்ந்து பிணைக்கப்படுகின்றனர். அத்தகையதொரு ஆதரவு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சப்ளையர் அதிலிருந்து விலகுவது அரிது, மேலும் அவர்களின் கொள்ளை இலாபமும் உத்திரவாதமாக நீண்ட காலம் நீடித்தது.
மேம்பட்ட ஏவுகணைகள், நீண்ட நேரம் வானில் நிலைத்து, தேவைப்படும்போது துல்லியமாகத் தாக்கக்கூடிய நுண்ணறிவுத்திறன் கொண்ட ட்ரோன்கள், ஜிபிஎஸ் வழிகாட்டுதல் கொண்ட பீரங்கிக் குண்டுகள், மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஆயுதங்கள், இணையவழிப் போர், மின்னணுப் போர், மற்றும் ஆயுதப் படைகளுக்கான விநியோக கட்டமைப்புகள் தொடர்பான பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அவசரகால கொள்முதல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய அரசு 'ஆத்மநிர்பர்தா' அல்லது பாதுகாப்பு துறையில் தற்சார்பை தீவிரமாக ஊக்குவித்த போதிலும், பல தொழில்நுட்பங்கள், தளவாடங்கள் மற்றுப்பிற முக்கிய கூறுகள் இன்னும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளன. ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் தீர்மானகரமான வெற்றி ஏதும் உருவாகவில்லை என்று தெளிவான பிறகு, இந்திய இராணுவத்தை களத்தில் தயார் நிலையிலும், ஒருபடி முன்னிலையிலும் வைத்திருக்க இந்த இறக்குமதிகள் மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இதன் விளைவாக, இந்த அவசரகால இராணுவக் கொள்முதல் சுற்றுக்காக இந்தியா ரூ. 40,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இவை, பாதுகாப்பு அமைச்சகத்தால் (MoD) அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட, அவசரகாலக் கொள்முதல்-6 (EP-6) எனப்படும் ஒரு சிறப்பு அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும். இது இந்தியாவின் ஆறாவது அவசரகால கொள்முதலாகும். மே 2020 இல் லடாக்கில் சீன எல்லை மோதலுக்குப் பின்னர் நான்காவது அவசரகால கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது; காஷ்மீரில் போராட்டக்காரர்களை எதிர்கொள்ளத் தேவையான ஆயுதங்கள் கொள்முதலை விரைவுபடுத்துவதுவதற்கு ஐந்தாவது அவசரகால கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பெயரிடப்படாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான செய்திகளின்படி, ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது வெளிப்பட்ட இராணுவ ரீதியிலான பலவீனங்களை நிவர்த்தி செய்வதும், எதிர்காலப் பணிகளுக்கான தற்போதைய ஆயுதங்களையும் அமைப்புகளையும் மேம்படுத்துவதும் EP-6ன் முதன்மையான நோக்கம் என்று கூறப்படுகிறது. முந்தைய அவசரகால ஒப்புதல்களைப் போலவே, பாதுகாப்பு அமைச்சகத்தில் காணப்படும் வழக்கமான காலதாமதமதத்தை தவிர்ப்பதற்கு EP-6 வழிவகுக்கிறது. EP-6ன் கீழ், ஒவ்வொரு படைப்பிரிவும் தலா ரூ. 300 கோடி வரையிலான ஒப்பந்தங்களுக்கு விரைவான அங்கீகாரம் வழங்க இயலும். அனைத்துக் கொள்முதல்களும் 40 நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும், மேலும் ஆயுதங்கள் 12 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
இலாப நோக்குடன் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்த சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை
இராணுவத் தலைமையகத்திலும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலும் (MoD) உள்ள நிதி அதிகாரிகளின் ஒப்புதல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தேவைப்படும் என்ற போதிலும், தற்போதைய தேசியப் பாதுகாப்புச் சூழலில் இந்த ஒப்புதல்கள் பெரும்பாலும் சடங்கிற்கான ஒன்றாகவே கருதப்படுகின்றன என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மே 7 முதல் 10 தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இணையத் தேடல்களின் மூலம் கிடைத்த தகவல்கள், பிரான்ஸ், சீனா, இஸ்ரேல், துருக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல பெரும் இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்கள், சிந்தூர் நடவடிக்கையை அச்சத்துடன் அணுகுவதற்கு மாறாக, வணிக நலன்களுடன் கூர்ந்து கவனித்து வந்ததாக சுட்டிக்காட்டின. கார்ப்பேரட் வாரியக் கூட்ட அறைகளில், இந்த இராணுவ நடவடிக்கையை எதிர்கால விற்பனைக்கான ஒரு வரப்பிரசாதமாகவே அவர்கள் கருதினர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தாக்குதல் நடவடிக்கையின் நேரடி செயற்கைக்கோள் படங்கள் ஒளிபரப்பப்பட்ட போது, பல ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் வணிகத் தலைவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் தாக்குதல்களை மட்டும் பார்க்கவில்லை; மாறாக, களத்தில் தங்கள் ஆயுதங்கள் செயல்திறனை நிரூபித்ததால், தங்ளது நிறுவனப் பங்கு விலைகள் உயருவதையும் கண்டனர், இது எதிர்காலத்தில் அதிக விற்பனைக்கான நம்பிக்கையைத் தூண்டியது.
பிரான்சின் ஸ்கால்ப் ரக (SCALP) நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணைகளும், ஹேமர் (HAMMER) ரக துல்லியமாக வானிலிருந்து-தரைக்கு பாயும் ஏவுகணைகளும் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது. இவை மே 7 ஆம் தேதி காலை இந்திய விமானப்படையின் (IAF) ரஃபேல் போர் விமானங்களைக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்குவதற்கு பயன்பட்டன.
இஸ்ரேலியத் தயாரிப்பான க்ரிஸ்டல் மேஸ்-II (Crystal Maze-II) நடுத்தர தூர ஏவுகணைகளையும், ஹாரோப் (Harop) மற்றும் ஹெரான் (Heron) போன்ற ஆளில்லா விமானங்களையும் இந்தியா பயன்படுத்தியது. இந்த ஆயுதங்கள் எதிரித் தாக்குதல்களின் கீழ் அகப்பட்டபோதும் சிறப்பாகச் செயல்பட்டன. லாகூருக்கு அருகிலுள்ள சீனத் தயாரிப்பு HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை ஹாரோப் ஆளில்லா விமானம் வெற்றிகரமாக அழித்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பாராட்டியிருக்கின்றனர்.
இஸ்ரேலின் இராணுவத் தொழிற்சாலைகளால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் Su-30MKI மற்றும் MiG-29 ரகப் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ராம்பேஜ் ஏவுகணை குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்த மற்றொரு ஆயுதமாகும். இந்த ஏவுகணை குறித்து முன்னர் பொதுவெளியில் பரவலாக அறியப்படாத போதிலும், இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது பன்னாட்டு ஊடகங்களும் சிந்தூர் இராணுவ நடவடிக்கையில் திறம்படப் பயன்படுத்தப்பட்டதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளன.
வடக்கு எல்லையில், சீனாவால் வழங்கப்பட்ட செங்டு JF-10C ரகப் போர் விமானங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது. இந்த விமானங்கள், மேம்பட்ட PL-15E நீண்ட தூர வான்-வழி-வான் தாக்கு ஏவுகணைகளை ஏந்திச் சென்றன. இந்த விமானங்களும் ஏவுகணைகளும் சீனப் படைத்துறையில் மட்டுமல்லாது, பன்னாட்டுப் பாதுகாப்பு வல்லுநர்களிடையேயும் வெகு விரைவாகப் பிரபலமடைந்தன. நிஜப் போரில் JF-10C மற்றும் PL-15E ஆகியவற்றின் பயன்பாடு பற்றி விமானப்படை சார்ந்த சர்வதேச விவாதங்களில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
ஒரு PL-15E ஏவுகணை இந்திய ரஃபேல் போர் விமானத்தை வீழ்த்தியிருக்கக்கூடும் என்ற உறுதிப்படுத்தப்படாத வதந்திகளும் பரவின. இதன் விளைவாக, JF-10C விமானங்களைத் தயாரிக்கும் செங்டு ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷனின் பங்கு விலைகள் அதிகரித்தன. ஆயினும், இந்திய விமானப்படை இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. வான்வழி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, கடந்த வாரம், சில விமானங்களை இழப்பது வான்வழிப் போர்களில் ஒரு இயல்பான நிகழ்வுதான் எனக் குறிப்பிட்டார். ஆனால், அவர் எந்தவொரு திட்டவட்டமான தகவலையும் வழங்கவில்லை.
சிந்தூர் நடவடிக்கை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அப்பாலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இரு தரப்பிலும் உள்ள ஆயுத விநியோகஸ்தர்களும் இதில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தனர். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சந்தைப்படுத்தல் உத்திகளை விரைவாக மாற்றி அமைத்தன. வெகு தூரத்திலிருந்து தாக்கக்கூடிய PL-15 ஏவுகணை போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தங்கள் சொந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை சத்தமில்லாமல் விளம்பரப்படுத்தத் தொடங்கின.
அதே சமயம், அசிஸ்கார்ட்(Asisguard) மற்றும் பாய்ரக்டர்(Bayraktar) போன்ற துருக்கிய ட்ரோன் நிறுவனங்கள், இந்திய இலக்குகள் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட கும்பல் ட்ரோன் தாக்குதல்களுக்குப் – சோனேகார் மற்றும் பாய்ரக்டர் ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து – ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தன. இத்தாக்குதல்கள் மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில், காஷ்மீர் முதல் புஜ் வரையிலான 1,500 கி.மீ. தூரப் பரப்பளவில் நிகழ்ந்தன.
இத்தகைய மிகப் பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்கள் நிகழ்ந்தபோதிலும், இந்தியப் பாதுகாப்புப் படைகளால் அவற்றை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. இது, உள்வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்க பலதரப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பின் வலிமையை வெளிப்படுத்தியது.
எப்போதும் போல, ஒரு போர்ச்சூழல் உருவாகும்போது – அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்டதைப் போன்ற ஒரு மோதல் ஏற்படும் சாத்தியக்கூறு எழும்போது – புதுடெல்லியில் ஒரு வழக்கமான போக்கு காணப்படுகிறது. அவசரகால இராணுவ கொள்முதல்கள் தொடங்கப்படுகின்றன, ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகள் துரிதப்படுத்தப்படுகின்றன, 'ஆட்டத்தை மாற்றும்' ஆயுதங்கள் எனப் பறைசாற்றப்படும் கொள்முதல்கள் குறித்து ஊடகங்களில் கவனமாகச் செய்திகள் வெளியிடப்பட்டு பரபரப்பு உருவாக்கப்படுகிறது.
மோதல்கள் எப்படி இலாபம் கொழிக்கும் வியாபாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கு சிந்தூர் நடவடிக்கையே ஆகச் சிறந்த உதாரணம்
இந்தத் தொடர் நிகழ்வுகள் பெரும்பாலும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தங்களில் சென்று முடிகின்றன. அவை இந்தியாவின் இராணுவ அமைப்புகளை நவீனமயமாக்கும் போக்கின் அவசரத் தேவையை வெளிப்படுத்தும் அதேநேரத்தில் மெதுவான வேகத்தில் நடந்து வருவைதையும் காண முடிகிறது.
“சிந்துர் நடவடிக்கை என்பது, இராணுவ ரீதியாக ஏற்பட்ட பதட்டத்தின் மூலம் நாடுகள் எவ்வாறு ஆதாயம் தேட முடியும் என்பதற்கு ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு – இது பிரமிக்கத்தக்கதாகத் தோன்றினாலும், தெளிவான தகவல்கள் அதிகம் இல்லை,” என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அம்ரித் பால் சிங் என்ற இராணுவ வல்லுநர் ஒருவர் கூறினார். சிந்துர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என நிறுவ ஒரு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. ஆயுதங்களில் கணிசமான பகுதி வெளிநாடுகளிலிருந்து நேரடியாக வாங்கப்பட்டவை அல்லது வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களிடமிருந்து (OEMs) பெறப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இருப்பினும், இந்தியா வெளிநாட்டு உதவிகளை அதிகம் சார்ந்திருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து கூறி வந்தது, இது முற்றிலும் உண்மையல்ல.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்ச்சியான இராணுவப் பதட்டம், இரு நாடுகளும் பாதுகாப்புக்காக தொடர்ந்து நிதியைச் செலவழிப்பதை சர்வசாதரணமாக்கியுள்ளது என்று மற்ற நிபுணர்கள் குறிப்பிட்டனர். நடந்து வரும் இந்த போட்டி, இரு தரப்பினரையும் முழு அளவிலான போரில் ஈடுபடாமல், எந்த நேரத்திலும் மோதலுக்குத் தயாராக இருக்கச் செய்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒத்த அளவிலான வழக்கமான இராணுவ பலத்தையும் அணு ஆயுதங்களையும் கொண்டிருப்பதால், எந்தத் தரப்பும் ஒரு முழுமையான போரினால் ஏற்படும் பாதிப்புகளை ஏற்கத் தயாராக இல்லை. எனினும், ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மோதல் சூழ்நிலையில் இருப்பதையே வசதியாகக் கருதுகிறார்கள் –துல்லியத் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்கள், ஒருவருக்கொருவர் வான்வெளியில் அத்துமீறி நுழைதல், காஷ்மீர் எல்லையில் பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்துதல், ஆக்ரோஷமான ஊடகச் சித்தரிப்புகள், தேசபக்தி சார்ந்த பொது நிகழ்வுகள் போன்ற வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு இந்த மோதல் சூழல் பாதையமைத்துத் தருகிறது. சிந்துர் நடவடிக்கையின் போதும் இதைத்தான் நாம் கண்டோம்.
“இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆயுதப் போட்டியின் உண்மை என்னவென்றால், ஆயுத விற்பனையாளர்களுக்கு ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டிய அவசியம் ஏற்படப்போவதில்லை,” என்று டெல்லியில் உள்ள ஒரு பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ராகுல் போன்ஸ்லே கூறினார். “இரு தரப்பினரும் தொடர்ந்து அதிக ஆயுதங்களை வாங்கத் தேவையான அளவு அச்சுறுத்தலை உணர்ந்தால் போதும். அது மட்டுமே ஆயுதக் கார்ப்பரேட்டுகளை தொடர்ந்து இயங்க வைக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இறுதியில், சிந்துர் நடவடிக்கை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவப் பதட்டங்களை அதிகரித்தது மட்டுமல்லாமல், இது ஒரு புதிய வகையான நவீனப் போரை அறிமுகப்படுத்தியது – மக்களின் நம்பிக்கைகளை கட்டுப்படுத்தும் போர். இது அனைவரின் மனதிலும் ஏதோ ஒன்றை விதைத்துள்ளது.
அரசியல்வாதிகள் தங்கள் வலிமையைக் காட்ட ஒரு வாய்ப்பு பெற்றனர். பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட, ஒருதலைப்பட்சமான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் அதிக பார்வையாளர் மதிப்பீடுகளைப் பெற்றன. சாதாரண மக்களுக்கு தேசியவெறி ஊட்டப்பட்டது. இராணுவம் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பெற்றது.
ஆயுத வியாபாரிகளோ? எளிதாக கொள்ளை இலாபம் ஈட்டினர்.
ஆனால் சிந்துர் நடவடிக்கை உண்மையிலேயே என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கேட்டால், ஆயுதத் தளவாடங்களின் இருப்பு நிலைகளை மாற்றியுள்ளது என்பதே நிதர்சனமான பதிலாக இருக்க முடியும். மேலும் ஒரு பழமொழி சொல்வது போல – போர், அல்லது போருக்கான தயாரிப்புகள் கூட, வீரர்களுக்கும் தேசங்களுக்கும் வேதனையாக அமையலாம், ஆனால் மரண வியபாரிகளுக்கு, அவை வரப்பிரசாதங்களாகும்.
- செந்தாரகை (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/politics/for-arms-dealers-operation-sindoor-was-not-a-crisis-conflict-but-a-business-opportunity