தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்களின் பட்டியல்
ஃப்ரண்ட்லைன்
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்களின் பட்டியல், பாஜக முதலிடம்; நிதிவழங்கியதில் அதிகம் அறியப்படாத ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் முதலிடம்
- SBI இலிருந்து தேர்தல் பத்திரங்கள் வாங்கி அதன் மூலம் எல்லையின்றி நிதியுதவி செய்வது அரசியல் நிதியுதவியின் பிரதான முறையாக உள்ளது.
- நிதிகள் பெருமளவில் பாஜகவுக்கு வழங்கப்பட்டிருப்பதானது, அரசியலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
மார்ச் 14 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசியல் நன்கொடைகளின் விவரங்களை வெளியிட்டது, இது அடுத்த சில வாரங்களில் வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சியின் (BJP) நிதி ஆதாயத்தை உறுதிப்படுத்துகிறது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஏப்ரல் 1, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை நன்கொடையாளர்களால் பல்வேறு வகைகளில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அதில் (ரூ.12,769.40 கோடி மதிப்புள்ள) 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டதாகவும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வழங்கும் முறைக்கு பொறுப்பாளராகவும், முதன்மையான பத்திர முகவராகவும் விளங்கும் எஸ்பிஐ, மார்ச் 12 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை ECI க்கு வழங்கவேண்டும் அல்லது அவமதிப்பு வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பெயரில் இதனை வெளியிட்டுள்ளது.
இதன் விளைவாக, உச்ச நீதிமன்றம் ECI க்கு அதன் இணையதளத்தில் தரவைப் பதிவேற்ற மார்ச் 15 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கியது. மேலும் தேர்தல் குழு வெளியிட்ட அந்த தரவு நூற்றுக்கணக்கான பக்கங்களில் மறுபதிப்பு செய்யப்பட்டது. நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாகவே ECI அதன் இணையதளத்தில் வெளியிட்டது. "SBI சமர்ப்பித்த தேர்தல் பத்திர தரவுகளை" இரண்டு பகுதிகளாக பதிவேற்றியது - ஒன்று வாங்கியவர்களின் பட்டியல் மற்றொன்று பயன்படுத்தியவர்களின் பட்டியல்.
SBI இலிருந்து தேர்தல் பத்திரங்கள் வாங்கி அதன் மூலம் எல்லையின்றி நிதியுதவி செய்வது அரசியல் நிதியுதவியின் பிரதான முறையாக உள்ளது. ஆனால் பிப்ரவரி 15 அன்று, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், எல்லையின்றி வழங்கப்படும் அரசியல் நிதியை அனுமதிக்கும் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்ததோடு, இது "அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும் கூறியது, இது கட்சிகளுக்கு யார் எவ்வளவு நிதியளிக்கிறார்கள் என்பதை அறியும் வாக்காளர்களின் உரிமையை மீறுவதாகவும் எடுத்துரைத்தது. வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களையும், நன்கொடைகளை பெயர் குறிப்பிடாமல் வழங்கியதையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
நிதியளித்தவர்கள் மற்றும் நிதியினை பெற்றவர்கள்
ஏப்ரல் 2019 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை, பாஜக தனிப்பெரும் பயன்பாட்டளராகவும் மற்ற கட்சிகளிடமிருந்து பெரும் வித்தியாசத்தில் முன்னிலயில் இருப்பதாகவும் மார்ச் 14 அன்று வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. மார்ச் 2023 வரை கட்சிகளால் ரொக்கமாகப் பெறப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் சுமார் 48% சதவீதத்தினை பாஜக பெற்றுள்ளது, அதாவது ரூ.6,060 கோடி. ரூ.1,609.50 கோடி (12.6 சதவீதம்) பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசு ரூ.1,421 கோடி (11 சதவீதம்) பெற்றுள்ளது.
பாரத் ராஷ்டிர சமிதி (BRS) ரூ.1,214 கோடியும், பிஜு ஜனதா தளம் (BJD) ரூ.775 கோடியும், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) ரூ.639 கோடியும் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.66 கோடியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ரூ.6.05 கோடியும் பெற்றுள்ளது. இப்பட்டியலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சில முன்னணி ப்ளூசிப் நிறுவனங்கள், பத்திரங்களை வாங்கியவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன, இதில் பன்னாட்டு எஃகு தயாரிப்பு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலின் நிர்வாகத் தலைவரான லட்சுமி நிவாஸ் மிட்டல் பெயரில் வாங்கப்பட்ட ரூ.35 கோடி மதிப்புள்ள பத்திரங்களும் அடங்கும். அவரைத் தவிர கிரண் மஜூம்தார் ஷா, வருண் குப்தா, பி.கே. கோயங்கா, ஜைனேந்திர ஷா, மற்றும் மோனிகா என்ற தலைப்பு பெயரை கொண்ட மற்றொருவர் ஆகியோர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்களில் தனி நபர்கள்.
