ரஷ்ய விமானங்களை புதுப்பிக்கும் அமெரிக்கா: 2.34 பில்லியன் டாலர் மதிப்பிலான MRO ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழில்: விஜயன்

ரஷ்ய விமானங்களை புதுப்பிக்கும் அமெரிக்கா: 2.34 பில்லியன் டாலர் மதிப்பிலான MRO ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியப் படைகளிலுள்ள ரஷ்ய MiG-29 போர் விமானங்களை புதுப்பித்து, மேம்படுத்தும் பணியில் இறங்கும் அமெரிக்கா; 2.34 பில்லியன் டாலர் மதிப்பிலான பராமரிப்பு, பழுதுநீக்குதல் மற்றும் விரிவான மறுசீரமைப்பு (MRO) ஒப்பந்தம் கையெழுத்தானது

போர்த்தந்திர ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னணி ஆயுத கார்ப்பரேட் நிறுவனம், இந்திய விமானப்படையிலுள்ள, சோவியத் காலந்தொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் MiG-29 போர் விமானங்களுக்கு முழுமையான புனரமைப்பு செய்து, அவற்றை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவில் பெருகிவரும் பராமரிப்பு, பழுதுநீக்குதல் மற்றும் விரிவான மறுசீரமைப்பு (MRO) தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், இந்திய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க ஆயுதக் கார்ப்பரேட் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

பல்வேறு வகையிலான இராணுவ தளவாடங்களுக்கான பராமரிப்பு, பழுதுநீக்குதல், மற்றும் விரிவான மறுசீரமைப்பு உதவிகளை வழங்குவதாக இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இதில் இந்திய விமானப்படை, இந்தியக் கடற்படை ஆகிய இரு படைகளாலும் இயக்கப்படும் பழைய சோவியத் காலத்து போர் விமானங்களுக்கும் இந்த சேவைகள் வழங்கப்படும். சோவியத் யூனியனில் உற்பத்தி செய்யப்பட்டு, இன்று வேறு நாடுகளால் இயக்கப்படும் போர் விமானங்களை பராமரிப்பதோடு, அவற்றின் ஆயுட்கால நீட்டிப்புப் பணிகளில் ஓர் அமெரிக்க நிறுவனம் நேரடியாகப் பங்கேற்பது என்பது வரலாற்றிலேயே அபூர்வமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பென்டகனின் அங்கீகாரத்தைப் பெற்ற ஓர் அமெரிக்கப் ஆயுதக் கார்ப்பரேட் நிறுவனம், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் இந்த முக்கிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 2.34 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய விமானப்படையின் MiG-29 UPG ரக விமானங்கள், இந்தியக் கடற்படையின் MiG-29K ரக விமானங்களோடு, இந்த ஒப்பந்தம் 100 ஜாகுவார் ரக தாக்குதல் விமானங்கள், இந்திய ராணுவத்தால் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படும் அப்பாச்சி AH-64 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது பழைய சோவியத் காலத்து L-70 ரக வான்காப்புப் பீரங்கிகள் ஆகியவற்றிற்கான பராமரிப்பு, பழுதுநீக்குதல் மற்றும் விரிவான மறுசீரமைப்பு வசதிகளையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

நாக்பூரில் அமைந்துள்ள மிஹான்(MIHAN) வணிகப் பூங்காவில், இராணுவ பழுதுநீக்குதல் மற்றும் பராமரிப்பு மையங்கள் அமையவுள்ளன. இம்மையங்கள், இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, போர் விமானங்கள் மற்றும் தரைப்படை வாகனங்களுக்கான பிரத்யேக சேவைகளை வழங்க இருக்கின்றன. தற்போது, இந்திய விமானப்படையிடம் 50க்கும் மேற்பட்ட மிக்-29 ரகப் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல், இந்தியக் கடற்படையோ, விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து செயல்படும் 40 மிக்-29K ரகப் போர் ஜெட் விமானங்களைத் தன்வசம் வைத்துள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற கோஸ்டல் மெக்கானிக்ஸ் (Coastal Mechanics) நிறுவனம், காலாவதியான அல்லது அசல் உற்பத்தியாளர்களிடமிருந்தே கிடைக்காத உதிரிபாகங்கள் உள்ளிட்ட, பழமையான இராணுவத் தளவாடங்களைச் சீரமைத்தல், மேம்படுத்துதல், மற்றும் புதிப்பிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

இந்நிறுவனம், பலதரப்பட்ட இராணுவ உபகரணங்களுக்குப் பராமரிப்புப் பணிகளைச் செவ்வனே செய்து வந்துள்ளது. குறிப்பாக, F-15, F-16, F/A-18, A-10, F-4, மற்றும் AV-8B போன்ற பல்வேறு போர் விமானங்களுக்கு சேவைகளை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி, AH-1 கோப்ரா, UH-1 ஹியூ, UH-60 பிளாக்ஹாக், SH-60 சீஹாக், மற்றும் AH-64 அப்பாச்சி போன்ற ஹெலிகாப்டர்களுக்கும் இச்சேவையை வழங்கி வருகின்றன.

இவற்றுடன், AN/FPS-117, AN/TPS-43, AN/TPQ-36/37 போன்ற ரேடார் கண்டறிதல் அமைப்புகளையும்; AIM-9, AIM-7, மற்றும் TOW ஏவுகணைகள் போன்ற வழிகாட்டுதலுடன் இயக்கப்படும் ஆயுதங்களையும்; PATRIOT, HAWK, மற்றும் NIKE-HERCULES போன்ற வான்காப்பு அமைப்புகளையும் இந்நிறுவனம் தொடர்ந்து பராமரித்து வருகிறது.

செலவு குறைந்த உற்பத்தி வழிமுறைகள், காலங்கடந்த இராணுவ தளவாடங்களை பராமரித்து, சீரமைத்துத் திரும்ப ஒப்படைக்கும் சேவைகள் மட்டுமல்லாது முழுமையாகவே தளவாடங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் இந்நிறுவனத்தின் தனிச்சிறப்புமிக்க பலங்களாகத் திகழ்கின்றன. அசல் உற்பத்தியாளரின் ஆதரவு கிடைக்காத உபகரணங்களுக்குக்கூட, இந்நிறுவனம் தனது சொந்த சிறிய அளவிலான உற்பத்தி வழிமுறைகள், அத்துடன் இராணுவப் பராமரிப்புத் தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் குறிப்புப் பொருட்களைக் கொண்டு, அவற்றின் தங்குதடையற்ற செயல்பாட்டை உறுதி செய்கிறது.

இப்புதிய அனுபவம் இந்தியாவிற்குப் பேருதவியாக அமையும். இது, MiG-29 மற்றும் Jaguar போன்ற தனது பழமையான போர் விமானங்களைப் பராமரித்து, சீரமைக்கத் தேவையான வசதிகளை இங்கேயே உருவாக்க வழிவகுக்கும். உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, MiG-29 ரக விமானங்களுக்கான உதிரி பாகங்களைப் பெறுவது இந்தியாவிற்கு ஒரு பெரும் இடர்ப்பாடாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, Jaguar விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையால் (IAF) மட்டுமே பயன்படுத்ப்பபட்டு வருகின்றன. தற்சமயம் வேறு எந்த நாடும் Jaguar ரக விமானங்களை இயக்குவதில்லை என்பதால், அவற்றிற்கான உதிரி பாகங்களைக் கண்டறிவது பெரும் சவாலாகவே நீடிக்கிறது.

இந்த இடர்ப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்தியா பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பாகங்களைத் தயாரிக்க வாய்ப்புகளைத் தேடிவருகிறது. பழைய பாகங்களை நுணுக்கமாக ஆய்ந்து, அதே வடிவமைப்பில் புதியவற்றை உருவாக்கும் 'மீள்நோக்குப் பொறியியல்' (Reverse Engineering) நுட்பமும் இதில் கையாளப்படலாம். வேறு எங்கும் கிடைக்காத இப்புதிய பாகங்கள், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்.

