தனியார்மயமாக்கலை பேராவலோடு வரவேற்கும் இஸ்ரோ

தமிழில் : விஜயன்

தனியார்மயமாக்கலை பேராவலோடு வரவேற்கும் இஸ்ரோ

Disclaimer: டைம்ஸ்நவ் ன் இச்செய்தி கட்டுரை முழுக்க முழுக்க தனியார்மய ஆதரவு நிலையிலிருந்து எழுதப்பட்டுள்ளது. தனியார்மயத்தின் கோரமுகத்தை இன்று பல்வேறுத் துறைகளில் நாம் எதிர்கொண்டு வருகிறோம். விண்வெளித்துறையில் தனியார்மயம் என்பது நாட்டை மிக மோசமான நெருக்கடிக்குள்ளேயே தள்ளும்; தனியார்மயம் என்பது சுயசார்பை ஒழித்துக்கட்டும். இக்கட்டுரையை செய்திக்காகவும், விவாதத்திற்காகவும் இத்தளத்தில் வெளியிடுகிறோம். 

தனியார் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படும் எஸ்.எஸ்.எல்.வி.

இஸ்ரோ என்று அறியப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறிய ரக செயற்கைகோள்களை ஏந்திச் செல்லும் ஏவுவூர்திக்கான(SSLV) தொழில்நுட்பத்தை தனியார் துறையினருக்கு வழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் செயற்கைகோள் சேவைத் துறையை வணிகமயமாக்குவதற்கான வேகம் அதிகரிக்கக்கூடும்.

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பாக இஸ்ரோ அறிவித்துள்ள திட்டங்கள் துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இரண்டுமுறை ஏற்கனவே சிறிய ரக செயற்கைகோள்களை ஏவி சோதனை செய்து பார்த்ததில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளதை தொடர்ந்தே இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது இஸ்ரோவின் புத்தம்புதிய கண்டுபிடிப்பாகும்.  சிறிய ரக செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்துவதற்கான கிராக்கி அதிகாமாகிக் கொண்டே செல்வதால் துரிதகதியில் இவ்வகையான செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்துவதற்கென்று பிரத்யேகமாக எஸ்.எஸ்.எல்.வி வடிவமைக்கப்பட்டுள்ளது. புவியின் கீழ் இருக்கும் சுற்றுவட்டப் பாதையில்(low-earth orbit) 500 கிலோ எடையுள்ள செயற்கை கோள்களை செலுத்துவதோடு, தேவைக்கேற்றபடி சேவைகள் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக சௌகரியத்தையும், திருப்தியையும் வழங்க முடிகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதில் காட்டப்படும் தீவிரம்

இந்திய விண்வெளித் துறையில் தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது என்ற பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே எஸ்.எஸ்.எல்.வி ஏவுவூர்திக்கான தொழில்நுட்பத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான போட்டி ஏலமுறையின் மூலமாகவே இத்தொழில்நுட்பம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். இந்திய நாட்டின் விண்வெளித் துறை தொடர்பான இலட்சியத் திட்டங்களை தனியார் துறையினரின் உதவியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அடைவது என்ற பாதையில் இஸ்ரோ அடியெடுத்து வைப்பததையே இது உணர்த்துகிறது.

சென்ற வருடம் முதன்முறையாக இந்த ஏவுவூர்தியை செலுத்தியபோது ஏவுவூர்தியின் பின் பகுதி துண்டித்ததை தொடர்ந்து அதிக அதிர்வுகள் ஏற்படத் தொடங்கியது. இதனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மிக நுணுக்கமாக எதனால் கோளாறு ஏற்பட்டது என இஸ்ரோ கண்டறிந்து சரி செய்தது. பின்னர், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட போது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

தொடர் வெற்றியை பதிவு செய்யும் இஸ்ரோ

எஸ்.எஸ்.எல்.வி ஏவுவூர்தி தனது செயல்திறனை நிரூபித்துக்காட்டியுள்ளது. இஸ்ரோவின் இஓஎஸ்-07  செயற்கைகோள், அமெரிக்காவின் அன்டாரிஸ் ஜானஸ்-1 செயற்கைகோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் ஆசாதிசாட்-2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக 450கி.மீ நீளமுடைய புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் ஏவுதிறன் மீதான நம்பகத்தன்மையை இது கண்கூடாக நிரூபித்துக்காட்டியுள்ளது.

10கிலோ மற்றும் 100 கிலோ எடையுள்ள நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்களை செலுத்துவதற்கேற்ற ஏவுகலமாக எஸ்.எஸ்.எல்.வி விளங்குகிறது. இதுபோன்ற சிறிய ரக செயற்கைகோள்களை முன்பெல்லாம் முதன்மை(பெரிய) செயற்கைகோள்களை அனுப்பும்போது இணைத்து அனுப்புவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது நினைத்தமாத்திரத்தில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப அனுப்ப முடியும். இதன் மூலம் வணிக ரீதியில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திவதற்காக இருந்துவரும் சந்தையில் வல்லமைவாய்ந்த தொழில்நுட்பமாக எஸ்.எஸ்.எல்.வி உருவெடுத்துள்ளது.

அடுத்தது என்ன

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட் மற்றும் லார்சன் ஆன்ட் டுயூப்ரோ(L&T) போன்ற தனியார் நிறுவனங்களுக்கு 5 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி தொழில்நுட்பத்தை தனியாருக்கு வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாகத்தான் இஸ்ரோ 54 முறை வெற்றிகரமாக செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது கவனிக்கத்தக்க விசயமாகும்.

வருகிற 2025 ஆம் ஆண்டிற்குள்ளாக வணிக ரீதியில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான சேவையின் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு 13 பில்லியன் டாலர்கள் அளவிலான வருமானம் கிடைக்கும் என்று இந்திய வின்வெளி சங்கம் மற்றும் EY India என்ற நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதன் மூலம் இத்துறையில் ஏற்படும் வேகத்தை பன்மடங்கு அதிகரிக்க முடியும்.

- விஜயன்

(தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.timesnownews.com/technology-science/isro-embraces-privatisation-sslv-to-be-transferred-to-private-sector-article-101631882