இந்தியா-சீனா ஒத்துழைப்பின் வரம்பெல்லைகள்

தமிழில்: விஜயன்

இந்தியா-சீனா ஒத்துழைப்பின் வரம்பெல்லைகள்

அக்டோபர் 2024-இல் எட்டப்பட்ட எல்லை ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்திய-சீனத் தலைவர்களுக்கிடையே அண்மைக் காலமாகப் பல முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகள் அரங்கேறியுள்ளன. இந்திய-சீன உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் மலர்வதையும், நிலவி வந்த பதட்டங்கள் படிப்படியாகத் தணிவதையும் இவை கோடிட்டுக் காட்டுவதாகத் தெரிகிறது.

மிக அண்மையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு வருகைத் தந்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகளில் அவரது முதல் சீனப் பயணமாக இது அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான சிக்கலான அம்சங்கள் குறித்து விரிவாக உரையாடவே அவர் அங்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் தியான்ஜினுக்குப் பயணித்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டத்திலும் பங்கேற்றார். அங்கு, பல நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இணைந்து, பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் நேரில் சந்தித்து ஜெய்சங்கர் பேசினார்.

அவரது இந்தப் பயணத்திற்கு முன்னதாகவே, இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் ஜூன் மாதத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஏற்கனவே சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அடுத்ததாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது, 2019ஆம் ஆண்டிற்குப் பிறகும், 2020ஆம் ஆண்டில் வெடித்த உயிரிழப்புகளை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பிறகும் அமைந்த அவரது முதல் சீனப் பயணமாக கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்திய-சீன உறவுகளில் ஒரு இணக்கமான சூழல் உருவாகிவருவது போலத் தோன்றினாலும், சீனாவின் சில அண்மைய நடவடிக்கைகள் அடிப்படையில் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் உள்நோக்கம் கொண்ட ஒரு திட்டமிட்ட வியூகத்தையே வெளிப்படுத்துகின்றன.

மே 2025இல் நடந்த மோதலின்போது, பாகிஸ்தான் மீது சீனா நிதிமூலதன ஆதிக்கத்தை பிரயோகித்தது, நிதியுதவியும் வழங்கியது; இந்தியாவுக்கு எதிராகத் தனது மேலாதிக்க நிலையை நிலைநிறுத்திக்கொள்ள சீனா எவ்வாறு பொருளாதார பலத்தை ஓர் ஆயுதமாகவும், தனக்குச் சார்பாகச் செயல்படும் நாடுகளைத் துணையாகவும் பயன்படுத்துகிறது என்பதையே இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், இத்தகைய இரட்டை உத்திகள், காலப்போக்கில் சீனாவுடனான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேலும் சவாலானதாக்கும். சமீபகாலமாக, ஸ்திரத்தன்மையற்ற உலக அரசியல் நிலவி வரும் சூழலில், நடைமுறை நிதித் தேவைகளையும், இருதரப்பு உறவு மேம்பாடுகளையும் கருத்தில் கொண்டு, இந்தியத் தலைவர்கள் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த முனைந்தனர். ஆயினும், பேச்சுவார்த்தைகளின் வழியாக ஒத்துழைப்புடன்கூடிய சகவாழ்வை எற்கப்பட வேண்டுமென எதிர்ப்பார்ப்பதற்குப் பதிலாக, சீனாவின் உண்மையான போட்டி மனப்பான்மையை இந்தியா தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டியதோடு, இந்தியா துரிதமாகச் செயல்பட வேண்டியதும் அவசியமாகும். குறிப்பாக, கூடுதல் பொருளாதாரக் கூட்டாளி நாடுகளைக் கண்டறிய வேண்டும். சரக்குகளையும், சேவைகளையும் பெறுவதற்கான உறுதியான புதிய வழிகளை உருவாக்க வேண்டும். சீனாவுடனான நீண்டகால சவாலுக்குத் தயாராக வேண்டும்.

