சர்வதேச அளவில் எழுந்த எச்சரிக்கைகளையும் மீறி காசாவில் பஞ்சம் ஏதும் இல்லை என இஸ்ரேலிய அமைச்சர் தொடர்ந்து மறுப்பு

விஜயன் (தமிழில்)

சர்வதேச அளவில் எழுந்த எச்சரிக்கைகளையும் மீறி காசாவில் பஞ்சம் ஏதும் இல்லை என இஸ்ரேலிய அமைச்சர் தொடர்ந்து மறுப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் (குத்ஸ் செய்தி நிறுவனம்): சர்வதேச அளவில் காசா 'மிக மோசமான பஞ்சத்தையும் பட்டினிச் சாவையும் எதிர்கொண்டுள்ளதாகத் தொடர்ந்து எச்சரித்து வந்தபோதிலும், இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் எலி கோஹன் காசாவில் பஞ்சம் நிலவுவதை அடியோடு மறுத்துள்ளார்.

இஸ்ரேலின் கான் 11 செய்தி ஊடகத்தில் பேசுகையில், அமைச்சர் கோஹன் இவ்வாறு கூறினார்:

“காசாவில் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாலஸ்தீனியர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் நாடுகள், தங்கள் எல்லைகளைத் திறந்து அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்”. பாலஸ்தீனியர்களின் துயரத்தைப் பற்றி வாயளவில் பேசிவிட்டு, அகதிகளை ஏற்க மறுக்கும் அந்த நாடுகளை அவர் 'கபடதாரிகள்' என்று கடுமையாகச் சாடினார்.

 “பாலஸ்தீனியர்களை யாரும் உண்மையிலேயே விரும்புவதில்லை... அவர்களின் வரலாறே துரோகங்களால் நிரம்பியுள்ளதுதான் இதற்கு காரணம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தீவிர வலதுசாரி அமைச்சர்களான இட்டாமர் பென்-க்விர், பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பிற முக்கிய இஸ்ரேலியத் தலைவர்களும் காசாவில் 'பஞ்சமும் இல்லை, பட்டினியும் இல்லை' என்று பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவின் இந்தக் கூற்றுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,“தொலைக்காட்சியில் நான் காணும் காட்சிகளின்படி, பஞ்சம் இல்லை என்று என்னால் கூறவே இயலாது – குழந்தைகள் மிகவும் பசியுடன் காணப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் பெருமளவிலான பணத்தையும் உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறோம், இப்போது மற்ற நாடுகளும் உதவத் தொடங்கியுள்ளன” என்று அவர் பதிலளித்தார்.

காசாவில் பட்டினி நிலவுகிறதா?

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2023 அக்டோபரில் இனப்படுகொலை துவங்கியதிலிருந்து, 93 பிஞ்சு குழந்தைகள் உட்பட குறைந்தது 169 பாலஸ்தீனியர்கள் பட்டினியாலும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் மரணமடைந்துள்ளனர். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF), ஆக்ஸ்ஃபாம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் கடந்த வாரம் பகீர் எச்சரிக்கை விடுத்தன: காசா முழுவதும் "பேரழிவை ஏற்படுத்தும் பஞ்சம்" வெகு வேகமாகப் பரவி வருகிறது என்றனர். இஸ்ரேல் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மனிதாபிமான உதவிகள் எவற்றையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்துள்ளதால், அந்தப் பகுதிக்குள் வாழும் நிவாரணப் பணியாளர்கள்கூட பசியால் வாடி, மெலிந்து வருவதாகவும் அவர்கள் கவலையுடன் குறிப்பிட்டனர்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) கூற்றுப்படி, காசா நகரமே இப்பகுதியில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. அங்கே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறது. உலக உணவுத் திட்டத்தின் (WFP) மதிப்பீட்டின்படி, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தற்போது "பேரழிவின் விளிம்பில் நிற்கும் பட்டினிக்கு" ஆளாகியுள்ளனர். காசாவில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவராவது பல நாட்களாக உணவு உண்ணாமல் பட்டினியால் வாடுவதாக அவர்கள் கணக்கிட்டுள்ளனர். காசாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள், தீவிர ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மரணத்தின் வாயிலில் நிற்பதாகவும், அவர்களின் உடல்கள் மேலும் உயிர் வாழ முடியாத அளவுக்குப் பலவீனமடைந்துவிட்டதாகவும் அச்சத்துடன் எச்சரிக்கின்றனர்.

"கடும் பட்டினியாலும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், எங்களிடம் போதுமான படுக்கை வசதிகளும் அத்தியாவசிய மருந்துகளும் அறவே இல்லை. நினைவாற்றல் இழப்பு, உச்சகட்ட சோர்வு, கடும் பசியின் காரணமாக மக்கள் திடீரென மயங்கி விழுவது போன்ற அறிகுறிகள் பரவலாகக் காணப்படுகின்றன," என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் வருத்தத்துடன் கூறினார்.

"தற்போது, 17,000 பிஞ்சு குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டினால் உயிருக்குப் போராடி வருகின்றனர். இது வெறும் ஒரு தற்காலிக நெருக்கடி மட்டுமல்ல — இது ஒரு முழு தலைமுறையையும் மெல்ல மெல்ல அழித்தொழிக்கும் ஒரு கொடூரமான செயல்," என்றும் அவர் மேலும் மனம் நொந்து கூறினார்.

காசாவின் அரசு ஊடக அலுவலகம், அடுத்த சில வாரங்களுக்குள் ஐந்து வயதுக்குட்பட்ட 6,50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினை எதிர்கொள்ளும் உடனடி அபாயத்தில் சிக்கியுள்ளனர் என எச்சரித்துள்ளது. காசா பகுதியில் உள்ள மொத்த 11 இலட்சம் குழந்தைகளில் இது ஒரு கணிசமான எண்ணிக்கையாகும். அந்த அலுவலகத்தின் தகவலின்படி, காசாவில் சுமார் 12.5 இலட்சம் மக்கள் தற்போது பேரழிவுகரமான பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, மொத்த மக்கள் தொகையில் 96% பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவில் வாழும் 10 இலட்சம் குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்களை பட்டினிச் சாவிற்குத் தள்ளி வருகின்றனர்.” என்று ஒரு பரபரப்பான அறிக்கையை ஐ. நா. சபைக்கான நிவாரண மற்றும் பணிகள் முகமை (UNRWA) வெளியிட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜகன் சப்பகைன், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் “கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயத்தில்” உள்ளனர் என்று கூறினார். “அடிப்படை மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காக எவரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நேரிடக்கூடாது,” என்று அவர் மேலும் வலியுறுத்தினார். மார்ச் 2 அன்று, இஸ்ரேல் காசாவின் முக்கிய எல்லைகளை மூடியது, இதன் விளைவாக, உணவு, மருத்துவம் மற்றும் மனிதாபிமான வழியில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பது துண்டிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை 23 இலட்ச பாலஸ்தீன மக்களுக்கு நெருக்கடியை மேலும் கடுமையாக்கியுள்ளதுடன், இஸ்ரேல் பஞ்சத்தை ஒரு போர்க் கருவியாகப் பயன்படுத்துகிறது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அதிகரித்து வரும் சர்வதேச கண்டனங்களையும் பொருட்படுத்தாமல், 80 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் முழு முற்றுகையின் காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஆதரிக்கப்படும் GHF எனப்படும் ஒரு முகமையின் மூலம், குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகள் மட்டுமே வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காசாவில் ஐ. நா. சபை ஏற்கனவே விநியோகித்து வந்த உதவிகளைத் ஒதுக்கி வைப்பதற்காகவே GHF என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது, ஆனால், இந்த அமைப்பு ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் முதலான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கி வரும் ஐ. நா. சபை உள்ளிட்ட பல முக்கியமான அமைப்புகள், GHF-ன் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கும் முறை அடிப்படை மனித உரிமைக் கொள்கைகளுக்கு முரணானது எனக் கூறி, அக்குழுவுடனான தமது தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டுள்ளன.

GHF மீது அவை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

தென் மற்றும் மத்திய காசாவிலுள்ள மக்களுக்கு மட்டுமே நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனக் கட்டுப்பாடுகள் விதித்தல்.

பாலஸ்தீனியர்களை நீண்ட தூரம் நடந்து வந்து நிவாரணப் பொருட்களைப் பெறச் செய்தல்.

மிகக் குறைவான, பற்றாக்குறையான அளவிலேயே நிவாரண உதவிகளை வழங்குதல்.

