மத்தியப் பிரதேச தேர்தலில் என்ஜிஓக்களை களமிறக்கும் பாஜகவின் அரசியல் சூது விளையாட்டுகள்

தமிழில்: விஜயன்

மத்தியப் பிரதேச தேர்தலில் என்ஜிஓக்களை களமிறக்கும் பாஜகவின் அரசியல் சூது விளையாட்டுகள்

நாடு முழுவதும்  நடந்த தேர்தல்களில் பல்வேறு அரசியல் சூது விளையாட்டுகளை பாரதீய ஜனதா கட்சி (BJP) நடத்தியுள்ளது என்பது உலகறிந்த உண்மையாகும். இந்த அரசியல் சூதாட்டத்தின் புதிய வடிவமாக மத்தியப் பிரதேச தேர்தலில் தொண்டு நிறுவனங்களை களமிறக்கியுள்ளது என்று போபாலைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் லலித் சாஸ்திரியும், இரு மூத்த பத்திரிகையாளர்களான ரஷீத் கித்வாய் மற்றும் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் கண்ட பேட்டியில் சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்திய பிரதேச மாநில அரசு இயங்கி வருகிறது. பாஜக ஆட்சியின் கணிசமான நிதியுதவியை பெற்று வரும் ஜன் அதிகார் பரிஷத் என்ற அரசு சாரா அமைப்பை இந்தத் தேர்தலில் பயன்படுத்துவதையே இப்போதைய புதிய தந்திரமாக முன்னெடுத்துள்ளனர் என்று சாஸ்திரி கூறுகிறார். ஜன் அதிகார பரிஷத் என்ற தொண்டு நிறுவனம் பாஜக அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதாவது சாஸ்திரியின் கூற்றுப்படி, பாஜகவின் பிரச்சார இயக்கத்தில் எழக்கூடிய இடைவெளிகளைக் இட்டு நிரப்புவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

சாஸ்திரி பின்வருமாறு கூறுகிறார். மாநிலம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒரு குடையின்கீழ் வழிநடத்துவதற்கு ஜன் அதிகார் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தை பாஜக உருவாக்கி வைத்துள்ளது. இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவராக மாநில முதல்வரும், துணைத் தலைவராக பாஜகவைச் சார்ந்தவரும் இடம்பெறும் வகையில்தான் உருவாக்கியுள்ளனர். மாநில அரசின் ஒவ்வொரு துறையின் முதன்மைச் செயலாளரும் ஜன் அதிகார் பரிஷத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ளனர். ஜன் அதிகார பரிஷத் மூலம் அரசின் திட்டங்களை அடிமட்ட அளவில் கொண்டு செல்வது, திட்டங்களின் செயல்பாடுகளை மேற்போர்வை செய்வது போன்ற நிர்வாக வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். அதையும்கூட ஒரு குடையின்கீழ் அணிசேர்ந்துள்ள தொண்டு நிறுவனங்களின் மூலமாகவே செய்கிறாரகள். எனவே, இந்த ஜன் அதிகார் பரிஷத் என்ஜிஓ மட்டுமல்லாது அதன் கீழ் அணிதிரட்டப்பட்டுள்ள, தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களும் அடிமட்ட அளவில் இறங்கி வேலை செய்யும் அளவிற்கு பாஜக கட்சி சாராதவர்கள் எனும் பெயரில் திரைமறைவாக  ஒரு ஒழுங்கமைப்பட்ட பாஜகவின் தொண்டர் படையை உருவாக்கி வைத்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, மறுநாளே மத்திய பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் (CEO) சென்று, ஜன் அதிகார பரிஷத்துடன் இணைந்து செயல்படும் ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாஜக அரசாங்கம் சில கோடி ரூபாய்களை வழங்கியுள்ளது என்று புகார் அளித்தது. தேர்தல் நடத்தை விதிகளின்படியே அனைத்தும் நடைபெறுவதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதில் அளித்துள்ளார். இதுபோன்ற அறிவிப்புகள் எப்போதும் வழக்கத்தில் இருப்பவைதான் என்பது மட்டுமல்ல, அரசுத் திட்டத்தின் கீழ் அரசு சாரா நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்படுவதை தேர்தல் நடத்தை விதிகள் தடுப்பதில்லை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஜன் அதிகார் பரிஷத் மற்றும் அதன் கீழ் செயல்படும் என்ஜிஓக்களின் சட்டைப் பைகளில் காசு நிரம்பி வழிகிறது என்பதால் அடிமட்ட அளவில்  இறங்கி அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகும். அவ்வகையில், இந்த அரசியல் சூது பாஜகவிற்கு பலம் சேர்க்கிறது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/poll-talk-ngo-games-in-madhya-pradesh/