மூலதனக் குவியல் - I
மார்க்சிய பொருளாதாரம்
மறு உற்பத்தி (REPRODUCTION)
நாம் நமது வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிறோம். இப்பொருள் உற்பத்தி சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டியது அவசியமானதாகும். ஒரு குறிப்பிட்ட அளவு பொருட்களை உற்பத்தி செய்தவுடன், நாம் பொருள் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. ஏனென்றால் அந்த உற்பத்தி செய்த பொருள்களை நாம் பயன்படுத்திய பிறகு அப்பொருட்கள் மீண்டும் நமக்குத் தேவைப்படுகின்றன. எனவே மீண்டும் அப்பொருள்களை நாம் உற்பத்தி செய்கிறோம்.
உதாரணமாக 1 வருடத்திற்குத் தேவையான உணவாக 100 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். உற்பத்தி செய்யப்பட்ட இந்த நெல் 1 வருடத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு அடுத்த வருடத்திற்கு மறுபடியும் நெல் உற்பத்தி செய்யவேண்டும். அதே போல் உடுப்பதற்கான துணிகளை எடுத்துக் கொள்வோம். 1 வருடத்திற்குத் தேவையான துணிகளை உற்பத்தி செய்து, பயன்படுத்துகிறோம் என்று கொள்வோம். அடுத்த வருடத்திற்கு? துணிகள் கிழியாமல் அப்படியே கடைசி வரை இருந்து விடுமா? இருக்காது. எனவே மறுபடியும் தொடர்ந்து துணி உற்பத்தியில் நாம் ஈடுபடவேண்டியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து சமுதாயத்தில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதைத்தான் "மறு உற்பத்தி" என்றழைக்கிறோம்.
இரு வகைப் பொருள் உற்பத்தி
நம்முடைய தேவைகள் பலதரப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறோம். சில பொருட்கள் நம்முடைய உடனடித் தேவைகளை, தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யப் பயன்படுகின்றன. உதாரணமாக உணவுப் பொருட்கள், துணிமணிகள் போன்றவை. இவற்றை நாம் நுகர் பொருட்கள் என்று அழைக்கலாம். வேறு சில பொருட்கள் நம்முடைய உடனடித் தனிப்பட்ட தேவைகளுக்கு இல்லாமல், நமது உற்பத்திச் செயலுக்குப் பயன்படுகின்றன. உதாரணமாக நிலக்கரி, எந்திரங்கள் போன்றவை நமக்கு மேற்கூறிய வகையில் பொருள் உற்பத்திக்குப் பயன்படுகின்றன. இவற்றை உற்பத்தி சாதனங்கள் என்றழைக்கலாம்.
எனவே நாம் நுகர்பொருள், உற்பத்தி சாதனங்கள் என்ற இரு வகைப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்கிறோம். நுகர்பொருள், உற்பத்தி சாதனம் ஆகிய இரண்டு பொருள் உற்பத்தியிலும் மறு உற்பத்தி தொடர்ந்து நடைபெறுவது சமுதாயத்திற்கு அவசியமானது.
சாதாரண மறு உற்பத்தி (SIMPLE REPRODUCTION)
ஒரு பொருள் வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவே உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டால் அதனை "சாதாரண உற்பத்தி" என்றழைக்கலாம். உதாரணமாக உணவுப் பொருளை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு வருடமும் 100 லட்சம் டன் உணவுப் பொருளே உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதாவது எந்த வருடத்திலும் உணவுப் பொருள் உற்பத்தி 100 லட்சம் டன்னுக்கு குறையவோ கூடவோ கூடாது என்று கொள்வோம். இப்படிப்பட்ட உற்பத்திதான் "சாதாரண மறு உற்பத்தி"யாகும்.
விரிவடைந்த மறு உற்பத்தி (EXTENDED REPRODUCTION)
முதலாளித்துவ சமுதாயத்தின் இயக்கமானது உற்பத்தியில் விரைவான வளர்ச்சியை உள்ளடக்கியதாகும். இச்சமுதாயத்தில் வருடந்தோறும் ஒரே அளவு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்படுவதில்லை. வருடந்தோறும் ஒரே பொருள் உற்பத்தியின் அளவு அதிகமாகும். இந்த வருடம் 100 டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டால், அடுத்த வருடம் 150டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு முதலாளித்துவ சமுதாயத்தில் நடைபெறுகின்ற உற்பத்தியை "விரிவடைந்த மறு உற்பத்தி" என்றழைக்கிறோம்.
மூலதனக்குவியல் (Accumulation Capital)
முதலாளித்துவ சமுதாயத்தில் விரிவடைந்த மறு உற்பத்தியே நடைபெறுகிறது என்று கண்டோம். அங்கு வருடாவருடம் உற்பத்தி பெருகிக்கொண்டே வரும். இவ்வாறு பொருள் உற்பத்தி பெருக வேண்டுமானால், அதற்கு தேவையானது என்ன?
ஒரு முதலாளி கடந்த ஆண்டு உற்பத்தி செய்ததை விட, இந்த வருடம் அதிகம் பொருள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று முயல்கிறான் என்று கொள்வோம். அதற்கு அவனுக்கு என்ன தேவைப்படுகிறது? மேலும் இயந்திரங்களும் மூலப்பொருள்களும் தேவை! மேலும் தொழிலாளிகள் தேவை! இவற்றைப் பெறுவதற்கு அவனுக்கு இன்னும் மூலதனம் தேவை! அவன் கடந்த ஆண்டு முதலீடு செய்த மூலதனத்தை விட, இன்னும் அதிக மூலதனம் தேவை! கடந்த ஆண்டு 1 கோடி ரூபாய் அவன் முதலீடு செய்திருந்தான் என்று கொள்வோம். இந்த ஆண்டு அவன் அதிக பொருள் உற்பத்தியில் ஈடுபட, மேலும் 10 இலட்சம் ரூபாய் மூலதனம் தேவை என்று கொள்வோம். இந்த 10 லட்சத்தை அவன் எங்கிருந்து பெறுவது?
அவன் ஏற்கனவே கடந்த ஆண்டு முதலீடு செய்திருந்த 1 கோடி ரூபாயை கடந்த ஆண்டு உற்பத்தி செய்த பொருள்களை விற்கும் போது மீண்டும் பெற்றுவிடுவான்! ஆனால் மேலும் அவனுக்கு 10 லட்சம் தேவைப்படுகிறதே!
நாம் "உபரி மதிப்பு" பற்றிய கட்டுரையில் முதலாளிக்கு உபரி மதிப்பு எவ்வாறு கிடைக்கிறது என்று ஆராய்ந்தோம்! ஒரு பொருளின் மதிப்பில் மூன்று பிரிவுகளில் அடங்கியுள்ளது என்று கண்டோம். ஒன்று இயந்திரம், மூலப்பொருள் ஆகியவறிற்கு ஆகும் செலவு! இதை C என்று குறிப்பிட்டோம்.
மற்றொன்று தொழிலாளிக்குக் கொடுத்த கூலி; இதை V என்று குறிப்பிட்டோம்.
மூன்றாவது உபரி மதிப்பு-அதாவது முதலாளியின் சுரண்டல்-என்று கண்டோம் இதை S என்று குறிப்பிட்டோம். எனவே,
பொருளின் மதிப்பு = C + V + S என்று கண்டோம்.
நாம் மேலே கண்ட முதலாளியை எடுத்துக்கொள்வோம். அவன் 1 கோடி ரூபாய் மூலதனம் கடந்த ஆண்டு முதலீடு செய்திருக்கிறான்! அதாவது இயந்திரங்கள், மூலப் பொருள்கள், தொழிலாளிக்கு கூலி ஆகியவற்றுக்கு 1 கோடி ரூபாய் செலவழித்துள்ளான்! இதில் இயந்திரம், மூலப் பொருள்களுக்கு செலவு 75 லட்சம் என்று கொள்வோம்(C) தொழிலாளிகளுக்கு கூலியாக கொடுக்கப்பட்டது 25 லட்சம் என்று கொள்வோம். (V).
