நலிந்து வரும் நடுத்தர வர்க்கமும்! ஊதிப் பெருக்கப்பட்ட GDP மதிப்பீடுகளும்!
செந்தளம் செய்திப்பரிவு
அதிநவீன தொழிநுட்ப உருவாக்கத்தால் உயர் திறன் கொண்ட சிறு எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் தேவைதான் கூடியுள்ளதே தவிர அரைகுறை அல்லது இடைநிலை திறன் கொண்ட தொழிலாளர்களின் தேவை முழுவதுமாக ஒழிந்து போகும் நிலை உருவாகி வருகிறது. உலகமயமாக்கல் கொள்கைகளால் வறுமையிலிருந்து மீண்டு வருவதாக சொல்லப்படுபவர்களின் சதவீதத்தை விட பெருங்கோடீஸ்வரர்களாக உருவாகியிருப்பவர்களின் வளர்ச்சி வீதம் அதிகமாக இருக்கிறது. நிரந்தர தொழில் வாய்ப்புகளை ஒழித்துக் கட்டுவதன் மூலம் நடுத்தர வர்க்கங்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டு வருகிறார்கள். புதிய தாராளமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் நடுத்தர, அடித்தட்டு மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளதோடு, அவர்களின் சிறு சேமிப்புகளும் பெருங்கோடீஸ்வரர்களின் சட்டைப் பைகளுக்கு சென்று சேரும் வகையில் அரசின் நிதிநிலை அறிக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் GDP வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வில்லை, பண்டிகை கால விற்பனை படுமோசம் என்று சாதாரண மக்கள், சிறு--குறு வியாபாரிகள், இடதுசாரிகள் சொல்லி வந்த காலம் போக இன்று சில கார்ப்பரேட்டுகளே புலம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
‘இந்திய நடுத்த்தர வர்க்கம் நலிவடைந்து வருகிறார்கள்’: Nestle India
நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் செலவினம் குறைந்து கொண்டே வருவதால் Nestle India நிறுவனத்தின் விற்பனை விகிதம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மந்தமான விற்பனையை தங்கள் நிறுவனம் சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் பொருட்கள், சாக்லேட்கள்தான் மற்ற அனைத்து பொருட்களையும் விட பெருமளவு விற்பனை வீழ்ச்சியை சந்துள்ளது என்றும், சராசரியாக ஆண்டுதோறும் 1 சதவீதம் விற்பனை சரிந்து கொண்டே வருவதாக Nestle India நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சுரேஷ் நராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, “அதிக பணம் படைத்த மேல்தட்டு பிரிவினர் வழக்கத்திற்கு அதிகமாக செலவுகள் செய்து வருகின்றனர். ஒரளவிற்கு கட்டுபடியாகக்கூடிய விலையில் சந்தைப்படுத்தும் பொருட்களை வாங்கும் நடுத்தர வருமானம் கொண்டவர்கள் குறைந்து கொண்டே வருவதால், FMCG நிறுவனங்களின் வருமானம் குறைகிறது,” என்று ஹரியானா மாநிலம் சமால்காவில் அமைந்துள்ள Nestle ஆலையில் செய்தியாளர்களை சந்தித்த போது பேட்டியளித்துள்ளார். இந்த வீழ்ச்சி வழக்கத்திற்கு மாறானதாக தெரிகிறது என்றும், FMCG கம்பனிகள் அதாவது அதிகமாக விற்பனையாகக்கூடிய நுகர்பொருட்கள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் நடுத்தர வருமானம் கொண்ட பிரிவினரையே இலக்காக வைத்து செயல்படுகிறது. இந்நிலையில், அவர்களின் எண்ணிக்கை குறைவதால், அவர்களை சார்ந்த FMCG விற்பனைனயும் சரிவடைந்துள்ளது.
ஊதிப் பெருக்கப்படும் GDP மதிபீடுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் கார்ப்பரேட் CEOக்கள்
Asian Paints நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும்(CEO) கடந்த மே மாதம், இதேபோன்றதொரு கருத்தையே முன்வைத்திருக்கிறார். அதாவது, ஒவ்வொரு துறையிலும் உள்ள கள நிலவரம் என்பது நாட்டின் GDP மதிப்புடன் ஒத்துப்போகவில்லை என்றும், GDP புள்ளிவிவரங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை என்பது போலவும் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய போது கூறியுள்ளார். ஆனால், இந்த செய்தி கசிந்த அடுத்த நாளே, தவறாக சொல்லப்பட்டுவிட்டதாக கூறி CEOவின் கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துவிட்டனர்.
இதுநாள் வரை, பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பது பற்றி இடது சாரி இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் பேசிவந்ததை பார்த்திருப்போம். சமீப காலமாக ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும், அதிலுள்ள முதலீட்டு ஆய்வாளர்களும்கூட அதிகமாக பேசும் விசயமாக மாறியிருப்பதை பார்க்க முடிகிறது. கிராமத்தில் மட்டுமல்லாது, நகரத்திலும் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இவர்கள் புலம்பி வருகிறார்கள்.
“கடந்த பத்தாண்டு காலத்தில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி புதிய நடுத்தர வர்க்கமாக உருவாகியிருக்கிறார்கள். அவர்களின் ஏக்கப் பெருமூச்சுகளில் ஒன்றாக சொந்த வாகனம் வாங்குவதும் அடக்கியிருக்கிறது. இவர்கள் இந்தியாவின் வாகன உற்பத்தித் துறையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள்” என்று மோடி கடந்த பிப்ரவரி மாதம் பேசியிருந்தார். பண்டிகை காலத்திற்கு முன்பு அதிகம் விற்பனையாகும் என்று நம்பப்பட்ட கார்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பதே மோடி கூறிய புதிய உச்சம்(வீழ்ச்சியில்) என்பதற்கு சரியான பொருளாகும்.
கிட்டத்தட்ட, 86,000 கோடி மதிப்பிலான 7 இலட்சம் வாகனங்கள் விற்பனையாகமல் தேங்கி கிடப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சென்றாண்டோடு ஒப்பிடும் போது, இந்தாண்டில் கார் டீலர்கள் வசமிருக்கும் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் 75 சதவீத கார்களின் விற்பனை தேக்கமடைந்துள்ளதாக கூறுகின்றனர். இதேபோல, வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விற்பனையும் 4 முதல் 6 சதவீதம் சரிந்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் விற்பனை ஓரளவிற்கு அதிகமாகியிருந்தாலும், 2018--ம் ஆண்டு நிலவரப்படி பார்த்தோமானால் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் பலம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் பட்ஜெட்--2024 என்று இந்தாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிர்மலா சீத்தாராமன் பேசியிருந்தார். இன்னும் சில அமைச்சர்கள் கண்கூடாக தெரியும் வாகன விற்பனை வீழ்ச்சியை மூடிமறைப்பதற்கு, புதிதாக உருவாகியுள்ள நடுத்தர பிரிவினர் இருசக்கர வாகனம் வாங்கிய பிறகு, சிறிய ரக கார்களை வாங்குவதற்கு பதிலாக SUV வகையிலான பெரிய ரக கார்களை வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாக கூட கதையளக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவும் முழுப் பொய் என்று இடதுசாரிகள் நிராகரிப்பதற்கு முன்பாகவே ஓடோடி வந்து, மாருதி உத்யோக் லிமிடட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா போன்றவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். SUV ரக வாகனங்கள் அதிகமாக விற்பனையாவதற்கு மேல்தட்டு பணக்கார பிரிவினர் அதிகம் செலவிடுவதே காரணம் என்றும், பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் தேக்க நிலையில் சிக்கிக் கொண்டு தவிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இதைத்தான், கொரோனா காலத்திற்கு பிறகு மீண்டெழுந்து வரும் பொருளதார போக்குகள் என்பது K வடிவத்தில் இருப்பதாக பல பொருளாதார நிபுனர்கள் கூறி வந்தனர். மேல்தட்டு பிரிவினர் செழிப்படைந்து வருவதோடு, நடுத்தர பிரிவினரின் வாழ்வு வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதையே இந்த K வடிவ பொருளாதார போக்குகள் எடுத்துக் காட்டுகிறது.
ஊரக பகுதிகளில் கூலியும் சரி, நுகர்வும் சரி பல பத்தாண்டுகளாகவே தேக்க நிலையில்தான் இருந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 7 சதவீதத்திற்கு மேல் நாட்டின் GDP வளர்ச்சி பயணிப்பதாக கூறி வரும் நிலையில் சமீப காலமாக நகரவாசிகள் மத்தியிலான நுகர்வும் சரிவடைந்து வருகிறது என்பதும் மறைக்க முடியாதளவிற்கு வெளிப்பட்டு நிற்கிறது. அரசின் அதிகாரப்பூர்வ புள்ளவிவரங்கள(NSSO) கூட 3.5 சதவீதம் என்ற அளவிற்குத்தான் நுகர்வு போக்குகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. சேமிப்பு விகிதங்களும் சுருங்கிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் 7 சதவீத GDP வளர்ச்சியும் அதற்கு இணையாக நுகர்வு போக்குகள், சேமிப்பு போக்குகள் இல்லாதிருப்பது GDP கணக்கீட்டு முறையில் இருக்கும் மோசடியையே அம்பலப்படுத்துகிறது.
நடுத்தர வர்க்கம் நலிவடைவதற்கு மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் நலிவடைந்து வருவதற்கும்கூட புதிய காலனிய ஆதிக்கமே காரணம்
சுதேசிய பொருளுற்பத்தி அல்லாத புதிய காலனிய வடிவிலான பொருளுற்பத்தியை இந்தியா கொண்டிருப்பதால் ஏகாதிபத்திய நலனிலிருந்து உருவாக்கப்படும் சேவைத் துறையால் அதிக உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்துறை உருவாக்கம் தடைப்பட்டு போனதும்கூட புதிய நடுத்தர வர்க்கம் உருவாகாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தள்ளது. புதிய ஜனநாயக புரட்சியின் மூலம், சுதேசிய உற்பத்தியில் உருவாக்கப்பட்ட தொழிற்துறை கட்டமைப்பைக் கொண்டும், பின்னாளில் ஏகபோக முதலாளித்துவ நாடாக வளர்ந்து நிற்கும் சீனாவில் உருவாகியிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடுவதன் மூலம் இந்தியா எந்தளவிற்கு புதிய காலனிய நுகத்தடியின்கீழ் சிக்குண்டு கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வெறுமனே மூன்று சதவீதம் மட்டுமே இருந்த சீன நடுத்தர வர்க்கத்தினர் 18 சதவீதம் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும், இந்திய நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி போக்குகள் என்பது நூற்றாண்டு காலமாகவே எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. வாங்கும் திறன் அடிப்படையில் நாளொன்றுக்கு 10 டாலர்கள் முதல் 50 டாலர்கள் வரை வருமானம் ஈட்டக்கூடியர்களை நடுத்தர வர்க்கம் என வரையறுத்து Pew ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக 2017ம் ஆண்டு சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 2016--ல் 10.8 கோடி இந்தியர்களும், 70.7 கோடி சீனர்களும் நடுத்தர வருமானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டது. அதிலும்கூட, 61 சதவீத சீனர்கள் நாளொன்றிற்கு 10 டாலர்களுக்கும் அதிகமாக வருவாய் ஈட்டக்கூடியவர்களாக இருக்கும் நிலையில், 3 சதவீத இந்தியர்கள் மட்டுமே 10 டாலர்கள் அளவிற்கு வருமானம் பெறும் பிரிவினர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் மதிப்பிடப்பட்டது.
அரசு தரும் புள்ளி விவரங்கள்படி(PLFS 2021-2022) பார்த்தாலும் இந்தியாவில் இன்றும் 45 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நூற்றாண்டு காலமாக நிலச் சீர்திருத்தம் செய்யப்படாத விவசாயத் துறையை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள்; அதற்கடுத்து 12.4 சதவீதம் மக்கள் கட்டுமான துறை சார்ந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள். 12.1 சதவீதம் பேர் தங்கும் விடுதிகள், உணவகங்களில் பணிப்புரியக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவையனைத்துமே குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட அரைகுறை தொழில் திறமை கொண்ட தொழிலாளர்கள் சார்ந்த துறைகளாக இருக்கிறது. அதாவது, இந்தியாவில் குறைந்தபட்சம் 70 சதவீத தொழிலாளர்கள் முறைசாராத, குறைந்த வருமானம் உடைய தொழிலையே செய்து வருகிறார்கள் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இதுவொருபுறமிருக்க, இந்தியாவில், ஒரு தொழிலாளி ஒரு மணி நேரம் வேலை செய்தால் 8.49 டாலர்கள் மதிப்பிலான பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யும் முடியும். அதுவே ஒரு அமெரிக்க தொழிலாளி ஒரு மணி நேரம் வேலை செய்தால் 70.68 டாலர்கள் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அதாவது, அமெரிக்காவில் ஒரு மணிநேரத்தில் 100 டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவில் வெறும் 12 டாலர்களிலே மலிவான கூலியால் - உழைப்புச் சுரண்டலால் உருவாக்க முடிவதற்குகூட விதேசிய தொழிற் கொள்கையே காரணமாக இருக்கிறது. முறைசார்ந்த தொழிற்துறையில்கூட உண்மையான கூலி விகிதம் அதாவது விலைவாசி ஏற்றத்தை கழித்த பிறகு மதிப்பிடப்படும் கூலி விகிதம் என்பது குறைவாகவோ அல்லது கூலி விகிதம் உயர்த்தப்படாமல் இருப்பதாகவே பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மை சாம்சங் தொழிலாளர்களின் கூலி என்பது மாதம் 25,000 ரூபாய்கூட பெற முடியாத அவல நிலைதான் நீடிப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒருபக்கம் வரலாறு காணாதளவிற்கான வேலையில்லாத் திண்டாட்டத்தால் உழைப்பு சக்தி வீணடிக்கப்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க விடாமல் தடுக்கும் புதிய காலனியாதிக்கத்தின் தீவிர உழைப்புச் சுரண்டலையும் எதிர்கொள்வதால்தான் ஏழைகள் மென்மேலும் ஏழைகளாவதோடு, நடுத்தர வர்க்கமும் தொடர்ந்து நலிவடைந்து கொண்டே வருகிறது.
- செந்தளம் செய்திப்பரிவு