நூல் அறிமுகம்: சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள்
அ.கா.ஈஸ்வரன்

(அண்மையில் வெளிவந்துள்ள லெனின் தேர்வு நூல்களின் 12 தொகுதிகள் பற்றிய அறிமுகம், MELS இணைய வழிப் பயிலரங்கில் தொடர் வகுப்பாக எடுக்கப்படுகிறது. அதில் பத்தாம் வகுப்பு இது.)
தொடர் வகுப்பில் இது பத்தாம் வகுப்பு, இங்கே 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லெனின் எழுதிய “சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள்” என்கிற நூலை பார்க்கப் போகிறோம்.
சென்ற வகுப்பில், 1917ஆம் ஆண்டில் அக்டோபர் (புதிய நாட்காட்டி படி நவம்பர்) மாதம் புரட்சி நடைபெற்றதையும் அதை ருஷ்ய மக்களுக்கு அறிவிக்கப்பட்டதையும் பார்த்தோம்.
இந்தப் புரட்சியை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாமல், இளம் ருஷ்ய சோஷலிச நாட்டை அழிப்பதற்கு துடித்துக் கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்துமட்டுமல்லாது உள்நாட்டிலும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் என்கிற குழு “தாய்நாட்டையும் புரட்சியையும் விடுதலை செய்யும் கமிட்டி” என்ற பெயரில் ருஷ்ய புரட்சிக்கு எதிராக செயல்பட்டது, மென்ஷிவிக்குகளும் எதிர்ப்புரட்சிக்கு உதவினர்.
அரசுக்கு எதிராக உள்நாட்டு சக்திகளோடு, வெளி சக்தியான ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பையும் இளம் சோவியத் அரசு சந்திக்க வேண்டிவந்தது.
1917ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1918ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான நான்கு மாதங்களில் நாடெங்கும் சோவியத் புரட்சி பரவியது. இறுதியில் மாபெரும் அக்டோபர் புரட்சி முழு வெற்றி அடைந்தது. ஆனால் அங்கிங்கு என்று சில கலகங்கள் தொடர்ந்தன. புதியதாகத் தோன்றிய சோவியத் ஆட்சியை தொடக்க நிலையிலேயே அழித்திட நினைத்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ருஷ்ய சோஷலிச நாட்டினை எதிர்த்துக் கொண்டே இருந்தன.
நாட்டின் நிலைமை மேம்படுவதற்கு, நடைபெற்றுவரும் போர், பெரும் தடையாக இருந்தது. போரை நிறுத்தி சமாதான உடன்படிக்கை ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு, சோவியத் அரசு போரிடும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.
இந்த சமாதான அழைப்பை இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஐப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. வேறுவழியின்றி இளம் சோவியத் அரசு ஜெர்மனி, ஆஸ்திரியா அகிய அரசுடன் தனியாக பேச்சு வார்த்தை நடத்தியது. இப்பேச்சு வார்த்தைகளின் தொடர்ச்சியாக பிறநாடுகளும் சமாதானத்துக்கு வரும் என்று சோவியத் அரசு நம்பியது.
ஜெர்மன் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஒப்புக்கொண்டது. ஆனால் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. ஜெர்மனி தாம் கைப்பற்றியிருந்த போலந்து, லித்துவேனியா, லாட்வியாவின், பேலோருஷ்யாவின் பகுதிகளை தங்களிடமே விட்டுவிடும்படி கோரியது. இந்த கடுமையான நிபந்தனையை இளம் சோவியத் அரசு ஏற்கும்படியான சூழ்நிலையில்தான் அப்போது இருந்தது.
தொடர் போரினால் வீரர்கள் களைத்துப் போயிருந்தனர், வீரர்களை போர்முனையில் இருந்து அழைக்க வேண்டிய நிலையினை உணர்ந்து இந்த நிபந்தனைகளை ஏற்கவேண்டி வந்தது.
இளம் சோவியத் வலுப்பெறுவதற்கு அவகாசம் வேண்டும், இந்த அவகாசத்தை அடைவதற்கு இந்த கடுமையான நிபந்தனையை ஏற்று சமாதான ஒப்பந்தத்தில் சோவியத் அரசு கையொப்பமிட்டது.
இதன் பிறகு லெனின் சோஷலிச நிர்மாண வேலையிலும் புதிய சோஷலிசப் பொருளுற்பத்தியை உருவாக்குவது பற்றியதிலும் தமது சிந்தனையை செலுத்தினார். இந்தச் சூழ்நிலையில்தான் “சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள்” என்கிற நூலை அவர் எழுதினார்.
இந்த நூலில் காணப்படும் உட்தலைப்புகளைப் பார்த்தாலேயே லெனின் இந்த நூலில் எதைப் பற்றி பேசியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
1. சோவியத் அரசாங்கத்தின் சர்வதேச நிலைப்பாடும் சோசலிசப் புரட்சியின்
அடிப்படைப் பணிகளும்
2. இத்தருணத்தின் பொதுவான முழக்கம்.
3. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் புதிய கட்டம்
4. நாடு தழுவிய கணக்கு பதிவுக்கும் கண்காணிப்புக்குமான
போராட்டத்தின் முக்கியத்துவமும்
5. உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்
6. போட்டியின் ஒழுங்கமைப்பு
7. "இணக்கமான ஒழுங்கமைப்பும்" சர்வாதிகாரமும் .
8. சோவியத் ஒழுங்கமைப்பின் வளர்ச்சி.
9. முடிவுரை
1. சோவியத் அரசாங்கத்தின் சர்வதேச நிலைப்பாடும் சோசலிசப் புரட்சியின் அடிப்படைப் பணிகளும்
சமாதானம் ஏற்பட்ட சூழ்நிலைமைக்கு நன்றியுடன் இந்த நூலை லெனின் தொடங்குகிறார். இந்த சமாதான சூழ்நிலையில், ரஷ்ய சோவியத் குடியரசு சோசலிசப் புரட்சியின் மிக முக்கியமானதும் கடினமான அமைப்புப் பணியின் மீதும் சிறிது நேரம் தனது முயற்சிகளை ஒருமுனைப்படுத்தி ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுள்ளது என்கிறார் லெனின்.
முந்தைய முதலாளித்துவ புரட்சிகளுக்கும் தற்போதைய சோசலிச புரட்சிகளுக்கும் இடையிலான தீவிர வேறுபாட்டை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் லெனின்.
பெரும் திரளான உழைக்கும் மக்களின் முதன்மையானப் பணியாக நிலப்பிரபுத்துவத்தையும் முடியாட்சியையும் மையக்கால நிலைமைகளையும் ஒழிப்பதே முதலாளித்துவப் புரட்சியின் பணிகளாக இருந்தது.
சோஷலிசப் புரட்சியில், கோடிக்கணக்கான மக்களது வாழ்வுக்குத் தேவையான சரக்குகளின் திட்டமிட்ட உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் உரிய புதிய உறவுமுறைகளை உருவாக்குவதாக இருந்தது.
இதை வெற்றிகரமாகச் செய்வது அவ்வளவு எளிதான செயலாக லெனின் கருதவில்லை என்பது அவரது எழுத்துக்களைப் படிக்கும்போது நமக்குத் தெரிகிறது. இதனை அவரது எழுத்துக்களிலேயே பார்ப்போம்.
“பெரும்பான்மையான மக்களும், முதன்மையாக பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், வரலாற்றை உருவாக்குபவர்களாக சுதந்திரமான படைப்புப் பணியில் ஈடுபட்டால் மட்டுமே, இத்தகைய புரட்சியை வெற்றிகரமாக நடத்த முடியும். பாட்டாளி வர்க்கமும் ஏழை விவசாயிகளும் போதிய வர்க்க உணர்வும், கோட்பாட்டில் உறுதியும், தன்னலம் கருதாத தியாக உணர்ச்சியும், விடாமுயற்சியும் வெளிப்படுத்தினால் மட்டுமே சோசலிசப் புரட்சி வெற்றி பெறுவது உறுதியாகும்.”
கோட்பாடு பிடிப்பும் தன்னலம் கருதாக தியாகமும் இல்லாமல் சோஷலிசத்தை அமைத்திட முடியாது என்பதை தெளிவாக லெனின் கூறியுள்ளார். மேலும் கூறுகிறார், சோவியத் வடிவிலான ஒரு புதிய வகை அரசை உருவாக்கியதன் மூலம் ஒரு பகுதிக்கு மட்டுமே தீர்வு கண்டுள்ளதாகக் கூறுகிறார். பெரும் பிரச்சினை பொருளாதாரத்தில் அடங்கியிருக்கிறது.
சோஷலிச அரசை நிறுவினால் மட்டும், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது, அதனைக் கொண்டு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன, அதில் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.
சோஷலிச நிர்மாணப் பணி என்பது மிகவும் கடினமானப் பணி, அதுவும் பின்தங்கிய ருஷ்ய நாட்டில் அதனை செய்வது மிகவும் கடினமானது.
2. இத்தருணத்தின் பொதுவான முழக்கம்
போரினாலும் முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தினாலும் அழிக்கப்பட்ட உற்பத்திச் சக்திகளை மீட்டமைப்பதும், நாட்டின் பொருளாதாரத்தை புத்தாக்கம் பெறச் செய்வதும் தற்போதைய ருஷ்ய நாட்டின் உடனடிப் பணிகளாகும் என்கிறார் லெனின்.
இந்தப் பணிக்கான முழக்கமாக லெனின் வைப்பதை அடுத்துப் பார்ப்போம்.
நேர்மையான ரொக்கக் கணக்கு வைக்க வேண்டும், சிக்கனமாய் நிர்வகிக்க வேண்டும், சோம்பலாய் இருக்ககூடாது, திருடக் கூடாது, கடுமையான உழைப்பு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இத்தருணத்துக்குரிய பொதுவான முழக்கமாகும். அதாவது முதலாளித்துவ வர்க்கம் வீழ்த்திவிட்டப் பின்பான, இத்தருணத்துக்குரிய முதன்மையான உடடினப் பணியினை முழக்கமாக லெனின் வைக்கிறார்.
3. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் புதிய கட்டம்
“முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் புதிய கட்டம்” என்கிற இந்த உட்தலைப்பையும் “"இணக்கமான ஒழுங்கமைப்பும்" சர்வாதிகாரமும்” உட்தலைப்பையும் சற்றுவிரிவாகவே லெனின் எழுதியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.
மூன்றாம் உட்தலைப்பின் தொடக்கத்திலேயே, சோஷலிசம் சாத்தியமாவதற்கான நிலைமைகளை லெனின் முன்வைக்கிறார். இதனை அவரது எழுத்துக்களிலேயே பார்ப்போம்.
“நமது நாட்டில் முதலாளித்துவ வர்க்கம் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது, ஆனால் இன்னும் அது வேரறுக்கப்படவில்லை, இன்னும் அது அழிக்கப்படவில்லை, அறவே தகர்க்கப்படக்கூட இல்லை. எனவேதான் நாம் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தின் மேலும் உயர்வான ஒரு புதிய வடிவத்தை எதிர்நோக்குகிறோம்; மேலும் தொடர்ந்து முதலாளிகளை உடைமை நீக்கம் செய்யும் மிக எளிய பணியிலிருந்து, முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதை அல்லது இது மீண்டும் உதித்தெழுவதைச் சாத்தியமற்றதாக்கிவிடும் நிலைமைகளைத் தோற்றுவிப்பதென்ற மிகவும் அதிக சிக்கல் வாய்ந்த, கடினமான பணிக்கு மாறிச் செல்வதற்கான போராட்டமாகும் இது. இந்தப் பணி முந்தியதைக் காட்டிலும் அளவுகடந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பது தெளிவு; இந்தப் பணி நிறைவேற்றி முடிக்கப்படாதவரை சோஷலிசம் சாத்தியமன்று.”
இந்த லெனினது கூற்றுக்கு விளக்கம் தேவைப்படாது, இருந்தாலும் அவர் கூறியவற்றின் சாரத்தைப் பார்ப்போம்.
சோஷலிசம் அடைந்துவிட்டோம் என்பது உண்மைதான், ஆனால் முதலாளித்துவம் முழுமையாக வேரறுக்கப்படவில்லை. முதலாளிகளின் உடைமைகளை நீக்குகிற பணியோடு சேர்ந்து செய்ய வேண்டிய முக்கியமான பணி என்பது முதலாளித்துவ சிந்தனை நிலவுவதையும் மீண்டும் தலைத்தூக்குவதையும் சாத்தியமற்றதாக்கிவிடும் சூழ்நிலைமைகளை தோற்றுவிக்க வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்துவதைக் காட்டிலும் முதலாளித்துவம் தலைத்தூக்குவதைத் தடுப்பது முக்கியப் பணியாகும்.
மேலும் லெனின் கூறுகிறார், ருஷ்யாவில் எங்கும் ஆணை செலுத்தும் சோவியத் ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ளோம், இதுகுறித்து பெருமை கொள்ளலாம், ஆனால் சாதித்ததில் எவ்விதத்திலும் திருப்தி கொண்டுவிட முடியாது. இப்போதுதான் சோஷலிசத்துக்கு மாறிச் செல்ல தொடங்கியிருக்கிறோம், சோஷலிச திசை வழியில் தீர்மானகரமான செயலை இன்னும் செய்தாகவில்லை.
ஆட்சியைப் பிடித்துவிட்டால் மட்டும் போதும், பிறகு அனைத்தும் எளிமையானது என்று பலபேர் இன்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியைப் பிடித்தல் என்பது தொடக்கப் புள்ளியே, அதில் இருந்து செய்ய வேண்டிய மாறும் கட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பதையே ருஷ்ய அனுபவங்கள் நமக்குக் காட்டுகின்றன.
லெனின் கூறுகிறார், நிர்வாகம் என்கிற கலையானது உள்ளார்ந்த ஒன்றல்ல, நிர்வாகம் என்பது அனுபவத்தின் மூலம் பெறக்கூடியது. தொடக்கக் காலத்தில் அந்த அனுபவம் இல்லாதவராய் இருந்தோம், இப்போது அனுபவம் பெற்றிருக்கிறோம்.
அறிவியல், தொழில்நுட்பம், அனுபவம் ஆகியவற்றில் நிபுணர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், சோஷலிசத்துக்கு மாறிச் செல்வது சாத்தியமில்லை என்கிறார் லெனின்.
அனைவரின் சம்பளங்களும் தொழிலாளர்களின் சம்பளங்களுடன் சரிசமமாக இருக்க வேண்டும் என்பது பாரிஸ் கம்யூன் எடுத்த முடிவாகும். இதனை பின்தங்கிய ருஷ்யாவில் அன்றைய நிலையில் உடனடியாகப் பயன்படுத்த முடியவில்லை. உயர்படிப்பில் உள்ள முதலாளித்துவ நிபுணர்களின் பணிக்கு மிக உயர்ந்த சம்பளத்தைக் கொடுக்க வேண்டி வந்தது, குறிப்பிட்ட வளர்ச்சியினை அடையும்வரை இதனை தவிர்க்க முடியாது.
இது ஒரு சமரசமே, இதனை மக்களிடம் மறைக்கக்கூடாது என்கிறார் லெனின். உண்மையான நிலைமையினை மக்களிடம் கூறிட வேண்டும், அதை மறைக்கக்கூடாது. அதை மக்களிடம் மறைத்தால் எதிர்விளைவையே ஏற்படுத்தும். அதாவது மக்களுக்கும் கட்சிக்கும் உள்ள நெருக்கம் பாதிக்கும், இருவருக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கும்.
சம அளவுக்கு சம்பளம் இருக்க வேண்டும் என்கிற நிலைக்கு, மாறாக இப்படி உயர் படிப்புள்ள நிபுணர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது, சோஷலிச சோவியத் அரசாட்சி, ஓரடி பின்னோக்கி அடியெடுத்து வைக்கிறது என்பது உண்மை என்பதை லெனின் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.
இந்த பின்னோக்கி அடியெடுத்து வைப்பதை மென்ஷிவிக்குகள், வலதுசாரி சோஷலிஷ்டுப் புரட்சியாளர்கள் போன்றோர் சிரிக்கிறார்கள், இந்த சிரிப்பை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்கிறார் லெனின்.
மேலும் கூறுகிறார், நமது தவறுகளையும் பலவீனங்களையும் மூடிமறைக்காமல் சோஷலிசத்தை அடைவதற்கான மிகப்பெரும் கடினமான புதிய பாதையின் தனித்துவமான இயல்புகளை ஆராய வேண்டும்.
அப்படி லெனின் ஆராய்ந்து கூறுவதில் முக்கியமானது என்னவென்றால், செய்யாமல் விடுபட்டதை தாமதமின்றி செய்து முடிக்க வேண்டும். பின்தங்கிய ருஷ்யாவில் இன்னும் முதலாளித்துவ ஜனநாயகப் பணியினை முழுமையாக முடிக்கவில்லை. இதனை சரிசெய்யாமல் சோஷலிசத்தை நிறுவமுடியாது.
முதலாளித்துவ உற்பத்தி முறை முழு வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பது சோஷலிச உற்பத்திக்கான முன்நிபந்தனை ஆகும்.
4. நாடு தழுவிய கணக்கு பதிவுக்கும் கண்காணிப்புக்குமான போராட்டத்தின் முக்கியத்துவமும்
பல நூற்றாண்டுகளாக மக்களை ஒடுக்குவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் ஒரு உறுப்பாக இருந்த அரசின் மீது, மக்கள் கட்டுக்கடங்காத பகைமையையும் சந்தேகத்தையும் மரபாக பெற்றுள்ளனர்.
அதாவது, வர்க்கப் பிளவில் தோன்றிய அரசு, சேவை செய்யும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு முதலில் இருந்தது, ஆனால் அதன் நடவடிக்கை சுரண்டும் வர்க்கத்துக்கே தொடர்ந்து சேவை செய்கிறது, மக்களின் அடிப்படைப் தேவைகளைக்கூட நிறைவு செய்யாது இருப்பதைக் கண்ட மக்களக்கு அரசின் மீது கடும் கோபமும் பகை உணர்ச்சியும் ஏற்பட்டது.
இதனை எதிர்த்து வெற்றி பெறுவது கடினமான செயலாகும், இந்த கடின செயலை ஒரு சோவியத் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும். இந்த சோவியத் அரசாங்கத்திற்குகூட அதை நிறைவேற்றுவது மிகுந்த காலமும் பேரளவான விடாமுயற்சியும் தேவையாய் இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.
மீண்டும் மீண்டும் கூறினாலும் இதனை மறக்கக்கூடாது, நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வாக, புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் கொண்டுவந்தால் போதுமானது என்று பலர் கருதுகின்றனர். அப்படி கருதுவது தவறானது, அட்சி மாற்றத்துக்குப் பிறகு கடினமான பணி காத்துக் கொண்டிருக்கிறது என்பதை, லெனின் எழுதிய இந்த நூல் நமக்கு சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது.
மேலும் ஒரு பிரச்சனையை லெனின் இங்கே குறிப்பிட்டுக்காட்டுகிறார். இடது தீவிர போக்குடைய அராஜகவாதிகள், அரசே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதாகப் புரிந்து கொண்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசையும் தேவையற்றதாக கருதுவதை எதிர்த்து லெனின் பேசுகிறார்.
குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பழக்கவழக்கங்களும் மரபுகளும், அரசு கட்டுப்பாட்டை எதிர்க்கின்றன. இத்தகைய கட்டுப்பாடின் மீதான எதிப்பானது தனியார் சொத்துடைமையையும் தனியார் தொழில் முயற்சியையும் கேடில்லாமல் பாதுகாக்கின்றன என்று லெனின் கடிந்துரைக்கிறார். ஆம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கட்டுப்பாட்டின் மீதான எதிர்ப்பு என்பது தனியார் சொத்துடைமையையும் தனியார் தொழில் முயற்சியையும் பாதுகாப்பதாகவே முடியும்.
அராஜகவாதமும் அராஜக-சிண்டிகலிசமும் மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவப் போக்குடையது என்று லெனின் கூறுகிறார். இதனை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
“அராஜகவாதமும் அராஜக-சிண்டிகலிசமும் முதலாளித்துவப் போக்குகளாகும் என்ற மார்க்சிய ஆராய்ச்சியுரை எவ்வளவு சரியானது என்பதும், சோஷலிசத்துக்கும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும் கம்யூனிசத்துக்கும் எப்படி இவை சிறிதும் ஒவ்வாதவாறு நேர்முரணானவை என்பதும் என்றைக்கும்விட இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றன”
அரசின் தோற்றத்தையும் இருப்பையும் அதன் மறைவையும் பற்றிய மார்க்சியப் புரிதல் இல்லாது போனால் எதார்த்தத்தில் காணப்படுப்படும் அனைத்துப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளவோ அதனை தீர்க்கவோ நம்மால் முடியாது. இந்த உண்மையினை லெனின் எழுத்துக்களை படிக்கும்போது உணர முடிகிறது.
ருஷ்யாவில் சோஷலிச நிர்மாணத்தை செய்வது கடினமானது, மேற்கு ஐரோப்பா வளர்ச்சி பெற்ற அளவுக்கு, கிழக்கு ஐரோப்பா வளர்ச்சி பெறவில்லை. அன்றைய ருஷ்யாவானது வளர்ச்சி குன்றிய கிழக்கு ஐரோப்பாவைவிட பின்தங்கி காணப்பட்டது. இத்தகைய பின்தங்கிய நிலையில் உள்ள ருஷ்யாவில் சோவியத் அரசு என்கிற சோஷலிச அரசை மட்டும் வைத்துக்கொண்டு முழுமையாக சோஷலிச நிர்மாணத்தில் இறங்கிட முடியாது. முதலில் அதற்கானத் தயாரிப்பை செய்ய வேண்டும், விடுபட்டுப்போன முதலாளித்துவ வளர்ச்சியினை எட்ட வேண்டும்.
இதற்கு வழியாக லெனின், முதலாளித்துவக் கூட்டுறவுச் சங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதை, சோவியத் அரசாங்கம் தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில் செயல்தந்திரமாக கூறுகிறார்.
பின்தங்கிய நிலைமையினைக் கணக்கில் கொண்டு சோஷலிச நிர்மாணத்தில் இருந்து பின்னோக்கி சென்று செயல்படுவதைக் கண்டு, சோஷலிசப் புரட்சிக்கு லெனின் துரோகம் செய்வதாக பலர் அப்போது குறைகூறினர். பிற்காலத்தில் லெனினது செயலே சரியானது என்பதை வரலாறு உறுதிப்படுத்தியது
அதற்கு லெனின் எடுத்த முடிவை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
“முதலாளித்துவ கூறுகளை வழிநடத்துவதன் மூலமும், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும், முதலாளித்துவ நபர்களுக்கு சிற்சில வழிகளில் சலுகைகளை வழங்குவதன் மூலமும், நாம் முதலில் எதிர்பார்த்ததை விட மெதுவாக, ஆனால் உறுதியாக, தகவல்தொடர்பின் அடித்தளம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு, வென்ற நிலைகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, மேலும் முன்னேற்றத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறோம். சோவியத்துகள் இப்போது சோசலிச கட்டுமானத் துறையில் தங்கள் வெற்றிகளை மிகவும் தெளிவான, எளிமையான மற்றும் நடைமுறை தரநிலைகள் மூலம் அளவிட முடியும்.”
5. உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்
ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி அவசியம், அது வளர்ச்சி பெற்றால் மட்டுமே உற்பத்தியை பெருக்க முடியும். இதற்கு உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்த வேண்டும். இது பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.
ஒவ்வொரு சோஷலிசப் புரட்சியிலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் பிரச்சினையைத் தீர்த்த பிறகு, உடைமை பறித்தோரின் உடைமை நீக்கம் செய்ய வேண்டும். அதாவது உடைமையாளர்களின் தனிவுடமைகள் பொதுசொத்தாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக அவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பர். அவர்களது எதிர்ப்பை நசுக்கும் பணி பிரதானமாய் எந்தளவுக்கு முடிக்கப்பட்டுள்ளதோ அதற்கு ஏற்ப, முதலாளித்துவத்தைவிட மேலான ஒரு சமூக அமைப்பினைத் தோற்றுவிக்கும் பணி இன்றியமையாதவாறு முன்னணிக்கு வருகிறது என்கிறார் லெனின்.
சோஷலிச நிர்மாணத்துக்குத் தேவையான உழைப்பின் உற்பத்தித்திறனைப் பெறாமல் சோஷலிசப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த முடியாது. சோஷலிச அரசு மட்டும் சோஷலிசப் பொருளாதாரத்துக்குப் போதுமானது அல்ல, உற்பத்தித்திறனும் தேவையான அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டும். அதாவது சோஷலிச நிர்மாணத்துக்கான பொருளாதார புறநிலையினை அடைந்திருக்க வேண்டும்.
இதனைப் பற்றி லெனின் கூறுவதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
"ஒரு சில நாட்களில் மைய அரசாங்கத்தைக் கைப்பற்றுவது சாத்தியம் என்றாலும், ஒரு பெரிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட சுரண்டுபவர்களின் இராணுவ எதிர்ப்பை (மற்றும் நாசவேலை) சில வாரங்களில் அடக்குவது சாத்தியம் என்றாலும், உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்தும் பிரச்சினைக்கான தலையாய தீர்வுக்கு, எல்லா நிகழ்வுகளிலும் (குறிப்பாக மிகவும் பயங்கரமான மற்றும் பேரழிவு தரும் போருக்குப் பிறகு), பல ஆண்டுகள் தேவைப்படுகிறது என்பது இங்கே உடனடியாகத் தெளிவாகிறது. வேலையின் நீடித்த தன்மை நிச்சயமாக புறநிலை சூழ்நிலைகளால் கட்டளையிடப்படுகிறது.
உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு அனைத்துக்கும் முதலாய்த் தேவைப்படுவது என்னவெனில், பெருவீதத் தொழில்துறையின் பொருளாயத அடிப்படை உறுதியாக்கப்பட வேண்டும் என்பதுதான், அதாவது எரிபொருள், இரும்பு, பொறியியல், வேதியியல், தொழில்கள் வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டும்."
ருஷ்யப் புரட்சியின் போது ருஷ்யாவை பின்தங்கிய நாடு என்று கூறுவது, பொருளாதார நிலைமையினை மட்டும் கணக்கில் கொண்டு கூறவில்லை, அப்போதைய மக்களின் கல்வி நிலை, பண்பாட்டு நிலை, நாகரிக நிலை ஆகியவற்றையும் உயர்த்த வேண்டியதையும் லெனின் சேர்த்தே கூறுகிறார். பொதுமக்கள் கல்வி பெறாமல் அவர்களுடைய உழைப்பின் உற்பத்தி திறனை உயர்த்த முடியாது. பின்தங்கிய நிலைக்கு கல்வியும் ஒரு பெருங்காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்தே லெனின் கல்வி, பண்பாட்டு ஆகியவற்றை, மிக விரைவில் வளர்வதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார்.
பொருளாதார மறுமலர்ச்சிக்கு உழைப்பாளர்களின் ஒழுங்கமைப்பும், அவர்களின் திறமை, செயல்திறன், உழைப்பின் தீவிரம், சிறந்த அமைப்பு ஆகியவை இன்றியமையாதது ஆகும்.
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் இதுவரை முதலாளித்துவம் கண்டிருக்கும் சாதனையை, சோவியத் குடியரசு அடைந்தாக வேண்டும். இதனைப் பெற்றிடாமல் (up-to-date) சோஷலிசத்தை கட்டியமைப்பது சாத்தியமில்லை. இதனோடு லெனின் கூறுகிற ஒன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறி செல்வதற்குரிய இடைக்காலத்தின் தனித்த இயல்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது பாட்டாளி வர்க்க அரசாங்கத்தின் நடைமுறையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் முழக்கத்துக்கு, கோழைத்தனமான இழுக்கு நேர்ந்துவிடாது இருக்கும் பொருட்டு “பலவந்தத்தை” பயன்படுத்துவது அவசியமாகும் என்கிறார் லெனின்.
முதலாளித்துவத்தை வீழ்த்தி சோஷலிச அரசை அமைத்துவிட்டால்மட்டும், முதலாளித்துவ சிந்தனை உடையவர்கள் அடங்கிவிடுவார்கள் என்று கூறிடமுடியாது. பெரும் திரளான உழைக்கும் மக்களின் நலனை முன்வைத்து சிறுபான்மையினரான முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ சிந்தனையின் மீதமிச்சமாகக் கொண்டவர்களையும் அடக்குவதற்கு பலவந்தமாக செயல்படுவது சோஷலிசத்தில் அவசியமாகும். இதற்கு சோவியத் அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில்தான், வர்க்க சார்பு என்கிற வகையில் அரசு என்பது மறைந்து போகும், அதன் பிறகு வர்க்க சார்பற்ற நிர்வாகம் மட்டுமே தொடரும். முதலாளித்துவத்துக்கும் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கும் மாறுகின்ற இடைக்கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு அவசியமாகும். இந்த பலவந்தமான அரசு இல்லாமல் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தை நோக்கி பயணிக்க முடியாது.
6. போட்டியின் ஒழுங்கமைப்பு
கம்யூனிஸ்டுகள் போட்டியின் முக்கியத்துவத்தை மறுப்பவர்கள், போட்டியினால் கிடைக்கும் வளர்ச்சிக்கு சோஷலிசத்தில் வாய்ப்பு இல்லை என்கிற கருத்தை முதலாளித்துவ வர்க்கத்தினர் பரப்பி வருகின்றனர்.
சோஷலிச சமூகத்தைப் பற்றிய புரிதலற்ற இந்தப் போக்கால் கூறப்பட்டது அவதூறே ஆகும் என்கிறார் லெனின். உண்மையில் சோஷலிசத்தில் தான், வர்க்கங்களை ஒழிப்பதன் மூலமும், மக்களின் அடிமை நிலைமையினை ஒழிப்பதின் மூலமும் பொதுமக்கள் போட்டி நடைபெறுவதற்கு முதன்முறையாகப் பாதையைத் திறந்து விடுகிறது. அனைவரும் பங்கேற்கும் வகையில் விரிந்தளவு போட்டியினை நடத்துவதற்கு சோஷலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகிறது.
முதலாளித்துவ பத்திரிகைகள் மூலதனத்துக்கு கீழ்பட்டு, பரப்பரப்பு உண்டாகும்படியான அரசியல் குப்பைகளை கொண்டு வேடிக்கை காட்டுகிறது. தொழிற்சாலைகளிலும் வணிக நடவடிக்கைகளிலும் ஒப்பந்தங்களிலும் என்ன நடைபெறுகிறது என்பது, சொத்துரிமைப் பாதுகாப்பு, வணிக ரகசியங்கள் என்னும் திரைக்குப் பின்னால் மூடிமறைக்கின்றது. சோவியத் அரசாங்கம் வணிக ரகசியங்களை ஒழித்துள்ளது, உண்மைகளை மக்கள் முன் வைத்து, புதிய பாதையைத் திறந்துள்ளது என்கிறார் லெனின்.
முதலாளித்துவத்தில் வாய்ப்புள்ளவர்களிடையே போட்டி நடைபெற்றது, சோவியத்தில் திறமை அடிப்படையில் போட்டிக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. முதலாளித்துவத்தில் பத்திரிகைகள் மூலதனத்தின் கீழ்கட்டுப்பட்டிருந்தது, சோவியத்தில் பத்திரிகைகள் சோஷலிசக் கட்டுமானக் கருவியாகச் சேவை செய்கிறது.
ஆனால், இது அவ்வளவு எளிதான செயல் அல்ல, முன்பே கூறியது போல, ஆட்சி மாற்றம் மட்டும் இதற்குப் போதுமானது கிடையாது, பழைய நிலைமைகளை ஒழித்து புதிய நிலைமைகளை உருவாக்க வேண்டும். இந்தக் கடினமானப் பணியினைப் பற்றி லெனின் என்னகூறுகிறார் என்பதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
“ஒரு புதிய சமூக வர்க்கமானது, அதுவும் இதுகாறும் ஒடுக்கப்பட்டும் வறுமையாலும் அறியாமையாலும் நசுக்கப்பட்டும் வந்திருக்கும் ஒரு வர்க்கமானது, தனது புதிய நிலையில் பழக்கம் பெற்று, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, தனது வேலையை ஒழுங்கமைக்கவும், தனது சொந்த ஒழுங்கமைப்பாளர்களை வளர்த்து முன்கொண்டு வரவும், வாரங்களல்ல, நீண்ட பல மாதங்களும் ஆண்டுகளும் தேவைப்படவே செய்யும்.
புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை தாங்கும் கட்சியானது, பத்து லட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலுமான குடிமக்களைக் கொண்ட பெரிய நிறுவன ஒழுங்கமைப்பு முயற்சிகளுக்கு வேண்டிய அனுபவத்தையும் பழக்கங்களையும் பெறாதிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே; அநேகமாய் முற்றிலும் கிளர்ச்சியாளர்களுக்கு உரித்தான பழைய பழக்கங்களை உருமாற்றித் திருத்தியமைத்துக் கொள்வது மிக நீண்டதொரு நிகழ்ச்சிப் போக்காகும்.
ஆனால் இது முடியாத செயலன்று, மாறுதல் அவசியமென்று தெளிவாக உணர்ந்து ஏற்கப்பட்டதும், மாறுதலை உண்டாக்க வேண்டுமென்ற உறுதியான வைராக்கியமும் கடினமான பெரியதொரு குறிக்கோளுக்காகப் பாடுபடுவதில் விடாமுயற்சியும் பெறப்பட்டதும் நாம் நிச்சயம் இந்தக் காரியத்தைச் செய்யத்தான் போகிறோம்.
''மக்கள்" இடத்தே, அதாவது தொழிலாளர்களிடத்தும் ஏனையோரது உழைப்பைச் சுரண்டாத விவசாயிகளிடத்தும் நிறுவன ஒழுங்கமைப்பு ஆற்றல் பெரிய அளவில் இருக்கிறது. ஆற்றல் படைத்த ஆயிரக்கணக்கான இம்மக்களை மூலதனமானது நசுக்கியது. அவர்களது ஆற்றலை அழித்து அவர்களைக் குப்பை மேட்டில் ஒதுக்கிற்று. இம்மக்களைக் கண்டுபிடித்து, இவர்களுக்கு ஊக்கமளித்து, எழுந்து காலூன்றி நிற்க வைத்து, இவர்களை வளர்த்து உயரச் செய்வதற்கு இன்னும் நம்மால் முடியவில்லை. முழுமுனைப்பான புரட்சிகர ஆர்வத்துடன்—இது இல்லாமல் வெற்றிகரப் புரட்சிகள் எவையும் சாத்தியமன்று-நாம் இவ்வேலையில் இறங்குவோமாயின் இதனைச் செய்யக் கற்றுக்கொள்வோம்.”
இது ஒரு நீண்ட மேற்கோள்தான், இருந்தாலும் இதனை ஏன் படிக்க வேண்டும். ஏன் என்றால், முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறுகின்ற மாறுதல்கட்டம் அவ்வளவு எளிதானதல்ல என்று லெனின் புரிந்திருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மாறும் கட்டத்தின் கடினமான பணியினை செய்வதற்கு, சோஷலிசத்தில் பற்று உறுதி மிக்கவர்களை மிகுதியான எண்ணிக்கையிலானோரை முறையாகவும் ஒருங்கிணைந்தும் சோவியத் நிறுவனத்தின் கட்டுக்கோப்பினுள் வேலை செய்விக்க வேண்டும். இத்தகைய ஆற்றலை ஒருங்கே பெற்றிருப்போரை சோதித்துப் பார்த்துக் கண்டுபிடிப்பதற்காக கூடுமான அளவுக்குக் கவனமாகவும் பொறுமையாகவும் முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் லெனின்.
இதனைத் தொடர்ந்து லெனின் கூறுவதை அவரது எழுத்துக்களிலேயே பார்ப்போம்.
“இம்மாதிரியானவர்கள் மட்டும்தான், எளிய பணியில் இருந்து மேலும் கடின பணிகளுக்கு மாற்றப்பட்டுப் பத்துப் பன்னிரண்டு தரம் சோதித்துப் பார்க்கப்பட்ட பிற்பாடு, மக்களது உழைப்பின் தலைவர்களுக்கும் நிர்வாகத் தலைவர்களுக்குமாகிய பொறுப்புள்ள பதவிகளுக்கு உயர்த்தப்பட வேண்டும். இதை செய்ய இன்னும் நாம் கற்றுக் கொண்டாகவில்லை ஆனால் இதனை நாம் கற்றுக் கொள்வோம்.”
லெனினது இந்தக் கூற்று, மாறும் கட்டத்தினுடைய கடினமானப் பணியை உணர்த்துகிறது. இந்தக் கடினமானப் பணியில் கட்சித் தலைவர்களின் பொறுப்புகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பொறுப்புகளை சுமக்கத் தயாராக இல்லாதவர்கள், இந்தத் தலைமைப் பதவிக்கு தகுதியற்றவர்களே ஆவர்.
பொதுவாகவே கம்யூனிஸ்ட் கட்சி தலைமை என்பதோ, கட்சி நிர்வாகம் என்பதோ அவ்வளவு எளிதான செயல் அல்ல, அதன் பொறுப்புகளை உணர்ந்தவர்களே அந்தப் பதவிக்கு உரியவர்களாவர். கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளர்களின் முன்னணிப்படை என்று கூறுவது வெறும் வாய் வார்த்தையல்ல, அது மிகுந்த பொறுப்பான பணியாகும். அத்தகைய பொறுப்புள்ளவர்கள் பொறுப்பை ஏற்கும் போதே இடதுசாரிகள் பின்னடைவைக் கடந்து முன்னணிக்கு செல்ல முடியும் என்பதை லெனின் கூற்றால் அறிய முடிகிறது.
7. "இணக்கமான ஒழுங்கமைப்பும்" சர்வாதிகாரமும்
இந்த சர்வாதிகாரம் என்கிற சொல் இன்றும் பலரை பதறவைக்கிறது. அரசு பற்றிய வர்க்கத் தன்மையினைப் புரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் பதற்றம் தணியும். இல்லை என்றால் பதற்றம் பிதற்ற வைக்கும்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் புரிந்து கொள்ள வைப்பதற்கு லெனின் பயன்படுத்துகிற சொற்கள் கடுமையானதாக இருக்கிறது, அதனால் அதனை நேரடியாகவே பார்க்கலாம்.
“அண்மையில் நடைபெற்ற சோவியத்துகளது (மாஸ்கோ) காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட தீர்மானம், “இணக்கமான ஒழுங்கமைப்பை” நிறுவுவதையும் கட்டுப்பாட்டினைக் கடுமையாக்குவதையும் இத்தருணத்துக்குரிய முதன்மையான பணியாக முன்வைத்தது. இந்த மாதிரியான தீர்மானங்களுக்கு எல்லோரும் இப்பொழுது தயங்காது "வாக்கு அளிக்கிறார்கள்”, “உடன்பட்டு ஆதரவளிக்கிறார்கள்', ஆனால் இம்மாதிரியான தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்குப் பலவந்தம்—சர்வாதிகாரத்தின் வடிவிலான பலவந்தம்—தேவைப்படுவது குறித்து சாதாரணமாய் இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. எனினும் பலவந்தம் இல்லாமல், சர்வாதிகாரம் இல்லாமல் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்ல முடியுமெனக் கொள்வது முழு முட்டாள்தனமும் அசட்டுக் கற்பனாவாதமுமே ஆகும்.
குட்டிமுதலாளித்துவ- ஜனநாயகவாதமும் அராஜகவாதமுமாகிய இந்த அபத்தத்தை நெடுங் காலத்துக்கு முன்பே மார்க்சின் கோட்பாடு மிகவும் திட்டவட்டமாய் எதிர்த்தது. 1917–1918ஆம் ஆண்டுகளது ருஷ்யாவானது இது பற்றிய மார்க்ஸ் கோட்பாடு பிழையற்றதே என்பதை அவ்வளவு பளிச்சென்றும் கண்கூடாகவும் பிரமாதமாகவும் உறுதி செய்து காட்டியிருப்பதால், அறவே மதி மழுங்கியோரால்தான் அல்லது உண்மையிடமிருந்து ஓடிச் செல்வதென்று பிடிவாத முடிவுக்கு வந்து விட்டோரால் தான் இது குறித்து எந்த தவறான புரிதலுக்கும் ஆளாக முடியும்.”
லெனினது இந்த சொற்கள் கடினமாக இருந்தாலும் அதனை நேரடியாக கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
வர்க்கம் ஒழிக்கப்படாத சமூகத்தில், ஒன்று முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றொன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்கிறார் லெனின். இந்த இரண்டும் அல்லாத நடுப்பாதை ஒன்று இருப்பதாகச் சொல்லும் கருத்துக்கள், மக்களை ஏமாற்றுவதற்காக, முதலாளித்துவ வர்க்கம் கையாளும் ஏமாற்று வேலையே ஆகும்.
