விழிஞ்சம் துறைமுக தடுப்பரண் அமைக்க அதானி குழுமத்திற்கு ரூ.100 கோடியை கேரள அரசு வழங்குகிறது

நிதி நிறுவனங்களில் கடன்பெற்று அதானிக்கும் அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டங்களுக்கும் சேவை செய்யும் பினராயி விஜயன் அரசு

விழிஞ்சம் துறைமுக தடுப்பரண் அமைக்க அதானி குழுமத்திற்கு ரூ.100 கோடியை கேரள அரசு வழங்குகிறது

விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தின் ஒரு அங்கமான அலை-தடுப்பரண் (Breakwater) அமைக்க கேரள அரசு தனது பங்காக ரூ.100 கோடியை ஒப்படைத்துள்ளது. இந்த தொகை கட்டுமான செலவின் முதல் தவணையே ஆகும்.

தடுப்பரண் கட்டுமானச் செலவில் 25% தொகையான ரூ.347 கோடியை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. கேரளாவின் நிதி நெருக்கடி காரணமாக, ரூ.100 கோடியை கேரள நிதி நிறுவனத்திடமிருந்து (Kerala Financial Corporation - KFC) கடன் பெற்றுக் கொடுத்துள்ளது அரசு.

மீதமுள்ள தொகையை இம்மாதத்தில் செலுத்தக்கூடும் என விழிஞ்சம் சர்வதேச துறைமுக நிறுவனத்தின் (VISL) நிர்வாக இயக்குனர் டாக்டர் அடீலா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்திடம் (ஹட்கோ - HUDCO) கடனைப் பெறுவதற்கான முயற்சிகள் தாமதமானதால், மாநிலத்தின் பங்கை செலுத்துவதற்கான கடன் KFC யிடமிருந்து வாங்கப்பட்டது. ரயில்வே திட்டங்களுக்காகவும், நிலம் கையகப்படுத்துவதற்காகவும் தலா ரூ.100 கோடியை மாநில அரசு வழங்கவுள்ளது. மேலும், இந்த செலவினங்களுக்காக, கூட்டுறவு வங்கிகளின் கூட்டமைப்பிடம் இருந்து, 550 கோடி ரூபாய் கடன் பெறவும் அரசு முயற்சித்துள்ளது.

ஹட்கோ நிறுவனத்திடமிருந்து ரூ.3,400 கோடி கடனை அரசு எதிர்நோக்கியுள்ளது. இதில் விழிஞ்சம்-பாலராமபுரம் ரயில் பாதை திட்டத்துக்கு ரூ.1,170 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக 818 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 400 கோடி ரூபாயும் அதானி குழுமத்திற்கு வழங்க சம்மதித்துள்ளன..

(அலை-தடுப்பரண் (Breakwater) என்பது சிற்றலைகள் முதல் புயல் அலைகள் வரையிலானவையால் ஏற்படும் கடல் அரிப்பு உள்ளிட்ட தாக்குதல்களிலிருந்து கரையையும் மீன்பிடிக் கப்பல்களையும் பாதுகாப்பதற்காக கரையோரத்தில் கட்டப்படும் பாறைக்கல்  குவியல்களாலான தடுப்பு சுவர்)

- வெண்பா 

(தமிழில்) 

மூலக்கட்டுரை : https://www.onmanorama.com/news/kerala/2023/04/01/vizhinjam-port-breakwater.html