சீனாவின் பொருளாதார ரீதியிலான தாக்குதல்கள்

சமீப மாதங்களாக, இந்தியாவுக்கு எதிராகச் சீனா மேற்கொண்ட கூர்மையான பொருளாதார நகர்வுகள், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் நிலையற்றவை என்பதையும், எளிதில் சிதைந்து போகக்கூடியவை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த மே மாதம் முதல், இந்தியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புப் பிரிவான ஃபாக்ஸ்கானில் பொறியாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பணியாற்றி வந்த முன்னூறுக்கும் மேற்பட்ட சீனக் குடிமக்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும்படி பணிக்கப்பட்டனர். இந்தச் சீனத் தொழிலாளர்களை மீள அழைப்பது, இந்திய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதைத் தாமதப்படுத்துவதுடன், சீனாவிலிருந்து உற்பத்தித் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் முட்டுக்கட்டை போடக்கூடும். இந்த முடிவு, மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்திக்கு அவசியமான திறன்வாய்ந்த தொழிலாளர்களையும், சிறப்பு வாய்ந்த இயந்திரங்களையும் இந்தியா மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களுக்கு அனுப்புவதைக் கடுமையாக கட்டுப்படுத்தக்கூடிய புதிய சீனக் கொள்கையின் ஓர் பகுதிதான் என்று தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையங்களைச் சீனாவிலிருந்து வெளியே நகர்த்துவதைத் தடுத்து நிறுத்துவதே இந்த நடவடிக்கையின் முதன்மையான நோக்கமாகும்.

ஆயினும், இச்சம்பவம் முடிவில் பெரும் தாக்கத்தை விளைவிக்காமல் போகலாம், ஏனெனில் ஃபாக்ஸ்கான் சீனத் தொழிலாளர்களுக்கு மாற்றாகத் தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து புதிய பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தியது. இதன் காரணமாக, இந்தியாவில் அந்நிறுவனத்தின் பணிகள் திட்டமிட்டபடியே எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படியிருந்தும், தொழிலாளர்கள் மற்றும் உபகரணங்களின் விநியோகத்தில் சீனா விதிக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக உருவெடுக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகள், இந்தியா தனது உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்வதையும், மின்னணு உற்பத்தித் துறையில் உலகளவில் முதன்மையான நாடாக உருவாக வேண்டுமென்ற இலக்கை எட்டுவதையும் பெரும் சவாலாக மாற்றிவிடுகின்றன. தற்போதைய அரசாங்கத்திற்கு இந்த இலக்கு முக்கிய முன்னுரிமையாக விளங்குகிறது.

சமீப காலமாக, இந்தியாவுக்கு எதிராகப் சீனா பிரயோகித்து வரும் பொருளாதாரத் தந்திரங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பாட்டிற்கான அடித்தளம் எந்தளவிற்கு பலவீனமானதாக இருக்கிறது என்பதை அப்பட்டமாகப் பறைசாற்றுகின்றன.

வேளாண் துறையில், இந்தியாவுக்கான சிறப்பு உர ஏற்றுமதியை சீனா முற்றிலுமாக முடக்கியுள்ளது. இந்த உரங்கள் அதிகரித்த பயிர் விளைச்சலுக்கு உயிர்நாடியாகத் திகழ்கின்றன. இந்திய விவசாயிகள் இந்தச் சீனப் பொருட்களையே அளவுகடந்து சார்ந்திருக்கின்றனர், ஏனெனில் இந்தியாவின் மொத்த சிறப்பு உர இறக்குமதியில் எண்பது விழுக்காடு சீனாவிடமிருந்தே பெறப்படுகின்றன. அதிகாரப்பூர்வமான தடை உத்தரவை நேரடியாகப் பிறப்பிக்காமல், சீன அதிகாரிகள் ஏற்றுமதிகளைத் தடை செய்ய நடைமுறை ரீதியான கபட உத்திகளைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தத் தவறுவதன் மூலம், அவர்கள் நிர்வாக ரீதியான தாமதங்களை உண்டாக்குவதன் மூலமாக ஏற்றுமதியை சாமர்த்தியமாக முடக்கி வருகின்றனர்.

சீனாவின் அருமண் உலோகங்கள் ஏற்றுமதி மீதான தடைகளும் இந்தியாவை வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன. இந்த ஏற்றுமதிகளால் ஏற்படும் தாமதங்கள் கார் உற்பத்தியைப் பெரிதும் சீர்குலைப்பதுடன், மின்சார வாகனத் துறையை விஸ்தரிக்க வேண்டுமென இந்தியாவால் முன்னெடுக்கப்படும் முக்கிய முயற்சிகளையும் முடக்கிப் வைத்துள்ளன. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த விண்ணப்பங்களில் குறைந்தது இரண்டைச் சீனா நிராகரித்திருந்ததாக ஜூன் மாதத் தொடக்கத்தில் வெளியான ஓர் செய்தியறிக்கை தெரிவித்தது. மேலும், கார் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டிய விநியோகங்கள் பல மாதங்களாகச் சீனத் துறைமுகங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. இது குறித்து இந்திய அரசு தனது ஆழ்ந்த கவலைகளைச் சீனாவிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சன் வெய்டோங் என்பவர் ஜூன் மாதம் புது டெல்லிக்கு வருகைத் தந்தபோது இவ்விவகாரம் குறித்து பேசப்பப்பட்டது; அத்துடன், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தமது பெய்ஜிங் பயணத்தின்போதும் இதே விவகாரத்தை மீண்டும் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தி பேசியிருந்தார்.

இரு நாடுகளிடையிலான உறவு மேம்படுவது போன்றதொரு மாயத்தோற்றம் நிலவினாலும், இந்த நடவடிக்கைகள் முக்கியமான பொருளாதாரத் துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சீனாவின் மறைமுக உள்நோக்கத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. இந்தியாவை ஒரு வலிமையான பொருளாதாரப் போட்டி நாடாக உருவெடுக்க விடாமல் தடுப்பதே சீனாவின் நீண்டகால லட்சியமாகத் தென்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனாவின் பங்கு

மே மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக நிகழ்ந்த மோதலின்போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது, இது இந்தியாவுக்குப் பெரும் கவலையை விளைவித்தது. ஏனெனில், சீனாவின் இச்செயல்பாடுகள் பாகிஸ்தானுக்கு அது வழங்கி வரும் உறுதியான, அசைக்க முடியாத ஆதரவைப் பறைசாற்றுகின்றன. மேலும், இந்தியாவின் நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்க, பாகிஸ்தானைத் தனது போர்த்தந்திரக் கூட்டாளியாகப் சீனா பயன்படுத்துகிறது என்பதையும் இது தெளிவாக உணர்த்துகிறது. சீனா வழங்கிய உதவியின் தன்மையும், அதன் அளவும் ஓர் ஆழமான செய்தியை அதாவது, இந்தியா மேலும் சக்திவாய்ந்த நாடாக வளர்வதைத் தடுப்பதற்குப் இன்றியமையாத கருவியாக பாகிஸ்தான் விளங்கும் என்று சீனாவால் கருதப்படுகின்றது என்ற அழமான செய்தியை இது சுட்டிக்காட்டுகிறது. சீனா பல கோணங்களில் இந்தியா மீது தொடர்ந்து அழுத்தத்தைப் பிரயோகிக்க பாகிஸ்தானைப் பயன்படுத்தி வருகிறது.

