இருமல் மருந்து மரணங்களும் டையெத்திலீன் கிளைகால் நச்சும்

The Hindu Business Line

இருமல் மருந்து மரணங்களும் டையெத்திலீன் கிளைகால் நச்சும்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழப்பது மீண்டும் ஒருமுறை மருந்து ஒழுங்குமுறை (drug regulation) குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருமல் மருந்துகள் மீது ஒழுங்குமுறைக் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் சமீபத்தில் நிகழ்ந்த குழந்தை மரணங்கள் இந்தப் பொருட்களின் மீது நீண்ட அச்சத்தை உருவாக்கியுள்ளன — ஏனெனில் நன்கு அறியப்பட்ட நச்சுப் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் - அதனால் எழும் கேள்விகளைப் பார்ப்போம். இவ்விரு மாநிலங்களிலும், இருமல் மருந்துகளுக்கும் குழந்தை மரணங்களுக்கும் என்ன தொடர்பு?

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 14க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மத்திய-மாநில ஒழுங்குமுறை அதிகாரிகளின் விசாரணைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இருமல் மருந்துகள் மீது கவனத்தை ஈர்த்துள்ளன. ஆரம்பத்தில், மத்தியப் பிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில தயாரிப்பு மாதிரிகளில் டையெத்திலீன் கிளைகால் (Diethylene Glycol - DEG) என்ற நச்சு இல்லை என்று ஒழுங்குமுறை அமைப்பினர் தெரிவித்தனர். இருப்பினும், தமிழ்நாட்டு மருந்து ஒழுங்குமுறை அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையில், மத்தியப் பிரதேசத்திற்கு இருமல் மருந்துகளை விநியோகித்த ஸ்ரேசன் ஃபார்மா (Sresan Pharma) தயாரித்த மருந்து மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக DEG இருந்தது கண்டறியப்பட்டது. இது சுகாதார அமைச்சகத்தின் தகவல் தொடர்பு அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் இது குறித்து இன்னும் விசாரித்து வருகின்றனர். நாக்பூரிலும் (மகாராஷ்டிரா) இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானிலும் கூட, ஜெய்ப்பூர் கேசன்ஸ் ஃபார்மா (Kaysons Pharma) தயாரித்த இருமல் மருந்துகளும் மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கைகள் ஆரம்பத்தில் தெரிவித்தன. அதன் பிறகு அந்த மாநிலம் டெக்ஸ்ட்ரோமெத்தோர்ஃபான் (dextromethorphan) கொண்ட தயாரிப்புகளைத் தடை செய்தது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.

DEG என்றால் என்ன?

உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவதன்படி, டையெத்திலீன் கிளைகால் (DEG) மற்றும் எத்திலீன் கிளைகால் (ethylene glycol - EG) ஆகியவை நச்சுப் பொருட்கள் ஆகும். இவை தொழில்சாலை கரைப்பான்களாகவும் (industrial solvents) உறைநிலை தடுப்பானகளாகவும் (antifreeze agents) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு, மரணம் விளைவிக்கக்கூடியவை. DEG/EG நச்சு இருக்கிறதா என்று மருந்தியல் தயாரிப்புகளைப் பரிசோதிக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுப்பாய்வு, வாயு வண்ணப்படிவுப் பிரிகை (Gas Chromatography) ஆகும் என்றும் WHO கூறியது.

இருமல் மருந்துகளில் இது எப்படி வருகிறது?

உலகளாவிய உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகள் கூறுவதன்படி, மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் துணைப்பொருட்களை (செயலற்ற பொருட்கள் - excipients) பயன்படுத்துகிறார்கள். அத்தகைய துணைப்பொருட்களில் ஃபார்மா தரத்திலான புரோப்பிலீன் கிளைகால் (pharma-grade propylene glycol) மருந்துகளிலும் அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை வல்லுநர்கள் விளக்குவதாவது, புரோப்பிலீன் கிளைகாலை ஒரு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து (authentic seller) பெற்று, DEG போன்ற நச்சுக்கள் உள்ளதா என்று சோதிக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், இறுதியாகவும் சந்தைக்கு வருவதற்கு முன்னரும் நச்சுகள் (DEG) இருக்கிறதா என்று மீண்டும் சோதிக்கப்பட வேண்டும். (நிறுவனத்திற்கு உள்ளேயும் சரி, மூன்றாம் தரக்கட்டுப்பாடு மூலமும் சரி). 

நிறுவனம் அனைத்து தேவைகளுக்கும் இணங்கியுள்ளதா என்பதைச் சரிபார்க்கும் மாநில ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இந்த ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன. மேலும், ஒழுங்குமுறை அமைப்பு, தொழிற்சாலை அல்லது சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட தயாரிப்புகளில் சீரற்ற சோதனைகளையும் (random checks) நடத்துகிறது.

மத்தியப் பிரதேச வழக்கில், DEG இன் அளவு 46 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன (அது 0.1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்) என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அது உண்மையாக இருந்தால், தயாரிப்பின் தரச் சோதனைகளை நடத்தி அதை நுகர்வுக்கு அனுமதித்த அனைவராலும் இழைக்கப்பட்ட மோசமான தவறாகும். இந்தச் சம்பவம், விநியோகச் சங்கிலியின் ஒருமைப்பாடு (integrity of the supply chain), மருத்துவமனை, சில்லறை விற்பனை நிலைகளில் இந்தப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் செயல்முறை (procurement process) ஆகிய அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்தியாவில் இருந்து வரும் இருமல் மருந்துகள் குறித்து சர்வதேச அளவில் சர்ச்சைகள் ஏதும் இருந்ததா?

ஆம். 2022 இல், காம்பியாவில் குழந்தைகள் உயிரிழந்தது, இந்தியாவில் இருந்து வந்த மாசுபட்ட இருமல் மருந்துகள் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இதே போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து, இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் மருந்து நிறுவனங்கள், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவற்றைச் சோதிப்பது இப்போது கட்டாயமாகியுள்ளது. ஆனால் DEG என்பது இருமல் மருந்துச் சூழலில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு வில்லனாக உள்ளது — அது ஜம்மு சம்பவமாக இருந்தாலும் சரி, காம்பியா சம்பவமாக இருந்தாலும் சரி. சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையில் DEG காரணமாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் 14 பேர் இறந்தனர். இது லென்டின் ஆணையத்தின் அறிக்கைக்கு வழிவகுத்தது. அந்த அறிக்கை சுகாதார மற்றும் மருத்துவமனை நிர்வாகங்கள், ஊழல் மற்றும் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் (regulatory lapses) ஆகியவற்றைக் கடுமையாகச் சாடியது.

அப்படியானால் இருமல் மருந்துகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா?

குழந்தை நல மருத்துவர்கள் கைக்குழந்தைகளுக்கு (2 வயதுக்குட்பட்டவர்கள்) இருமல் மருந்துகளை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) கூறுவதாவது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இருமல் அல்லது சளி தானாகவே குணமாகிவிடும். அப்படி ஏதேனும், பரிந்துரைக்கப்பட்டால், டோஸ் அளவு மருத்துவ ரீதியிலான மதிப்பீட்டின் (clinical evaluation) அடிப்படையில்தான் இருக்கும்.

நீங்கள் இருமல் மருந்து (அல்லது வேறு எந்த மருந்தாக இருந்தாலும்) வாங்க வேண்டும் என்றால் — அது மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், அந்த மருந்து ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும், ஒரு பதிவு செய்யப்பட்ட மருந்தாளரிடமிருந்து (registered chemist) வாங்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் ரசீதுடன் வாங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: The Hindu Business Line

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு