H-1B விசா, வரி விதிப்புகள் மற்றும் சிதைந்த உறவுகள்: இந்திய வெளியுறவுக் கொள்கையின் முகத்திரை கிழிந்தது
தமிழில்: வெண்பா

H-1B, வரி விதிப்புகள், மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கைத் தோல்வி
டொனால்ட் டிரம்ப் H-1B விசா அமைப்பின் மீது தொடுத்துள்ள சமீபத்திய தாக்குதல்—அதாவது, ஒவ்வொரு விசா வைத்திருப்பவருக்கும் ஆண்டுக்கு 100,000 டாலர் கட்டணம் விதிக்க முன்மொழிவது—ஒரு சாதாரண கொள்கைச் சீர்திருத்தம் மட்டுமல்ல. இது வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தின் மீதும், லட்சக்கணக்கான குடும்பங்களின் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் மீதும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த எண்கள்
பல தசாப்தங்களாக, H-1B திட்டத்தில் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்தினர். அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான அமெரிக்க நிதித் தரவுகளின்படி, மொத்த H-1B விசாக்களில் 72.3% இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் சராசரியாக ஆண்டுக்கு 120,000 டாலர் சம்பாதிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர்.
இந்த வருமானங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை — அவை இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் வலுவூட்டின. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனுப்பும் பணம், ஆண்டுக்கு 125 பில்லியன் டாலர் வருவாய்க்கு ஆதாரமாக அமைகிறது. இது அவர்களின் சமூக உயர்வுக்கு வழிவகுத்தது.
இந்தியாவிற்குள், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த இடப்பெயர்வுப் பொருளாதாரத்துடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் மட்டுமே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான H-1B விசா வைத்திருப்பவர்கள் உள்ளனர். இந்த வருமானங்கள் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) வைப்புநிதிகளாகத் திரும்பி வந்து, முழு உள்ளூர் பொருளாதாரங்களையும் மாற்றியமைத்தன.
இப்போது, அந்த முன்னேற்றத்திற்கான ஏணி பறிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா செயல்படுகிறது, இந்தியா வேடிக்கை பார்க்கிறது
தெளிவாகச் சொல்வதானால்: குறை அமெரிக்கா மீது இல்லை. டிரம்ப், அமெரிக்காவின் நலன் என்று அவர் நம்புவதைச் செய்துள்ளார். உண்மையான கேள்வி என்னவென்றால்: ஹூஸ்டனில் நடந்த ‘ஹௌடி மோடி’ அல்லது அகமதாபாத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிகளால் இந்தியா அடைந்த நன்மை என்ன?
அரங்க நிகழ்ச்சிகளாலும் பிறந்தநாள் வாழ்த்துகளாலும் என்ன சாதிக்கப்பட்டது? நிச்சயமாகப் பேரம்பேசும் சக்தியை அல்ல. நம்மை "வியூகப் பங்காளிகள்" என்று அழைத்துக்கொண்டே, இந்தியர்களின் வாழ்வாதாரத்தின் மீது அமெரிக்காவால் சாதாரணமாகத் தாக்க முடிகிறது என்றால், அமெரிக்காவின் கணக்கீடுகளில் இந்தியாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பது நிரூபணமாகிறது.
ஆதிக்கத்தின் வெளிப்பாடு
H-1B மீதான இந்த அடக்குமுறை ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இது ஒரு பரந்த ஆதிக்கத்தின் பகுதியாகும்:
• இந்திய ஏற்றுமதிகள் மீது கடுமையான வரிகள்.
• பொருளாதார வழித்தடங்களைத் மீண்டும் திறக்கும் பாகிஸ்தான்–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்.
• அமெரிக்காவின் ஆசீர்வாதம் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லாத பாகிஸ்தான்–சவுதி ஒப்பந்தம்.
• மேலும், இப்போது உலகில் "சட்டவிரோதப் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் அல்லது கடத்தும் முக்கிய நாடுகளில்" ஒன்றாக இந்தியாவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளது.
ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவின் பிம்பம், பேரம்பேசும் சக்தி, மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறைக்கிறது.
தவறவிட்ட வாய்ப்புகளும், குறைவான பதிலடிகளும்
கத்தார் மற்றும் ஆசியான் நாடுகள் உட்பட 18-க்கும் மேற்பட்ட நாடுகளுடன், ரூபாயில் வர்த்தகம் செய்ய ஏதுவாக இந்தியா டாலர் மதிப்பிழப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அது ஒரு முன்னேற்றமான படிதான். ஆனால் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது.
• வெளிநாட்டில் உள்ள இந்திய நிபுணர்களைப் பாதுகாக்கத் திட்டம் எங்கே?
• வெளிநாட்டு வாய்ப்புகளைப் பன்முகப்படுத்துதல் எங்கே?
• இந்தியாவின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்கத் தூதரக செல்வாக்கு எங்கே?
வியூகத்திற்குப் பதிலாக, இந்தியாவிற்குக் கிடைத்தது கோஷங்கள், புகைப்பட நிகழ்வுகள், மற்றும் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் மட்டுமே.
உண்மையான விலை
இந்த எண்களுக்குப் பின்னால் உண்மையான வாழ்க்கைகள் இருக்கின்றன:
• அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்பப் பணியாளர்கள் இப்போது திடீர் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.
• வெளிநாட்டுப் பணத்தை நம்பியிருக்கும் குடும்பங்கள் பேரழிவுகரமான அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளன.
• வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமானத்தை பெரிதும் நம்பியிருக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்கள் தேக்கநிலையை எதிர்கொள்கின்றன.
இது ஒரு கருத்தியல் ரீதியான கொள்கை விவாதம் அல்ல. இது மக்களின் எதிர்காலத்தின் மீதான நேரடித் தாக்குதல்.
இழக்கப்பட்ட பத்தாண்டு
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்ச்சியான கண்கட்டி வித்தைகளின் தொகுப்பாகவே இருந்துள்ளது. ஹூஸ்டனில் அரங்கக் கூட்டங்கள், நியூயார்க்கில் சாலை நிகழ்ச்சிகள், அகமதாபாத்தில் புகைப்பட நிகழ்வுகள்—இவற்றில் எதுவும் இந்தியாவின் நலன்களுக்கு அமெரிக்கா குந்தகம் விளைவிப்பதைத் தடுக்கவில்லை.
உண்மை எளிதானது: மோடியின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவிற்கு ஒரு பேரழிவாக அமைந்துள்ளது. அது சாராம்சத்தை விடுத்து பகட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அது பேச்சுவார்த்தைக்குப் பதிலாகத் தற்பெருமையை முன்னிறுத்தியுள்ளது.
அது உலக அரங்கில் இந்தியாவை மேலும் தனிமைப்படுத்தப்பட்ட, மேலும் பாதிக்கப்படக்கூடிய, செல்வாக்கற்ற நாடாக மாற்றியுள்ளது. 2014–2024 காலகட்டம் உலகளாவிய எழுச்சியின் பத்தாண்டாக நினைவுகூரப்படாது. அது, மோடியின் வெளியுறவுக் கொள்கையின் அகந்தை மற்றும் தொலைநோக்கற்ற தன்மையால் எழுதப்பட்ட, இந்தியாவின் இழந்த பத்தாண்டாகவே நினைவுகூரப்படும்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://theaidem.com/h-1b-tariffs-and-tarnished-ties-the-unmasking-of-indias-foreign-policy/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு