எஸ்.ஐ.ஆர்: வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையைப் பறிப்பதும் குடியுரிமையை மறுப்பதும்!

சிபிஐ-எம்.எல். (ரெட்ஸ்டார்)

எஸ்.ஐ.ஆர்: வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையைப் பறிப்பதும் குடியுரிமையை மறுப்பதும்!

எஸ்.ஐ.ஆர் (சிறப்பு தீவிர திருத்தம்) மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் (SC) இன்னும் நிலுவையில் இருக்கும்போதே (உச்ச நீதிமன்றத்தை வெறும் பார்வையாளராக கருதி) இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), மோடி அரசாங்கத்தின் செயல் பிரிவாக மாறி எஸ்.ஐ.ஆர் நடவடடிக்கைகளை (SIR 2.0) 12 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இறந்தவர்கள், இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கை என தொடங்கப்பட்ட பீகார் எஸ்.ஐ.ஆர்., தரவு முறைகேடுகள், செயல்முறை வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு மத்தியில், முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடிகள், எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களை பெருமளவில் நீக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் சுமார் 55% பேர் பெண்கள்; அதிலும் குறிப்பாக, முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள். உண்மையில், பீகாரில் நடந்த ஒட்டுமொத்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் விளைவு, ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை நோக்குடன் கச்சிதமாக ஒத்துப்போகிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு முஸ்லிம்கள் மிகப் பெரிய எதிரிகளாக இருக்கும் நிலையில், தலித்துகளும் பெண்களும் கூட மனித நிலைக்குக் கீழானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

பீகாரின் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களில் பெரும்பாலோனோருக்கு ரேஷன் கார்டுகள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் மட்டுமே அடையாள ஆவணங்களாக உள்ளன. பொதுவாகக் கிடைக்கக்கூடிய இந்த ஆவணங்களுக்குப் பதிலாக, பிறப்புச் சான்றிதழ்கள், மெட்ரிகுலேஷன் சான்றிதழ்கள், அரசுப் பணி அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்டுகள், சொத்து ஆவணங்கள் போன்ற 11 ஆவணங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வற்புறுத்துவது, பீகாரின் லட்சக்கணக்கான ஏழை இந்தியக் குடிமக்களுக்கு வாக்குரிமை கிடைக்காத நிலையில், மேலும் பல விளைவுகளை இது ஏற்படுத்தவுள்ளது. இவற்றில் மிக முக்கியமானது, அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய நிலையே ஆகும். இதைத் தீர்ப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ், நீக்கப்பட்டவர்களைப் பெயரளவுக்கு மீண்டும் சேர்ப்பது மேற்கொள்ளப்பட்டாலும், முறையான விண்ணப்பம் செய்வதில் உள்ள தடைகள் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டறிவின்மை காரணமாக, எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ பட்டியலுக்கு வெளியேதான் உள்ளனர்.

அதோடு, வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் செயல்முறைத் தோல்விகளுக்கு மத்தியில், இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை குடியுரிமைச் சரிபார்ப்புத் துறைக்கும் விரிவுபடுத்தி வருகிறது. வெளிப்படையாகவே, ஒரு குடிமகனுக்கு வாக்களிக்காமல் இருக்க எல்லா உரிமையும் உள்ளது. குடியுரிமையையும் வாக்களிக்கும் உரிமையையும் ஒன்றாகக் குழப்புவது என்பது தேர்வு செய்யும் சுதந்திரத்தையும், கருத்து வேறுபாட்டின் அடிப்படை உரிமையையும் மீறுவதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது சரத்தின்படி அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட இந்தியத் தேர்தல் ஆணையம், குடியுரிமைத் துறைக்குள் அத்துமீறி நுழைந்து - எஸ்.ஐ.ஆர். மூலம் - 326வது சரத்தின் கீழ் உள்ள குடிமக்களின் உரிமைகளை மறுக்கிறது.

உண்மையில், உச்ச நீதிமன்றம் இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், நாடு தழுவிய எஸ்.ஐ.ஆருக்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தை மோடி அரசு ஏவிவிடும் முடிவானது, அனைத்து முன்மாதிரிகளையும் அப்பட்டமாக மீறும் பாசிச நடவடிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யால் தங்களின் வாக்கு வங்கியாகக் கருதப்படாத ஒடுக்கப்பட்டவர்கள், முக்கியமாக சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிப்பதுடன், இக்கொடிய நடவடிக்கையின் இறுதி விளைவானது, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) மறைமுகமான வடிவத்தில் கொண்டு வந்து அவர்களின் குடியுரிமையை முற்றிலும் பறிப்பதாகும் என்று இது குறித்து பலதரப்பினர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக, இதற்கு முந்தைய வாக்காளர் பட்டியல் திருத்தங்களில் (பொதுவாக தேர்தலுக்கு முன்பு நடைபெறும் சுருக்கமான திருத்தம் என்று அழைக்கப்படுவது), ஏற்கனவே இருக்கும் வாக்காளர் பட்டியல்கள் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும், கடந்த தேர்தலுக்குப் பிறகு 18 வயது பூர்த்தியானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த பணியைச் செய்வது தேர்தல் அதிகாரிகளின் கடமையாகும். இருப்பினும், இப்போது எஸ்.ஐ.ஆர்-ன் கீழ், குடிமக்கள் அணுக முடியாத ஆவணங்களின் முழுத் தொகுப்பின் மூலம் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க மோடி அரசாங்கம் கட்டாயப்படுத்துவதன் மூலம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) திருட்டுத்தனமாகப் பின்வாசல் வழியாகச் செயல்படுத்தி வருகிறது. “இயற்கையான குடியுரிமை” (Jus Soli)-யிலிருந்து “ஆதாரத்தின் அடிப்படையிலான குடியுரிமை” (Jus Sanguinis)-க்கு மாறுவது, இந்தியாவில் இந்துத்துவ பெரும்பான்மைவாத பாசிச எழுச்சியுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

இப்போது, மோடி அரசாங்கம் இந்தியத் தேர்தல் ஆணையம் மூலம் நவம்பர் 4, 2025 அன்று எஸ்.ஐ.ஆர் 2.0-ஐ தொடங்கவிருப்பதால், 12 மாநிலங்களின் தற்போதைய வாக்காளர் பட்டியல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ‘இந்தியா கூட்டணி’-யைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளா இதனை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. கேரளாவில், உள்ளாட்சித் தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையிலும் எஸ்.ஐ.ஆர் 2.0 திணிக்கப்பட்டு, அனைத்து கட்சிகள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இது குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் நடத்தத் தீர்மானித்துள்ளது. பாசிசத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் இதைத் தீவிரமாக எதிர்த்து வருகின்றன.

இருப்பினும், எஸ்.ஐ.ஆர் 2.0-ஐ வெறும் “வாக்குத் திருட்டுக்கான சதி” என்று மட்டும் வரையறுப்பதற்குப் பதிலாக, முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறித்து, அவர்களுக்குக் குடியுரிமையை மறுப்பதன் மூலம் ஒரு பெரும்பான்மைவாத இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதை இறுதிக் குறிக்கோளாகக் கொண்ட  - நன்கு திட்டமிடப்பட்டதொரு பாசிச தாக்குதலாக இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனவே, ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச அடக்குமுறைகளுக்குள்ளாகும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து, பாசிச எதிர்ப்பு மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் எஸ்.ஐ.ஆர்.-மூலமான வாக்குரிமைப் பறிப்பு மற்றும் குடியுரிமை மறுப்பு ஆகிய இரண்டிற்கும் எதிராக ஒன்றுபட்டு கிளர்ந்தெழுவதற்கான சரியான நேரம் இதுவே.

ரெட்ஸ்டார் (நவம்பர் 2025)

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://redstaronline.in/2025/10/31/sir-disenfranchisement-denial-of-citizenship-under-the-guise-of-voter-list-revision/?fbclid=IwVERTSAOGpYZleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgIY2FsbHNpdGUBMgABHgyytHsmqIwERmKslotMPco3Lzw8GSbDkgLOwX59Fol8g5qLAAmqSCFcy-Xo_aem_CVIZBcNlU6Pl8EECO3HUaA&sfnsn=wiwspwa

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு