காந்தியை கொன்றது RSSன் திட்டமே: கோட்சே சகோதரன் வாக்குமூலம்
கோட்சே RSSல் இருந்து விலகவில்லை என்பதையும் பிராமணர்கள் மட்டுமே இந்துக்கள் என்பதையும் நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சே தெளிவாக்குகிறான்
கோபால் கோட்சே: ‘நாதுராம் ஆர்எஸ்எஸ்ஸை விட்டு வெளியேறவில்லை’
தீவிர இந்துத்துவாவாதிகளுள் பொதுவாகத் தோன்றும் ஒரு பண்பு - அது பாபர் மசூதியை இடித்தவர்களாயினும் மகாத்மாவைக் கொன்றவர்களாயினும் – தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதினால் நாடு முழுவதும் நாட்டிற்கு வெளியிலும் அவர்களின் செயல் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும், அவர்களின் செயல்களுக்காக வருந்துவதில்லை என்பதே. நாதுராம் கோட்சேவின் இளைய சகோதரரும், காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவருமான கோபால் கோட்சே, 1994 ஜனவரியில் ஃப்ரண்ட்லைன் நிருபர் அரவிந்த் ராஜகோபாலுக்கு வழங்கிய நேர்காணலில், அத்தகையதொரு அடிப்படைவாதியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
அவை:
நீங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அங்கம் வகித்தவரா?
சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்தோம். நாதுராம், தத்தாத்ரேயா, நான் மற்றும் கோவிந்த். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட ஆர்எஸ்எஸ்ஸில் வளர்ந்தோம் என்று சொல்லலாம். அது எங்களுக்கு ஒரு குடும்பம் போல் இருந்தது.
நாதுராம் ஆர்.எஸ்.எஸ்-ல் தொடர்ந்தாரா? அவர் அதை விட்டு விலகவில்லையா?
நாதுராம் ஆர்எஸ்எஸ்ஸில் பௌதிக் காரியவா (அறிவுசார் தொழிலாளி) ஆகிவிட்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து விலகியதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காந்தியின் கொலைக்குப் பிறகு கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ்ஸும் பல பிரச்சனைகளில் இருந்ததால் அவர் அவ்வாறு கூறினார். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்ஸை விட்டு விலகவில்லை.
நாதுராமுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அத்வானி சமீபத்தில் கூறியிருக்கிறார்.
அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்று அவரை எதிர்த்துள்ளேன். ‘காந்தியைப் போய் கொல்லுங்கள்’ என்று ஆர்எஸ்எஸ் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் அவரை (நாதுராம்) மறுக்கவில்லை. இந்து மகாசபை அவரை நிராகரிக்கவில்லை. 1944ல் நாதுராம் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அறிவுசார் துறையில் இருந்தபோது இந்து மகாசபைப் பணிகளைச் செய்யத் தொடங்கினார்.
காந்தியை கொல்ல திட்டம் எப்போது போடப்பட்டது?
நாதுராம், இந்து ராஷ்டிரா என்ற நாளிதழின் ஆசிரியராக டெலிபிரிண்டர் வைத்திருந்தார். டெலிபிரிண்டரில், காந்தி மறுநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதைக் கண்டார். (காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு தீர்வு காணும் வரை, 55 கோடி ரூபாயை பாகிஸ்தானிடம் இருந்து நிறுத்தி வைக்கக் கூடாது என்ற கோரிக்கையை இந்த உண்ணாவிரதம் முன்வைத்திருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரிவினைக்கு பிந்தைய கணகுக்குகளை தீர்க்க இந்த 55 கோடி ரூபாய் பங்காற்றியது). இச்செய்தி உடனே நாதுராமை பாதித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்க செய்தது. அதனால் அதுவே திருப்புமுனையாக அமைந்தது.
ஆனால், காந்தியைக் கொல்ல பலர் எண்ணிய சந்தர்ப்பங்கள் உண்டு. அகதிகள் முகாம்களில். அவர் நமக்கு பேரழிவை ஏற்படுத்தியவர், எனவே அவரை ஏன் கொல்லக்கூடாது? இவ்வாறு பல திட்டமிடல்கள்… மேகங்கள் வானத்தில் கூடி, அடுத்த 15 நிமிடங்களில் மழை பெய்யும் - கனமழையாக இருக்கும் என்று கருதுகிறோம். ஆனால் நடப்பது வேறுவிதமாக உள்ளது. காற்று எந்தப் பக்கத்திலிருந்து வீசுகிறது என்று தெரியவில்லை, அது மேகங்களை கலைத்துச் செல்கிறது… எனவே அந்த மழைக்கு என்ன தேவை? அந்த குறிப்பிட்ட வளிமண்டலம், குறிப்பிட்ட அளவு வெப்பநிலை மேகத்தில் உள்ள நீரின் துகள்களுடன் இணைக்கப்பட வேண்டும். பின்னர் அவை பூமியில் நீராக வடியும் வடிவத்தை எடுத்துக்கொள்கிறது... எனவே சதிகள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்திருக்கலாம், மேலும் காற்று வந்து அவற்றை கலைத்திருக்கலாம். ஆனால் எல்லாம் சரியாக அமைந்ததால், இந்த திட்டம் பலனளித்தது. சந்தர்ப்பம் பழுத்திருந்ததால் எங்களின் நோக்கம் நிறைவேறியது.
விடி சாவர்க்கருடன் உங்கள் ஈடுபாடு என்ன?
பிரச்சனை இல்லை - நாங்கள் அனைவரும் அவரை எங்கள் அரசியல் குரு என்று எடுத்துக் கொண்டோம். அவருடைய எல்லா எழுத்துக்களையும் படிக்கிறோம். எனவே சாவர்க்கரை முழுமையாகப் புரிந்து கொண்டோம் என்று சொன்னால், அதைச் செய்ய வேண்டுமா என்று அவரிடம் கேட்பது முட்டாள்தனமாக இருக்கும். பலவீனமான உள்ளம் கொண்ட ஒருவருக்கு குருவின் ஆசி தேவை. குரு 'முட்டாள்கள் நீங்கள் அப்படி எதுவும் செய்யாதீர்கள்' என்று சொல்லி உங்கள் கைகளைக் கட்டுகிறார் என வைத்துக்கொள்வோம், வேறொரு நபர் அதைச் செய்கிறார் எனில், அப்போது நாம் ‘குரு நம் கைகளை கட்டவில்லையெனில் நாங்களும் செய்திருப்போம்.’ என்பது நம் பயத்தை மறைப்பதாகவும் குருவைக் கேவலப்படுத்துவதாகவும் இருக்கும்.
கொலைக்கு சாவர்க்கரின் பதில் என்ன?
பிற தலைவர்களைப் போலவே. "எனக்கு இங்கு தகவலாக வந்த செய்தியால் நான் வியப்படைந்தேன்" மற்றும் பல. அதுவே அவரது பகிரங்க பதில்.
பல எழுத்தாளர்கள் இந்து கலாச்சாரத்தை தேசிய இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் இயக்கத்திற்கு ஒரு பரந்த, மிகவும் பிரபலமான தளத்தை வழங்குவதற்கும் காந்தி காரணம் என்று வாதிட்டனர். நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?
உண்மையில் அப்படி இருந்திருந்தால், இதை இந்து நாடாக அறிவிக்க காந்தி நம் அரசுக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. ஹே ராம் என்று சொல்லி காந்தி இறந்ததாகக் கூறப்படும் இந்தக் கதை காங்கிரஸின் கட்டுக்கதை. அப்படி ஒன்றும் இல்லை என்றார். காந்தி ஹே ராம் என்று சொல்லி இறந்து போன கதைதான் முதன்முதலில் ராமை அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் பயன்படுத்தியது.
காந்தியைப் பற்றி சிலர் முன்வைத்த ஒரு விமர்சனம் என்னவென்றால், இந்து மதத்தைப் பற்றிய அவரது விளக்கம் "அற்புதமானது" ஆனால் அவர் இந்து மதத்தின் "அழுத்தமான, வீரியமிக்க" அம்சத்தை வலியுறுத்தவில்லை. இந்த விமர்சனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இங்கே பாருங்க, இது மிகவும் தெளிவற்றது. உதாரணமாக, போரை நிறுத்துவதற்காக ரூஸ்வெல்ட், சர்ச்சில், ஹிட்லர் மற்றும் அனைத்து போர்வாதிகளுக்கும் தந்தி அனுப்பினார். "நான் அந்த இடத்தைப் பாதுகாக்க ராணுவத்தை அனுப்பட்டுமா?" என்று பண்டித நேரு அவரிடம் கேட்டபோது, அவர் ஒத்துக்கொண்டார், ஆனால் அவர் ஏன் சர்க்காக்களுடன் (Charkhas) படைகளை அனுப்பவில்லை? அப்படியானால் என்ன அர்த்தம்? நீங்கள் மற்றவர்களுக்கு மட்டுமே கற்பிக்கிறீர்கள் - உங்கள் கொள்கைகளை நீங்கள் கடைப்பிடிப்பதில்லை.
உமா பாரதி அல்லது சாத்வி ரிதம்பர "நாம் இன்னும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்" என்று கூறும்போது, இந்துக்கள் நீண்ட காலமாக கோழைகளாக இருந்துள்ளனர், அந்த அஹிம்சை உண்மையில் இந்துக்களை பலவீனப்படுத்துகிறது…
நான் உடன்படவில்லை. என் நாட்டில் நான் ஆக்ரோஷமானவன் என்று சொல்லப்படுவதில்லை. உதாரணத்திற்கு - நான் மலேரியாவால் தாக்கப்பட்டேன். டாக்டர் எனக்கு சில ஊசி போடுகிறார். மலேரியாவின் வெளிப்புற தாக்குதல் குறைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது. மலேரியாவைத் திணிப்பது ஆக்கிரமிப்பு என்று மலேரியாவுக்கு எதிராக நான் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும், என்று நான் சொல்வது சரியாகுமா? அதை போக்குவதே சரியான நடவைக்கையாகும். என் நாட்டில் மலேரியாவின் ஒவ்வொரு கிருமியையும் அகற்ற வேண்டும் என்பதால், என்னை ஆக்ரோஷமானவன் என்று சொல்ல முடியாது.
எந்த வழிகளில் இந்து மகாசபைக்கும் பாஜகவுக்கும் இடையே தொடர்ச்சியைக் காண்கிறீர்கள்?
அவர்கள் அனைவரும் இந்து ராஷ்டிரா வழிக்கு வர வேண்டும். அவர்கள் எல்லோரும். மாற்று வழியில்லை. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைவதால் துருவஒழுங்கமைவு (polarisation) ஏற்படும். போஸ்னியா போல நிலை மாறும்.
உள்நாட்டுப் போர் வருமா?
அது கண்டிப்பாக வரும். ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமே கொண்டு வருவார்கள். தேர்தல் வாக்குகளுக்காக முஸ்லீம்களுடன் சமாதானவாதத்தை கடைபிடிப்பத்தால் இந்துத்துவாவை நேரடியாக செயல்படுத்த பாஜகவுக்கு தைரியம் இல்லை. அவர்கள் செய்யமாட்டார்கள். நீங்கள் என்ன செய்தாலும் முஸ்லீம் வாக்குகளை எதிர்பார்க்க முடியாது. ஒருபக்கம் அயோத்தி ராமர் கோவில் கட்டுகிறீர்கள். மறுபக்கம் முஸ்லிம்களிடம் வாக்குகளை பிச்சை கேட்கிறீர்கள். இவை நடக்காது.
சமூக சீர்திருத்தம் மற்றும் தேசியவாத இயக்கங்களில் ஈடுபட்டுள்ள மக்களின் கலாச்சார பின்னணி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்களில் பலர் சித்பவன் பிராமண சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது.
