இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது வதந்தியா? உண்மை என்ன?

செந்தளம் செய்திப்பிரிவு

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது வதந்தியா? உண்மை என்ன?

“இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது என்று சொல்வது வதந்தி” என்கிறார் மோடி

RBI வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி கடந்த 4-5 ஆண்டுகளில் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று மோடி சென்ற வாரம் மும்பை வந்திருந்த போது பேசியுள்ளார்.

 

இந்தியாவிற்கு அதிகாரம் கைமாற்றித் தரப்பட்டது முதல் 60 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த எந்தவொரு ஐந்தாண்டு திட்டத்திலும் ஒரு அம்சம் மட்டும் தவறாமல் இடம்பெற்றிருந்தது. இன்றுவரையிலும்கூட எந்தவொரு அரசாங்கம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அந்தவொரு அம்சம் மட்டும் தவறாமல் இடம்பெற்றுத்தான் வருகிறது. “வேலைவாய்ப்பு” என்ற ஒரு அம்சம்தான் எந்தவொரு ஆட்சியாளர்களின் வீர வசனத்திலும், வாய்ச்சவடால்களிலும் தவறாமல் இடம்பெறுகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இதே அம்சம்தான் மக்கள் மத்தியிலிருந்தோ அல்லது இன்னப்பிற பொருளாதார வல்லுநர்களிடமிருந்தோ(சமீபத்தில் சிட்டி வங்கியும்) போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்றவாறு கோரிக்கைகளாகவோ, விமர்சனங்களாகவோ முன்வைக்கப்படும் போது மட்டும் RBI, SBI, நிதித்துறை முதலான பல்வேறு அரசின் உறுப்புகளையும் துணைக்குக் கொண்டு வந்து வேலையில்லாத் திண்டாட்டமெல்லாம் இல்லை என்று மக்களை ஏய்க்க முயற்சிக்கிறார்கள்.

இதைப் பற்றி நாம் ஆழமான ஆராய்ச்சிக்கு போகாமல், சமீபத்தில் வந்த சில செய்திகளின் உண்மைத் தன்மைப் பற்றி கொஞ்சம் அலசிப் பார்த்தாலே சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும்.

சம்பவம் 1 

மும்பை விமான நிலையத்தில் லோடர்(எடுபிடி-கையாள்) உள்ளிட்ட 2,216 காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை ஒன்றை தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. இதற்கான விண்ணப்பத்தை உரிய கட்டணம் செலுத்தி நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 22,000 முதல் 25,000 வரை சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து 25,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மும்பை விமான நிலைய வளாகத்தில் ஒன்றுகுவிந்துவிட்டனர். இதிலிருந்த பலரும் விமான நிலையத்தில் லோட் மேன் பணிக்காகவே விண்ணப்பிக்க இருப்பதாக தெரிவித்திருந்தனர். மொத்தமிருந்த காலிபணியிடங்களில் வெறும் 600 லோட் மேன் பணியிடங்கள் மட்டுமே இருந்துள்ளது. 

 

400 கி.மீ தொலைவிலிருக்கும் புல்தானா மாவட்டத்திலிருந்து பிரத்தமேஷ்வர் என்ற இளைஞர் நேர்காணலுக்கு வந்துள்ளார். தான் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், தனக்கு இந்த வேலை கிடைத்தால் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடலாமென இருப்பதாகவும் கூறினார். மேலும், அவர் பேசிய போது,“எங்கு போனாலும் வேலையில்லை வேலையில்லை என்று சொல்கிறார்கள். எங்களால் என்ன செய்ய முடியும். அரசாங்கம்தான் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றவாறு பேசியுள்ளார்.

இளங்கலை பிரிவில் பட்டம்பெற்ற இளைஞர் ஒருவர் தனக்கு எடுபிடி-கையாள் வேலைப் பார்த்து பழக்கமில்லை, ஆனால் எனக்கு “இந்த வேலை அவசியம் வேண்டும்” என்று கூறியுள்ளார். மற்றொரு இளைஞர் தான் ராஜஸ்தானிலுள்ள அல்வார் பகுதியிலிருந்து வருவதாகவும், தான் எம்.சி.ஏ. பிரிவில் பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறுவதோடு, சாதாரண கல்வித் தகுதியுடைய எடுபிடி வேலைக்கு விண்ணப்பிக்க வந்திருப்பதாக கூறுகிறார். மேலும், தான் “அரசுப் பணித் தேர்வுக்கு படித்து வருபவர் என்றும், ஏர் இந்தியா விமான நிலையத்தில் உள்ள பணியில் நல்ல சம்பளம் அறிவித்துள்ளதாக தனக்கு சிலர் கூறியதால் இங்கு வந்துள்ளேன்” என்று கூறுகிறார். 

சம்பவம்-2

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் செய்தி வருவதற்கு முன்புதான் குஜராத்தில் பரோச் மாவட்டத்தில் வெறுமனே 10 காலிப் பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பிக்க வந்திருப்பதாக செய்தி வெளியாகி பெரும் விவாதத்தை நாடு முழுவதும் கிளப்பியிருந்தது.

வேதியியல் கம்பனி ஒன்றில் 10 காலிப் பணியிடங்களுக்காக நேர்காணலுக்கு வந்தவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன் வரிசையில் நின்று நேர்காணலுக்கு சென்றுவிட வேண்டும் என்பதற்காக நெரிசலில் முட்டிமோதிக்கொண்டு இருக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவியது. இதை வைத்துத்தான் குஜராத் மாடல் குறித்தான விமர்சனங்கள் சில வாரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டது.  படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுவதுதான் குஜராத் மாடல் என்றெல்லாம் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் விமர்சனங்கள் எழுந்தன.

 

சம்பவம்-3

அம்பானி வீட்டின் திருமண நிகழ்விற்கு மணமக்களை வாழ்த்துவதற்காக ஜீலை 12 அன்று மும்பைக்கு வந்திருந்தார் மோடி. அடுத்த நாள், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பேசியபோது, ஆர்.பி.ஐ., எஸ்.பி.ஐ., வெளியிட்டிருந்த அறிக்கைகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். ஆர்.பி.ஐ. வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி கடந்த 4-5 ஆண்டுகளில் 8 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். எஸ்.பி.ஐ. வெளியிட்டிருந்த மற்றொரு அறிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது.

 

எதிர்கட்சியினர் வேண்டுமென்றே பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதாக மோடி அடிக்கல்நாட்டு விழாவில் பேசிச் சென்றுள்ளார்.

உண்மையென்ன?

ஒருபுறம், அரசும், அரசு நிறுவனங்களும் மட்டுமல்லாது அவர்களின் ஆதரவாளர்களும் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை என்று அடித்து பேசி வருகிறார்கள். ‘குஜராத்தில் நடந்த சம்பவம் என்னவோ உன்மைதான், ஆனால், வேலையில்லாதவர்கள் அந்த பணிக்கு விண்ணப்பிக்கவில்லை மாறாக, ஏற்கனவே பணி அனுபவம் வாய்ந்தவர்கள், பணியிலுள்ளவர்களே விண்ணப்பிக்க வந்துள்ளனர்’ என்று மோடி ஆதரவு ஊடகங்கள் உண்மையறிந்து(Fact-check) கூறுவதாக செய்தி வெளியிட்டிருந்தன. மும்பையில் மோடி சொன்னது போல் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டமெல்லாம் இல்லை என்பதையும் சேர்த்து மோடி ஆதரவு ஊடகங்கள் தப்புத் தாளம் போட்டார்கள்.

இப்படியிருந்த நிலையில்தான், நான்கு நாள்களுக்கு முன்பு, - கல்யாண விருந்திற்கு மோடி வந்து சென்ற பிறகு – வேலையில்லாத் திண்டாட்டம் எல்லாம் நாட்டிலில்லை; எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள் – என்று சொல்லிச் சென்ற பிறகு, மும்பை விமான நிலையத்தில் 600 லோட் மேன் பணியிடங்கள் உட்பட 2,216 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக 25,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்ததால் பெரும் கூட்ட நெரிசலில் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவானது. வந்துள்ள பலரும் சாதாரண எடுபிடி-கையாள் வேலைக்கு விண்ணப்பிக்க வந்திருப்பதாகவே கூறினர். அதாவது 600 காலியிடங்கள் உள்ளதென்றால் அதற்காக 15,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க போட்டியிடுகின்றனர். ஒரு காலியிடத்திற்கு குறைந்தது 25 பேர் வேலைத் தேடி நிற்கின்றனர். இது வெறும் ஒரு தனியார் நிறுவனத்தின்கீழ் கிடைக்கும் பணிவாய்ப்பின் நிலவரம். இதே பல்வேறு சலுகைகளுடன் கிடைக்கும் அரசு வேலை என்றால் போட்டியின் தீவிரம் 8 மடங்கு அதிகமாகிறது. ஒரு காலிப் பணியிடத்திற்கு 200 பேர் பணி வாய்ப்புகளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். 

உத்தேசமாக கணக்கிட்டு பார்ப்போம்

மும்பையில் ஒன்றுகுவிந்த 25,000 பேரில் தோராயமாக 18,000 பேர் ஏற்கனவே மிகக் குறைந்த கூலிக்கு வேலையிலிருப்பவர்களாக அனுமானித்து, மீதமுள்ள 5,000 – 7,000 பேரில் தொடர்ந்து வேலைத் தேடுகிறவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இருக்கின்ற 2,500 காலிப் பணியிடங்களில் பணி வழங்கினால்கூட எவ்வித வேலையுமில்லாமல்(unemployed) வந்த இரண்டு அல்லது மூன்றில் ஒருவருக்குத்தான் பணி வழங்க முடியும். அதாவது, 50-65% பேர் மறுபடியும் வேறு வேலை தேடி அலைய வேண்டும். இப்படியே தொடர்ந்து வேறு வேலைத் தேடினாலும் வேலையின்மை விகிதம் 40-50 சதவீதத்திற்கு கீழ் செல்லுவதற்கு வாய்ப்பேயில்லை. ஆனால், அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்களின்படி வேலைத் தேடுபவர்களின் விகிதம் 10 சதவீதத்தை தாண்டிவிட்டதாகக்கூட இதுவரை எந்த நாளிதழிழும் செய்தி வந்தததாக நாம் பார்த்திருக்க முடியாது.

20,000 ரூபாய்க்கு மேலான சம்பளமே நல்ல சம்பளம் என்று கருதி பல நூறு கி.மீ பயணம் செய்து, பல உயர் கல்வி பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ஏன் அரசுப் பணி எதிர்பார்த்து வேலையில்லாமல்(Jobless) இருப்பவர்கள்கூட சாதாரண லோட் மேன் பணிக்கு விண்ணப்பிக்க வந்திருப்பதை பார்த்தும், சிலர் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம்(Unemployment crisis) இல்லை என அடித்துக் கூறுகின்றனர்.

திராவிட மாடலும் விதிவிலக்கல்ல

இவையெல்லாம் ஏதோ வடக்கில் மட்டும் நடப்பதாக நினைத்துக் கொள்ளக்கூடாது. திராவிட(போலி) முற்போக்குகளுக்கு வேண்டுமானால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தலைநிமிரச் செய்வதாக இருக்கலாம். ஆனால், களநிலவரம் வேறாக இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு கூலி 30 ரூபாய், 40 ரூபாய் என்றளவிற்கு நேர்காணலில் பேரம் பேசப்படுகிறது. இது ஏதோ தமிழ் தெரியாத வடக்கு நண்பருக்கு இப்படி நடத்திருக்கலாம் என தப்புக் கணக்கு போட வேண்டாம். தொழில் தெரிந்தவராக இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும் பணி அணுபவம் இல்லாத இளைஞர்களுக்கு மாதச் சம்பளம் 8,000 என்பதிலிருந்துதான் துவங்குகிறது. 12 மணி நேர வேலை, வாரத்தில் ஆறு நாள், தேவைப்பட்டால் weekend support என்ற பெயரில் வாரத்தில் ஏழு நாள்களும் வேலைவாய்ப்பை போதும் போதும் என்கிற அளவுக்கு வாரி வழங்கிவிடுவார்கள் சேவைத்துறையைச் சார்ந்த சிறு-குறு முதலாளிகள்.

மக்கள் விரோத புள்ளிவிவரக் கொள்கை

மேற்கண்ட சம்பவங்களிலிருந்து ஒன்று மட்டும் நம்மால் அறுதியிட்டு கூற முடியும்: ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான புள்ளிவிவரங்களையும், தரவுகளையும் மூடிமறைக்கிறார்கள். இதைத்தான் ஆல்பர்ட் பெர்ட்டில்சன், “போதுமான புள்ளிவிவரத் தகவல்கள் இல்லையென்றால் வேண்டாத/கசப்பான உண்மைகள் மூடிமறைக்கப்பட்டுவிடும்” என்று கூறியிருப்பார். அவ்வாறுதான் ஆளும் வர்க்கங்களுக்கும், அதன் கைத்தடிகளுக்கும் வேண்டாத/கசப்பான உண்மைகளை, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்திவிடும் என்பதற்காகவே இந்தளவிற்கு மூடிமறைக்க படாதபாடுபடுகிறார்கள்.

வேலைத் தேடி விமான நிலையத்தில் குவிந்திருந்தவர்களில் வேலைவாய்ப்பற்றவர்களும்(Unemployed), நல்ல சம்பளம் எதிர்ப்பார்த்து வந்த வேலையில்லாதோரும்(Jobless) இருந்துள்ளனர் என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். “வேலையற்று இருப்பதோடு தற்போது நிலவுகின்ற கூலி விகிதத்தில் தொடர்ச்சியாக வேலைத் தேடி எவ்வித வேலைவாய்ப்புகளும் கிடைக்காத நிலையையே வேலையின்மை(Unemployment)” என்று சர்வதேச தொழிலாளர் கழகம்(ILO) வரையறை செய்துள்ளது. இவர்கள் சொல்லும் வரையறையின்படி பார்த்தால் மாதம் 8,000 அல்லது அதைவிட குறைவான கூலிக்கு வர விரும்பாதவர்களை கணக்கில் சேர்க்கமாட்டார்கள் போல. வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்ப முடியாதளவிற்கு குறைத்து சொல்லப்படுவதற்கு இதுபோன்ற பல வரையறைகளை இவர்களே உருவாக்கிக் வைத்திருப்பதே முக்கியமான காரணம்.  இதே ILOதான் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் 29 சதவீதம் பேர் வேலையில்லாமல் திண்டாடுவதாக கூறப்பட்டிருந்தது. இவர்கள் கணக்கின்படியே கிட்டத்தட்ட 30 சதவீதம் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதாக கூறுகிற போது, மேற்கண்ட மும்பை சம்பவத்தில் நமது கணிப்பின்படி வேலைவாய்ப்பில்லாதவர்களின்(Unemployed) விகிதம் நிச்சயமாக 40% மேல் இருக்கும் என்பது மிகையாகாது.

நூற்றாண்டுகாலமாக தொடரும் வேலையின்மை பிரச்சனையும், முதலாளித்துவ பொது நெருக்கடியும்

அக்டோபர் 31, 1920-ம் ஆண்டில் பம்பாயில், லாலா லஜபதி ராய் தலைமையில் அகில இந்திய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு கூட்டப்பட்டது. அப்போது நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான தீர்மானங்களில் வேலையில்லாதவர்களுக்கென ஒரு பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும் என்ற தீர்மானமும் ஏற்கப்பட்டிருந்தது. 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்று வரை அரசோ அல்லது தொழிற்சங்கவாதத்தில் மூழ்கியுள்ள கட்சிகளோ எந்த பதிவேட்டையும் பராமரித்து வருவதாகத் தெரியவில்லை. 

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனையில் நாம் பார்த்தது ஒரு பகுதிதான், முதலாளித்துவ நெருக்கடி காரணமாகவும், அறிவியல்-தொழில்நுட்பங்கள் மூலமாக நவீனப்படுத்தப்படும்-தீவிரப்படுத்தப்படும் உழைப்புச் சுரண்டலினால் பணியிலிருந்து தூக்கியெறிப்படும் தொழிலாளர்களின் வேலையின்மையும் சேரும் போது இந்த பிரச்சனையின் கூர்மையை மூடிமறைக்க முடியாதளவிற்கு பூதாகரமாக வெளிப்பட்டு நிற்கும் என்பதையே வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

- செந்தளம் செய்திப்பிரிவு