முதலாளித்துவ வர்க்கம் தமது ஆட்சியினை முதலாளித்துவ சர்வாதிகாரம் என்று கூறிடத் துணிச்சல் இல்லை. அரசின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொண்ட பாட்டாளி வர்க்கம் தமது ஆட்சியினை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் புரிந்து கொள்ள முடியாத குட்டி முதலாளித்துவத்தை அடுத்து லெனின் விமர்சிக்கிறார்.
ஜனநாயகத்தின் ஒற்றுமை என்றும், ஜனநாயகச் சர்வாதிகாரம் என்றும், பொது ஜனநாயக முன்னணி என்றும் இன்ன பிற அபத்தங்களைப் பேசுவது, குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் மதியீனத்தை வெளிக்காட்டுவதாகவே இருக்கின்றது. அதாவது, பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதற்கு மாற்றாக “ஜனநாயகம்” என்ற பெயரில் எதைக் கொண்டுவந்தாலும், அது அரசின் வர்க்கத்தன்மையினைப் புரிந்து கொள்ள முடியாத அறிவீனத்தையே காட்டுகிறது.
முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதற்கு மாறாக நடுப்பாதை சாத்தியமல்ல என்று 1917-1918ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சியின் முன்னேற்றத்தில் இருந்துங்கூட போதனை பெறாதவர்கள், கடைத்தேற வழியற்றவர்களாகக் கைவிடப்பட வேண்டியவர்களே என்று லெனின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
உண்மைதான், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் கைவிடப்பட வேண்டியவர்களே என்பதை லெனின் கூற்றால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறும் கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது இரண்டு முக்கியமான காரணங்களால் அத்தியாவசியமானதாக இருப்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல என்கிறார் லெனின்.
சுரண்டுபவர்களின் எதிர்ப்பை இரக்கமின்றி அடக்காமல் முதலாளித்துவத்தை தோற்கடிக்க முடியாது. முதலாளிகள் தங்களது செல்வத்தை இழக்கவும் தங்களின் நலன்களை இழக்கவும் விரும்பாது, அவர்கள் தம்மால் வெறுக்கப்பட்ட ஆட்சியை தூக்கியெறிய நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடியாமல் முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள், இது முதலாவது காரணம்.
சோஷலிசம் என்கிற பெரிய புரட்சி நடைபெற்றது என்றால், வெளிநாட்டில் இருந்து போர் தொடக்கப்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் உள்நாட்டுப் போரை சந்திக்காமல் இருக்க முடியாது. அதாவது புதிய சோஷலிச நாட்டை வெளிநாட்டி சக்திகள் எதிர்க்காமல் இருந்தாலும் உள்நாட்டு முதலாளித்துவமும் முதலாளித்துவ சிந்தனை உள்ளவர்களும் எதிர்க்காமல் இருக்கமாட்டார்கள். வெளியிருந்து வருகிற போரைவிட, உள்நாட்டுப் போர் பெரும் நாசத்தை விளைவிக்கும். அத்துடன் லஞ்ச ஊழல், கொள்ளை லாப வெறி போன்ற முறைகேடுகளிலும் இறங்கும் இவை அனைத்தும் இரண்டாவது காரணம்.
இத்தகைய கேடுகளை அடக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படும், இதனை ஒழிப்பதற்கு இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற அரசுத் தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு என்பது உழைக்கும் மக்களுக்கு சார்பானது, சுரண்டும் வர்க்கத்துக்கும், சுரண்டும் சிந்தனை உள்ளவர்க்ளுக்கும் எதிரானது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற சொல்லையும் கோட்பாட்டையும் உருவாக்கியவர் மார்க்ஸ். இந்த இடத்தில் லெனின் மார்க்சையும் சுட்டிக்காட்டி விவரித்துள்ளதைப் பார்ப்போம்.
“மார்க்ஸ் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற அவரது ரத்தினச் சுருக்கமான, கூர்மையான, அடக்கமான, பொருட் செறிவு வாய்ந்த சூத்திரத்தை வகுத்து அளித்த போது, எல்லாப் புரட்சிகளுக்கும் உரிய இந்த வரலாற்று அனுபவத்தைத்தான், இந்த உலக-வரலாற்று-பொருளாதார, அரசியல்—படிப்பினையைத்தான் அவர் தொகுத்துக் கூறினார். இந்த உலக-வரலாற்றுப் பணியை ருஷ்யப் புரட்சி அணுகிய முறை பிழையற்றதாகும் என்பது, ருஷ்யாவின் எல்லா மக்களினத்தோரிடையிலும் மொழியினரிடையிலும் சோவியத் வடிவிலான ஒழுங்கமைப்பு கண்டிருக்கும் வெற்றிகர முன்னேற்றத்தால் நிரூபித்துக் காட்டப் பெற்றுள்ளது.
சோவியத் ஆட்சியதிகாரமானது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின், முன்னேறிய வர்க்கத்தினுடைய சர்வாதிகாரத்தின் ஓர் ஒழுங்கமைப்பு வடிவமே அன்றி வேறல்ல; உழைப்போரும் சுரண்டப்படுவோருமான கோடானு கோடியான மக்களை, பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாடு வாய்ந்த, வர்க்க உணர்வு கொண்ட முன்னணிப்படையினைத் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாய் உறுதியாய் நம்பத்தக்க தமது தலைவனாகக் கருதக் கற்றறிந்து கொள்ளும் இம்மக்களை, ஒரு புதிய ஜனநாயகத்துக்கு, அரசின் நிர்வாகத்தில் சுயேச்சையான பங்கு கொள்ளும் நிலைக்கு உயரச் செய்யும் முன்னேறிய வர்க்கத்தினுடைய சர்வாதிகாரத்தின் ஒரு வடிவமே அன்றி வேறல்ல.”
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டு முதலாளித்துவத்தை மட்டுமல்ல, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தையும் ஒழிக்க வேண்டும்.
தன் கைக்கு எட்டியவற்றை அனைத்தையும் தமக்கே உரியனவாய் அள்ளிக் கொள்ள வேண்டும், ஏனையோர் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை என்பதே சிறு உடைமையாளரான குட்டி முதலாளித்துவக் கண்ணோட்டம் ஆகும் என்று லெனின் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்.
புரட்சிகர இயக்கங்களின் வரலாற்றில் தனிநபர்களின் சர்வாதிகாரம் பெரும்பாலும் புரட்சிகர வர்க்கங்களின் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகவும், செல்வழியாகவும், சாதனமாகவும் இருந்தது என்பது வரலாற்றின் மறுக்க முடியாத அனுபவங்கள் காட்டியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, தனிநபர்களின் சர்வாதிகாரம் முதலாளித்துவ ஜனநாயகத்துடன் இணக்கமாக இருந்தது. இருப்பினும், சோவியத் அமைப்பின் முதலாளித்துவ மறுப்பாளர்களும், அவர்களின் குட்டி முதலாளித்துவ அடியாட்களும் எப்போதும் தந்திரத்தைக் காட்டுகிறார்கள்.
ஒருபுறம், அவர்கள் சோவியத் அமைப்பை அபத்தமான, அராஜகவாதமான ஒன்று என்று அறிவிக்கிறார்கள், மேலும் சோவியத்துகள் உயர்ந்த ஜனநாயக வடிவம் என்பதோடு சோஷலிச வடிவ ஜனநாயகத்தின் தொடக்கம் என்பதை நிரூபிக்கும் நமது வரலாற்று எடுத்துக்காட்டுகள் மற்றும் கோட்பாட்டு வாதங்கள் அனைத்தையும் கவனமாக மௌனமாக, குட்டி முதலாளித்துவவாதிகள் கடந்து செல்கிறார்கள். மறுபுறம், அவர்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தை விட உயர்ந்த ஜனநாயகத்தை நம்மிடம் கோருகிறார்கள், மேலும் தனிப்பட்ட சர்வாதிகாரம் (personal dictatorship) போல்ஷிவிக் சோவியத் ஜனநாயகத்துடன் முற்றிலும் பொருந்தாது என்கிறார்கள்.
இவை படுமோசமான வாதங்கள் என்கிறார் லெனின்.
