அமெரிக்க வரிவிதிப்புகள் பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தல் காரணமாக நயாரா நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை நிறுத்தும் எஸ்பிஐ

விஜயன் (தமிழில்)

அமெரிக்க வரிவிதிப்புகள் பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தல் காரணமாக நயாரா நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை நிறுத்தும் எஸ்பிஐ

புதிய அமெரிக்க வரிவிதிப்புகள், சர்வதேச பொருளாதாரத் தடைகளால் எழக்கூடிய ஆபத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), நயரா எனர்ஜி நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளது. எஸ்பிஐ வங்கி சமீபத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, இந்திய அரசின் நேரடி உத்தரவின் பேரில் அல்லாமல், முக்கியமாக சர்வதேச விதிகளைக் கடைப்பிடிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது என்றும், இந்திய வங்கிகள் தாங்களாகவே ஆபத்தை மதிப்பிட்டு, அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து அபராதங்களுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு அதிகாரம் உண்டு என இச்சம்பவங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 2017 இல் ரோஸ்னெஃப்ட் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களான எசார் ஆயிலின் பெரிய வதினார் சுத்திகரிப்பு ஆலையை கையகப்படுத்தியதன் மூலம் நயாரா எனர்ஜி நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது, நயாரா கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து சுத்திகரிப்பு செய்கிறது, இதன் மூலம் இந்தியாவின் மொத்த சுத்திகரிப்பு சந்தையில் சுமார் 8% பங்கைப் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி ஆண்டுக்கு 256 மில்லியன் மெட்ரிக் டன்களைக் கடந்துள்ள நிலையில், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு சந்தையாக இந்தியா திகழ்கிறது. நயாரா நாடு முழுவதும் 6,500 க்கும் மேற்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களையும் நடத்தி வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைப் போலவே, நயாராவும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயைக் கொண்டுவந்து, அதனை பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களாகச் சுத்திகரித்து, அவற்றை இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும்(ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள்) விற்பனை செய்து வருகிறது. ஜூலை மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 18வது பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியபோது சிக்கல்கள் தீவிரமடைந்தன. இந்தத் தடைகள் ரஷ்ய எரிபொருள் கொள்முதல்களைக் கட்டுப்படுத்தியதுடன், ஒரு பீப்பாய் ரஷ்ய எண்ணெய்க்கு  47.6 டாலர் என்ற விலை உச்சவரம்பையும் நிர்ணயித்தன. ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் தடைகளும், புதிய அமெரிக்க வரிகளும் நயாராவின் பரிவர்த்தனைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன.

சர்வதேச அளவில் நிதி செயல்பாடுகளைக் கொண்ட வங்கிகள், கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், அரசின் விதிமுறைகளையும், வெளிநாட்டு விதிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது; இதன் காரணமாக நயராவின் சர்வதேச பரிவர்த்தனைகளைக் கையாள்வது மிகவும் சவாலாகிவிட்டது என்றும் இச்சம்பவம் குறித்து அறிந்த வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, நயாராவுக்கான ஆதரவை நிறுத்தியுள்ள நிலையில், பிற முக்கிய வங்கிகள் நயாராவுடன் தொடர்ந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் குறைவாகவே உள்ளது.

மிகக் குறைந்த வெளிநாட்டு வணிகத்தைக் கொண்ட இந்திய வங்கியான யூகோ வங்கி மூலம் பரிவர்த்தனைகளை ஏற்பாடு செய்ய அரசாங்க அதிகாரிகளிடம் நயாரா நிறுவனம் உதவி கோரியிருந்ததாக கடந்த வாரம் ப்ளூம்பெர்க் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. யூகோ வங்கி முந்தைய ஆண்டுகளில் ஈரானிய கச்சா எண்ணெய் வர்த்தகங்களைக் கையாண்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் அதன் செயல்பாடுகள் குறைவாக இருப்பதால், வெளிநாட்டுத் தடைகளை எதிர்கொள்ளாமல் நயாராவுக்கான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://share.google/iSeAVxUPhffakWaBzhttps://m.economictimes.com/industry/banking/finance/banking/sbi-halts-nayara-transactions-over-us-tariffs-sanctions-risk/amp_articleshow/123243917.cms

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு