குதர்க்கம், மோசடி, அரசியல் சந்தர்ப்பவாதங்களால் நிறைந்த வக்பு மசோதா மீதான விவாதம்
முஹம்மது ஜியாவுல்லாஹ் கான்

மக்களவையில் கண்ட காட்சிகளின்படி, ஏப்ரல் 2-ஐ ஒரு அப்பட்டமான மோசடி நாள் என்றுகூட சுருக்கமாக வரையறுக்கலாம். அன்றைய நாள் முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற நிகழ்வுகள், தர்க்கமற்ற வாதங்களையும் அரசியல் மோசடிகளையும் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிச்சம் போட்டுக் காட்டின. வக்பு திருத்த மசோதாவை இஸ்லாமியர்களின் நலனுக்காகக் கொண்டு வந்ததாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்வைக்கும் கூற்று என்பது சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய அரசியல் மோசடிகளில் ஒன்று என்பதைத் தவிர வேறில்லை. இந்த மசோதாவை மையப்படுத்தி நடந்து வரும் விவாத அரட்டைகள் தேசத்தின் கூட்டுப் பகுத்தறிவை அரிக்கக்கூடிய அபாயம் கொண்டது. மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்த, மதச்சார்பற்ற கட்சிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் தரப்புகளும் இந்த சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிததைக் காணும் போது நம் மன வேதனையை மேலும் தீவிரப்படுத்தவே செய்கிறது.
வக்பு வாரியங்கள் குறித்து மோடி அரசு 'அக்கறை' கொண்டிருப்பதால் இக்கொடிய மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறுவதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தை ஆராய்வோம்.
எப்பேற்பட்ட வரிகள்: இஸ்லாமியர்களின் நலனில் திடீர் அக்கறையா?
இஸ்லாமியர்களின் சொத்துக்களை சமூகத்தின் நலனுக்காக "உகந்த முறையில் பயன்படுத்துவதை" அரசு இப்போது உறுதி செய்கிறது என்ற அரசின் கூற்றை, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்காக வக்ஃப் சொத்துக்களைப் பயன்படுத்துவது பற்றி அமைச்சர்கள் பேசினர் - இது அவர்களின் கடந்தகாலப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் முற்றிலும் முரண்படுவதோடு, கருணையுள்ளம் கொண்டோர் என்ற தோற்றத்தையும் வழங்குகிறது.
திடீரெனத் தோன்றிய "கருணைக்காக" உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தேசம் இப்போது நன்றி கூற வேண்டுமா? அல்லது, மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் "மக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஊடுருவியவர்களுக்கு வழங்கிவிடுவார்கள்" என்று மோடியே எச்சரித்து பேசிய கடந்த காலத்தை நாம் மறந்துவிட வேண்டுமா? இத்தகைய தலைவர்களின் ஆதரவாளர்கள் பின்வரும் செயல்களைச் செய்யும்போது இவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்ததையும் நாம் மறந்துவிட வேண்டுமா:
•இஸ்லாமிய வணிகர்களுக்கு எதிராகப் பொருளாதாரப் புறக்கணிப்புகளுக்கு அழைப்பு விடுவது,
•பொது முழக்கங்களில் இஸ்லாமியகளை தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்துவது,
•தெருக்களில் அப்பாவிகளை அடித்துக் கொல்வது, மற்றும்
•தேர்தல் என்பதே "80 சதவீதத்தினருக்கும் 20 சதவீதத்தினருக்கும்" இடையிலான போராகச் சித்தரிப்பது?
இப்படியெல்லாம் அப்பட்டமான இஸ்லாமியர் விரோதமான செயல்களைச் செய்துவிட்டு, இப்போது அவர்கள் மீதான அக்கறையின் காரணமாகவே இந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறோம் என்று கூறும் ஏமாற்று வார்த்தைகளை பேசுவதற்கு எவ்வளவு சதைக்கொழுப்பு இருக்க வேண்டும் என்பதை நினைத்தாலே எனக்குத் திகைப்பூட்டுவதாக உள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காக கருணையுள்ளத்தை வெளிப்படுத்தும் போக்கு
பொறுக்கியெடுக்கப்பட்ட கொள்கைகள் மூலம் ஒரு பொய்யை மக்கள் தலையில் கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதென்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. இஸ்லாமியப் பெண்களைப் பாதுகாப்பதற்காகவே முத்தலாக் தடை அறிமுகப்படுத்தப்படுவதாக கதைகட்டினார்கள். ஆனால் இஸ்லாமிய பெண்களின் நல்வாழ்வு என்பது, துன்புறுத்தல்களையும், கும்பல் படுகொலைகளையும் எதிர்கொள்ளும் அவர்களின் சகோதரர்கள், தந்தைகள் மற்றும் கணவர்களின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதுதானே?
அரசியல் ஆதாயத்திற்கான போக்கு தெளிவாகத் தெரிகிறது:
•சமத்துவம், நீதி என்பவையெல்லாம் நிதி உதவியாகச் சுருக்கப்படுகின்றன, அடிப்படை உரிமைகளாக கருதப்படவில்லை.
•இஸ்லாமியர்கள் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
•அவர்களின் மத நடைமுறைகள் மீது தனிக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
•அவர்களின் தொழில்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்றன.
ஹிஜாப் பிரச்சனை முதல் மதரஸாக்கள் வரை, முத்தலாக் முதல் அவுரங்கசீப் வரை, மத வழிபாட்டுரிமை(அஸான்) முதல் மசூதிகள் தகர்ப்பு வரை பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும் அவர்களின் இறுதி நோக்கம் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாகத் மாற்றுவதுதான்.
வரலாறு திரும்புகிறது: நாஜி ஜெர்மனியில் நடந்ததைப் போன்ற அபாயகரமான போக்குகள் வெளிப்படுகின்றன
வரலாறு மீண்டும் மீண்டும் நிகழத்தான் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அதற்காக கொடுக்கும் விலை என்பது முன்னைவிட அதிகரிக்கிறது என்று சொல்வர்கள். இப்படியிருக்க, தீய நோக்கங்கள் பெரும்பாலும் உன்னதமான கூற்றுகளுக்குப் பின்னால் மறைந்திருப்பதில் வியப்பில்லை. இதுதான் மோடியின், அவரது அரசாங்கத்தின் கதை.
நாஜி ஜெர்மனி எவ்வாறு தனது உண்மையான முகத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது என்பதை நாம் கண்டோம். அடோல்ஃப் ஹிட்லர் யூத சமூகத்தினரை சிறிய கட்டுப்பாடுகளுடன் தொடங்கி, அவர்களைத் திட்டமிட்ட முறையில் ஓரங்கட்டி, பின்னர் அதை முழு அளவிலான இனப்படுகொலையாக மாற்றினார். அவர் தனது ஆதரவாளர்களைப் பகுத்தறிவை விட அவர்களின் உள்ளுணர்வை நம்பும்படிப் பழக்கப்படுத்தினார்; இதன் விளைவாக, அவரது செயல்களைக் கேள்வி கேட்க எவரும் துணியாத ஒரு சூழல் உருவானது. இன்று, பாஜக தலைமையிலான அரசு அதிர்ச்சியூட்டும் வகையில் இதையொத்த ஒரு செயல்திட்டத்தைப் பின்பற்றுகிறது.
எனவே, நாம் வரலாறு திரும்ப நிகழ்வதைக் காண்கிறோமா? சந்தேகத்திற்கு இடமின்றி, இதற்கு ஆம் என்பதுதான் பதில். ஆனால், பிரதான ஊடகங்கள்—அல்லது 'கோடி மீடியா' என்று அழைக்கப்படுபவை—எப்போதாவது கீழ்க்கண்டது போன்று பாஜகவை பார்த்து சரியான கேள்விகளைக் கேட்டு பொறுப்பேற்க வைத்துள்ளதா? இனியாவது பொறுப்பேற்க வைக்குமா?
•நீங்கள் இஸ்லாமியர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறீர்களா, அல்லது இது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதமா?
•நீதி மற்றும் சமத்துவத்திற்கான உங்கள் உறுதிப்பாடு உண்மையான கொள்கை மாற்றங்களாக உருவெடுக்குமா, அல்லது வெறும் பெயரளவிற்கான அறிவிப்பாக நின்றுவிடுமா?
•பிரித்தாளும் அரசியலை முற்றிலுமாக கைவிடுவீர்களா, அல்லது இது ஒரு தற்காலிக உத்தியா?
•வக்ஃப் வாரியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பரந்த சொத்துக்களை உங்கள் நெருங்கிய சகாக்களுக்கு மறுபங்கீடு செய்யும் நோக்கத்திற்காகத்தான் அதை குறிவைக்கிறீர்களா?
இஸ்லாமிய மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கான பாஜகவின் முயற்சி என்று கூறுவது ஒரு வெற்று முழக்கமே
மக்களவையில் பாஜகவுக்கு ஒரேயொரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்பது யாருக்கும் தெரியாத விசயமல்ல. அப்படியிருந்தும், இஸ்லாமியர்களின் நலனுக்காகத் தாம் பாடுபடுவதாக அந்தக் கட்சி உரிமை கோருகிறது. இது வெறும் கேலிக்கூத்தாக மட்டும் பார்க்க முடியாது—இதுவொரு அப்பட்டமான முரண்பாடாகும். இன்னொரு விசயம் என்னவென்றால், பாஜகவின் அணிகளுக்குள் சில இஸ்லாமிய ஆதரவாளர்கள் கூட உள்ளனர்; அவர்கள் தங்கள் எஜமானர்களை மகிழ்விக்க எந்த எல்லைக்கும் செல்லத் துணிபவர்களாக இருக்கிறார்கள்.
இதற்கிடையில், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், மற்றும் சிராஜ் பாஸ்வான் போன்ற பாஜகவின் கூட்டணிக் கட்சியினரிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கும் எதிர்க்கட்சியின் நம்பிக்கைகளும் இதேபோல் தவறானவையே. இந்தத் தலைவர்கள் நீண்டகாலமாகவே பாஜகவின் நம்பிக்கைக்குரிய பங்காளிகளாக இருந்து வந்துள்ளனர், மேலும் சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை. இவர்களது அரசியல் மதச்சார்பின்மை விழுமியங்களின் மீதான பற்றுதலால் உருவானவை அல்ல, மாறாக அதிகாரத்தை அடைவதற்கான சுயநலன் காரணமாகவே அரசியல் செய்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை, அதிகாரத்தில் நிலைத்திருப்பதும், தமக்குச் சாதகமானவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதும் மட்டுமே முக்கியம்—இதனால்தான் அவர்கள் முதலில் பாஜகவுடன் கைகோர்த்தனர்.
ஆர்.எஸ்.எஸ் - மோடி: உடைக்க முடியாத வலுவான உறவு
எதிர்க்கட்சியில் சிலர், ஆர்.எஸ்.எஸ் என்றாவது மோடிக்கு எதிராகத் திரும்பும் என்று யதார்த்தம் புரியாமல் கற்பனையாக நம்பிக் கொண்டிருகிறார்கள். இது வெறும் பகல் கனவுதான். சில சமயங்களில் மோடியின் தலைமையைக் ஆர்.எஸ்.எஸ் விமர்சித்தாலும், அது வலியுறுத்தும் எந்த மாற்றங்களும், அரசாங்கத்தை வலுப்படுத்தவும் அதன் நீண்டகால ஆதிக்கத்தைப் பாதுகாக்கவும் மட்டுமே இருக்கும். மோடியின் கீழ், ஆர்.எஸ்.எஸ்’ன் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான வளர்ச்சியைக் கண்டுள்ளது, மேலும் அது எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அதன் அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
சமீபத்திய தேர்தல்களில், குறிப்பாக என்.டி.ஏ கூட்டணி திணறிக் கொண்டிருந்த மாநிலங்களில், பா.ஜ.கவின் வெற்றிகளை உறுதிசெய்வதற்கு ஆர்.எஸ்.எஸ். களத்தில் இடைவிடாது, பெரும்பாலும் அடிமட்டத்திலிருந்து உழைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடிக்கிடையே இருப்பதாக சொல்லப்படும் வேறுபாடுகள் ஆட்சியைக் தக்கவைப்பது என்று வரும்போது மறைந்துவிடும், இது அவர்களின் உறவு உடைக்க முடியாதது என்பதை நிரூபிக்கிறது.
எதிர்க்கட்சியின் வியூகம்: மதவாதத்தை அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு எதிர்கொள்வதா?
பாஜகவின் உட்கட்சிப் பிளவுகள், ஊசலாடும் கூட்டணிகள், அல்லது ஆர்எஸ்எஸ் வியூகத்தில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களைச் எதிர்க் கட்சிகள் சார்ந்திருப்பது ஒரு தவறான அணுகுமுறையாகும். வக்ஃப் மசோதா பாஜகவுக்குள் ஒரு நெருக்கடியை உருவாக்கும் என எதிர்பார்த்தவர்கள் இப்போது தங்களது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரைகுறை கூட்டணிகளும், சித்தாந்தரீதியாக உறுதியற்ற நிலைப்பாடுகளும் பெரும்பான்மைவாத அரசியல் தலையெடுப்பதைத் தடுத்து நிறுத்தாது என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். வலுவான, கொள்கை அடிப்படையிலான, ஒருங்கிணைந்த நிலைப்பாடு இல்லாமல், வெறும் அரசியலமைப்புச் சட்ட நகலை ஒரு அடையாளக் கேடயமாக காண்பித்துக் கொண்டு எதிர்க் கட்சியினர் நிற்பார்களென்றால், இன்றைய அரசியலின் கடுமையான யதார்த்தங்களுக்கு எதிராகச் சக்தி அற்றவர்களாகவே இருப்பார்கள்.
ஏப்ரல் 2 அன்று நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் சாதாரண ஒரு நாளைக் காட்டிலும் முக்கியமானவை—அது இந்திய ஜனநாயகம் எந்தளவிற்கு ஆபத்தான பாதையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது. வக்ஃப் திருத்த மசோதா வெறும் சட்டப் பிரச்சனை மட்டுமல்ல; அது ஏற்கப்பட்ட பொது உண்மைகளையும், மக்களின் கருத்துக்களையும் வேண்டுமென்றே திரித்துரைத்து, உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதோடு, இஸ்லாமியர்கள் நலனுக்கான சீர்திருத்தம் என்ற போர்வையில் மதவாதப் பிளவுகளை விரிவுபடுத்தும் ஒரு செயல் ஆகும்.
இது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம் நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்டது. நீதியான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருதலைப்பட்சமான அநீதியை வழங்கும் இந்தியாவை, முன்னேற்றம்/சீர்த்திருத்தம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஒடுக்கும் இந்தியாவை, அரசியல் ஆதாயங்களுக்காக உண்மைகள் புதைக்கப்படும் ஒரு இந்தியாவை நாம் உருவாக்க விரும்புகிறோமா என்றால் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் உண்மையான சாரத்திற்கு துரோகமிழைக்கிறோம் என்றே அர்த்தமாகும்.
(முகமது ஸியாவ்ல்லாஹ் கான்: நாக்பூரைச் சேர்ந்த நிறுவனம் சாரா சுயேச்சை எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தன்னார்வலர் ஆவார். சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளை எதிர்த்துப் போராடும் டிஜிட்டல் ஊடகமான ட்ரூத்ஸ்கேப் (TruthScape)-இன் இணை நிறுவனரும் ஆவார்.)
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/04/the-waqf-bill-debate-illogic-deception-and-political-opportunism/
Disclaimer: இது கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு