காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது ஜியோனிச இஸ்ரேல் அரசு
செந்தளம் செய்திப்பிரிவு
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மீது ஓர் இன அழிப்பு யுத்தத்தை வெறி கொண்டு நடத்தி வருகிறது ஜியோனிச இஸ்ரேல் அரசு. அதில் 15000 க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேலிய பிணையக் கைதிகளை விடுவிப்பதற்காக ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் என்று அறிவிப்பு கடந்த வாரம் விடுக்கப்பட்டது. அதன்படி 100க்கும் மேற்பட்ட பிணைய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதில் ஒரு பெண் தன் குழந்தையுடன் மிகவும் அன்புடன் ஹமாஸ் வீரர்கள் நடந்து கொண்டதாகவும், அவர்கள் கட்டாப்பாட்டில் இருந்த காலம் முழுவதும் ஒரு பாதுகாப்பு சூழலையே உணர்ந்ததாகவும் வெளிப்படுத்தி திறந்த கடிதம் எழுதியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஹமாஸ் இயக்கம் மேலும் சில பிணையக் கைதிகளை விடுவிக்க முன்வந்து போர்நிறுத்த கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை கண்டுக்கொள்ளாத இஸ்ரேலிய அரசு நேற்று (01.12.2023) காலை 7.00 மணிக்கே (காசா நேரப்படி) காசா மீது குண்டுமழை பொழியத் துவங்கிவிட்டது.
200க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் 180க்கும் மேற்பட்டோர் நேற்று ஒருநாளில் மட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த தற்காலிக போர் நிறுத்தம் கூட கதார் நாடு ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை அடுத்து நடைமுறைக்கு வந்தது. அதுவும் மக்களின் தீரமிக்க போராட்டத்தால்தான் சாத்தியமாயிற்றே ஒழிய ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் ஐ.நாவின் கருணையால் அல்ல.
ஆனால் சீனாவும் ரசியாவும் ஐ.நாவில் தலையிட்டதால்தான் போர் நின்றுவிட்டது என்று திருத்தல்வாதிகள் கூப்பாடு போட்டார்கள். சீனாவும் ரசியாவும் அமெரிக்காவும் ஐ,நாவில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள உரிமை உண்டு என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. அதுதான் இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு நியாயத்தையும் தைரியத்தையும் வழங்கியது. ஆகவேதான் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான போர் மீண்டும் தொடங்கிவிட்டது.
எனவே, தொடர் மக்கள் போராட்டங்கள்தாம் இந்த இன அழிப்பு போரை முடிவிற்கு கொண்டு வரும்.
போர் நடத்துவதற்கான சர்வதேச விதிகள் எதையும் பின்பற்றாமல் ஓர் அநீதி யுத்தத்தை நடத்தி வரும் இந்த ஜியோனிச இஸ்ரேல் அரசுக்கும், அமெரிக்க-நேட்டோ, சீன-ரஷ்ய ஏகாதிபத்திய ஓநாய்களுக்கும் உலக உழைக்கும் மக்களும் தேச விடுதலை இயக்கங்களும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
செந்தளம் செய்திப்பிரிவு