மோடி கும்பலின் தேசபக்தி வியாபாரத்தை புறக்கணிப்போம் - மஜ இக பிரச்சாரம்

கார்ப்பரேட்களுக்கு தேசத்தையும் மக்களுக்கு தேசபக்தியையும் விற்கிறதா மோடி அரசு!

மோடி கும்பலின் தேசபக்தி வியாபாரத்தை புறக்கணிப்போம் - மஜ இக பிரச்சாரம்

மோடி அரசு தொடர்ச்சியாக அனைத்து பொது சொத்துக்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று நாட்டை கார்ப்பரேட்களின் காலடியில் தேசத்தை அடகு வைப்பதாக மஜஇக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

நியாய விலைக் கடைகளில் மானியத்திற்கே பொருளை வாங்க முடியாத ஏழை மக்களிடம் பணம் கொடுத்து தேசிய கொடியை வாங்க மோடி அரசு நிர்பந்திக்கிறது. ஏழை மக்களிடம் தேச பக்தியை கடை சரக்காக காசுக்கு திணிக்கிறது. தேசத்தை கடை சரக்காக்கி கார்ப்பரேட்டுகளுக்கு மானியத்திலும் இலவசத்திலும் பரிசு பொருளாக்குகிறது. 

சுதந்திர போராட்ட காலத்தில் 1947க்கு முன்னரும் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த தலைவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்து வந்தனர். நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு துரோகம் இழைத்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த போராட்டத்திலிருந்து மக்களை திசை திருப்பி இந்து - இஸ்லாமிய மத மோதலாக மாற்ற அரும்பாடுபட்டனர். அக்காலத்தில் அதில் குறிப்பிடும் அளவுக்கு வெற்றியும் பெற்றனர். இது இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவினைக்கும், பல இலட்ச மக்கள் பிரிவினையின்போது கொலையுண்டதற்கும் காரணமாக ஆயிற்று. அதன் வழித் தோன்றலில் பிறந்த பாசிச பாஜகவின் அரசு, சாதிய, மத மற்றும் இன பிரிவினையை ஆழப்படுத்தி, அனைத்து வித சிறுபான்மையினர்களையும் ஒடுக்கி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தது; காந்தியை சுட்டுக் கொன்றது; இன்று தேசிய கொடியை வலுக்கட்டாயமாக திணிக்கும் பாஜக அரசு, அதன் தாய்கழகமான ஆர்.எஸ்.எஸ் இந்தியக் கொடியை ஏற்காமல் 52 வருடங்கள் இருந்தது.  

அமெரிக்காவுடன் 4 அடிப்படை ஒப்பந்தங்கள் போட்டு நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நாட்டை அம்பானிக்கும், அதானிக்கும் வேட்டை காட்டாக மாற்றியுள்ளனர். தனியார்மயம் என்று கூறி நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பல ஆண்டு காலமாக கட்டியமைத்த அனைத்து பொது சொத்துக்களையும் அதன் பலன்களையும் இன்று தனியார்க்கு சொந்தமாக்கப்படுகிறது. 5ஜி ஏலத்தில் 4.5 இலட்சம் கோடி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்ட ஏலத்தில், வெறும் 1.5 இலட்சம் கோடி மட்டுமே கிடைக்கப்பெற்று 3 இலட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதை கணிக்க முடிகிறது. புதிய மின்சார சட்ட மசோதா ஏற்கப்பட்டால் பல கோடி மக்களின் வீடுகள் இருளில் ஆழ்த்தப்படும்; பல இலட்சக்கணக்கான சிறு குறு தொழில்கள் மானியமில்லாமல் அழிக்கப்படும்; விவசாயிகளின் உரிமை மின்சாரம் பறிக்கப்பட்டு தற்சார்பு அழிக்கப்பட்டு, விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும். மக்கள் வரிப்பனத்திலும், அரசின் கடன்களிலும் கட்டியமைக்கப்பட்ட  மாநில அரசின் கட்டுமானங்களை இலவசமாக பயன்படுத்திக் கொண்டு, தனியார் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும். கட்டுமானங்களின் செலவுகளும், கடன்களும் மக்களுக்கு; இலாபமும் பலனும் கார்ப்பரேட்களுக்கு என்பதுதான் தனியார்மயம் என்பதை மீண்டும் ஒரு முறை மின்சார சட்ட மசோதா நிரூபித்துள்ளது.

இப்படி ஜி.எஸ்.டி போன்ற வரி விதிப்புகளும், நீட், க்யூட் போன்ற புதிய கல்விமுறை மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்வி உரிமை பறிப்பும்,  கல்வியில் கார்ப்பரேட்களின் தனியார்மய ஆதிக்கமும், ஊபா, என்.ஐ.ஏ, குற்றவியல் நடைமுறைச்சட்டம் போன்ற கருப்புச் சட்டங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கவும் அரசியல் உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கான தேவைகளாக மாறியுள்ளது.

நாட்டு பொருளாதாரத்தை அந்நியர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து மக்களை வறுமைக்கும், பட்டினிச்சாவுக்கும், வேலை வாய்ப்பின்மைக்கும், விலைவாசி உயர்வுக்கும் ஆட்படுத்தி கொடும் ஆட்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

நாட்டைக் காப்பாற்ற வ.உ.சி வழியில் நின்று சுதேசிய பொருளாதாரத்தை கட்டியமைத்து, பகத்சிங் வழியில் ஜனநாயகத்தை விடுதலையும் வென்றுப் பெற வேண்டும் என்று மஜஇக அமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.