சட்டமன்றத்தில் வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் -ன் கவனம் கத்தோலிக்க திருச்சபை நில உடைமையின் மீது திரும்பியுள்ளது

டெலிகிராப் இணைய தளம்

சட்டமன்றத்தில் வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் -ன் கவனம் கத்தோலிக்க திருச்சபை நில உடைமையின் மீது திரும்பியுள்ளது

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கியத் தொடர்புடைய 'ஆர்கனைசர்' என்ற இதழின் இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரை, கத்தோலிக்க நிறுவனங்கள் ஏறத்தாழ ஏழு கோடி ஹெக்டேர் நிலத்தை உடைமையாகக் கொண்டுள்ளன என்று திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளது. மேலும், அக்கட்டுரை இந்த நில உடைமையை "இந்தியாவின் மிகப்பெரும் அரசு சாரா நில உரிமையாளர்" என்று கூறுகிறது.

 

"கத்தோலிக்க திருச்சபையா? வக்பு வாரியமா? இந்தியாவில் யார் பிடியில் அதிக நிலவுடைமை உள்ளது? ஓர் விவாதம்” என்னும் தலைப்பைக் கொண்ட இக்கட்டுரை, நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான நிலங்களின் மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்துவது போல் எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வக்பு (திருத்த) மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னணியில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.

வக்பு சொத்துக்களை மேலும் திறம்பட நிர்வகிப்பதற்கும், இது தொடர்பாக எழும் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் வகையில் 1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்பு சட்டத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்த) மசோதா முக்கியமான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. தங்களின் சமய, கல்வி அல்லது அறப்பணிகளுக்காக இஸ்லாமியர்களால் வழங்கப்பட்ட நன்கொடை சொத்துகளே வக்பு சொத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இந்த புதிய சட்டமானது, வக்பு வாரியங்களால் நிர்வகிக்கப்படும் நிலங்களின் மீது அரசாங்கம் மேலும் கூடுதலான கட்டுப்பாட்டை செலுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். 

சலசலப்பை ஏற்படுத்திய வக்பு வாரிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, கேரள கத்தோலிக்க பிஷப் பேரவைகூட ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை முன்வைத்து எதிர்க்கட்சியை பாஜக எள்ளி நகையாடியது. தற்பொழுது, ஆர்கனைசர் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராகவும் இது போன்றதொரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆயத்தமாவது போலத் தோன்றுகிறது.

சஷாங்க் குமார் திவிவேதியால் Organiser.org என்ற இணையதளத்தில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை பின்வருமாறு எடுத்துரைக்கிறது:

“அரசாங்க நிலத் தகவல் இணையத்தளப் புள்ளிவிவரங்களின்படி (பிப்ரவரி 2021 நிலவரப்படி), இந்திய அரசாங்கம் சுமார் 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தை உடைமையாக வைத்துள்ளது. வக்பு வாரியம் பல்வேறு மாநிலங்களில் பரந்துபட்ட நிலப்பகுதிகளை நிர்வகித்து வந்தாலும், அது இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை தன்வசம் வைத்துள்ள நிலத்தின் பரப்பளவை விடக் குறைவானதாகும்.”

மேலும் அந்தக் கட்டுரை பின்வரும் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது:

“இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை நாடு முழுவதும் சுமார் 7 கோடி ஹெக்டேர் (17.29 கோடி ஏக்கர்) நிலத்தை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சொத்துக்களின் மதிப்பிடப்பட்ட மொத்த மதிப்பு சுமார் ₹20,000 கோடி ஆகும். இதன் மூலம், திருச்சபை இந்தியாவில் நிலம், கட்டிடங்களின்(ரியல் எஸ்டேட் சந்தையில்) மிக முக்கியமான உடைமையாளராக விளங்குகிறது.”

காலங்காலமாக, ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபி அமைப்புகள் கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்கள் ஆதாயங்களை காட்டியோ அல்லது வலுக்கட்டாயமாகவோ மக்களை மதம் மாற்றுகிறார்கள் என்று நீண்ட காலமாக குற்றம் சாட்டி வந்துள்ளன. எனினும், அண்மையில் வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, கோவா போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக இந்த விவகாரத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துள்ளன.

"ஆர்கனைசர்" எனும் இதழில் வெளியான ஒரு கட்டுரை, கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான பெரும்பாலான நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் "சர்ச்சைக்குரிய முறைகளில்" கையகப்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது. மேலும், திருச்சபை குத்தகைக்கு எடுத்திருந்த நிலங்களைத் மீட்பதற்காக 1965 ஆம் ஆண்டு இந்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மறைமுகமாக நினைவூட்டியது. அந்த ஆணை முறையாக நடைமுறைப்படுத்தப் படாததால் நிலங்கள் முழுமையாக மீட்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

 “1965 ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட உத்தரவின்படி, ஆங்கிலேயர்களால் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் இனி தேவாலயத்திற்குரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. ஆனால் இந்த விதிமுறைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால், தேவாலயத்திற்குச் சொந்தமான சில நிலங்கள் இன்னும் சர்ச்சைக்குரிய நிலையில்தான் உள்ளன.” என்று அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://assets.telegraphindia.com/telegraph/2024/Sep/1725277171_1696246214_1690328678_rss.jpg