மற்றவை நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, கிரேசிம் இண்டஸ்ட்ரீஸ், பைரமல் எண்டர்பிரைசஸ், டார்ரண்ட் பவர், பார்தி ஏர்டெல், டி.எல்.எஃப் கமர்சியல் டெவெலப்பர்ஸ், வேதாந்தா லிமிட்டெட், அப்பலோ டயர்ஸ், எடெல்வெய்ஸ், பிவிஆர், கெவெண்டர், சூலா ஒயின்ஸ், வெல்ஸ்பன், சன் பார்மா, வர்தமான் டெக்ஸ்டைல்ஸ், ஜிந்தால் குரூப், பிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிடெட், சியட் டயர்கள், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், ஐடிசி, கேபீ எண்டர்பிரைசஸ், சிப்லா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட்.
காசியாபாத்தைச் சேர்ந்த யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (ஒவ்வொன்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள) 162 பத்திரங்களை வாங்கியது, பஜாஜ் ஆட்டோ ரூ.18 கோடி, பஜாஜ் ஃபைனான்ஸ் ரூ.20 கோடி, மூன்று இண்டிகோ நிறுவனங்கள் ரூ.36 கோடி, ஸ்பைஸ்ஜெட் ரூ.65 லட்சம், இண்டிகோவை சேர்ந்த ராகுல் பாட்டியா ரூ.20 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் ரூ.410 கோடியும் ஹால்டியா எனர்ஜி ரூ.377 கோடியும் மதிப்பிலான பத்திரங்களை வாங்கின.
எவ்வாறாயினும், ECI வெளியிட்ட பட்டியலின்படி, மிகப்பெரிய நிதியளிப்பாளர் ("லாட்டரி மன்னன்" சந்தியாகு மார்ட்டினுக்கு சொந்தமான) ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் எனும் அதிகம் அறியப்படாத லாட்டரி நிறுவனமாகும், இது ரூ.1,368 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளது. ரூ.966 கோடியுடன் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டும், ரூ.410 கோடியுடன் குவிக் சப்ளை செயின் நிறுவனமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஃபியூச்சர் கேமிங் மார்ச் 2022 இல் அமலாக்கத் துறையால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானியின் பிரதான நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
மற்ற நகரங்களை விட கொல்கத்தா அதிக நிதியளித்த கார்ப்பரேட்களின் தளமாக உருவெடுத்துள்ளது. முதல் 50 தேர்தல் பத்திர நிதியாளர்களில், 16 பேர் "குதூகல நகரம் (City of Joy)” எனப்படும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனங்கள் ஏப்ரல் 2019 - ஜனவரி 2024 க்குள் ரூ.1,925.8 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இதில் ஹால்டியா எனர்ஜி (ரூ.377 கோடி) அதிகம் வாங்கியுள்ளது. 11 நன்கொடையாளர்களுடன் ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும், எட்டு பேருடன் மும்பை அடுத்த இடத்திலும் உள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்துடன் (ரிலையன்ஸ் அதை மறுத்தாலும்) தொடர்புடையதாகக் கூறப்படும் Qwik நிறுவனம் (2021-22 நிதியாண்டிற்கான) நிகர லாபம் வெறும் ரூ 21.72 கோடி என கணக்கு காட்டியுள்ளது, ஆனால் அது ரூ.360 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியதானது அனைவரின் புருவங்களையும் உயர்த்த செய்துள்ளது. மேலும், பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா ரூ. 6 கோடி பத்திரங்களுடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்படும் நன்கொடைகளுக்கும் வரிச் சலுகை உண்டு. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 80GG மற்றும் 80GGB இன் கீழ், கட்சியினரால் பத்திரங்கள் பயன்படுத்தப்படும் வரை அவர்கள் 100% சதவீத வரி விலக்கு பெறுகிறார்கள்.
சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி (TDP), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD), சமாஜ்வாதி கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய கூட்டமைப்பு, கோவா பார்வேர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனசேனா கட்சி (JSP) ஆகியவை தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தியுள்ள பிற கட்சிகள்.
மத்தியில் ஆளும் என்.டி.ஏ-கூட்டணியின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பணமாக்கிக் கொண்ட கட்சிகளின் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறுவதைக் குறைமதிப்பீடு செய்துள்ளன. ஜனசேனா செய்தி தொடர்பாளர் அஜய் குமார், ”எங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் உள்ளனர். மேலும் தேர்தல் பத்திரம் என்பது சட்டப்பூர்வமான விஷயம்” என்றார்.
ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (Association of Democratic Reforms) முந்தைய அறிக்கையின்படி, மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரை ரூ.16,518 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன, இது அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நிதிகளில் பாதிக்கும் மேலாகும். நிதியளித்தவர்கள் அரசியல் ஆதாயங்களைப் பெற்றிருக்கிறார்களா என்பதை பொதுமக்கள் ஆய்வு செய்ய முடியாமல் போனதனால் இத்திட்டம் வெளிப்படைத்தன்மையை பெருமளவில் குறைத்துவிட்டதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். எஸ்பிஐ மூலம் நிதியளிப்பவரின் விவரங்களை எடுப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு யார் யார் நிதியளிக்கிறார்கள் என்பதையும் கூட தெரிந்துக் கொள்ள இது அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அரசியல் எதிர்வினைகள்
பெரும்பாலான பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் பெயரில் வழங்கப்பட்டாலும், காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி "தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி" மற்றும் "அத்யக்சா, சமாஜ்வாடி கட்சி" என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.
தரவு வெளியிடப்பட்ட உடனேயே, எதிர்க்கட்சியான காங்கிரஸ், “நிதியளித்தவர் மற்றும் பயன்பாட்டாளர் (20,421 மற்றும் 18,871) எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதாகக் கூறியது. எல்லையற்ற அரசியல் நிதியளிப்பிற்கான திட்டம் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் ஏப்ரல் 2019 முதல்தான் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது - ஏன்?” என்று கேட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பத்திர அடையாள எண்களை கட்சி தொடர்ந்து கோருவதாகவும், அதுவே நிதியளித்தவர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் பற்றி விவரங்களை துல்லியமாக வழங்கும் என்றும் கூறினார். 2019 முதல் பாஜகவுக்கு 6,000 கோடி ரூபாய்க்கு மேல் 1,300க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் தனிநபர்களும் தேர்தல் பத்திரங்களை நிதியாக அளித்துள்ளனர்.
ரமேஷ் ஊடகங்களிடம் கூறுகையில், இவை முழுவதும் பாஜக வின் "ஊழல் தந்திரங்களை" அம்பலப்படுத்தியுள்ளன, இதில் மிரட்டி பணம் பறிப்பதும் ஒரு முறையாக இருப்பதாகக் கூறினார். ரெய்டு செய்யப்பட்ட அல்லது ஒப்பந்தம் பெற்ற பல நிறுவனங்கள் அதன் பிறகு விரைவில் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. எந்தவொரு நிறுவனமும் அதன் லாபத்தில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே நன்கொடையாக வழங்குவதை இத்திட்டம் கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஷெல் நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்வதற்கும் இந்தத் திட்டம் வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.
அமலாக்கத் துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களை பாஜக கேடாகப் பயன்படுத்தி 45 நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக காங்கிரஸ் மார்ச் 14 அன்று குற்றம் சாட்டியது. ஜனநாயகத்தின் மீது அக்கறை இருந்தால் அதன் நிதி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய புலனாய்வு அமைப்புகளால் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு மேலும் 15 நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதியளித்தது புதிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டினார்.
“அதிக நிதிகளைப் பெற அச்சுறுத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளையடித்தல் மற்றும் வற்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதா? புதிய தகவல்கள்படி ED, CBI, வருமான வரித் துறை ரெய்டுகளுக்குப் பிறகு மேலும் 15 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன, மொத்தம் 45 நிறுவனங்கள் பாஜகவுக்கு கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் கொடுத்துள்ளன,” என்று X தளத்தில் கார்கே பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ராஜ்யசபா எம்பி கபில் சிபல், “இந்த திட்டத்தை தொடங்கியவர் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தான், இந்த முறையினால் தங்களுடன் (பாஜக) எந்த அரசியல் கட்சியும் போட்டியிட முடியாது என்று நினைத்தார். இப்போது அது சரி என நிரூபிக்கப்பட்டுள்ளது. பணம் உள்ளவன் புகுந்து விளையாடலாம்” என்று மத்திய பாஜக அரசை தாக்கியுள்ளார். எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஆர்ஜேடியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா மார்ச் 15 அன்று, தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகள், "வரலாற்றில் மிகவும் ஊழல்மலிந்த அரசியல் கட்சி பாஜக" என்பதை நிரூபித்துள்ளது என்றார். அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான ஜா, உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவு, பாஜகவின் "தேசப்பற்று பாசாங்குகளுக்கு" பதில் கொடுக்கிறது என்றும், அதே சமயம் மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசியல் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் உறுதிபடுத்துகிறது என்றும் கூறினார்.
ராஜ்யசபா எம்பியும் சுட்டிக்காட்டினார், “ஒரு தனியார் நிறுவனம் அமலாக்கத்துறையால் சோதனை செய்யப்பட்டது, சில நாட்களுக்குப் பிறகு, அது தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இதை கண்ட மாத்திரத்தில், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று அழைக்கப்படும் பாஜகவின் யோக்கியதை என்னவென்பதை எவர் வேண்டுமானாலும் அறிந்துக் கொள்ள முடியும்.
இதற்கிடையில், மார்ச் 15 அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தரவு வெளியான பிறகு மிகப்பெரிய "கற்பனைகள்" சேர்க்கப்பட்டுள்ளன என்றும், இந்த முறை சரியானதாக இல்லாவிட்டாலும், "முற்றிலும் சரியற்ற" முந்தைய அரசியல் நிதி முறையை விட "சற்றே இது சிறந்தது" என்றும் ஒப்புக்கொண்டார்.
“தேர்தல் பத்திர முறை சரியானதாக இல்லாமல் இருக்கலாம். இது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இது தொடர்பாக ஒரு புதிய சட்டம் ஏற்படுத்தப்படலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போவதில்லை. இம்முறையில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய முயற்சிகள் எடுப்பேன்” என்று சீதாராமன் ஊடக சந்திப்பில் கூறினார்.
நிறுவனங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கும் அவர்கள் அளித்த நிதிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை சீதாராமன் "ஊகங்கள்" என்று நிராகரித்தார். அமலாக்கத் துறையின் சோதனைக்குப் பிறகு பணம் கொடுக்கப்பட்டதாக நீங்கள் பெரிய கற்பனைகளைக் கொண்டுள்ளீர்கள்” என்று சீதாராமன் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
வெளியிடப்பட்ட தரவு இன்னும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களை அதை பயன்படுத்தியவர்களுடன் நேரடியாக இணைக்கவில்லை, எந்தவொரு தனி நபர் அல்லது கார்ப்பரேட், எந்தெந்த கட்சிகளுக்கு நிதியளிக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வரும் லோக்சபா தேர்தலுக்கான கால அட்டவணையை மார்ச் 16ம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கும். மோடியும் பாஜகவும் மூன்றாவது முறையாகவும் வெற்றி பெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் பலமாக கணிக்க்கின்றனர். பிஜேபி சார்பான கருத்துக் கணிப்புகள் மற்றும் மிகப் பெரிய பிரச்சார உத்தியுடன், பத்தாண்டு ஆட்சியினாலும் பரவலான மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் மோடி.
எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
எஸ்பிஐ "கடமைக்கு உட்பட்டு" அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்களின் அடையாள எண்களை வெளியிட வேண்டும், அவ்வாறு செய்யாததற்கு வங்கியிடம் இருந்து உச்ச நீதிமன்றம் மார்ச் 15 அன்று விளக்கம் கேட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், வாங்கியவர், தொகை மற்றும் வாங்கிய தேதி உட்பட பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டுள்ளதாக கூறியது. அரசியல் நன்கொடை அளிப்பதற்காக தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் முழு பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட மறுநாள்தான், அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ அளிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி உணர்ந்தார். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“எஸ்பிஐ தரப்புக்கு யார் ஆஜராகப் போகிறார்கள்? ஏனென்றால், எங்கள் தீர்ப்பில், வாங்கியவர், தொகை மற்றும் வாங்கிய தேதி உட்பட பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் குறிப்பாக வெளிப்படுத்துமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் பத்திர எண்களை வெளியிடவில்லை. அதை எஸ்பிஐ வெளிப்படுத்த வேண்டும்” என்று தலைமை நீதிபதி வங்கியை கேட்டார். பத்திர அடையாள் எண்கள்தான், நிதி பெற்ற கட்சிகளை தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களுடன் பொருத்தும்.
“அவர்கள் [எஸ்பிஐ] பத்திர எண்களை வெளியிடவில்லை. அதை வெளியிட வேண்டும்” என்று தலைமை நீதிபதி கூறினார். "ஆனால் உண்மையை பேசுகையில், அவர்கள் வெளியிட்டவற்றிலிருந்து நாங்கள் விதிவிலக்கு எடுக்க முடியும், ஏனெனில் அவர்களும் அந்த கடமைக்கு கட்டுப்பட்டவர்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
- வெண்பா (தமிழில்)