இந்தியா: அதிகரிக்கும் சமத்துவமின்மை - புள்ளி விவரங்கள்
ஆக்ஸ்ஃபாம் - தமிழில்: விஜயன்
இந்தியா உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், அது சமத்துவமின்மை அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக சமத்துவமின்மை வேகமாக அதிகரித்து வருகிறது. புல்லுருவி முதலாளித்துவம் (crony capitalism) மற்றும் பாரம்பரிய வளங்கள் மூலம் உருவாக்கப்பட்ட செல்வத்தின் பெரும் பகுதியை பணக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். ஏழைகள் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறவும், தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அணுகவும் கூட இன்னும் போராடி வரும் நிலையில், பணக்காரர்கள் மிக வேகமாக செல்வந்தர்களாகி வருகின்றனர். தரமான கல்வி, சுகாதார சேவைகள் போன்றவை நீண்டநாட்களாக நிதி ஒதுக்கீடு இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றன.
புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்
(2022ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள்)
அதிகரித்து வரும் இந்த இடைவெளிகளும், சமத்துவமின்மையும் பெண்களையும் குழந்தைகளையுமே அதிகமாகப் பாதிக்கின்றன.
1% செல்வந்தர்கள்
இந்திய மக்கள் தொகையில் முதல் 10% பேர் மொத்த தேசிய செல்வத்தில் 77% ஐ வைத்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட செல்வத்தில் 73%, பெரும் பணக்காரர்களான 1% பேருக்குச் சென்றது. நேர்மாறாக, ஏழைகளான 67 கோடி இந்தியர்கள் தங்கள் செல்வத்தில் வெறும் 1% அதிகரிப்பை மட்டுமே கண்டனர்.
70 மில்லியனர்கள்
இந்தியாவில் 119 பில்லியனர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் வெறும் 9 ஆக இருந்தது, அது 2017 இல் 101 ஆக அதிகரித்தது. 2018 மற்றும் 2022 க்கு இடையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 70 புதிய மில்லியனர்கள் உருவாவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
10 மடங்கு
பில்லியனர்களின் செல்வம் ஒரு தசாப்தத்தில் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களின் மொத்த செல்வம், 2018-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விடவும் அதிகமாகும். அந்த பட்ஜெட் இந்திய ரூபாய் மதிப்பில் 24422 பில்லியன் ஆக இருந்தது.
6.3 கோடி மக்கள்
பல கோடி இந்தியர்களால் அவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பை அணுக முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 6.3 கோடி மக்கள் சுகாதாரச் செலவுகள் காரணமாக வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள் — அதாவது கிட்டத்தட்ட வினாடிக்கு இருவர்.
941 ஆண்டுகள்
ஒரு முன்னணி இந்திய ஆடை நிறுவனத்தில் அதிக ஊதியம் பெறும் நிர்வாகி ஒரு வருடத்தில் ஈட்டுவதை, கிராமப்புற இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளி ஈட்ட 941 ஆண்டுகள் ஆகும்.
ஆடம்பரப் பொருளாக சுகாதாரப் பாதுகாப்பு
இந்திய அரசாங்கம் அதன் மிக வசதியான குடிமக்களுக்கு மிகக் குறைவாகவே வரி விதிக்கிறது. பொது சுகாதாரத்திற்கான அதன் நிதி ஒதுக்கீடு உலகளவில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. சுகாதாரத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்காமல் வணிகமயமாக்குவதை ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக, கண்ணியமான சுகாதாரப் பாதுகாப்பு என்பது அதற்கான விலையைக் கொடுக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆடம்பரப் பொருளாக மாறியுள்ளது.
மருத்துவ சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய இடமாக இந்தியா விளங்கும் அதே வேளையில்தான், இந்தியாவின் சிசு மரண விகிதம் (infant mortality rates) ஆப்பிரிக்காவை விட அதிகமாக உள்ளது. பிரசவ காலங்களில் ஏற்படும் தாய் இறப்புகளில், உலகின் 17% சதவிகித பங்கை இந்தியா கொண்டுள்ளது. மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்படும் இறப்புகளில் 21% இந்தியாவில் நிகழ்கின்றன.
பிரதிமா, இந்தியாவின் அதிகரித்து வரும் சமத்துவமின்மையின் பலிகடாக்களில் ஒருவர்
32 வயதான பிரதிமா, தனது கணவர் மற்றும் 14 வயது மகளுடன், பீகார் - பாட்னா நகரில் வசிக்கிறார். அந்தக் குடும்பம் ஏழ்மை நிலையைச் (marginalized group) சேர்ந்தது. அவர்கள் பாட்னாவின் நகர்ப்புற குடிசைப் பகுதிகளுள் ஒன்றில் வாழ்கிறார்கள். உள்ளூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் மோசமான சிகிச்சையின் காரணமாக பிரதிமா தனது இரட்டைக் குழந்தைகளை இழந்துள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தபோது, தனக்குத் தேவையான தாய்வழி சுகாதார சேவைகளையோ அல்லது பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குத் தயாராவதற்கான சரியான ஆலோசனையையோ பிரதிமாவால் பெற முடியவில்லை. அவரது வீட்டிலிருந்து வெறும் 500 மீட்டர் தூரத்திற்குள் பொது ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தபோதிலும், அங்கு மகப்பேறுக்கு முந்தைய கவனிப்பை (antenatal care) வழங்குவதற்கான வசதிகள் இல்லை.
கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில், கடுமையான பிரசவ வலியை அனுபவித்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு அவர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது பெண் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது, ஆனால் புதிதாகப் பிறந்த அவரது மகன் உயிருடன் இருந்தான். அவன் மிகவும் பலவீனமாக இருந்ததால், பிரதிமாவும் அவரது கணவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் அடைகாக்கும் கருவியை (incubator) நாட வேண்டியிருந்தது. பெரும் கடன்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக பணம் செலுத்த வேண்டியதாயிற்று. பணம் தீர்ந்தபோது, அவர்களின் மகன் மீண்டும் அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான் — அங்கு அவன் சில நாட்களுக்குப் பிறகு இறந்தான்.
இன்றே சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுங்கள்
சமத்துவமின்மை நம் அனைவரையும் பாதிக்கிறது. தரமான அத்தியாவசிய சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் அதிக முதலீடு செய்யுமாறு ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அரசாங்கங்களை வலியுறுத்துகிறது. மேலும், செல்வந்தர்களுக்கு நியாயமான முறையில் அதிக வரி விதிப்பதன் மூலம் இதற்கு நிதி திரட்டி உதவ முடியும் என்றும் அது அழைப்பு விடுக்கிறது. இத்தகைய சேவைகளை வழங்குமாறும், பெருநிறுவனங்கள் (corporates) மற்றும் செல்வந்தர்களின் குறைந்த வரிவிதிப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.oxfam.org/en/india-extreme-inequality-numbers