அரிசி ஏற்றுமதிக்குத் தடை: பாதிப்புக்குள்ளாகும் இந்திய விவசாயிகள்

தமிழில் : விஜயன்

அரிசி ஏற்றுமதிக்குத் தடை: பாதிப்புக்குள்ளாகும் இந்திய விவசாயிகள்

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது இந்திய விவசாயிகளையும் அதன் நட்பு நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கும்

இந்தியா வழக்கமாக விதிக்கும் தடையான- முழுவீச்சிலான தடையானது உலகிற்கும் இந்திய விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சில மாதங்களுக்கு முன்பு, வழக்கத்துக்கு மீறிய கடுமையான வெப்பநிலை நிலவியதைத் தொடர்ந்து கோதுமை ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்தியபோது, உலக உணவுச் சந்தைகளில் இந்தியாவுக்கு எதிராக ஆட்சேபனைகள் எழுந்தன. இருப்பினும், இந்தியா கோதுமையின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையாக இருந்ததால், அது பெரியளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக விளங்கவில்லை. உண்மையில் அச்சம் தரக்கூடிய விசயம் என்னவென்றால், இந்திய அரசு அரிசி ஏற்றுமதியையும் நிறுத்தக்கூடும்: இந்தியா இதுவரை உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்து வந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, உலகளவில் ஏற்பட்ட அபரிமிதமான அரிசி விநியோகத்தாலும், ரூபாயின் மதிப்பு குறைவினாலும் இந்தியாவில் அரிசியின்  விலை கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருந்தது. இன்று நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக மாறியுள்ளன. முதலாவதாக, 2001ல் சீனாவில் முதன்முதலில் காணப்பட்ட வைரஸால் ஏற்பட்ட மர்மமான "வளர்ச்சிக் குறைபாட்டு" நோயால் இந்திய நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதைவிட மோசமாக, நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் அரிசி உற்பத்தி செய்யும் மூன்று பெரிய மாநிலங்களில் மழை குறைவாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ பெய்துள்ளது.

உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், உள்நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் பற்றியும் கவலை கொண்டவர்கள் இப்போது அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக இந்திய அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. இந்திய அரசு வழக்கமாக விதிக்கும் தடையான கடுமையான/முழுவீச்சிலான தடையானது உலகிற்கும் இந்திய விவசாயிகளுக்கும் பெரும் குறைபாடாக மாறியுள்ளது.

கடைசியாக 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் இந்தியா உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது; பல ஆண்டுகளாக உணவு - பாதுகாப்பு நெருக்கடியை சந்தித்து வந்ததைத்  தொடர்ந்து இந்த முடிவு அப்போது எடுக்கப்பட்டது. அதே தடையை மீண்டும் புகுத்துவதென்பது பொறுப்பற்றதாகவும், பயனற்றதாகவும் இருக்கும். ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரால் உணவு, எரிபொருள் மற்றும் உரத்திற்கான செலவுகள் உயர்த்துள்ளதால்  விலைகுறைவாக இருந்தால் மட்டுமே வளரும் நாடுகளால் வாங்க முடியும். எனவே உலகளவில் அரிசி விலை உயர்வதென்பது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்பதால் இச்செயல் பொறுபற்றதென்கிறோம். வளரும் நாடுகளை வழிநடத்த விரும்பும் இந்தியா, அவர்களுக்காகப் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் இந்தியா, அவர்களுக்கு வேண்டுமென்றே தீங்கு செய்ய முடியாது என நம்புவோமாக.

ஏற்றுமதியை தடை செய்வதால் உள்நாட்டில் பணவீக்கத்தைக் குறைக்கவோ அல்லது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை பயனுள்ள வகையில் மேம்படுத்தவோ முடியாது. ஆகஸ்ட் மாதத்தில், அரசாங்கம் 28 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை தனது தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருந்தது (அதாவது கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய தானிய கையிருப்பை விட 11 மெட்ரிக் டன்கள் அதிகம்), எனவே நமக்கான உணவு என்பது எந்த நிலையிலும் அவ்வளவு விரைவாக தீர்ந்துவிடப் போவதில்லை. இதற்கிடையில், விவசாயப் பொருளாதாரத்தில் நிபுணர்களான அசோக் குலாட்டி மற்றும் ரித்திகா ஜுனேஜா ஆகியோர் இந்தியாவில் பணவீக்கம் முக்கியமாக எரிபொருள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வால் உந்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர்; கடந்த மாதம் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் படி அரிசி விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாகவே உயர்திருந்தது.

மேலும், ஏற்றுமதி தடைகள் மற்ற ஏழை நாடுகளுக்கு மட்டும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதல்ல; வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படும் போது அதற்கான பலனையும் இந்திய விவசாயிகள்  பெற முடியாமல் போகிறது. இந்தியாவில் துண்டுநிலங்களை வைத்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் இந்திய அரசும் அதன் அதிகாரிகளும் உலகளாவிய உச்சிமாநாடுகளில் பொதுக் கருத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டாலும், விவசாய வர்த்தகக் கொள்கைக்கு வரும்போது அவர்களின் நடவடிக்கைகள், நகர்ப்புற உணவு விலைகளில் அதிக அக்கறை காட்டுவதோடு, விவசாயத்தில் ஈடுபடுவோர் இலாபங்கள் பெறுவதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள விவசாயிகள் ஒருதலைப்பட்சமான விவசாயப் பந்தயத்தில் ஈடுபடுவதற்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள்: உலகளவில் விலைகள் வீழ்ச்சியடையும் போது அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, ஏற்றுமதியை அரசாங்கம் தடுக்கும் போது விலைகள் உயர்ந்தாலும் அதற்கான பயனையும் பெறமுடியாமல் போகிறது.

கோதுமை ஏற்றுமதி தடைக்குப் பிறகு இந்தியா பெற்ற சில தொடர்ச்சியான விமர்சனங்களை கருத்தில் கொண்டு அரிசி எற்றுமதி தடையின் போது அதே தவறு மீண்டும் நிகழாமல் தடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படியிருந்தபோதிலும், அது சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். "100 சதவீதம் உடைக்கப்பட்ட" அரிசி, கால்நடைத் தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படுவதோடு குறிப்பாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் குறைந்த தரத்திலான குருனை அரிசியின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

அதுபோன்ற ஏற்றுமதியில், முதன்மையாக சீனத்தில் பன்றி வளர்க்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவில் பாதிப்பு இருக்கும். இது ஒரு புறக்கணிக்கத்தக்க விசயம் அல்ல: குறைந்த அளவிலான பாதிப்புகள் ஏற்கனவே அவர்களில் பலரை அந்தத் தொழிலிருந்து வெளியேற்றிவிட்டது. இதனால் சீனாவின் பன்றிக் கூட்டம் குறையத் தொடங்கியது. இது பன்றி இறைச்சியின் விலையை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தியுள்ளது, இது சீனாவில் ஒட்டுமொத்த நுகர்வோர் பணவீக்கத்தை இரண்டு வருட உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ஆனால் முழு வீச்சிலான அரிசி ஏற்றுமதிக்கான தடை ஏற்படுத்தும் சீர்குலைவோடு ஒப்பிடும்போது அந்த விலையேற்றம் ஒன்றுமே இல்லை. இந்தியா ஏற்றுமதியை நிறுத்தினால், இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர்களான வியட்நாமும் தாய்லாந்தும் அதையே செய்யக்கூடும். தற்போதைய நெருக்கடி முடியும் வரை இந்திய அரசாங்கம் தனது புதிதாக கண்டெடுத்துள்ள பொறுப்புணர்வு தன்மையை தக்க வைத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம்.

எவ்வாறாயினும், இந்தியாவின் விவசாயத் துறைக்கு இந்த அரிசி ஏற்றுமதித் தடையினால் ஏற்படும் நெருக்கடி என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தொடர்ச்சியாக கவனிக்க வேண்டும். எளிமையாகச் சொல்வதென்றால், இந்தியா உலகின் அரிசிக் கிண்ணமாக இருந்தாலும், அது குறிப்பிடத்தக்க வகையில் உற்பத்தி திறன் அற்றவையாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக நெல் சாகுபடி இன்னமும் கூட பருவமழையையே அதிகம் சார்ந்துள்ளது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசம் (பெறக்கூடிய மழைப்பொழிவும் அதனால் ஏற்படும் அரிசி உற்பத்தியும் சமமாக இருக்கும் பகுதிகள்) முதலான மாநிலங்கள் முறையான நீர்ப்பாசன முறைகளை உருவாக்கத் தவறிவிட்டன. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தொடர்ச்சியாக பயிர்களை உற்பத்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: deccanherald.com