MiG-29 என்பது ஆகஸ்ட் 1983-இல், அப்போதைய சோவியத் யூனியனில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரு ஜெட் போர் விமானமாகும். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றங்கள் நிறைந்த பனிப்போர் காலகட்டத்தில் இது வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க போர் விமானங்களான F-15 ஈகிள் மற்றும் F-16 ஃபைட்டிங் ஃபால்கன் போன்றவற்றை எதிர்கொள்ளும் நோக்கில் MiG-29 உருவாக்கப்பட்டது.

தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில், MiG-29 ஒரு வலிமைமிக்க, அதிநவீன போர் விமானமாகக் கருதப்பட்டது. சில அம்சங்களில் இது அமெரிக்க ஜெட் விமானங்களுக்கு இணையானதாகவோ அல்லது அவற்றையும் விஞ்சியதாகவோகூட சிலர் கூறிவந்தனர்.

பல அமெரிக்க அதிகாரிகள், MiG-29 விமானத்தை செயற்கைக்கோள் படங்களில் முதன்முதலில் கண்டபோது பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள். அந்த ஜெட் விமானம் கவர்ச்சியாகவும், அதிவேகமாகவும், அதிநவீனமாகவும் காட்சியளித்தது. அக்காலகட்டத்தில் அமெரிக்க விமானப்படையின் தலைசிறந்த போர் விமானங்களுடன் போட்டியிடும் வல்லமை பெற்றதாக அது தோன்றியது. விமானத் தொழில்நுட்பத்தில் சோவியத் யூனியன் அமெரிக்காவின் தரத்தை எட்டிவிட்டது என்றுகூட சில அமெரிக்க அதிகாரிகள் அப்போது குறிப்பிட்டனர்.

இந்திய விமானப்படையால் (IAF) 'பாஷ்'(Baaz) எனப் போற்றப்படும் மிக்-29 போர் விமானம், 1987 ஆம் ஆண்டில் இந்திய படையில் சேர்க்கப்பட்டது. மிக்-29 விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு 1986 செப்டம்பரில் கையொப்பமிட, முதல் விமானங்கள் 1987 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே இந்திய மண்ணை வந்தடைந்தன. இந்திய விமானப்படை தற்போது மூன்று மிக்-29 ரக விமானங்களை இன்றும் பயன்படுத்தி வருகிறது.

1994 ஆம் ஆண்டில், இந்தியா மேலும் 10 மிக்-29 ஜெட் விமானங்களுக்கு மற்றொரு கொள்முதலுக்கான கோரிக்கை விடுத்திருந்தது. அத்தொகுப்பில் ஒரு பயிற்சி விமானமும் பெறப்பட்டதது. அவ்வாறு பெறப்பட்ட இறுதித் தொகுதி விமானங்கள் 'ஃபுல்க்ரம்-சி' வகையைச் சேர்ந்தவை. இவ்வகை விமானங்கள், ஒரே சமயத்தில் இரு இலக்குகளைப் ஒரேசேரத் தாக்கும் ஆற்றல் கொண்ட அதிநவீன ரேடார் அமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், இவற்றின் இறக்கைகளின் அடியில் கூடுதல் எரிபொருள் கலன்களைத் தாங்கிச் செல்லும் வசதிகளையும் கொண்டுள்ளன.

