நொறுங்கி விழுந்த அதானி பிம்பம்

பிஜே ஜேம்ஸ்

நொறுங்கி விழுந்த அதானி பிம்பம்

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி பிம்பம் உடைந்தது; மோடி அரசால் தன் பொறுப்பிலிருந்து விடுபட முடியுமா?

இந்த வரிகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதானி குழுமம் ஏற்கனவே 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக (ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல்) இழந்துள்ளது, ஜனவரி 24 முதல் அதன் சந்தை மதிப்பில் ('மொத்த சந்தை மூலதனம்') கிட்டத்தட்ட 20 சதவீதமாகும். ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் "நம்பகமான மற்றும் நன்கு ஆராயப்பட்ட" அறிக்கை, "பல தசாப்தங்களாக கேவலமான பங்கு திருட்டு மற்றும் கணக்கீட்டு மோசடிகள்" மூலம் இந்தியாவின் மிகப் பெரிய புல்லுருவித்தனமான முதலாளியாக வளர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. பட்டியலிடப்பட்ட 7 அதானி நிறுவனங்களின் பங்குகளின் விலையை அவற்றின் 'பங்கு மதிப்பில்' 85 சதவீதத்திற்கும் அதிகமாக ஏற்றிச் சென்ற "வானளவிலான மதிப்பீடுகள்" - பங்குகளில் கையாளுதல் மற்றும் சமாளிக்க முடியாத கடன் அளவுகள் ஆகியவற்றை பற்றி மட்டுமே ஹிண்டன்பர்க் கவனம் செலுத்தியுள்ளது.

ஆனால் இந்தியாவிற்கு மிகவும் தீங்கானது அதானியின் இந்த 'மோசடி'யுடன் தொடர்புடைய அடிப்படையான 'வங்கி வெளிப்பாடுகள்' ஆகும். ஹாங்காங் சார்ந்த முதலீட்டு குழுவான CLSA (கிரெடிட் லியோனைஸ் செக்யூரிட்டீஸ் ஆசியா) படி, அதானியின் ரூ. 2 லட்சம் கோடி 'கடன்' (மார்ச் 2022 நிதியாண்டு மதிப்பீட்டின் படி), 40 சதவீதம் இந்திய பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து வந்ததாகும். எல்ஐசி அதானியின் உயர்த்தப்பட்ட பங்குகளில் செய்த  ரூ. 77000 கோடி முதலீட்டில் இரண்டு நாட்களில் மட்டும்  ரூ. 23500 கோடி நஷ்டமடைந்துள்ளது! அதானி குழுமத்திற்கு தனியார் வங்கிகளை விட இரண்டு மடங்கு கடனை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வழங்கியுள்ளன. SBI மட்டுமே இந்திய அரசுடன் அதானியின் நெருங்கிய தொடர்பின் அடிப்படையிலும் வெறும் 'நம்பிக்கை' அடிப்படையிலும் மட்டுமே கடன் வழங்கியது. இதனால் வெளிப்படையாக, மில்லியன் கணக்கான இந்தியர்களின் கடின உழைப்பின் சேமிப்பு ஆபத்தில் உள்ளது.

ஊழல் ஒழிப்பு நாடகமாடி ஆட்சிக்கு வந்த மோடியின் கார்ப்பரேட்-காவி ஆட்சியின் கீழ், அதானி, புல்லுருவி முதலாளித்துவத்தின் உருவகமாக தன்னை மாற்றிக் கொண்டார், உலக கார்ப்பரேட் வரலாற்றில் இதுவரை அறியப்படாத அளவிற்கு தனது செல்வத்தை விண்ணில் செலுத்தினார். கறுப்புப் பணத்திற்கு எதிரான மோடியின் வியாக்கியானங்களுக்கு மத்தியில், பணமதிப்பு நீக்கம் என்ற தன்னிச்சையாக அமல்படுத்தபட்ட முடிவானது இந்திய மக்கள் மீதான மிகப்பெரிய "கார்ப்பரேட்-தாக்குதலாகும்", அதானி தடையற்ற பொருளாதார மற்றும் நிதி வழிகளில் பொதுச் செல்வங்களையும் வங்கிப் பணத்தையும் கொள்ளையடித்தார். இந்த விவரங்கள் பொது தளத்தில் ஏற்கனவே உள்ளன. பணக்கார இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெரும் டெபாசிட்களை திரும்பப் பெறுவது குறித்த மோடியின் நாடகங்கள் இருந்தபோதிலும், அதானி வெளிநாட்டு வரிச் சொர்க்கங்களை எளிதாகப் பயன்படுத்த முடியும். எனவே, அறிக்கையின்படி, செப்டம்பர் 30, 2022 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதானி குழுமத்தின் நிகர லாபம் மட்டும் ரூ.900 கோடிக்கு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதோடு, அதன் மொத்த வருமானம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக (ரூ. 79500 கோடி) உயர்ந்துள்ளது.

நிச்சயமாக, அதானி பிம்பம் அரசியல் அடிப்படையானது, ஊக வணிகமும்  பொதுச் சொத்துக்கள் வங்கிப் பணத்தைக் கொள்ளையடிப்பதுடனோடும், கடந்த இரண்டு தசாப்தங்களாக அவர் அரச அதிகாரத்துடன் நெருக்கமாக இருந்தது போன்றவையே அதன் சாராம்சமாகும். 2001 ல், அம்பானியுடன் ஒப்பிடும்போது அதானி ஒரு சிறிய துரும்பாக இருந்தார், அம்பானியுடையது மிகப்பெரிய இந்திய நிறுவனமாகவும், அச்சமயத்தில் அதானியை விட 500 மடங்கு அதிகமான சொத்துடையதாகவுமிருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட்டாகவும், உலகின் மூன்றாவது பணக்கார பில்லியனராகவும் மாறிய அதானியின் இந்த ஏற்றம் மோடியுடனான கூட்டிலிருந்து பிரிக்க முடியாதது. கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர், 1980களில் பண்ட வர்த்தகத் தொழிலை நிறுவி தனது வாழ்க்கையைத் தொடங்கினார், 1990களின் தாராளமயமாக்கல்-உலகமயமாக்கல் ஆட்சிதான் அதானிக்கு 1995ல் முந்த்ரா துறைமுகத்தை அமைக்க உதவியது. 2002ல் அதானியின் முக்கிய ஹோல்டிங் நிறுவனத்தின் மொத்த மதிப்பு வெறும் 70 மில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் ஒரு தசாப்த காலத்திற்குள், அதானி தனது செல்வத்தை 20000 மில்லியன் டாலராக (300 மடங்கு வளர்ச்சி) உயர்த்த முடிந்துள்ளது, இது கார்ப்பரேட் வரலாறே காணாதது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது!

2014ல் மோடி பிரதமராவதற்கு முன், அதானிக்கு சொந்தமான தனியார் ஜெட் விமானத்தில் அடிக்கடி பறந்து செல்வதை காண முடிந்தது. மேலும், மோடியின் ஆட்சியில் அதானி மற்ற இந்திய பெருநிறுவன பில்லியனர்களை விட அதிகமாக அவருடன் பயணம் செய்தார். அவர் மோடியுடன் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா அல்லது நியூயார்க்கிலிருந்து கான்பெரா வரை அனைத்து கண்டங்களையும் உள்ளடக்கிய உலகம் முழுவதும் பறந்து செல்வதைக் காணலாம். அதானியின் செல்வம் மென்மேலும் பல மடங்கு பெருகியது. மற்றவை அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் நம்பர் ஒன் மற்றும் உலகின் மூன்றாவது பணக்கார பில்லியனராக  புல்லுருவி முதலாளித்துவ அதானியின் வானளாவிய உயர்வே இந்தியாவின் மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கும், காவி-கார்ப்பரேட் பாசிச ஆட்சியின் கீழ் இந்தியாவை 'உலகளாவிய வறுமையின் கோட்டையாக' மாற்றியமைக்கும் கொடூரமான நிலைகளுக்கும் காரணமாகும்.

