இந்தியாவுடன் இணைந்து எரிசக்தித் துறையில் ஒத்துழைக்க அமெரிக்கா உறுதி தெரிவித்துள்ளது

தமிழில்: விஜயன்

இந்தியாவுடன் இணைந்து எரிசக்தித் துறையில் ஒத்துழைக்க அமெரிக்கா உறுதி தெரிவித்துள்ளது

உயர்தரமான சரக்குகளையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்வதன் வாயிலாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதி தெரிவித்திருப்பதாக, செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் கூறினார். இதன் மூலம் இந்தியா எரிசக்தி பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் ஒருசேர எய்த முடியும்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க வர்த்தக சபையின் 3வது எரிசக்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கத் தூதரகத்தின் முதன்மை வணிக அலுவலர் சியாபிங் ஃபெங், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு உலக எரிசக்தித் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வல்லது என்று விளக்கினார்.

தற்கால உலகச் சூழலில், புவிசார் அரசியல் பதட்டங்களும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் நிலவும் சிக்கல்களும் நிறைந்திருப்பதால், இந்தியாவுடன் தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். அவர் கூற்றுப்படி, நம்பகமான, உலகத் தரம் வாய்ந்த எரிசக்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா இந்தியாவிற்கு பெரிதும் துணைபுரியும்.

"எதிர்காலத்தில், உயர்தரப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும், இது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும்," என்று ஃபெங் கூறினார்.

எண்ணெய், எரிவாயு மற்றும் அணுசக்தித் துறைகளில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பங்காளியாகத் திகழ முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"இந்த முக்கியமான தருணத்தில் நாம் கூடுகையில், உலகளாவிய எரிசக்தித் துறை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் ஸ்திரமின்மை, சந்தை இடையூறுகள், மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் எல்லாம் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும், நமது பொருளாதாரங்களுக்கான பாதுகாப்பான, நிலையான எரிசக்தி அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளன," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் முக்கிய விநியோகஸ்தராக அமெரிக்கா இருக்க முடியும் என்றும் ஃபெங் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய அமெரிக்கப் பயணத்தின்போது, மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பிரதான எரிசக்தி நுகர்வோராகவும் உற்பத்தியாளராகவும் தங்களது இரு நாட்டின் கூட்டுறவு உறுதிப்படுத்தியதை அவர் நினைவுகூர்ந்து பேசியிருந்தார். எண்ணெய், எரிவாயு மற்றும் அணுசக்தி உள்ளிட்ட எரிசக்தித் துறையில் தங்கள் கூட்டணியை வலுப்படுத்த அவர்கள் உறுதி தெரிவித்திருந்தனர்.

"அமெரிக்காவும் இந்தியாவும் எரிசக்தி வளங்களை விரிவுபடுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் விரும்புகின்றன. இயற்கை எரிவாயு, அணுசக்தி மற்றும் மேம்பட்ட புதிய எரிசக்தித் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப அறிவைப் பகிர்வதன் மூலம், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மட்டுமல்லாது மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பெரும் லட்சியத் திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க முடியும்," என்று ஃபெங் கூறினார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/us-remains-committed-to-work-with-india-collaborate-in-energy-space-us-embassy-official/articleshow/123525394.cms?from=mdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு