ஆசிய-பசிபிக் பிராந்தியம் வரை தனது இராணுவ கூட்டணியை நேட்டோ விரிவுபடுத்துவதற்கான காரணம் என்ன?

தமிழில் : விஜயன்

ஆசிய-பசிபிக் பிராந்தியம் வரை தனது இராணுவ கூட்டணியை நேட்டோ விரிவுபடுத்துவதற்கான காரணம் என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடுக்கப்பட்டது முதல் நேட்டோ நாடுகளின் சந்திப்புகளும், மாநாடுகளும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிகுந்த கவனத்தை பெறுவது கண்கூடாக தெரிகிறது. வருகிற செவ்வாய்க்கிழமை துவங்கவுள்ள வில்லியனஸ்(லிதுவேனியா) மாநாட்டில் பேசவிருக்கிற அஜென்டாவில் பல்வேறு அதிரடியான திட்டங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க காரணமாக சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்குவதில் காலத் தாமதம் ஏற்படுவதாக எழுந்த விமர்சனங்கள், உக்ரைன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா கொத்து குண்டுகள்(Cluster munition) வழங்கியதாக எழுந்த சர்ச்சைகள் போன்ற குறிப்பான பிரச்சினைகளை வைத்து பார்த்தால் ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன் போரில், வருங்காலங்களில் தேவையான இராணுவ உதவிகளை திரட்டுவது பற்றிய பிரச்சினையே தலையாய பிரச்சினையாக இடம்பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

நேட்டோ கூட்டணியில் உக்ரைனையும் ஒரு உறுப்பினராக கூடிய விரைவில் சேர்ப்பது குறித்தும் விவாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. நேட்டோவில் இணைவதற்கு முறைப்படியான அழைப்பு விடுக்கும்படியும், இறுதியாக நேட்டோவில் இணைவதற்கான செயல்திட்டம் ஒன்றையும் உருவாக்குமாறு உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது. போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் உக்ரைனை உறுப்பு நாடாக சேர்ப்பதற்கு அமெரிக்காவும், ஜெர்மனியும் தயக்கம் காட்டி வருகின்றன.

பனிப்போருக்கு பிறகு நேட்டோ நாடுகளின் இராணுவத் திட்டமிடல்களில் முதல்முறையாக பாரிய மாற்றத்தை அதாவது ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் இராணுவ செலவினங்களை அதிகரிப்பதற்கு ஒப்புக்கொள்ளவிருப்பதாகவே தெரிகிறது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு 31 உறுப்பு நாடுகளும் உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி)யில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தை இராணுவத்திற்காக ஒதுக்க வேண்டும் என்ற குறிக்கோள் அத்தியாவசியமானதாக இல்லாமல் உயர்ந்தபட்ச இலக்காகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலை மாறும் வகையில் 31 நாடுகளுமே செலவின அதிகரிப்பை உத்திரவாதப்படுத்தும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் நம்பிக்கை தெரிவித்துளளார்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோவின் நலன்

ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து நான்கு நாடுகளின் தலைவர்கள் அதாவது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், நியூசிலாந்து பிரதமர் கிரிஸ் இப்கின்ஸ், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோர் ஆகியோரும் நேட்டோ மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருப்பது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்தாண்டு மேட்ரிடில் நடந்த நேட்டோ மாநாட்டை தொடர்ந்து இந்தாண்டும் இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் இரண்டாவது முறையாக பங்கேற்கவுள்ளனர்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ விரிவாக்கத்திற்கான முயற்சிகள் ஆரம்பகட்ட நிலையில்தான் உள்ளது என்றபோதும் சில தினங்களாக நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிரான விமர்சனங்களும் வந்த வண்ணமே இருக்கின்றன. இப்பிராந்தியத்திற்கும் நேட்டோவிற்குமான தொடர்புகளை பலப்படுத்துவதற்கு முனையும் ஸ்டோல்டன்பர்க் ஒரு “கடைந்தெடுத்த மூடனாவான்” என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் பார் கீட்டிங் கூறியுள்ளார்.டோக்கியோவில் நேட்டோ தொடர்பலுவலகம் அமைப்பதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நேட்டோவின் முழு கவனமும் உக்ரைன் போரில் குவிந்திருக்கும்போது, வெகுதொலைவிலுள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ விரிவாக்கத்திற்கான வேலைகளை துவக்குவது சில சந்தேகங்களை எழுப்பவே செய்கின்றன? ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் சந்தித்துக்கொள்ள கூடிய ஒரு மாநாட்டில் இந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் தொடரச்சியாக பங்கு பெறுவதற்கு காரணம் என்ன?

சர்வதேச அளவில் கூட்டு சேர்ந்து ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கும் நாடுகளில், உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளில் முக்கியமான நாடுகளாக மேற்சொன்ன நான்கு நாடுகள் இருந்து வருகின்றன. எனவே, உக்ரைன் போர் பற்றிய விவாதத்தில் அவர்களின் பங்கேற்பு புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான்.

எனினும், நேட்டோவின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் அதன் பணிகள் குறித்து மட்டுமே வழக்கமாக போர்த்தந்திர கொள்கையறிக்கைகளில் இடம்பெற்றிருக்கும். ஆனால், 2022ல் வெளியிடப்பட்ட நேட்டோவின் போர்த்தந்திர கொள்கையறிக்கையில் எங்கோவுள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து விவரிக்கப்பட்டுள்ளது என்பதே நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயமாகும். 

முதல்முறையாக கடந்தாண்டு(2022) வெளியிடப்பட்ட கொள்கையறிக்கையில்தான் சீனாவின் அபிலாஷைகளும், கொள்கைகளும், நேட்டோவின் கொள்கைகளுக்கு, நலன்களுக்கு மட்டுமல்லாது நேட்டோவின் பாதுகாப்பிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா.வின் மூலமாக ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சட்டப்படியான உலக ஒழுங்கை உருக்குலைக்கும் வகையில் சீனா மற்றம் ரஷ்யாவிற்கிடையிலான பரஸ்பர ஒற்றுமை அதிகரித்து வருவது பற்றியும் அந்த கொள்கையறிக்கையில் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் ”பிராந்தியத்தில் எது நடந்தாலும் அது நேரடியாக ஐரோப்பிய-அட்லாணடிக் நாடுகளின் பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தலாகவே கருதப்படும் என்பதால் அது நேட்டோவிற்கு முக்கியத்துவமுடையதாகும்” என்று போர்த்தந்திர கொள்கையறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் இருக்கிற கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், புதிய புதிய கூட்டணிகளை உருவாக்குவதற்கும் நேட்டோ போராடும் என்பதை தெளிவுபட கூறுவதற்கு இந்த குறிப்பே போதுமானதாகும்.

புதிய கூட்டணிகள் எப்படி அமைக்கப்படும்

நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிப்பதனால் என்ன மாதிரியான நன்மை-தீமைகள் ஏற்படும் என்பது குறித்து அரசியல்-பொருளாதார-இராணுவக் கொள்கைகள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் மத்தியில் விவாதங்கள் பல நடந்துள்ளது.

இருந்தபோதிலும், விமர்சகர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமல், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நான்கு நாடுகளும் நேட்டோவுடனான கூட்டணியை மேலும் வளர்த்தெடுப்பதற்கான பாதையில் பயணிக்கவே விரும்புகின்றனர்.

உக்ரைன் போருக்கான ஆதரவை, நான்கு இந்தோ-பசிபிக் கூட்டணி நாடுகளிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்பை கடந்தாண்டில் நடந்த மேட்ரிட் மாநாடு உருவாக்கித் தந்தது; வருங்காலங்களில் நேட்டோவுடனான கூட்டணியை வலுப்படுத்துவதற்கான உறுதிமொழியை பெறுவதற்கான களமாக அந்த மாநாடு அமைந்தது என்றால், என்னென்ன வகையிலெல்லாம் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்பதை அளப்பதற்கான உரைக்கல்லாக இந்தாண்டு நடக்கவுள்ள வில்னியஸ் மாநாடு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை.

 

மாநாடு துவங்குவதற்கு முன்பாகவே, நான்கு நாடுகளுடனான கூட்டணிகளை முறைப்படுத்திக் கொள்வதற்காகவே பல்வேறு ஒப்பந்தங்களும், திட்டங்களும் போடப்பட்டு வருகிறது.

நேட்டோவின் முனைப்புகளுக்கு ஈடுகொடுத்து கூட்டணி சேர்வதில் முன்கை எடுத்து வைப்பதில் ஜப்பானும், ஆஸ்திரேலியாவும்தான் முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள். 

 

ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் “தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கூட்டணி திட்டம்(ITPP) என்ற நேட்டோவின் புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் நிறைவடைந்துள்ளது என ஜப்பான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நேட்டோ மற்றும் ஜப்பான், நேட்டோ மற்றும் ஆஸ்திரேலியாவிற்கிடையில் எந்தெந்த முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது பற்றிய குறிப்பான ஒப்பந்தமாகவே ஐடிபிபி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனித்தனியான ஒப்பந்தங்கள் வாயிலாக நேட்டோவுடனான கூட்டணியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இறுதிசெய்வதற்கான வேலையில் நியூசிலாந்தும் தென் கொரியாயும் ஈடுபட்டு வருகிறது.

கடல்வழி பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு, காலநிலை மாற்ற பிரச்சினை, வான்வெளி பாதுகாப்பு, வேகமாக வளர்ந்து வரக்கூடிய பெரும் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் (EDT- செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை) போன்ற சர்வதேச அளவிலான பிரச்சினைகளில்தான் இந்த கூட்டணி ஒப்பந்தங்கள் அதிக கவனத்தை செலுத்துகின்றன.

இராணுவ நிலைப்பாட்டை பொறுத்தவரை, நேட்டோவுடன் நான்கு நாடுகளின் இராணுவங்களும் ஒன்றிணைந்து செயல்படும் திறனை அதிகரிப்பதே இலக்காக கொண்டுள்ளது. அதாவது, வெவ்வேறான படைகள், இராணுவ முறைகள் எல்லாம் கூட்டாக ஓரணியில் திரண்டு, தமது இராணுவ நடவடிக்கைகளை பரஸ்பரம் ஒருங்கிணைத்து கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

இவையெல்லாம் ஏன் இப்போது நடக்கிறது?

நேட்டோவிற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நான்கு கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான உறவு ஏன் பலப்படுத்தப்படுகிறது, ஏன் ஆழப்படுத்தப்படுகிறது என்பதை இரண்டு வழிகளில் விளக்க முடியும்.

அமெரிக்கா மற்றும் அதன் பின்னாலுள்ள மேற்குலக நாடுகளுக்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடனான அரசியல் மற்றும் இராணுவ தொடர்புகளின் வலைப்பின்னலை விரிவுபடுத்துவதில் மற்றொரு முக்கியமான கரணையாக இந்த ஒப்பந்தங்கள் விளங்கின்றன. ஏற்கனவே போடப்பட்ட ஆக்கஸ் மற்றும் குவாட் ஒப்பந்தங்களுக்கு சேவை செய்யும் வகையில்தான் இந்த ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, கடந்த இருபது ஆண்டுகளாகவே உலகின் மூலைமுடுக்கிலெல்லாம் நேட்டோவின் பிடி வலுபெற்று வரும் நிகழ்வை பின்னணியாக வைத்தும் இந்த ஒப்பந்தங்களுக்கான காரணத்தை ஆராய முடியும்.

இதற்கு முன்னதாக, 1990களில் பால்கன் நாடுகளிலும், 2000ம்வாக்கில் ஆப்கானிஸ்தானிலும்-அதாவது நேட்டோ அல்லாத நாடுகளில் நடந்த படையெடுப்புகளுக்கான நிதி மற்றும் நிதி சாரா செலவுகளை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதன் பெயரில் நேட்டோவிற்கும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் கூட்டணிகள் ஏற்படுத்தப்பட்டது.

இன்றோ, ரஷ்யா மற்றும் சீனாவால் எழுந்துள்ள புதிய தடைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் எதிர்வினையாற்றும் வகையில் இந்தக் கூட்டணிகளை வலுப்படுத்துவதே இன்றியமையாததாக கருதப்படுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ நாடுகளின் படைகளோ அல்லது போர்க்கருவிகளோ நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும் என எவ்வாறு நாம் புரிந்துகொள்ளக்கூடாதோ அதேபோலத்தான் உக்ரைன் போரில் இந்தோ-பசிபிக் நாடுகள் பங்களிக்க தயாராகி வருகின்றனர் என்பதாலேயே இனி ஐரோப்பாவில் நடக்கும் எந்தவொரு நெருக்கடியிலும் இவர்களின் இராணுவ ரீதியிலான பங்களிப்புகள் எப்பொழுதுமே இருக்கும் என நாம் கருதுவதும் பொருத்தமானதாக இராது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு மத்தியில் இராணுவ ரீதியிலான கூட்டணி பலப்படுவதையே எல்லா நடவடிக்கைளும் நோக்கமாக கொண்டுள்ளது என்பதாலேயே இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ போன்றதொரு இராணுவக் கூட்டணியை உருவாக்குவதற்கான முதற்படியாகவும் கருத முடியாது.

எனினும், ரஷ்யா மற்றும் சீனாவுடனிருந்து வரும் தற்போதைய முரன்பாடுகளில் சிக்கலான தன்மையை பார்க்கும்போது, பல நாடுகளுடன் விரிவான கூட்டணியமைப்பதே ஒரே வழி. பொய்ப்பிரச்சாரங்கள், கடல்வழி பாதுகாப்பு முதல் இணையவழி பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் நடக்கும் போட்டிகள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்குமான சிறந்த தீர்வாகவே இந்த புதிய கூட்டணிகள் பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணிக்கான முயற்சிகள் முழுமையடையாமல் வலுவிழந்து போவதையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரும்பக்கூடும். “பிராந்திய அளவிலான அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் குலைப்பதற்கான” நடவடிக்கையாகவே நேட்டோவிற்கான தொடர்புகளும் டோக்கியோவில் அமைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

நேட்டோவுடன் எந்த எல்லை வரை ஒன்றிணைந்து வேலை செய்வது என்பதில் நான்கு நேட்டோ நட்பு நாடுகளுக்குமே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவது சீனா மற்றும் ரஷ்யாவிற்கு சிறிது ஆறுதலை தரக்கூடும்.

எனினும், வருங்காலங்களில் சீனா மற்றும் ரஷ்யாவுடன் அதிகமான போட்டிகளையும், மோதல் போக்குகளையுமே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படை விசயத்தில் நான்கு நாடுகளுமே ஒத்துப்போவார்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்கப்போவதில்லை.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://theconversation.com/why-is-nato-expanding-its-reach-to-the-asia-pacific-region-209140