இதுநாள் வரை, மிக்-29 விமானங்கள் ஓசார் நகரில் அமைந்துள்ள 11வது அடிப்படைப் பழுதுபார்க்கும் பணிமனைக்குத்தான் (Base Repair Depot) முக்கியப் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மார்ச் 2008 இல், இந்திய விமானப்படை ரஷ்ய நிறுவனமான RAC-MiG உடன், 63 ஒற்றை இருக்கை கொண்ட மிக்-29 விமானங்களை நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டது. இவ்வொப்பந்தத்தின் மதிப்பு 964 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அப்போது மதிப்பிடப்பட்டது. இந்த நவீனமயமாக்கல், ஒவ்வொரு விமானத்தின் ஆயுளையும் மேலும் 15 ஆண்டுகள் அல்லது 1,000 பறக்கும் மணிநேரம் வரை நீட்டிப்பதற்கான வழிவகையை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போதைய சூழலில் நிலைமை மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக ரஷ்யா உக்ரைனுடனான போரில் மூழ்கியுள்ளதால், ரஷ்யாவிடமிருந்து உதிரிப் பாகங்களைப் பெறுவதில் இந்தியா பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறது. அதுமட்டுமன்றி, இந்தியா போர் விமானப் பற்றாக்குறையையும் சந்தித்து வருகிறது. அதோடு, உள்நாட்டிலேயே தயாராகும் இலகுரகப் போர் விமானமான (LCA) Mk1A-வின் விநியோகமும் தாமதமாகிறது. இத்தகைய சிக்கல்களின் விளைவாக, தமது போர் விமானங்களைச் சீரிய முறையில் இயங்க வைக்கவும், எப்போதும் பயன்பாட்டுக்கு ஆயத்தமாக வைத்திருக்கவும், இந்தியா புதிய மாற்று விநியோக வழிகளையும், பிற உத்திகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்திய விமானப்படையின் (IAF) தளப் பழுதுபார்ப்பு மையங்களுடன் நேரடியாகக் களத்தில் இறங்கிப் போட்டியிடும் எண்ணத்தை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம்  கொண்டிருக்கவில்லை. மாறாக, வழக்கமான சேவைப் பணிகள், பெரும் அளவிலான மறுசீரமைப்புகளோடு பழைய விமானங்களின் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்துவதென்று திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, ரிலையன்ஸ் டிஃபென்ஸ், இந்திய விமானப்படையின் தற்போதைய பராமரிப்பு அமைப்பிற்கு மாற்றாக அமையாமல், அதனுடன் கைக்கோர்த்து, ஒன்றிணைந்து செயலாற்றவே உத்தேசித்துள்ளது.

இம்முயற்சி, "செயல்திறன் அடிப்படையிலான தளவாடங்கள்" (performance-based logistics - PBL) எனப்படும் ஒரு புதிய பராமரிப்பு மாதிரிக்கு இந்தியா தன்னை ஆயத்தப்படுத்தும் பேரிலக்கின் ஒரு கூறு என்று கூறப்படுகிறது. இந்த அணுகுமுறையில், பழைய அமைப்புகளை அடியோடு புதிதாக மாற்றுவதற்குப் பதிலாக, அவை எவ்விதச் சிக்கலுமின்றி, திறம்படச் செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும், அவற்றைப் பேணிப் பாதுகாப்பதிலுமே இப்புதிய அணுகுமுறை பிரதானமாகக் கவனம் செலுத்துகிறது. தனது இராணுவ வலிமையை வலுப்படுத்துவதோடு, செலவினங்களையும் கணிசமாகக் குறைத்துக்கொள்ளவதென்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை இது பிரதிபலிக்கிறது. மேலும், தன்னுடைய இராணுவத் தளவாடங்களை அவற்றின் முழுப் பயன்பாட்டுக் கால அளவிற்கும் திறம்பட நிர்வகிக்க வேண்டுமென்ற இந்தியாவின் தனித்தப் பார்வையையும் காட்டுகிறது.

ரஷ்ய தயாரிப்பு விமானங்களைப் பயன்படுத்தும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பில் ஒரு தலைமை மையமாகத் திகழ வேண்டுமென்பதிலும் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இம்முயற்சி, இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதிகளைப் பன்மடங்குப் பெருக்குவதோடு, இப்பிராந்தியத்தில் தனது தற்காப்பு வியூக முக்கியத்துவத்தையும் மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

இந்தியா தனக்கென ஒரு கனவு இலக்கை வகுத்துள்ளது. உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு (MRO) சந்தையில் ஒரு வலுவான போட்டி சக்தியாக மிளிர வேண்டுமென விரும்புகிறது. 2031 ஆம் ஆண்டிற்குள், இத்துறை வாயிலாக 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை அடைந்திட, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற விமானப் பராமரிப்புத் துறையில் தலைமை வகிக்கும் நாடுகளோடு போட்டியிடும் நோக்குடன் இந்தியா செயல்படுகிறது.

அமெரிக்காவுடன் மிக நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை நாடும் இந்தியாவின் முயற்சி, தற்கால உலக அரசியல் பின்னணிகளுடன் ஆழமாக பிணைந்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு இராணுவ வர்த்தகமும் இருந்ததில்லை. அக்காலகட்டத்தில், இந்தியாவுடனான அமெரிக்காவின் இராணுவ வர்த்தகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகவே இருந்தது. ஆனால் இன்று, இச்சூழல் முற்றிலும் மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து, மிகப் பெரியதும், அதிமுக்கியத்துவம் வாய்ந்ததுமான ஆயுதத் தளவாடங்களைக் கூட்டாக உற்பத்தி செய்வது குறித்து விரிவாகப் பேசி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்தப் இராணுவ இறக்குமதிகளில் – மதிப்பு ரீதியாகப் பார்க்கும்போது – சுமார் பத்து விழுக்காடு அமெரிக்காவிலிருந்தே பெறப்படுகிறது. இது, கடந்த சில ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்குமிடையேயான இராணுவ உறவு எந்த அளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது என்பதை நன்கு எடுத்துக்காட்டுகிறது.

உலக அளவில், இராணுவத் தளவாடங்களை மிக அதிகளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கியமான நாடாக விளங்குகிறது. குறிப்பாக, 2008 முதல் 2023 வரையிலான பதினைந்தாண்டு காலப்பகுதியில், உலகளாவிய ஆயுத இறக்குமதிகளில் ஏறத்தாழ பத்து சதவிகிதம் ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவிற்கான ஆயுத விநியோகத்தில் ரஷ்யாவே இன்றும் முதன்மை வகிக்கிறது. ஆயினும், அதே காலகட்டத்தில், அமெரிக்காவிடமிருந்து இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் என்பது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.

2008 ஆம் ஆண்டுக்கு முன்னர், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான இராணுவ வணிகம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்துள்ளது. 2000-களின் தொடக்கத்தில், எதிரிநாட்டுப் படைகளின் பீரங்கிகளைக் கண்டறியும் ராடார் அமைப்புகளையும், கடற்படைப் பயன்பாட்டுக்கான அமெரிக்க ஹெலிகாப்டர்களையும் இந்தியா கொள்முதல் செய்தது. 2007-ல், உபரி பாதுகாப்புச் சாதனங்கள் (Excess Defense Articles - EDA) திட்டத்தின்கீழ், அமெரிக்கா ஒரு பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பலை இந்தியாவிற்கு வழங்கியது. யு.எஸ்.எஸ். ட்ரெண்டன் (USS Trenton) எனப் பெயரிடப்பட்ட இக்கப்பல், இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது ஐ.என்.எஸ். ஜலாஷ்வா (INS Jalashwa) என்று அழைக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு முதல், அமெரிக்கத் தயாரிப்பு இராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய, இந்தியா ஏறத்தாழ 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இவ்வொப்பந்தங்கள் பெரும்பாலும் அமெரிக்க அரசின் வெளிநாட்டு இராணுவ விற்பனை (Foreign Military Sales - FMS) திட்டத்தின் வழியாகவே நிறைவுற்றன.

கடந்த பதினைந்தாண்டு காலப்பகுதியில், இந்தியா பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விமான வகைகளை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இவற்றுள், சிறப்புச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ்; கனரகப் போக்குவரத்து விமானமான சி-17 குளோப்மாஸ்டர் III; அத்துடன், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் கடல்சார் ரோந்துக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட பி-8ஐ போஸிடான் ஆகியவையும் அடங்கும்.

உண்மையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, சி-17 மற்றும் பி-8 ரக விமானங்களை அதிகமாக பயன்படுத்தும் உலகின் இரண்டாவது பெரிய விமானக் படைத் தொகுதியை இந்தியா இன்று தன்வசம் வைத்துள்ளது. அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களையும் இந்தியா தன் வசம் கொண்டுள்ளது. இவற்றுள், கனரகச் சுமைகளைத் தாங்கிச் செல்லும் சி.எச்.-47எஃப் சினூக்; கடற்படைப் பயன்பாட்டுக்கான எம்.எச்.-60ஆர் சீஹாக்; அத்துடன், தாக்குதல் ரக ஹெலிகாப்டரான ஏ.எச்.-64இ அப்பாச்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்தக் கொள்முதல்கள், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் இராணுவ உறவுகளை, குறிப்பாக கடந்த பதினைந்தாண்டு காலமாக, வலுப்பெற்று வரும் இராணுவ உறவுகளை, மிகத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

இந்தியா, எதிரிக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கும் ஹார்பூன் ஏவுகணைகளையும், எளிதில் நகர்த்தவல்ல M-777 இலகுரக பீரங்கிகளையும் வாங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து, மேம்பட்ட F-414 போர் விமான எஞ்சின்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

மேலும், இந்தியா மூன்று பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் மதிப்பில், சீ கார்டியன் (Sea Guardian) மற்றும் ஸ்கை கார்டியன் (Sky Guardian) ரகங்களை உள்ளடக்கிய 31 MQ-9B ஆளில்லா விமானங்களை (ட்ரோன்களை) கொள்முதல் செய்யத் தயாராகி வருகிறது. இந்த ஆளில்லா விமானங்கள், கண்காணிப்பு மற்றும் தொலைதூரத் தாக்குதல்களுக்குப் பயன்படும். ஸ்ட்ரைக்கர் (Stryker) கவச இராணுவ வாகனங்கள், எதிரி டாங்கிகளை அழித்தொழிக்கக்கூடிய ஜாவலின் (Javelin) ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பது குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

சமீபத்தில், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்திருந்த கடைசி போர்க்கப்பலை இந்தியா பெற்றுக்கொண்டது. அத்துடன், ரஷ்யத் தயாரிப்பான S-400 வான்காப்பு அமைப்பின் இறுதி இரண்டு அலகுகளையும் இந்தியா பெற்றுக்கொண்டது. இவ்வகையான விநியோகங்களைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எந்தவொரு நிலுவையிலுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களும் இல்லை. ரஷ்யாவின் ராணுவ விநியோகங்களைச் சார்ந்திருந்த மலேசியா, ஆர்மீனியா போன்ற பிற நாடுகளைப் போலவே, சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட தனது பழைய ராணுவ உபகரணங்களுக்கான உதிரி பாகங்களையும், அவற்றிற்கான ஆதரவையும் பெறுவதற்காக இந்தியா தற்போது புதிய மாற்று வழிகளை நாடி வருகிறது.

திருமதி ரிது ஷர்மா, பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்துச் சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார். ஜெர்மனியில் உள்ள எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில், மோதல் பற்றிய ஆய்வுகள் மற்றும் அமைதி மேலாண்மையில் அவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆசிய-பசிபிக் பிராந்தியம், தென் சீனக் கடல், விமானப் போக்குவரத்து வரலாறு ஆகியவை அவரது முக்கிய ஆய்வுக்குறிய துறைகளாகும்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.eurasiantimes.com/u-s-to-revamp-russian-fighter-jets-in-service/