அதே நேரத்தில், இன்றைய பெருநிறுவன மூலதனத்தின் இயக்க விதிகளின்படி, அதானி பிம்பம் உடைவதில் பாதிப்பு எதுவும் இல்லை. புதிய தாராளவாதத்தின் கீழ் அதானி மற்றும் அவரது போக்கால் கட்டமைக்கப்பட்ட 'கற்பனையான' நிதிப் பேரரசு, உற்பத்தியில் எந்தவிதமான பொருள் அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. அதானியால் திரட்டப்பட்ட 'நிதி மூலதனம்' அல்லது ஊகச் சொத்தின் சந்தை மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டு, குறைந்த நேரத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக வழங்கல் மற்றும் தேவையை கையாளுவதன் மூலம் உயர்த்தப்படுகிறது. அத்தகைய சொத்துக்களின் உயர்த்தப்பட்ட மதிப்புகள், அதன் மேல்நோக்கிச் செல்லும் சுழலில் சிறிய இடையூறு ஏற்பட்டாலும் கூட, பலூன்கள் போல எளிதில் துளைக்கப்படலாம், இதன் விளைவாக அது எளிதில் உடையலாம். ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி பங்குகளின் திடீர் சரிவு இன்றைய கார்ப்பரேட் திரட்சியின் இந்த உள்ளார்ந்த அர்த்தத்தில் பார்க்கப்பட வேண்டும். ஊடக அறிக்கைகள் குறிப்பிடுவது போல், புதிய நிதி மற்றும் பங்குச் சந்தைகளின் தோற்றம், தடையற்ற சுதந்திரம் மற்றும் கார்ப்பரேட் மூலதனத்தின் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை மறைமுக வர்த்தகத்தின் (Insider trading) சாத்தியக்கூறுகள் போன்றவை நிலைமையை கார்ப்பரேட்-காவி நவபாசிச ஆட்சியால் கூட கட்டுப்படுத்த முடியாததாக ஆக்கியுள்ளன.

மோடி ஆட்சியின் தீவிர வலதுசாரி புதிய தாராளவாதக் கொள்கைகளான தாராளமய வரி, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மட்டுமே நிலம், இயற்கை, கனிமங்கள், ஆதாரங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பங்குகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற தேசிய சொத்துக்களை சொற்ப விலையில் வாங்குவதற்கு அதானியால் முடிந்தது, அதுவும் முக்கியமாக ஊக வணிகத்தில் இருந்து கொண்டு. அதிகாரத்துடனான அவரது கள்ள உறவு, வெறும் 'நல்ல எண்ணத்தின்' அடிப்படையில் அவரது செழிப்பான கார்ப்பரேட் சாம்ராஜ்யத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வங்கிப் பணத்தை பாரியளவில் மாற்றுவதை எளிதாக்கியது. இப்போது ஹிண்டன்பேர்க் ஆராய்ச்சி அறிக்கையைத் தொடர்ந்து, திடீரென்று இன்று கார்ப்பரேட்மயமாக்கலின் உள்ளார்ந்த தர்க்கத்தின்படி, அதானியின் சொத்துக்கள் பங்குச் சந்தையில் மோசமான நிலைக்கு வீழ்ச்சியையும் வெளியேற்றத்தையும்  எதிர்கொள்கின்றன.

இப்போது அதானி தனது கார்ப்பரேட் வரலாற்றில் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, அதானி தனது பணத்தைச் சுழல் வணிகங்களுக்குப் பயன்படுத்திய சொத்துக்களின் இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகபட்ச "சந்தை வெளிப்பாடு" என்று அழைக்கப்படும் வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அதிகாரிகளின் அவசரத் தலையீட்டிற்கு உட்பட்டவை. அதே நேரத்தில், வரி செலுத்துவோர், வங்கி டெபாசிட் செய்பவர்கள் மற்றும் சாமானியர்களின் தோள்களில் முழுச் சுமையையும் ஏற்றி அதானியை பிணை எடுப்பதற்காக மோடி ஆட்சியின் எந்த ஒரு "மீட்பு நடவடிக்கையிலும்" மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இழிவான வளர்ச்சிக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்த பொறுப்பிலிருந்து மோடி ஆட்சி தட்டிக்கழிக்க முடியாது, எனவே சரியான நடைமுறைகளின் அடிப்படையில் மக்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

(சிபிஐ (எம்எல்) ரெட் ஸ்டார் கட்சியின் பொதுச் செயலாளர் பிஜே ஜேம்ஸ்)

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2023/01/bursting-of-adani-bubble-due-to-hindenburg-impact-can-modi-govt-absolve-of-its-responsibility/