இந்த மோதலில் சீனா தனது படைகளை நேரடியாக ஈடுபடுத்தவில்லை என்றபோதிலும், அது பாகிஸ்தானுக்குப் பலதரப்பட்ட உதவிகளை வழங்கியது. குறிப்பாக இராஜதந்திர வழியிலான ஆதரவு (அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் வெளியீடுகள் மூலம் வழங்கப்பட்ட ஆதரவு), தொழில்நுட்ப உதவி (தொழில்நுட்ப ரீதியான ஆதரவு), பொருள் உதவி (தேவையான பொருட்கள் மற்றும் விநியோகங்கள் மூலம் அளிக்கப்பட்ட ஆதரவு) எனப் பலதரப்பட்ட உதவிகளை வழங்கியது.

இராஜதந்திர ரீதியிலான ஆதரவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, சீனா பாகிஸ்தானுடன் தனக்கிருந்த ஒற்றுமையை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. "பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு குறித்தக் கவலைகளை சீனா முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது, மேலும் பாகிஸ்தானின் இறையாண்மையையும், பாதுகாப்பு நலன்களையும் பேணுவதில் பாகிஸ்தானுக்குத் தனது ஆதரவை சீனா வழங்கும்" என்று வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சகம் அமைதிக்கு அழைப்பு விடுத்தும் அறிக்கைகளை வெளியிட்டது. ஆயினும், இந்த அறிக்கைகள் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளை "வருந்தத்தக்கவை" எனக் குறிப்பிட்டன. குறிப்பிட்ட இச்சொல்லைப் பிரயோகித்தமை, இம்மோதலில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கே வலுசேர்த்தது.

இராணுவத் தளவாடங்கள் விநியோகத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு சீனாவே முதன்மை விநியோகஸ்தராக விளங்குகிறது. இந்த ராணுவ உறவின் ஆழத்தை புள்ளிவிவரங்கள் தெளிவாக அம்பலப்படுத்துகின்றன. பாகிஸ்தான் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு ஆயுதங்களில் 81 சதவீதத்தை சீனாவிலிருந்தே பெறுகிறது. அதே சமயம், சீனா உலக நாடுகளுக்கு விற்கும் மொத்த ஆயுதங்களில் 63 சதவீதத்தை பாகிஸ்தான் மட்டுமே பெற்றுக்கொள்கிறது என்பது பாகிஸ்தான் வகிக்கும் முதன்மை பங்கை விளக்குகிறது.

இந்த நெருங்கிய ராணுவக் கூட்டணியின் நேரடி விளைவாக சீனாவின் ராணுவத் ஆதிக்கம் இந்தியாவின் மேற்கு எல்லை வரை விரிவடைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

மே 2025 இல் நிகழ்ந்த மோதலின்போது, சீனா பாகிஸ்தானுக்கு நேரடியான செயல்பாட்டு ரீதியிலான ஆதரவை வழங்கியதாக இந்திய ராணுவம் தொடர்ந்து உறுதியாகக் கூறுகிறது. குறிப்பாக, இந்திய ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், பகிரங்கமாக இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். முக்கியத்துவம் வாய்ந்த இந்திய ராணுவ நிலைகள் குறித்த "நேரடி தகவல்களை" சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நிகழ்நேர உத்திசார்ந்த உளவுத் தகவல்களை சீனா வழங்கியதாக, ஒரு இந்திய அதிகாரி பகிரங்கமாகச் சாடியது இதுவே முதல்முறை.

லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் மேலும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனக்கு சாத்தியமான அனைத்து வகையான ஆதரவையும் சீனா, பாகிஸ்தானுக்கு வழங்கி வருவதாக அவர் கூறினார். மேலும், இந்த மோதலைச் சீனா தனது ஆயுதங்களுக்கான ஒரு "பரிசோதனைக்களமாக" பயன்படுத்திக்கொண்டதாகவும், முதல் முறையாக தனது J-10C போர் விமானத்தை ஒரு நிஜப் போரில் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் உதவியைப் பெற்றதை பாகிஸ்தான் அதிகாரிகள் மறைமுகமாகவே குறிப்பிட்டனர். பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப், சீன உளவுத்துறையிடமிருந்து பெறப்பட்ட ஆதரவை மறைமுகமாகவே உறுதிப்படுத்தினார். அவர் இரண்டு முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். முதலாவதாக, அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத் தகவல்களை நட்பு நாடுகள் பகிர்ந்துகொள்வது இயல்பானது என்று அவர் சுட்டிக்காட்டினார். இரண்டாவதாக, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியாவுடன் "சிக்கல்கள்" இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

ஒரு தனி நிகழ்வில், மற்றொரு பாகிஸ்தான் தலைவரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, ஐ.நா. சபையில் உள்ள சீனத் தூதருக்கு நன்றி தெரிவித்தார். மோதலின் போது, “ஒருமித்த” – அதாவது மிகத் தெளிவான முழுமையான – ஆதரவை வழங்கியமைக்காக அவருக்கு நன்றி கூறினார்.

சீனா பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து நல்கி வரும் அளப்பரிய ஆதரவும், அதன் தன்மையும் ஒரு தெளிவான செய்தியைப் வெளிப்படுத்துகின்றன. அதாவது, சீனா இரு முதன்மை இலக்குகளை அடைவதில், பாகிஸ்தானை ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாகக் கருதுகிறது. இந்தியா பிராந்திய அளவில் முக்கிய சக்தியாக எழுச்சி பெறுவதைக் கட்டுப்படுத்துவதே அத்திட்டத்தின் முதன்மை இலக்காகும். மேலும், இந்தியா மீது பல்முனை அழுத்தங்களைத் தொடர்ந்து பேணுவது இரண்டாவது இலக்காகும்.

இத்தகைய அணுகுமுறை சீனாவுக்குப் புதியதொன்றுமில்லை. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியா, லிதுவேனியா போன்ற நாடுகளுக்கு எதிராக சீனா நேரடியான பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவையும் சீனா ஆதரித்து வருகிறது. அமெரிக்காவைத் தீவிரமான விவகாரங்களில் சிக்கவைத்து, அதன் கவனத்தைச் சிதறடிப்பதன் மூலம், சீனா மீது முழுமையாகக் கவனம் செலுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கம் எனப் பல செய்தியறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதே பாணியில், பாகிஸ்தானுக்குப் பக்கபலமாக நின்று, இந்தியாவை பிராந்தியப் பிரச்சனைகளில் ஆழ்த்தி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நம்பிக்கையின்மையை மேலும் ஆழமாக்குகிறது.

இந்தியாவின் போர்த்தந்திரப் பார்வை

இச்சமீபத்திய நிகழ்வுகள், சீனாவுடனான இந்தியாவின் பழைய அணுகுமுறை இனியும் நீடிக்க முடியாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. கடந்தகாலத்தில், இந்தியா தனது வர்த்தக ஒப்பந்தங்களையும் பாதுகாப்பு விவகாரங்களையும் தனித்தனி அம்சங்களாகக் கருதும் கொள்கையைக் கடைபிடித்து வந்தது. இனி, இம்முறை நடைமுறைக்கு உதவாது.

2020 ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த வன்முறை மோதலுக்குப் பின்னர், இதனை மேலும் பலரும் ஆழமாக உணரத் தொடங்கினர். அந்நிகழ்வுக்குப் பிறகு, இந்தியா ஒரு புதிய நிபந்தனையை முன்வைத்தது. எல்லைப் பிரச்சனை முதலில் தீர்க்கப்படும் வரை, இருதரப்பு உறவுகளின் பொதுவான மேம்பாடு என்பது சாத்தியமேயில்லை என்று இந்தியா திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தியது.

அதன் பின்னர் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன; மேலும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ஏற்பட்ட சில சிறு மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆயினும், இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆழமாக வேரூண்றியுள்ள பதற்றம் ஒருபோதும் குறைந்தபாடில்லை.

ஆகவே, சீனாவின் அனுகுமுறை குறித்த ஓர் அடிப்படைக் கருத்தை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. பேச்சுவார்த்தைகள் மூலம் உறவுகளை மேம்படுத்த இந்தியா எவ்வளவு முயன்ற போதிலும், சீனா இந்தியாவை எக்காலத்திலும் ஒரு போட்டி நாடாகவே கருதும்.

இத்தகையதொரு சூழலில், இந்தியா (புது தில்லி) தனது முயற்சிகளை மூன்று முக்கியத் துறைகளில் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். பல்வேறுபட்ட நாடுகளுடன் பரந்துபட்ட பொருளாதாரக் கூட்டுறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும்; சீனாவைச் சாராத விநியோகத் தொடர்களை வலுவாக நிலைநிறுத்த வேண்டும்; மேலும், சீனாவுடனான நெடுங்கால போர்த்தந்திர அளவிலான போட்டிக்குத் தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இம்முயற்சிகள் ஏற்கெனவே செயல்வடிவம் பெற்றுள்ளன. சான்றாக, கடந்த ஜூலை மாதம், சவுதி அரேபியாவுடன் இந்தியா நெடுங்கால உர விநியோக ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது. இவ்வாண்டில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான திட்டத்தையும் (National Critical Minerals Mission) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அளவுக்குமீறிய இறக்குமதிச் சார்புநிலையை வெகுவாகக் குறைத்து, அத்தியாவசியக் கனிமங்களுக்கான நம்பகமான மாற்றுவழிகளை நிறுவுவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

இந்தியாவிற்குள்ளேயே, மாநில அளவிலான நிர்வாகத் தடைகளைக் களைவதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய வணிகக் காலதாமதங்களை அகற்றுவது, தனியார் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கும். 

மேலும், பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய இருபெரும் தூண்களையும் சமன்செய்வது குறித்த விவாதம் பொதுவாக நிகழ்ந்து வந்தாலும், ஓர் அதிகாரப்பூர்வமான, விரிவான அரசுசார் மதிப்பீடு இன்றியமையாதது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், பிற அமைச்சகங்களுடனும், வெளியுறவு அமைச்சகத்தின் ஆராய்ச்சிப் பிரிவான சமகால சீன ஆய்வுகளுக்கான மையத்துடனும்(Centre for Contemporary China Studies) ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவர்கள் கூட்டாக இணைந்து, இந்தியாவில் சீனாவின் ஆதிக்கத்தை ஆழமாக ஆராய்வதோடு, விநியோகத் தொடரில் உள்ள பலவீனங்களை இனங்காண வேண்டும். மேலும், உள்நாட்டிலேயே அதிக உற்பத்தியை மேற்கொள்வதற்கும் அல்லது வெளிநாடுகளிலிருந்து அவற்றை பெறுவதற்கும் தனியார் நிறுவனங்களுடன் எவ்வாறு ஒத்துழைப்பது எனவும் திட்டமிட வேண்டும்.

சீனாவின் அழுத்தத்திற்கு ஆட்படாமல் தன்னைப் பலப்படுத்திக்கொள்வதன் மூலமும், சீனாவின் வலிமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் உறுதியான கூட்டுறவுகளைக் கட்டமைப்பதன் மூலமும் மட்டுமே, இந்தியா தனது சொந்த போர்த்தந்திர நலன்களில் சுதந்திரமாக செயல்படுவதை பாதுகாத்து, உலக அளவில் முக்கிய சக்தியாகத் தொடர்ந்து உயர்வடைய முடியும்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://southasianvoices.org/geo-m-in-n-limits-india-china-detente-07-17-2025/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR5DxLSv97PJ1H8FctNMldD1NXo-ctjlOLTxKWG7ydC_i0NHcFBTWKszMHS3bQ_aem_pF-KYxQ7SvfRwzUh6eBxzw&sfnsn=wiwspwa

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு