இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்து இன அழிப்புக்கு உடந்தையாகும் மோடி அரசு
செந்தளம் செய்திப்பிரிவு
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் இன அழிப்பு போரை தீவிரமாக நடத்தி வருகிறது. மனிதாபிமானம் என்ற அடிப்படையில் எழும் போர்நிறுத்த கோரிக்கைகளையும் கூட அமெரிக்காவும் ஐ.நா. வும் நிராகரித்து வருகின்றன. ஒருபுறம் மனிதாபிமானம் என பேசிக் கொண்டே மோடி அரசும் இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கைகளை ஆதரவளித்து வருகிறது.
ஆனால் இப்போது இன்னும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவருகின்றன. மே, 2023 இல், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் புது டெல்லிக்கு வந்த போது, 42,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. கட்டுமான தொழிலில் பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு பதிலாக அதில் 34,000 பேரை இஸ்ரேலுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் இப்போது சுமார் 90,000 கட்டுமானத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என்று ஒரு சாக்கு சொல்லி, பாலஸ்தீனத் தொழிலாளர்களை வெளியேற்றும் இஸ்ரேலியத் திட்டங்களுக்கு ஆதரவாக இந்திய அரசும் துணை போகிறது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தின் பொருளாதாரத்தை சீரழித்தது. அதிக அளவு வறுமை மற்றும் வேலையின்மையை ஏற்படுத்தியது. பாலஸ்தீனியர்கள் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேலை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 1.3 லட்சம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் கட்டுமானத் துறையை நம்பியுள்ளனர். இஸ்ரேலின் மொத்த தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 65-70% பாலஸ்தீனிய தொழிலாளர்களாகவே உள்ளனர்.
இந்த நிலையில்தன் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. மனிதாபிமானம் என நாடகம் ஆடிக்கொண்டே இந்திய தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் பண்டமாக்கி வருகிறது. இதன் மூலம் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்புக்கு இந்தியா உடந்தையாகவே உள்ளது. இது இயற்கையாகவே இந்திய தொழிலாளர்களுக்கு பல மோசமான விளைவுகளை உண்டாக்கும் என மத்திய தொழிற்சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
- செந்தளம் செய்திப் பிரிவு