இந்த பிராமண – பேஷ்வாக்கள் (Peshwas) - அனைவரிலும் நீங்கள் புரட்சியாளர்களைக் காணலாம் – அவர்கள் பிராமணியத்துடன் இணைந்துள்ளனர். உதாரணமாக, சுதந்திரப் போரின் முதல் நாயகன் மங்கள் பாண்டே ஒரு பிராமணர். பின்னர் நீங்கள் மகாராஷ்டிராவிற்குச் செல்லுங்கள், ஒரு கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய வாசுதேவ் பல்வந்த் பாட்கே, 1883ல் ஏடனுக்கு சென்ற பிறகு இறந்தார். பின்னர் சபேகர் சகோதரர்கள் (வால்டர் சார்லஸ்) ராண்டைக்(1897 இல் பூனாவில் பிளேக் கமிட்டியின் சர்வாதிகாரத் தலைவர்) கொன்றனர். இன்னும் லோகமான்ய திலகர் ஒரு பிராமணர். விஷ்ணு சாஸ்திரி சிப்லுங்கர், ரானடே...
அதை எப்படி விளக்குகிறீர்கள்?
தேசத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற தியாக உணர்வுடன் சிந்தனையாளர்களாக இருந்தார்கள். எனவே நேர்மை உள்ளவர் அதைச் செய்கிறார். மகாராஷ்டிரா பிரிவினையால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், அது துண்டாடப்பட்ட மாகாணங்கள் மற்றும் நடந்துகொண்டிருந்த அட்டூழியங்களுக்கு அனுதாபம் கொண்டிருந்தது... ஒரு மகாராஷ்டிரர் 2,000 மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? இதுவே தேசிய ஒருமைப்பாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த இயக்கம் அதே எழுச்சியுடன், அதன் பின்னால் அதே எண்ணத்துடன் நகர்ந்தது. மஞ்சள் பத்திரிகை என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகள் பலவீனமான பிரிவினர் அல்லது பகுஜன் சமாஜ்களை சமாதானப்படுத்த பேஷ்வாய் பெயரைப் பயன்படுத்தி அவதூறு செய்ய, பிராமணர் மற்றும் பிராமணியத்தில் அவர்களை இணைக்கிறார்கள்.
அந்த முரண்பாடுகளில் நீங்கள் ஒத்துப்போகவில்லையா?
நான் கூறியது போல், பிரிவினையின் போது, எந்த நபரும் காப்பாற்றப்படவில்லை. அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லீம் கத்திக்கு யார் இலக்காகப்பட்டனரோ அவர்களே இந்துக்கள் என்பது நிரூபிக்கப்பட்ட வரையறை. எனவே நாம் இடுகாட்டினுள் ஒன்றாக வருகிறோம். ஆனால் உயிருடன் இருக்கும் போது, ‘இல்லை, நான் இந்து அல்ல’ என்கிறோம். யார் இந்து என்பதை முஸ்லிம் தீர்மானிக்கிறார். அப்படித்தான் நடக்கும் - ஒரு உவமை கூறுவது, தனக்கென எந்த பிரச்சனையும் இல்லாமல் சில மூதாதையர் சொத்துக்களை பெறுபவர் வெறும் செலவழிப்பவராக மாறுகிறார், சில தீமைகளுக்கு செல்கிறார் - ஏனென்றால் அவருக்கு அதன் மதிப்பு தெரியாது. இந்து மதம் அப்படித்தான் இவர்களுக்கு வந்திருக்கிறது.
எந்த மக்கள்?
எவரெல்லாம் இந்துத்துவாவை விமர்சிக்கிறார்களோ அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியாது.
(பிரண்ட்லைன், ஜனவரி 28, 1994).
வகுப்புவாதப் போராட்டம், ஆகஸ்ட் 2004, ஆண்டு வெளியீடு (11வது), ஆண்டு 11 எண்.100, தலையங்கம் 7 ஆகியவற்றிலிருந்து ஆவணப்படுத்தப்பட்டது.
- வெண்பா
(தமிழில்)
மூலக்கட்டுரை: sabrangindia.in