அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான வக்ஃப் திருத்தச் சட்டம்
பி.ஜே. ஜேம்ஸ்

அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான வக்ஃப் திருத்தச் சட்டம் - முஸ்லிம்களின் இருப்புக்கும் பண்பாட்டுக்கும் நேர் எதிரான "பண்பாட்டுத் தேசியவெறியர்களின்" கொடுந் தாக்குதல்!
இதனை இரத்து செய்ய மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு எழ வேண்டும்!!
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட UMEED (ஒருங்கிணைந்த வக்ஃப் நிர்வாகம்- அதிகாரமளித்தல், திறமையான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி) சட்ட முன்வரைவானது, 1995 ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. இதன் மூலம், முஸ்லிம்களுக்கு எதிரான பெரும்பான்மை இந்து ராஷ்டிரத்தை நிறுவும் தனது தீவிர முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். பாசிசம் மற்றொரு அடியை எடுத்து வைத்துள்ளது. மக்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்கு (பாஜக) அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், இந்த சட்ட முன்வரைவை நிறைவேற்றுவதற்கு, இந்துத்துவ பாசிச சக்திகள் தங்களது மத்திய-வலதுசாரி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை உறுதிசெய்துகொண்டன. அவ்வகையில், மீண்டும் ஒருமுறை, நாடாளுமன்றம் வெறும் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. வக்ஃப் சட்டம் முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இருப்பினும், பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் முஸ்லிம்களிடமிருந்து அந்நியப் பட்டிருப்பதையும், நம்பிக்கையிழப்பையும் கருத்தில் கொண்டு, அப்போதைய ராவ் அரசாங்கத்தின் மறைமுகமான பங்களிப்பிற்குப் நன்றிக் கடனாக, காங்கிரஸ் கட்சியானது 1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் மூலம் வக்ஃப் வாரியங்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கி வக்ஃப் அமைப்பை வலுப்படுத்த முனைந்தது. மீண்டும் 2013 ஆம் ஆண்டில், வக்ஃப் சொத்துக்களை வரையறுப்பதற்கு வக்ஃப் வாரியத்திற்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. தற்போது, இந்த புதிய சட்டத்தின் மூலம், இந்துத்துவ பாசிச சக்திகள் வக்ஃப்பின் முழு வரலாற்றையும் புரட்டி எழுதி, அதனை ஒரேயடியாக நசுக்கியுள்ளன.
வக்ஃப் அமைப்புகளில் நிலவும் ஊழலை ஒழித்து, அவற்றின் நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திருத்தத்திற்கான பொதுவான காரணம் என்று மோடி அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. உண்மையில், முஸ்லிம் அறிஞர்கள் கூட வக்ஃப் சொத்து நிர்வாகத்தில் ஊழல் இல்லை என்று மறுக்கவில்லை. ஆயினும், நீதித்துறை உட்பட அனைத்து அரசு நிர்வாகங்களிலும் ஊழல் மலிந்துள்ள இந்தியாவில், இது வெறும், முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான ஆதாரமற்ற, வலுவற்ற காரணமாகவே தோன்றுகிறது. வெளிப்படையாகவே, ஊழலை எதிர்த்துப் போராடப் பல நிர்வாக ரீதியான, சட்டரீதியான வழிகள் உள்ளன, மேலும் இது முஸ்லிம்கள் மட்டுமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை அல்ல. வக்ஃப் நிலத்துடன் ஒப்பிடும்போது, இந்திய மக்கள்தொகையில் வெறும் 1.57% மட்டுமே உள்ள கத்தோலிக்கத் திருச்சபை, வக்ஃப் வாரியத்தை விட பல மடங்கு அதிக நிலங்களை உடைமையாகக் கொண்டுள்ளது. எனவே, மோடி அரசாங்கத்தின் இந்த வக்ஃப் சட்டம், "பன்ச் ஆஃப் தாட்ஸ்" என்ற நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி முஸ்லிம்களை 'முதல் எதிரி' என்று குறிவைக்கும் போக்கின் நேரடித் தொடர்ச்சியாகவும், ஒரு முஸ்லிம் விரோதத் தாக்குதலாகவும் விளங்குகிறது. இது, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மதரசா சட்டம் மட்டுமல்லாது எதிர்காலத்தில் வரவிருக்கும் பொது சிவில் சட்டம் போன்ற முஸ்லிம் விரோத சட்டங்களின் ஒரு பகுதியாகும்."
மேற்கத்திய 'டிரஸ்ட்' எனும் கருத்தாக்கம் தோன்றுவற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, 12ஆம் நூற்றாண்டு சுல்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து நிலைபெற்று வந்துள்ள 'வக்ஃப்' என்பது இந்தியாவில் 'இஸ்லாமிய கலாச்சாரம்'த்துடனும், அடையாளத்துடனும் பின்னிப்பிணைந்த ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்து வந்துள்ளது. ஆகவே, இந்த வக்ஃப் சட்டம் இஸ்லாமிய அடையாளத்தின் மீதான ஒரு கொடிய 'கலாச்சார தேசியவாத' பெரும்பான்மையினரின் தாக்குதலாகும். இது முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்களையும், இதர அறக்கொடைச் சொத்துக்களையும் நிர்வகிக்கும் சட்ட விதிகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் உடனடி விளைவாக, நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களால் தானமாக வழங்கப்பட்ட நிலங்களும் சொத்துக்களும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், சமய மற்றும் அறக்கட்டளை நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மசூதிகள் மட்டுமல்லாது அடக்கஸ்தலங்கள் போன்றன இடிக்கப்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், ஒன்றியப் பிரதேசங்களிலும் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் 32 வக்ஃப் வாரியங்களிலும் அரசாங்க நியமனதாரர்கள், முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகிய அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என்று 1995ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் கூறுகிறது. வக்ஃப் தொடர்பான விசயங்களில் மத்திய அரசிற்கு ஆலோசனை வழங்குவதும், இந்தியாவிலுள்ள அனைத்து மாநில வக்ஃப் வாரியங்களையும் மேற்பார்வையிடுவதுமே மத்திய வக்ஃப் வாரியத்தின் பணியாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டது போல, 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம், வக்ஃப் சொத்துக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தியது. அதாவது, ஆக்கிரமிப்புகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, வக்ஃப் சொத்துக்களை விற்பனை செய்தல், அன்பளிப்பாக வழங்குதல், பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்துதல், அடமானம் வைத்தல் அல்லது கைமாற்றுதல் ஆகியவை திட்டவட்டமாக தடை செய்யப்பட்டன.
"புதிய சட்டத்தில் இப்பேற்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டோ, வலுவிழக்கச் செய்யப்பட்டோ அல்லது முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டோ உள்ளன. சிறுபான்மையினர் தங்கள் மத மற்றும் அறக்கட்டளை நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பதற்கும், அவ்விஷயங்களில் அரசு தலையிடலாகாது என்று வரையறுக்கும் இந்திய அரசியலமைப்பின் 26வது உறுப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறியுள்ளது. இவ்விவகாரங்கள் குறித்து, கூட்டு நாடாளுமன்றக் குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த எதிர்ப்புக் குறிப்புகளும், மாற்றுக் கருத்துகளும் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டன. மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, 1995ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளும் கட்சியால் முன்வைக்கப்பட்ட அனைத்து 40 திருத்தங்களும் அப்படியே சேர்க்கப்பட்டுள்ளன.
மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய வக்ஃப் சட்டத்தின்படி, "பயன்பாட்டின் வழியாக உருவாக்கப்படும் வக்ஃப்’ " எனும் பிரிவு நீக்கப்பட்டுள்ளதோடு, வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் சேர்க்கப்படுவதும் முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்திற்கு ஒரு சவாலாகவும், அவர்களை இழிவுபடுத்தி அவர்களின் பாரம்பரியத்தையும் இருப்பையும் சிதைத்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் செயலாகவும் கருதப்படுகிறது. இவ்வாறே, மாநில வக்ஃப் வாரியங்களின் நிர்வாக அதிகாரங்களைக் குறைப்பதும், வக்ஃப்பில் மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிப்பதும் போன்ற நடவடிக்கைகள் இந்த ஆட்சியின் முஸ்லிம் விரோதப் போக்கையே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சூழலில், இந்தியா முழுவதும் ஆதரவற்ற கிறிஸ்தவர்கள் இந்துத்துவக் கும்பல்களின் மனிதாபிமானமற்ற வன்கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க திருச்சபையின் ஒரு மேட்டுக்குடி பிரிவினர், தமது இஸ்லாமிய வெறுப்பு மனோபாவத்துடன், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது சிறுபான்மையினருக்கு எதிரான இந்த புதிய வக்ஃப் சட்டத்தை வெட்கமின்றி ஆதரிப்பது வருந்தத்தக்கது. மேலும் வெளிப்படையாகத் தெரிவது என்னவென்றால், இந்த வசதிபடைத்த கத்தோலிக்க தலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க ஆயர்களும் சில அமைப்புகளும், ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்துக் கொண்டு, அரசு ‘நிதியுதவி பெறும்’ தங்களது நிறுவனங்களில் அரசியலமைப்புச் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
நுட்பமாகச் சொல்வதானால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே மாற்றிய பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு (EWS) போலவே, வக்ஃப் திருத்தச் சட்டமான UMEED, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மீதான மற்றொரு தாக்குதலாகும். இது முஸ்லிம் சமூகத்தினரின் நிலங்களையும் சொத்துக்களையும் பறிப்பதையும், அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கும் முஸ்லிம்களின் சொத்துக்களைத் தம்முடையதாக உரிமை கோர வாய்ப்பளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தங்களுக்கான நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையையும் இஸ்லாமிய மக்களிடமிருந்து பறிக்கிறது. ஆகையால், இந்து ராஷ்ட்ரா திட்டத்தின் ஒரு பகுதியான இந்த பாசிச நடவடிக்கையை உறுதியாகக் எதிர்ப்பதோடு, அதிக அளவில் ஒடுக்கப்படும் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்பதற்கு அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டிய காலகட்டம் இது. மேலும், இந்த பாசிச நடவடிக்கையை முழுமையாக முறியடிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வதற்கு பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைவருமே சற்றும் தயங்கக் கூடாது.
பி.ஜே. ஜேம்ஸ், பொதுச் செயலாளர், சிபிஐ(எம்எல்) ரெட் ஸ்டார்.
03.04.2025
- விஜயன் (தமிழில்)