இந்த அணுகுமுறை, காசாவிற்குள் பாலஸ்தீனியர்களின் கட்டாய இடப்பெயர்வை மேலும் அதிகரிக்கும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன. அதே சமயம், GHF நிவாரண மையங்களில் உணவைத் தேடிச் செல்லும் பாலஸ்தீனியர்கள் அனுதினமும் பேரழிவையும், பெரும் படுகொலைகளையும் எதிர்கொள்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் நிலவும் காட்சிகள் தாறுமாறானதாக, உயிர்ப்பலி நிறைந்தவையாக விவரிக்கப்படுகின்றன — உணவுக்காக மக்கள் அடித்துப்பிடித்துக் கொண்டு முந்துவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கின்றன; இந்தத் தீவிரப் போராட்டத்தில், அவர்கள் இஸ்ரேலியப் படைகள் மற்றும் அமெரிக்கக் கூலிப்படையினரின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இப்போது பல பாலஸ்தீனியர்களும் ஏன் ஐ.நா. அதிகாரிகளும்கூட இந்த இடங்களை வெளிப்படையாக "குலநாசத்தை ஏற்படுத்தும் மரணப் பொறிகள்" என்றும் "கொலைக்களங்கள்" என்றும் அழைக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், கடந்த மே மாத இறுதி முதல், GHF நிவாரணம் வழங்கி வந்த பகுதிகளிலோ அல்லது அதற்கு அருகிலோ உணவு பெற முயன்றபோது குறைந்தது 859 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. "இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டன," என்று மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) குறிப்பிட்டிருந்தது

வெள்ளிக்கிழமை அன்று, இந்த மையங்களில் உதவி நாடிச் சென்றவர்களை இஸ்ரேல் கொன்றது அப்பட்டமான போர்க்குற்றங்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் பகிரங்கமாக அறிவித்தது. சனிக்கிழமை அன்று, உலகெங்கிலும் நடக்கும் போராட்டம் மட்டுமல்லாது அதிகரித்து வந்த சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் காசாவின் சில பகுதிகளில் ஒரு "செயல் உத்தியாகத் தற்காலிகப் போர்நிறுத்தத்தை" அறிவித்தது. இது ஐ.நா. நிவாரணக் குழுக்களை அனுப்ப உதவும் என்று அது கூறியது.

ஆனால், காசாவிற்குள் இருந்து வரும் செய்திகள், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோதிலும், காசா பகுதியின் பெரும்பாலான இடங்களில் தாக்குதல்களும் கொலைகளும் தொடர்ந்து நடைபெறுவதாகவே தெரிவிக்கின்றன.

ஐ.நா. சபையால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை, ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் தவிக்கும் குழந்தைகளுக்குக் கொண்டுசேர்ப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும், கிடைத்துள்ள மிகக் குறுகிய, கடைசி நேர அவகாசம் போதுமானதாக இருக்காது என ஐ.நா. ஊழியர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். காசாவில் கடும் பசிக்கு ஆளாகி வாடும் பாலஸ்தீனியர்களுக்கு உணவு கிடைப்பதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதை ஐ.நா. சபை உறுதிப்படுத்தியுள்ளது. மிகச் சொற்ப எண்ணிக்கையிலான நிவாரணப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கே காசாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசாவில் பஞ்சத்தையும் சீர்குலைவையும் வேண்டுமென்றே இஸ்ரேல் தோற்றுவித்துள்ளதாக காசா அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்ளே வந்த பெரும்பாலான நிவாரண லாரிகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஓர் அராஜகச் சூழலில் நிகழ்ந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

காசாவில் தற்போது அரங்கேறும் நிகழ்வுகள், ஆக்கிரமிப்புப் படைகள் வேண்டுமென்றே சீர்குலைவையும் பஞ்சத்தையும் எவ்வாறு உருவாக்குகின்றன என்பதற்கான ஓர் அப்பட்டமான எடுத்துக்காட்டு என்று காசா ஊடக அலுவலகம் கோடிட்டுக் காட்டியது. நிவாரணப் பொருட்கள், சேமிப்புக் கிடங்குகளையோ அல்லது உண்மையில் அவை சென்றுசேர வேண்டிய மக்களையோ அடைவதைத் திட்டமிட்டே தடுக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். காசா உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சகம், சர்வதேச அமைப்புகளின் நிவாரண லாரிகளைப் பாதுகாக்கும் தங்கள் பணியாளர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கும் கொள்கையைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்தது. இத்தகைய தாக்குதல்கள், நிவாரண லாரிகள் தேவையுள்ளோரை பாதுகாப்பாகச் சென்றடைவதைத் தடுத்து நிறுத்துகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், நிவாரண லாரிகளைக் கைப்பற்றுவதற்காக, இஸ்ரேலியப் படைகள் கொள்ளையர்களுக்கும் வன்முறைக் கும்பல்களுக்கும் ஆதரவளிப்பதாக அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதன் நேரடி விளைவாக, இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டு, காசா பகுதியில் பஞ்சமும், பட்டினியும் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. "இது, போர்க்காலத்தில் பஞ்சத்தைப் போர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டே சட்டப் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆக்கிரமிப்புப் படைகள் மேற்கொள்ளும் ஓர் அப்பட்டமான சதிவேலை" என்று காசா அமைச்சகம் தனது அறிக்கையில் அழுத்தமாகக் குறிப்பிட்டது.

இந்த வழிமுறை பாலஸ்தீனியர்களைப் பல மைல் தூரம் பயணித்து உதவிப் பொருட்களைப் பெற நிர்பந்திப்பதாகவும், அது அவர்களின் உயிருக்கு மிகுந்த ஆபத்தை விளைவிப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. கூட்ட நெரிசலாலும், மிதமிஞ்சிய மக்கள் திரளாலும் சில நிவாரணப் பொருட்கள் சிதைந்துபோக இது வழிவகுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. அத்துடன், ஆக்கிரமிப்புப் படைகள் இந்த மக்களை நேரடியாகக் குறிவைத்துத் தாக்கி, நிவாரணப் பொருட்கள் வழங்கும் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகளுக்கு அருகிலேயே பெரும் படுகொலைகளை அரங்கேற்றி, நாள்தோறும் டஜன் கணக்கானோரைக் கொன்று குவிப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) முறையைப் பின்பற்றி செவ்வாய்க்கிழமை வெளிவந்த அறிக்கையின்படி, காசா நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளில், உணவு நுகர்வுக்கான மூன்று முக்கியப் பஞ்சக் குறியீடுகளில் இரண்டு ஏற்கெனவே விஞ்சிவிட்டன. காசா நகர் முழுவதும் விரவிப் பரவியுள்ள தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக விடுத்துவந்த எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது.

உணவுப் பற்றாக்குறையால் உண்டாகும் பரவலான பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் ஆகியவை இறப்பு விகிதங்கள் அதிகரித்து வருவதற்கான காரணிகள் பெருகி வருவதாக IPC ஆய்வில் தெரியவந்துள்ளது. பஞ்சத்தின் மிக மோசமான நிலை ஏற்கனவே காசாவில் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அது எச்சரித்தது. ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் (WFP) அவசரநிலை இயக்குநர் ரோஸ் ஸ்மித், ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது நம் கண்களுக்கு முன்பாகவும், தொலைக்காட்சித் திரைகளிலும் அப்பட்டமாக விரிந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் மனிதகுல பேரழிவு. இது வெறும் ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல; உடனடியாகச் செயல்பட வேண்டிய அவசர அழைப்பு. இந்த நூற்றாண்டில் நாம் கண்டிராத எதற்கும் இது ஒப்பில்லாத பேரழிவு,” என்று தெரிவித்தார்.

மே 12 அன்று வெளியிடப்பட்ட காசா குறித்த முந்தைய IPC பகுப்பாய்வு, செப்டம்பர் மாத இறுதிக்குள் முழு மக்களும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என்று கணித்திருந்தது. சுமார் 4,69,500 பேர் “பேரழிவுகரமான” நிலையை அடையக்கூடும் என்றும் அது மதிப்பிட்டிருந்தது. இஸ்ரேல் சமீபத்தில் காசா பகுதிக்குள் அதிகப்படியான விநியோகங்களை அனுமதிக்க புதிய நடவடிக்கைகளை அறிவித்திருந்தபோதிலும், அங்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் இன்னும் வந்து சேரவில்லை என்று செவ்வாய்க்கிழமை WFP அமைப்பு குறிப்பிட்டது. ரோஸ் ஸ்மித், “நாங்கள் கோரிய அளவிலான உதவிகளைக் கொண்டு வருவதற்கான அங்கீகாரமோ அனுமதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று தெரிவித்தார். காசாவில் தற்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பேரழிவு, இந்த நூற்றாண்டில் கண்டிராத ஒன்று என்றும், 20ஆம் நூற்றாண்டில் எத்தியோப்பியா மற்றும் நைஜீரியாவின் பியாஃபிராவில் நிகழ்ந்த பஞ்சங்களுக்கு ஒத்ததாகும் என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/08/israeli-minister-denies-famine-in-gaza-despite-international-warnings/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு