பிபிசி ஆவணப்படத்தை பார்ப்பவர்கள் மீது பாயும் பாசிச தாக்குதல்கள்

செந்தளம் செய்திப்பிரிவு

பிபிசி ஆவணப்படத்தை பார்ப்பவர்கள் மீது பாயும் பாசிச தாக்குதல்கள்

2000க்கும் மேற்பட்ட இசுலாமியர்களையும் இந்துக்களையும்  படுகொலை செய்த, இசுலாமிய பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குஜராத் கலவரத்தை ஆவணப்படமாக்கி வெளியிட்டுள்ளது பிபிசி டூ செய்தி நிறுவனம். இந்த கலவரங்களில் ஈடுபட்ட கொலைவெறி கும்பலான விஷ்வ ஹிந்து பரிசத் உள்ளிட்ட சங்பரிவாரங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த அனறைய மாநில மோடி அரசை அம்பலப்படுத்தியுள்ளது இந்த ஆவணப்படம்.

இந்த ஆவணப்படத்தை தடை செய்துள்ளது மோடி அரசு. இதை சிபிஎம் மாணவர் இயக்கங்களும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பும் இந்தியா முழுவதும் ஆங்காங்கே திரையிட்டு வருகின்றனர்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை அரசு விடுமுறை கொடுத்து பார்க்கச் செய்து மதவெறியை தூண்டிய மோடி கும்பல், இவர்கள் நடத்திய மதவெறி படுகொலையின் கோரத் தாண்டவத்தை தடை செய்து மறைக்க முடியும் என்று கருதுகிறார்கள். கானல் நீர் தாகம் தீர்க்காது.

ஆவணப்பட திரையிடல்களை அத்துமீறி தடுப்பதோடு, செல்போன்களில் இந்த ஆவணப்படங்களை பார்ப்பவர்களையும் கைது செய்து பாசிச தாக்குதல் தொடுத்து வருகிறது பாஜக அரசு.

1) டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிட்டு பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் தொடுத்துள்ளது சங்பரிவார கும்பல். இணையச் சேவையையும் மின் இணைப்பையும் துண்டித்துள்ளது. தொடர்ந்து ஆவணப்படத்தை மொபைல் போனில் பார்த்த மாணவர்களை கைதும் செய்துள்ளது கெஜ்ரிவால் அரசு. 

2) அதேப்போல ஜாமிய பல்கலைக் கழகத்திலும் ஆவணப்படம் பார்த்த 70க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளது. 

3) கேரளாவிலும் ஆங்காங்கே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதை தடுத்து முடக்கி வருகிறது. 

4) ஆவணப்படம் பார்க்க முயன்ற திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையும். 

5) சென்னையில் இந்த ஆவணப்படத்தை திரையிட முயன்றவர்களை காவல்துறை தடுத்துள்ளது. தொடர்ந்து மொபைல் போனில் பார்த்தவர்களையும் சிபிஎம் கவுன்சிலர் பிரியதர்ஷினி என்பவரையும் கைது செய்துள்ளது திமுக அரசு.

இவ்வாறு ஆவணப்படத்தை பார்ப்பவர்கள் மீது பாசிச தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி அரசு. அதன் அடிவருடியாக செயல்படும் ஃபோர்டு பவுண்டேஷன் மாடல் ஆம்ஆத்மி அரசும், திராவிட மாடல் திமுக அரசும் மோடி அரசின் பாசிசத்திற்கு லத்தியாக செயல்படுகின்றன.

- செந்தளம் செய்திப்பிரிவு