அதிகார வர்க்கத்தினர் அரை டவுசரில் வரலாம்

ஆர்.எஸ்.எஸ்.ல் அரசு ஊழியர்கள் பங்கெடுக்க இருந்த தடை நீக்கம் குறித்து காங்கிரஸ்

அதிகார வர்க்கத்தினர் அரை டவுசரில் வரலாம்

ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது; ‘அதிகார வர்க்கத்தினர் அரை டவுசரில் வரலாம்’ என்கிறது காங்கிரஸ்.

(கட்டுரையாளர்: அல்கா ஜெயின்)

ராஷ்டிரிய ஸ்வயம்சேவா சங்கத்தின்(RSS) எந்தவொரு செயல்பாடுகளிலும் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது என விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மத்திய அரசாங்கம் இரத்து செய்ததைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியலான கருத்து மோதல் உருவாகியுள்ளது.

பாஜக தலைவர் அமித் மாளவியா தனது X தளத்தில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்ந்த பணிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, என 58 ஆண்டுகளுக்கு முன்பு 1966-ல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக விதிக்கப்பட்ட தடை உத்தரவை மோடி அரசாங்கம் இரத்து செய்துள்ளது. அப்போதும் சரி, இப்போதும் சரி இப்படியொரு உத்தரவை அரசு பிறப்பித்திருக்கக் கூடாது என்றே நாங்கள் கூறி வருகிறோம்”, என்று பதிவிட்டுள்ளார்.

“1966, நவம்பர் 7 அன்று நாடாளுமன்றத்தின் முன்பு பசு வதைக்கு எதிராக பெருந்திரளான ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதால் இத்தடை விதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். – ஜன சங்கமும் ஒன்றிணைந்து இலட்சக் கணக்கில் ஆட்களைத் திரட்டியிருந்தார்கள். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறப்புகளும் ஏற்பட்டது. 1966, நவம்பர் 30, அன்று அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ல் சேர்வதற்கு தடைவிதித்ததென்பது ஆர்.எஸ்.எஸ். – ஜன சங்கத்தின் செல்வாக்கை அசைத்துப் பார்த்தது” என்று அமித் மாளவியா பதிவிட்டிருந்தார்.

மக்கள் வழங்கிய தீர்ப்பிலிருந்து பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் எந்த படிப்பினையும் கற்கவில்லை என்பதை சொல்லும் வகையில் மத்திய பணியாளர் நல அமைச்சகம் “மிக மோசமான முடிவை” அறிவித்துள்ளது என்று காங்கிரசு எம்.பி. கே.சி. வேனுகோபால் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இரத்து செய்தததற்காக மத்திய அரசாங்கத்தை மஜ்லிஸ் கட்சியின்(AIMIM) தலைவர் அசாவூதின் ஓவைசி விமர்சித்துள்ளார். “…தடை நீக்கம் உண்மையென்றால், இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாக அமையும். இந்திய அரசியலமைப்பையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் ஏற்றதில்லை என்பதால்தான் தடை விதிக்கப்பட்டிருந்தது.”

“நாட்டைக் கட்டிக் காப்பதைவிட இந்துத்துவக் கொள்கைகளை கட்டிக் காப்பதே தங்களது தலையாயக் கடமை என்று ஒவ்வொரு RSS உறுப்பினரும் உறுதிமொழி எடுப்பார். அரசு ஊழியர்கள் RSS உறுப்பினராக இருந்தால், நிச்சயமாக அவர்களால் நாட்டிற்கு விசுவாசமாக சேவை செய்ய முடியாது…,” என்று அசாவூதின் ஓவைசி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியிலிருந்த போதுகூட இந்தத் தடை நீக்கப்படவில்லை, ஆனால், ஜீலை 9ம் தேதி, இப்போதுள்ள ஒன்றிய அரசு, RSS மீதிருந்த தடையை நீக்கியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பிப்ரவரி 1948 அன்று சர்தார் படேல் RSS அமைப்பிற்கு தடை விதித்தார். பின்னர் நன்னடத்தை உத்தரவாதம் பெறப்பட்ட பிறகே இந்த தடை அன்று அவரால் இரத்து செய்யப்பட்டது. “…அதன் பிறகும்கூட, நாக்பூரிலுள்ள RSS தலைமையகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியதே இல்லை. பிறகு, 1966ல், மிகச் சரியாகவே, RSS சார்ந்த பணிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என தடைவிதிக்கப்பட்டது,” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

“…தனக்குத் தானே புனிதர் பட்டம் கொடுத்துக் கொள்ளும் பார்ப்பண இரத்தம் ஓடாத பிரதமருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வாஜ்பாய் ஆட்சியிலிருந்த போதுகூட நீடித்து வந்த 58 ஆண்டு காலத் தடை உத்தரவை ஜீலை 9, 2024ல், பிரதமர் இரத்து செய்துள்ளார். இனி, அரசு ஊழியர்கள் அரை டவுசர் அணிந்து வரலாம் என நினைக்கிறேன்,” என்று ஜெய் ரமேஷ் கூறியுள்ளார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை : https://www.livemint.com/news/india/ban-lifted-on-govt-employees-participation-in-rss-activities-sparks-row-cong-says-bureaucracy-can-come-in-knickers-11721625280355.html