இந்தியா - சீனா மீதான அமெரிக்காவின் செயல்தந்திரம்

தமிழில் : நாராயணன்

இந்தியா - சீனா மீதான அமெரிக்காவின் செயல்தந்திரம்

இந்தியா முக்கிய கூட்டாளி, சீனா முதல் அச்சுறுத்தல்: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, தான் பதவிக்கு வந்த பின், 12 அக்டோபர், புதனன்று தனது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு யுத்த தந்திரத்தை (என் எஸ் எஸ்) வெளியிட்டது.

அதில், பைடன்  நிர்வாகம்,  தனது முக்கிய நோக்கங்களையும், தான் உறவை மேம்படுத்த விரும்பும் கூட்டாளிகள் யார், அது எதிர்க்க விரும்பும் “அச்சுறுத்தல்கள்” எவை என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

சீனாவுடனான போட்டிதான் மிகப் பெரிய சவால் என அறிவிக்கும் அமெரிக்கா, தொடரும் உக்ரைன் போரில் “ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும்” அவசியத்தை வலியுறுத்துகிறது.

அது இந்தியாவை “முக்கிய கூட்டாளி” என வரையறை செய்து, “சுதந்திரமான திறந்த இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தை” உறுதிப்படுத்துவதின் அவசியத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு யுத்த தந்திரத்தின் முக்கிய அம்சங்கள் இதோ: (NSS)

இரு நாடுகளுக்கிடையே “இசைவான  தொலைநோக்கு பார்வை” என்பதைக் குறிப்பிட்டு, இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதால்,  அது அமெரிக்காவின்  “முக்கிய பாதுகாப்பு கூட்டாளி”யாகிறது  என குறிப்பிடும் இந்த அமெரிக்க  தேசிய பாதுகாப்பு யுத்த தந்திர அறிக்கை,  அமெரிக்காவும் இந்தியாவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு நிலைகளில், சுதந்தரமான, திறந்த பசிஃபிக் பிராந்தியத்துக்காக இணைந்து பாடுபடப்போவதாக அறிவிக்கிறது.

தென் ஆசிய நாடுகளுடனான கூட்டுறவையும், குறிப்பாக சீனாவின் “அத்துமீறல் நடவடிக்கைகளை” கட்டுப்படுதுவதன் தேவையையும் இது விவரிக்கிறது.

இதன் தொடர்பாக, அது குவாட் (அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) கூட்டமைப்பு மற்றும்  பலதரப்பு  செயல்பாடுகளின் முக்கியத்துவத்தையும், ஒருங்கே குறிப்பிட்டு, இந்தியா இதில் அமெரிக்காவுடன் ஒரு அங்கமாக விளங்கும் என்கிறது.

சீனா: மிகப் பெரிய சவால்

இந்த ஆவணம், சீனாவை “மிகப் பாரதூரமான விளைவுகளுள்ள புவிசார் அரசியல் சவால்” என்றும் எதிர்காலத்தின் சர்வதேச உலக ஒழுங்கமைப்புக்காக இடையறாது சீனாவுடன் ஒரு “யுத்த தந்திர போட்டியில்” அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்றும் சொல்கிறது.

“சர்வதேச உலக ஒழுங்கமைப்பை மாற்றி அமைப்பதிலும், அதை நிறைவேற்றத் தேவையான  பொருளாதார, ராஜதந்திர, இராணுவ, தொழிற்நுட்ப பலத்தில் வளர்ச்சியுற்றும்  வரும்  சீன மக்கள் குடியரசு (சீனா)தான் ஒரே போட்டியாளர்” என்கிறது.

சீனாவுடன் போட்டியிடுவதற்கான “பொது நோக்குடன்” உள்நாட்டு முதலீடுகளை பெருக்கி, கூட்டணி நாடுகளுடன் செயல்படவும் அமெரிக்கா திட்டமிடுகிறது என இந்த தேசிய பாதுகப்பு யுத்த தந்திர ஆவணம் (என் எஸ் எஸ்) மேலும் கூறுகிறது.

ஜிங்ஜியாங் “இனப் படுகொலை”, திபெத்தில் “மக்கள் உரிமை மீறல்கள்”, ஹாங்காங்கின் தன்னாட்சி மற்றும் விடுதலையை “சீர்குலைக்கும்” அதன் பல்வேறு மோசமான நடவடிக்கைகளுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்கும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

- நாராயணன்

(தமிழில்)