டாகி(DOGE)உடன் அரசு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் - டிரம்ப்
தமிழில்: விஜயன்

டாகி(DOGE)உடன் அரசு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டதன் மூலம் எலன் மஸ்க்கிற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளார் டிரம்ப்
"அரசாங்கச் செயல்திறன் துறை" (Doge) என்று பரவலாக அறியப்படும் மஸ்க்கின் குழுவுடன் அரசாங்க அலுவலகங்கள் கட்டாயம் இணைந்து பணியாற்றும் வகையில் ஒரு நிர்வாக உத்தரவை டிரம்ப் தயாரித்து வருகிறார். இந்த உத்தரவு, அரசாங்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவும், பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பதைக் கட்டுப்படுத்தவும் ஆணையிடுகிறது.
"அதிபரின் 'அரசாங்கச் செயல்திறன் துறை' பணியாளர் வள மேம்பாட்டு முன்முயற்சியை செயல்படுத்துதல்" என்று தலைப்பிடப்பட்ட உத்தரவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. "அமெரிக்க மக்களுக்கு அரசாங்கத்தை இன்னும் பொறுப்புள்ளதாக்குவதே" இதன் முக்கிய நோக்கம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், " ஒன்றிய அரசின் அதிகார வர்க்கக் கட்டமைப்பு செயல்படும் விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை இந்த உத்தரவு துவக்கி வைத்துள்ளது. தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலமும், நிர்வாக அமைப்பின் அளவைக் சுருக்குவதன் மூலமும், ஒளிவுமறைவான நடைமுறைகளைத் தவிர்ப்பதன் மூலமும், எனது ஆட்சியில் அமெரிக்கக் குடும்பங்கள், தொழிலாளர்கள், வரி செலுத்துவோர் மட்டுமல்லாது அரசாங்க அமைப்பிற்கும்கூட பெரிதும் நலம் பயக்கும்" என்று அந்த உத்தரவு எடுத்துரைக்கிறது.
இந்த உத்தரவில், துறைத் தலைவர்கள் "தமது பணியாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதற்கான திட்டங்களை வகுப்பார்கள்" என்றும், "சட்டப்படி அவர்களின் பணிகள் அவசியமற்றவை என்று கருதினால், அவர்களின் அலுவலகங்களின் எந்தப் பகுதிகள் (அல்லது முழு அலுவலகங்கள்) அகற்றப்படலாம் அல்லது இணைக்கப்படலாம் என்பதை முடிவு செய்வார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகங்கள் "மத்திய அரசுப் பணிகளிலிருந்து விலகும் ஒவ்வொரு நான்கு பேருக்கும் பதிலாக ஒருவரை மட்டுமே பணியமர்த்த வேண்டும்" என்றும், "டாகி(Doge) குழுவின் தலைவர் குறிப்பிட்ட பதவிகளை நிரப்பத் தேவையில்லை என்று கருதினால், துறைத் தலைவருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், நிரந்தரப் பணிக்கான காலியிடங்களை நிரப்பக்கூடாது" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இராணுவ வீரர்கள், புலம்பெயர்ந்து வருபவர்களை கண்காணிக்கும் அமைப்புகள், சட்டம் ஒழுங்கு, பொதுப் பாதுகாப்பு போன்ற துறைகளைச் சார்ந்த அலுவலகங்களுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது.
கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு வேலையை விட்டு விலகும்படி ஒன்றிய அரசு ஊழியர்களை டிரம்ப்பும், மஸ்க்கும் ஊக்குவித்து வருகின்றனர், எனினும் இந்த உத்தரவுகளின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து தற்போது ஒரு நீதிபதி பரிசீலித்து வருகிறார். அரசு அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, 65,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த சலுகையை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உலகப் பெரும் செல்வந்தரும், எக்ஸ் (X) நிறுவனத்தின் (முன்னதாக ட்விட்டர்) உரிமையாளருமான எலான் மஸ்க், ட்ரம்ப் அரசாங்கத்தில் ஒரு சிறப்புப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கருத்துரைக்கையில், அரசாங்க அமைப்பில் நல்ல மனிதர்கள் பலர் இருப்பினும், அவர்கள் தங்கள் செயல்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் என்றார். மேலும், 'டாகி' (Doge) மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தின் ஓர் நான்காவது அங்கமாக செயல்படும் என்று குறிப்பிட்டார்.
"அரசாங்கம் செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை எதிர்ப்பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர்; அது அவர்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். இதுவே ஜனநாயகத்தின் உண்மையான உட்கருத்து" என்றார் மஸ்க்.
எனினும், அரசாங்கத்தைச் சீரமைப்பதற்கான தனது திட்டங்கள் குறித்து மஸ்க் போதுமான அளவு தெளிவுபடுத்தவில்லை என்று விமர்சகர்கள் கூறுவந்த போதிலும் தான் திறந்த புத்ககம் போன்றவன் என்று தன்னைத்தானே வர்ணித்துக் கொண்டார். தொடர்ச்சியான, இது போன்ற நெருக்கமான கண்காணிப்புகள், "ஒவ்வொரு நாளும் ஒரு சங்கடமான மலக்குடல் பரிசோதனையை எதிர்கொள்வது போன்ற ஓர் அசௌகரியமான உணர்வை அளிக்கிறது" என்று வேடிக்கையான பதிலையும் அளித்துள்ளார்.
"பொதுமக்களின் வரிப்பணம் ஒவ்வொன்றும் மிகச் சிறந்த முறையிலும், உண்மையாகவே அத்தியாவசியமான தேவைகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்," எனில் 'டாகி' தேவை என்று மஸ்க் பேசினார். மருத்துவ ஆய்வுகளுக்காக செலவிடப்பட்டு வரும் நிதியிலிருந்து பல பில்லியன் டாலர்களை குறைப்பதற்கு இந்த வாரத் தொடக்கத்தில், ட்ரம்ப் அரசாங்கம் முயன்றது; ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் ஒரு நீதிபதி அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்.
செவ்வாய்க்கிழமையன்று, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அமெரிக்க கேபிடோல் கட்டிடத்திற்கு வெளியே ஒன்றுகூடி, இந்த முடிவுகளுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தும், அரசு ஊழியர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து, இத்தகைய போராட்டங்கள் நாடு முழுவதும் ஏறத்தாழ நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன .
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.theguardian.com/us-news/2025/feb/11/trump-doge-executive-order-musk