அராஜகவாதிகளாக தாம் இல்லை என்றால், முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதற்கு அரசு என்கிற பலவந்தம் அவசியம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிறார் லெனின். சோவியத் சோஷலிச ஜனநாயகத்திற்கும் தனிநபர்கள் செலுத்தும் சர்வாதிகாரத்துக்கும் இடையே நிச்சயமாக கோட்பாட்டளவில் எந்த வேறுபாடும் இல்லை. இங்கே லெனின் கோட்பாட்டளவில் என்று கூறியதை மனதில் கொள்ள வேண்டும். ஆனால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது, சுரண்டப்படும் பெரும்பான்மையினரின் நலன்களுக்காக சுரண்டும் சிறுபான்மையினரைத் தாக்குகிறது. இந்த சர்வாதிகாரம் தனிநபர் மூலமாக மட்டுமல்லாது, உழைக்கும் மற்றும் சுரண்டப்படும் மக்களால் மட்டுமல்ல, இந்த மக்களை, வரலாற்றை உருவாக்கும் நடவடிக்கைகளுக்குத் தூண்டும் வகையில் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளாலும் செலுத்தப்படுகிறது.
ஆனால் முதலாளித்துவ தனிநபர் சர்வாதிகாரம் என்பது சுரண்டும் சிறுபான்மையினர் நலன்களுக்காக உழைக்கும் பெரும்பான்மையினரை தாக்குகிறது. இதற்கு அரசின் அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்துகிறது.
இந்த வேறுபாடுகளை குட்டி முதலாளித்துவாதிகளால் புரிந்து கொள்ள முடியாமல் இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். இந்தக் குழப்பத்துக்குக் காரணம் வர்க்கப் பார்வை இல்லாததே ஆகும்.
ஒர் இசைநிகழ்ச்சியில் பல்வேறு கருவிகள் வாசிக்கப்படுகிறது என்றால் இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கு தலைமைப் பாத்திரத்தை ஏற்கும் ஒர் இயக்குநர் என்கிற தனிநபர் அவசியம் தேவைப்படுகிறார். இத்தகைய தலைமைப் பொறுப்புள்ள இயக்குனரின் பாத்திரத்தைப் போன்றே தனிநபர், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகரத்துக்குத் தலைமை தாங்குகிறார். ஆனால் அப்படிப்பட்டவர் பாட்டாளி வர்க்க உணர்வையும் கட்டுப்பாட்டையும் கொண்டவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் சர்வாதிகாரத்தின் கடுமையான வடிவங்களை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கையும் லெனின் கொடுக்கிறார்.
பாட்டாளி வர்க்க உணர்வை இழந்தாலும் பிரச்சினையே, பாட்டாளி வர்க்க உணர்வை பெறாது போனாலும் பிரச்சினையே, இதனை நாம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கோட்பாட்டில் எந்த தவறும் இல்லை என்பதை சுட்டுக்காட்டுவதற்கு, இதனை வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது.
பாட்டாளி வர்க்க உணர்வுள்ள தலைமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்குத் தேவை என்பது நமக்குத் தெளிவாகிறது. இதனடிப்படையில் ஒன்றை லெனின் கூறுகிறார், அது என்னவென்றால், சோவியத் தலைவர் என்கிற சர்வாதிகாரியின் விருப்பத்திற்குக் கேள்வியின்றிக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
ஒர் இயக்குநரின் ஒருங்கிணைப்பில் உருவானக் கட்டுப்பாட்டை கீழ்ப்படிந்து நடக்காமல் இசைக்குழு ஒருங்கிணைந்த முறையில் இசைக்க முடியாது. இதற்கு கீழ்படிதல் எவ்வளவு அவசியமோ அதே போன்று சோவியத் தலைவர் என்கிற சர்வாதிகாரியின் விருப்பத்துக்கு கீழ்ப்படிதல் அவசியமாகும்.
லெனினது கருத்தை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
“ நமது பணி அனைத்தும், சுரண்டப்பட்டவர்களின் விடுதலைப் போராட்டங்களுக்கான வர்க்க உணர்வுள்ள பிரதிநிதியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷிவிக்குகள்) பணி அனைத்தும், இந்த மாற்றத்தைப் பாராட்டுவதும், அது அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதும், சோர்வடைந்து வெளியேற வழிதேடும் மக்களுக்கு தலைமை தாங்கி, அவர்களை சரியானப் பாதையில், தொழிலாளர் கட்டுப்பாட்டுப் பாதையில், வேலை நிலைமைகள் குறித்து பொதுமக்கள் கூட்டங்களில் வாதிடும் பணியை ஒருங்கிணைக்கும் பாதையில் வழிநடத்துவதும், வேலையின் போது சோவியத் தலைவரின், சர்வாதிகாரியின் விருப்பத்திற்குக் கேள்வியின்றிக் கீழ்ப்படிவதும் ஆகும்.”
லெனின் இவ்வாறு கூறுவதை முதலில் கேள்விபடுபவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இதனைப் பின்பற்றாமல் முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச்செல்ல முடியாது என்பதே உண்மையாகும்.
எந்தக் கருத்தையும் அதனை வெறும் கருத்தியல் வழியில் சிந்திக்காமல் அது தோன்றிய வழியையும் சேர்த்துப் பார்க்கும் போது சிக்கல் ஏற்படாது.
அராஜகவாத தலைமைக்கும் கூட்டுத்தலைமைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்பவர் ஒரு பொதுச் செயலாளர் ஆவார். அவர் தனியாக செயல்படும் அதிபர் அல்ல. மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கியே அனைவருக்கும் பொதுவாக செயல்படுவார். அதே போல் சோவியத் அரசின் தலைவரும் கூட்டுத் தமையினைக் கொண்டவராகவே இருப்பார். அவர் பல அமைச்சர்களின் கருத்துக்களை உள்வாங்கியே முடிவெடுப்பார். அமைச்சர்கள் மட்டுமல்ல பல்வேறு அரசு அதிகாரிகளின் கருத்துக்களைப் புரிந்து கொண்டே செயல்படுவார். அனைவரும் மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கியே செயல்படுவார்கள். பாட்டாளி வார்க்க சர்வாதிகாரம் என்பது தனிநபர் சர்வாதிகாரம் கிடையாது என்பதாக நாம் விளக்கம் பெறலாம்.
8. சோவியத் ஒழுங்கமைப்பின் வளர்ச்சி.
சோஷலிச சமூகத்தில் மக்கள் நிர்வாகக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் லெனின், அதற்கானக் காரணத்தையும் சேர்த்தே கூறுகிறார்.
உழைக்கும் மக்களின் முன்னணிப் படையின் நோக்கம் சிறந்த பொதுமக்களின் அமைப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும். பெருவீத தொழில்துறையில் ஈடுபட்டுள்ள பாட்டாளி வர்க்கம், சுரண்டப்பட்ட மக்களின் பரந்த மக்களை வழிநடத்தவும், அவர்களை சுதந்திரமான அரசியல் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லவும், அவர்களின் சொந்த அனுபவத்தால் அரசியல் வழியாக அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். இதன் வழியில் மக்கள் அனைவரும் நிர்வாகக் கலையைக் கற்பிக்க வேண்டும். கற்றவர்களை நிர்வாகத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்கிறார் லெனின்.
மேலும் கூறுகிறார், ஏழை மக்கள் அனைவரையும் நிர்வாகப் பணியில் ஈடுபடும்படி கவர்ந்திழுப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் சோவியத் சர்வாதிகார அரசுக்கும் முதலாளித்துவ சர்வாதிகார அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு காணப்படுகிறது.
சோஷலிச நாட்டில் இருந்தாலும்சரி முதலாளித்துவ நாட்டில் இருந்தாலும் சரி, ஒரு புரட்சியாளன் என்கிற கம்யூனிஸ்ட், கம்யூனிசக் கருத்துக்கு ஆதரவாளனாக இருந்தால் மட்டும் போதாது, தம்மை சிறந்த கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பணி முக்கியமானது என்றாலும், இதனை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர்ந்து இருக்க வேண்டும், அதற்கு கட்சி கொடுக்கிற பயிற்சியை முழுவதுமாக உணர்ந்து, அதனைப் பெற்று அதனடிப்படையில் செயல்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் எந்தளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு கம்யூனிஸ்ட்டின் செயல்பாடும் முக்கியமானது ஆகும். அதற்கு உரிய தகுதியினை கம்யூனிஸ்டுகள் பெற்றாக வேண்டும். அதற்கு கட்சி கொடுக்கிற கல்வியோடு, தாமும் மார்க்சியக் கல்வியினை பெற வேண்டும். குறிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் போதிய பயிற்சி இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் சிறப்பாக செயல்பட முடியாது. ஏன் இப்படி விரிவாக பேசுகிறேன் என்பது, லெனின் இந்த இடத்தில் கூறுவதை, அவர் சொற்களிலேயே பார்த்தால் தெரியும்.