எனவே C + V = 75 லட்சம் + 25 லட்சம் = 1 கோடி.
அவன் கடந்த ஆண்டு உற்பத்தி செய்த பொருள்களின் மொத்த மதிப்பு 125 லட்சம் ரூபாய் என்று கொள்வோம். அதாவது அவன் உற்பத்தி செய்த பொருள்களை விற்றதில் அவனுக்கு 125 லட்சம் பணம் கிடைத்தது என்று கொள்வோம். இந்த பணத்தில் அவன் முதலீடு செய்த மூலதனத்தை கழித்தால், அவனுக்கு கிடைத்த உபரி மதிப்பு (S) கிடைக்கும்.
அதாவது உபரி மதிப்பு=125 லட்சம் -100 லட்சம் = 25 லட்சம்.
மேற்கண்ட உபரி மதிப்பாகிய 25 லட்சம் முதலாளி தொழிலாளர்களைச் சுரண்டிய சுரண்டலாகும். இந்தச் சுரண்டல் முழுவதையும் முதலாளி தனது சொந்த தேவைகளுக்கு செலவழிப்பானா? மாட்டான். தனக்குக் கிடைத்த உபரி மதிப்பில் ஒரு பகுதியை தனது சொந்த தேவைக்குச் செலவழித்துவிட்டு, மீதியை தனது மூலதனத்துடன் சேர்த்து முதலீடு செய்யவே விரும்புவான். அவ்வாறு அதிக முதலீடு செய்வதால், அவனுக்கு அடுத்த ஆண்டு அதிக உபரி மதிப்பு கிடைக்கும்.
முதலாளி வர்க்கத்தின் நோக்கமே தனது மூலதனத்தை பெருக்கி, அதன் மூலம் தான் பெறும் உபரி மதிப்பைப் பெருக்குவதுதான் ஆகும். எனவே அதனது முழுநோக்கமும் மூலதனத்தை மேலும் பெருக்குவதாகவே இருக்கும். முதலாளி வர்க்கத்தின் அடிப்படைப் பண்பே இதுவாகும்.
நாம் "உபரிமதிப்பு" பற்றிய கட்டுரையில் முதலாளி எவ்வாறு மூலதனத்திலிருந்து உபரி மதிப்பைப் பெறுகிறான் என்று கண்டோம். இப்போது அவன் எவ்வாறு உபரிமதிப்பிலிருந்து தனது மூலதனத்தைப் பெருக்குகிறான் என்பதைக் காண்கிறோம். இவ்வாறு உபரி மதிப்பிலிருந்து மூலதனத்தைப் பெருக்குவதையே "மூலதனக்குவியல்" என்று அழைக்கிறோம்.
மேலே கூறப்பட்ட முதலாளி கடந்த ஆண்டு முதலீடு செய்த மூலதனம் 1 கோடி என்று கண்டோம். கடந்த ஆண்டு அவனுக்கு கிடைத்த உபரி மதிப்பு 25 லட்சம் என்று கொண்டோம். அதாவது முதலீடு செய்த பணத்தில் 4இல் 1 மடங்கு உபரி மதிப்பாகக் கிடைக்கிறது.
இந்த ஆண்டு அந்த முதலாளி தனக்குக் கடந்த ஆண்டு கிடைத்த உபரி மதிப்பில் 20 லட்சத்தை மூலதனமாக மாற்றுகிறான் என்று கொள்வோம்! 5 லட்சத்தை மட்டுமே தனது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான் என்று கொள்வோம்.
எனவே இந்த ஆண்டு அவன் முதலீடு செய்கிற மூலதனத்தின் மொத்த மதிப்பு 120 லட்சம்! இந்த மூலதனத்திற்கு இவ்வருடம் எவ்வளவு உபரி மதிப்பு அவனுக்கு கிடைக்கும்? 4இல் 1 மடங்கு கிடைக்கும் என்று முன்பு கண்டோம். அப்படியென்றால் 30 லட்சம் அவனுக்கு உபரி மதிப்பு கிடைக்கும். அதாவது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக 5 லட்சம் உபரி மதிப்பாக கிடைத்துள்ளது!
இந்த 5 லட்சம் உபரி மதிப்பிற்கு தேவையான மூலதனத்தை முதலாளி எங்கிருந்து பெற்றான்? கடந்த ஆண்டு தான் தொழிலாளிகளைச் சுரண்டிய உபரி மதிப்பில் இருந்துதான் பெற்றான்! கடந்த ஆண்டில் அவன் சுரண்டிய 25 லட்சத்தில் 20 லட்சத்தை மூலதனமாக மாற்றியது மூலம்தான் அவனால் இந்த ஆண்டு 5 லட்சம் உபரிமதிப்பை அதிகமாக பெற முடிந்தது.
அதாவது கடந்த ஆண்டு முதலாளி தொழிலாளிகளைச் சுரண்டிய சுரண்டல் இந்த ஆண்டு மேலும் பல தொழிலாளிகளை அதிகமாக அவன் சுரண்டப் பயன்படுகிறது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது! முதலாளி வர்க்கத்தின் மூலதன வளர்ச்சிக்கு - பெருக்கத்திற்கு-அடிப்படை சுரண்டலே!
மேலே கூறப்பட்ட முதலாளி முதலில் முதலீடு செய்த 1 கோடி மூலதனம் அவனுக்கு "எப்படியோ" கிடைத்தது என்றே கொள்வோம். ஆனால் அடுத்த ஆண்டு அவனது மூலதனத்தில் சேர்ந்த 20 லட்சம் எங்கிருந்து கிடைத்தது? தொழிலாளிகளைச் சுரண்டியதிலிருந்துதான் கிடைத்தது.
எனவே, தொழிலாளி வர்க்கத்தை மேலும் மேலும் சுரண்டுவது மூலமாகத்தான் முதலாளி வர்க்கம் கையில் உள்ள மூலதனம் எல்லாம் தொழிலாளி வர்க்கம் உருவாக்கியதேயாகும். உண்மையில் அது தொழிலாளி வர்க்கத்திற்கே சொந்தமானதாகும்.
மூலதனக்குவியலுக்கு அவசியம் என்ன?
முதலாளி ஏன் தான்பெற்ற உபரி மதிப்பில் ஒரு பகுதியை மட்டுமே தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு, மீதியை மூலதனத்துடன் சேர்க்கிறான்? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று மேலும் மேலும் தனது லாபத்தைப் பெருக்கவேண்டும் என்று விருப்பம்; மூலதனம் பெருக பெருக அவனுக்கு அதிகமான உபரி மதிப்பு கிடைக்கும். அதிக லாபம் கிடைக்கும்.
அடுத்து முதலாளித்துவ சமுதாயத்தில் நிகழ்கின்ற போட்டி. ஒவ்வொரு முதலாளியும் தனது உற்பத்தி திறனை விரிவாக்கவே விரும்புவான். தனது பொருள் உற்பத்தி முறையை நவீனப்படுத்த முயல்வான். புதிய இயந்திரங்களையும் செயல் முறைகளையும் புகுத்த விரும்புவான். அப்போதுதான் அவனால் பிற முதலாளிகளுடன் போட்டிப்போட முடியும். தன்னை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.
மேற்கூறப்பட்ட இரண்டு காரணங்களுக்காகவும் முதலாளிக்கு மூலதனக் குவியல் அவசியமானதாகும்.
மூலதனத் திரட்சி (Concentration Capital)
ஒவ்வொரு முதலாளியும் ஒவ்வொரு வருடமும் தனக்குக் கிடைக்கின்ற உபரி மதிப்பில், ஒரு பகுதியை தனது மூலதனத்துடன் சேர்க்கின்றான் என்று நாம் கண்டோம். இவ்வாறு வருடாவருடம் அவனுடைய மூலதனம் மேலும் மேலும் பெருகுகிறது. வருடாவருடம் அவனுக்கு இவ்வாறு உபரிமதிப்புக் குவியல் மூலமாக ஒரு தனிப்பட்ட முதலாளி கையில் மூலதனம் அதிகரிப்பதை "மூலதனத்திரட்சி" என்று அழைக்கலாம்.
மூலதனம் மையப்படுத்தப்படுதல் (Centralization Capital)
முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளிகளுக்கு இடையே சுரண்டுவதில் போட்டி கடுமையாக நடப்பது இயல்பே. ஒவ்வொரு முதலாளியும் தனது லாபத்தைப் பெருக்க, பிற முதலாளிகளுடன் போட்டியிடுகிறான். இப்போட்டியில் சிறு முதலாளிகள் நசுக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரிய முதலாளிகளால் விழுங்கப்படுகிறார்கள். பெரிய தொழிற்சாலைகள் சிறு தொழிற்சாலைகளை போட்டியில் சீர்குலைக்கின்றன. பெரிய முதலாளிகள் இப்போட்டியில் தங்களால் நசுக்கப்பட்ட சிறு முதலாளிகளின் தொழிற்சாலைகளை அவற்றினுடைய உண்மையான மதிப்பை விடக் குறைந்த மதிப்பிற்கு விலைக்கு வாங்குகிறார்கள். அல்லது அத்தொழிற்சாலைகளை தங்கள் தொழிற்சாலையுடன் இணைக்கிறார்கள். இந்த செயல்கள் மூலம் பெரிய முதலாளிகள் தங்களுடைய மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு பல தொழிற்சாலைகள் ஒன்றிணைவது மூலமாக மூலதனங்கள் ஒன்றிணைவதை "மூலதனம் மையப்படுத்தப்படுதல்" என்று கூறலாம்.
இம்"மூலதனம் மையப்படுத்தப்படுதல்" இயக்கமானது "மூலதனக்குவியல்" "மூலதனத்திரட்சி" ஆகிய இவற்றிலிருந்து வேறுபட்டதாகும். "மூலதனம் மையப் படுத்தப்படுதல்" இயக்கத்தில், "சமுதாயத்தில் நிலவுகிற மூலதனத்தின் அளவு மொத்தத்தில் பெருகுவதில்லை; மாறாக பலர் கையில் உள்ள மூலதனங்கள், ஒரே கையில் குவிகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட முதலாளித்துவ நாட்டில் மொத்த மூலதனம் 1000 கோடி ரூபாய் என்று கொள்வோம். மொத்தம் 100 முதலாளிகள் மேற்கண்ட 1000 கோடி மூலதனத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கொள்வோம்.
சில வருடங்கள் கழித்து முதலாளித்துவ போட்டியில் பல சிறிய முதலாளிகள் நசுக்கப்படுகிறார்கள் என்று கொள்வோம். அவர்களின் எண்ணிக்கை 50 என்று கொள்வோம். அப்படியென்றால் இப்போது நீடிக்கும் 50 பெரிய முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் மேற்கண்ட 50 சிறிய முதலாளிகளின் மூலதனங்களும் வந்துவிட்டன என்று கொள்வோம். அதாவது 100 முதலாளிகளுக்கு இடையே 1000 கோடி ரூபாய் மூலதனம் முன்பு பங்கு போடப்பட்டிருந்தது; தற்போது அதே 1000 கோடி ரூபாய் 50 முதலாளிகளுக்கு இடையே பங்கு போடப்படுகிறது. அதாவது சமுதாயத்தின் மொத்த மூலதனத்தில் நேரடி பெருக்கம் எதுவுமில்லை; மாறாக மூலதனம் பங்கு போடப்பட்டிருப்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 100 முதலாளிகளின் மூலதனங்கள், இப்போது 50 முதலாளிகளிடம் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பகுதி முதலாளிகளின் கையில் இருந்த மூலதனம் இழக்கப்பட்டிருக்கிறது; அதே சமயத்தில் மற்றொரு பகுதி முதலாளிகளின் கையில் இருக்கின்ற மூலதனத்தில் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
"மூலதனம் மையப்படுத்தப்படுதல்" இயக்கத்திற்கு இரண்டு அம்சங்கள் அடிப்படையாக அமைகின்றன. இவை இரண்டில் பிரதான அம்சம் பெரிய அளவு உற்பத்திப் பொருளாதாரத்தில் (economics of large scale production) அடங்கியுள்ளது. முதலாளித்துவப் போட்டிப் போராட்டத்தில், சரக்குகளின் விலை மலிவாக்கப்படுகிறது. இவ்வாறு சரக்குகளின் விலை மலிவாக்கப்படவேண்டுமென்றால், அது எதைப் பொருத்தது? உற்பத்தி திறனைப் பொருத்தது. உற்பத்தித்திறன் வளர்ச்சி அடைய அடைய, சரக்குகளின் விலை குறையும். உற்பத்தி திறனின் வளர்ச்சி எதைப் பொறுத்துள்ளது? உற்பத்தி அளவைப் பொறுத்துள்ளது. அதாவது அதிக அளவில் ஒரு முதலாளி தனது உற்பத்தியைப் பெருக்கும்போது, உற்பத்தி திறனும் வளர்ச்சியடையும்; அதனால் சரக்குகளின் விலையும் குறையும். ஆனால் எல்லா முதலாளிகளாலும் ஒரே சமயத்தில் தங்களது உற்பத்தி அளவைப் பெருக்க முடியுமா? முடியாது. உற்பத்தி அளவைப் பெருக்குவதற்கு தேவையான மூலதனத்தை எந்த முதலாளி அதிகமாக பெற்றிருக்கிறானோ, அவனால்தான் அதை செய்ய முடியும். சிறிய முதலாளிகளால் இதில் அவனுடன் போட்டி போட முடியாது. அதன் விளைவு என்ன? பெரிய முதலாளி உற்பத்தி செய்த சரக்குகளின் விலை குறைவாக இருக்குமாதலால் அவை சந்தையில் நன்கு விற்கும். ஆனால் சிறிய முதலாளிகள் உற்பத்தி செய்த சரக்குகளின் விலை முன்பு போலவே குறையாமல் இருக்கும். எனவே அவை சந்தையில் விலை போகாது. இவ்வாறு சிறிய முதலாளிகள் நசுக்கப்படுகிறார்கள். இந்தச் செயல் போக்கில் சிறிய முதலாளிகளின் மூலதனங்கள், பெரிய முதலாளிகளின் மூலதனங்களோடு ஒன்றிணையும்.
"மூலதனம் மையப்படுத்தப்படுதல்" இயக்கத்திற்கு அடிப்படையாக மற்றொரு அம்சம் "கடன் வழங்கும் முறையாகும்" (Credit System). இம்முறையில் வங்கிகள் மட்டுமல்லாமல் எல்லா பண உதவி நிறுவனங்களும் உள்ளடங்கும். இக்கடன் வழங்கும் முறை தொடக்கத்தில் எல்லா முதலாளிகளுக்கும்-பெரிய, சிறிய ஆகிய இரண்டு முதலாளிகளுக்கும் பயன்படும்.
அவர்கள் தங்களுடைய மூலதனக் குவியலைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படும். பின்னல் முதலாளித்துவப் போட்டி கூர்மையடைய அடைய, அது பெரிய முதலாளிகளுக்கே அதிகம் பயன்படுகிறது. அவர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் மூலதனத்தை மையப்படுத்த அது ஒரு முக்கியமான சமூக சாதனமாக மாறுகிறது.
"கடன் வழங்கும் முறையானது" தன்னுடைய வளர்ச்சி பெற்ற வடிவத்தில், சிறிய முதலாளிகளின் மூலதனங்களைப் பறிமுதல் செய்கின்ற சாதனமாக இருக்காது. மாறாக பல மூலதனங்கள் ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட அது காரணமாக அமைகிறது. ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி (Joint Stock Company) போன்றவை இக்கடன் வழங்கும் முறையில் உள்ளடங்கும்.
இவ்வாறு முதலாளித்துவ சமுதாயத்தில் நிலவுகின்ற வங்கிகள் வேறுபல கடன் வழங்கும் நிறுவனங்கள், ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி போன்றவை சமுதாயத்தில் உள்ள மூலதனம் ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட காரணமாக அமைகின்றன.
'மூலதனம் மையப்படுத்தப்படுதல்' 'மூலதனத் திரட்சி' ஆகியவற்றின் விளைவுகள்
பிரதானமாக மூன்று விளைவுகள் ஏற்படுகின்றன.
1) முதலாளித்துவ சமுதாய எல்லைக்குள்ளேயே உழைப்புச் செயல் (Labour Process) சமூக மயப்படுத்தப்படுகிறது; விஞ்ஞான அடிப்படையில் வளர்ச்சி அடைகிறது. உதாரணமாக ஒரு காரை (car) எடுத்துக்கொள்வோம்; அதனுடைய பல்வேறு உறுப்புகள் பல்வேறு இடங்களில் பல தொழிலாளிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் விளைவாக ஒரு காரை உற்பத்தி செய்வதற்கு ஒரு சிலரின் உழைப்பு மட்டும் பங்கு கொள்ளாமல், பல பேரின் உழைப்பு பங்கு கொள்கிறது. ஒரு நபரின் உழைப்பு பொருளாக இல்லாமல் சமுதாயத்தின் மொத்த உழைப்பின் விளை பொருளாக அது மாறுகிறது. அதாவது உழைப்புப் பிரிவினை வளர்ச்சியடைகிறது. அதன் விளைவாக உழைப்புச் செயலில் விஞ்ஞான மாற்றங்கள் வேகமாக ஏற்படுகின்றன. அது புதுமையாக்கப்படுகின்றது.
2) மூலதனம் அதிகமாக மையப்படுத்தப்பட பட, இயந்திரங்கள் விஞ்ஞானமயமாக்கப்படுகின்றன. பல நபர்கள் செய்கின்ற உழைப்பை ஒரே இயந்திரம் செய்யக் கூடியதாக வளர்ச்சியடைகிறது. இதனால் தொழிலாளர்களுக்கான தேவை குறைகிறது.
3) முதலாளித்துவ உற்பத்தியாளர்களிடையே நிகழ்கின்ற போட்டி குறைகிறது. முதலாளித்துவ போட்டியானது ஏகபோக அரை ஏக போக முதலாளித்துவ அமைப்பால் அகற்றப்படுகிறது. ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கம் பெருகுகிறது.
முதலாளித்துவ நெருக்கடி
இதுவரை நாம் "மூலதனக் குவியல்" பற்றியும் அதன் விளைவாக ஏற்படுகின்ற "மூலதன திரட்சி" "மூலதனம் மையப்படுத்தப்படுதல்" பற்றி விரிவாக கண்டோம். இந்த இயக்கங்களினால் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் என்னென்ன பாதிப்புகள் நெருக்கடிகள் தோன்றுகின்றன என்பதை அடுத்த கட்டுரையில் ஆராயலாம்.
1979ஆம் ஆண்டு ஜீன் மாதம் சமரனில் வெளிவந்த கட்டுரை
தொடரும்...