“ஒரு புரட்சியாளராக, சோசலிசத்தைப் பின்பற்றுபவராக அல்லது பொதுவாக ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது மட்டும் போதாது. குறிப்பிட்ட ஒவ்வொரு தருணத்திலும் சங்கிலியில் எந்த ஓர் இணைப்பை உங்கள் முழு பலத்தைக் கொண்டு பற்றிக் கொண்டால், முழுச் சங்கிலியையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும், அடுத்த இணைப்புக்கு மாறிச் செல்வதற்குத் திடமான முறையில் தயாரிப்பு செய்யவும் முடியும் என்பதை நீங்கள் கண்டு கொள்ளும் ஆற்றலுடையவராய் இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகளின் சங்கிலியில் அவை ஒன்றுக்கொன்று வேறுபடும் விதம், ஒரு கொல்லரால் உருவாக்கப்பட்ட ஒரு சாதாரண சங்கிலியில் உள்ளதைப் போல அவ்வளவு எளிதாகவும் அவ்வளவு பொருளற்றதாகவும் இருப்பதில்லை.”
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமான சோவியத் அரசு, எப்படி உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானது என்பதை லெனின் அடுத்து சுட்டிக்காட்டுகிறார்.
உலகின் மிகவும் ஜனநாயக முதலாளித்துவ குடியரசுகளில் கூட, ஏழைகள் முதலாளித்துவ நாடாளுமன்றத்தை தங்களது நிறுவனமாகக் கருதுவதில்லை. ஆனால் சோவியத் அரசு அவர்களுடையவை, சோவியத் அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அந்நியமான நிறுவனங்களாக இருக்கவில்லை.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமான சோவியத் அரசு உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானவை ஆகும். இந்த நெருக்கமே, தேர்ந்தெடுப்பவர்களை திரும்பி அழைத்தல், கீழிருந்து கண்காணிப்பு செய்தல், போன்ற பிற கட்டுப்பாடு வழிமுறைகளையும் உருவாக்க முடிகிறது. இந்தப் போக்கை கண்ணுங்கருத்துமாக வளர்த்துச் செல்ல வேண்டும் என்கிறார் லெனின்.
மேலும், தனிநபரது சர்வாதிகாரத்தை எவ்வளவுக்கு எவ்வளவு வைராக்கியமாய் ஆதரித்து நிற்க வேண்டியிருக்கிறதோ, சோவியத் ஆட்சியதிகாரத்தின் கோட்பாடுகளைத் திரித்து புரட்டுவதற்கான சாத்தியப் பாட்டுக்குள்ள ஒவ்வொரு சாயலையும், எதிர்த்து நிற்பதற்காகவும் அயராது மீண்டும் மீண்டும் அதிகார வர்க்கத்தைக் களைந்தெறிவதற்காகவும், அடியில் இருந்து கண்காணிப்பு செலுத்துவதற்குரிய வடிவங்களும் முறைகளும் அவ்வளவுக்கு அவ்வளவு பலதிறப்பட்டனவாய் இருக்க வேண்டும் என்கிறார் லெனின்.
அதிகார வர்க்கம் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்றால் உழைக்கும் மக்களின் கண்காணிப்பு அவசியமாகும். கட்சிக்குள், அதிகார வர்க்கம் தோன்றிவிட்டால், தம்மை மட்டுமே கம்யூனிஸ்ட் என்று நிறுவ முயற்சிக்கும். இதனை உழைக்கும் மக்கள் கண்காணிக்க வேண்டும். அதிகாரம் செலுத்தும் தலைவர்கள் கண்டிப்பாக உழைக்கும் மக்களுக்கு எதிராகவே செயல்படுவர், இதனை உழைக்கும் மக்கள் உணர்ந்து, தலைதூக்கும் அதிகார வர்க்கத்தை இனம் கண்டு தூக்கி எறிய வேண்டும். அப்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வழி சரியானதாகவும், விரைவானதாகவும் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
9. முடிவுரை
குட்டி முதலாளித்துவவாதிகளின் ஊசலாட்டத்தை இந்த நூலின் முடிவில் லெனின் சொல்லி முடிக்கிறார்.
முழுமையாய் பாட்டாளி வர்க்கத்தவராய் இருப்போரைக் காட்டிலும் சிறு உடைமையாளராய் இருப்போரை வெகுவாகக் கொண்ட ருஷ்ய நாட்டில், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளருக்கும் குட்டி முதலாளித்துவப் புரட்சியாளருக்கும் இடையிலுள்ள வேறுபாடு தவிர்க்க முடியாத வகையில் வெளிப்படுவதை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.
குட்டி முதலாளித்துவப் புரட்சியாளர்கள் புதிய நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் ஊசலாடுகின்றனர். போரின் கொடூரங்கள், திடீர் அழிவுகள், பஞ்சம் ஆகிய மாறும் கட்டத்துக்குரிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் குட்டி முதலாளித்துவவாதிகள், ஒரு நேரம் பாட்டாளி வர்க்கத்திடம் நம்பிக்கை கொண்டு ஆதரிப்பவராகவும், மறு நேரம் நம்பிக்கை இழந்து விரக்தியும் அடைகின்றனர். இப்படிப்பட்டவர்களைக் கொண்டு சோஷலிச சமூகத்தை கட்டமைக்க முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் லெனின்.
மிகக் கடினமானதும், கடுமையான அபாயம் மிக்கதுமாகிய கட்டங்களில், தைரியம் இழக்காமல், விரக்திக்கு இடம் கொடுக்காமல், தமக்குரிய பாதையில் இருந்து பிறழாமல் தொடர்ந்து செல்லும் பாட்டாளி வர்க்கம்தான் தலைமை தாங்க வல்லவராவர். இரும்பு போன்ற உறுதிவாய்ந்த பாட்டளி வர்க்கமே சோஷலிசத்தைக் கட்டிக்காக்க முடியும். உறுதி குலைந்த குட்டி முதலாளித்துவ வர்க்கம் சோஷலிச சமூகத்துக்குத் தடையாகவே இருக்கும்.
லெனின் கூறுவதைப் பார்ப்போம்.
"சிறு உடைமையாளரே, போரின் பயங்கரங்களாலும் திடுமென உண்டாகும் அழிவாலும் முன்பின் கண்டிராப் பஞ்சத்தின், நாசத்தின் கொடுந் துன்பங்களாலும் வதைக்கப்பட்டு வெறித்தனமாய்ச் சீற்றம் கொண்டவரும், கரையேறுவதற்கு, விமோசனத்துக்கு வழிதேடிப் பித்துகொண்ட நிலையில் அங்குமிங்கும் ஓடுகிறவரும், ஒரு நேரம் பாட்டாளி வர்க்கத்திடம் நம்பிக்கை கொண்டு அதை ஆதரிப்பவரும், மறு நேரம் நம்பிக்கை இழந்து பரிதவிக்கிறவருமான சிறு உடைமையாளர் இவர். இம்மாதிரியான சமூக அடித்தளத்தின் மீது சோஷலிசத்தை அமைத்திட முடியாதென்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், மறவாதபடி நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். மிகக் கடினமானதும், கடுமை வாய்ந்ததும் அபாயம் மிக்கதுமாகிய கட்டங்களிலுங்கூட தைரியம் இழக்காமல், விரக்திக்கு இடந்தராமல், தனக்குரிய பாதையிலிருந்து பிறழாமல் தொடர்ந்து செல்லும் வர்க்கம்தான், உழைப்போரும் சுரண்டப்படுவோருமான மக்களுக்குத் தலைமைதாங்க வல்லதாகிய ஒரே வர்க்கம். ஆவேச உணர்ச்சித் துடிப்புகளால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. பாட்டாளி வர்க்கத்தின் உருக்குப் பட்டாளங்களது ஒரே சீரான முன்னேற்றமே நமக்கு வேண்டும்."
முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கும் சோஷலிசத்தைக் கட்டி காப்பதற்கும் பாட்டாளி வர்க்கத்தாலேயே முடியும்.
“சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள்” என்கிற சிறு நூலில் லெனின் பல உண்மைகளை நமக்குப் புரிய வைத்துள்ளார், அதனைப் பின்பற்றி செயல்பட்டால், நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கே என்று கூறி இன்றைய வகுப்பை நிறைவு செய்கிறேன்.
- அ.கா.ஈஸ்வரன்
9884092972
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு