SIRஐ வாக்குத் திருட்டு எனும் அளவில் மட்டும் பிரச்சாரம் செய்யும் திமுக
SIR தீவிர சிறப்பு திருத்தத்தை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து இதை வாக்குத்திருட்டு வாக்காளர்களை பெருமளவு நீக்குவது போலி வாக்காளர்களை சேர்ப்பது என்று பொதுக்கூட்ட ஆர்ப்பாட்ட அளவில் பிரச்சாரம் செய்கிறது.
குறிப்பாக sir என்பதை ஏற்கக் கூடாது என்பதுதான் முன்வைக்கும் அரசியல்.
அதே நேரம் படிவங்களை விநியோகிப்பது, பகுதிகளில் ஸ்டால் அமைத்து அதற்கு வழி காட்டுவது எனும் வகையிலும் திமுக கட்சி என்ற அளவில் வேலை செய்கிறது. காரணம் கேட்டால் வழக்கு ஒரு பக்கம் இருக்கிறது எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது! இருந்தாலும் இதற்குள் பாஜக தில்லுமுலு செய்யாமல் இருப்பதற்காக இதையும் செய்கிறோம் என்கிறார்கள்.
இந்த நிலையில் இருந்து கொண்டு மக்களை தானாக புறக்கணியுங்கள் என்று சொன்னால் இது ஏதாவது பொருத்தமாக இருக்கிறதா?
சாதாரண மக்களே சொல்வது "போல இதையெல்லாம் நாம ஒன்னும் செய்ய முடியாதுங்க! அரசாங்கம் சொன்னத கேட்கலைன்னா பிரச்சனையாகும்!" என்பதுதான் பாஜகவை எதிர்த்து போராடுவதாக சொல்லும் திமுகவின் கருத்தாகவும் இருக்கிறது.
இருக்கிற ஒரே வாய்ப்பு மக்களுக்கு தலைமை தாங்கி இது ஒரு மோசடி என ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது ஒன்றுதான்.
ஆனால் அவ்வாறான மக்கள் திரள் போராட்டம் முயற்சிகளில் ஈடுபட்டால் திமுகவின் தேர்தல் அங்கீகாரத்திற்கு பிரச்சனையாகும் என ஏற்கனவே பாஜக பீதியூட்டி உள்ளது. திமுகவும் இந்த எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டது.
இது மட்டுமல்ல தொழிலாளர் சட்ட திருத்தம் என்று பாஜக கொண்டு வந்திருப்பதையும் கூட, வேண்டுமானால் வழக்கு போடலாம்! நாம என்ன செய்ய முடியும்? என்பதுதான் பாசிசத்தை எதிர்க்கும் திமுகவின் நிலை.
பாசிச எதிர்ப்புக்கு தலைமை தாங்கும் தகுதி உடையதாக திமுகவை கருத முடியாது என்பதற்கான ஒவ்வொரு சான்றுகளாக சிதறுண்ட நிகழ்வுகளின் அரசியல் தொகுப்பு நமக்கு அறிவுறுத்துகிறது.
ஒவ்வொன்றுக்கும் ஒன்றிய அரசுதான் செய்கிறது! அதுதான் பொறுப்பு! என்று திமுகவின் ஆதரவாளர்கள் நிலை எடுக்கிறார்கள். சரிதான்! அப்படியானால் ஒன்றிய அரசின் இந்த திமிருக்கு காரணமான இந்த அரசமைப்பு முறையையே எதிர்ப்பதற்கான கொள்கையைத்தான் திமுக வகுக்க வேண்டும்.
எனக்கு நீங்கள் பாசிசத்தை எதிர்ப்பதற்கு ஓட்டு போட்டாலும் இந்த அரசமைப்பு முறையை ஏற்றுக் கொண்ட என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனும் உண்மையைப் பேச வேண்டும்.
அல்லது அத்தகைய கொள்கை வகுத்து பாஜகவின் பாசிசத்தை எதிர்க்கும் இயக்கங்களை அதன் அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். பாசிச பாஜகவின் தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து எந்த பிரிவு தொழிலாளர் போராடினாலும் போலீசை விட்டு ஒடுக்குகிறது இந்த அரசு.
தனது மாநில மக்களுக்கு உரிய ஜனநாயக உரிமைகளையே அனுமதிக்காத திமுக அரசு,
மாநில உரிமைக்காக போராடுது என பேசுவது யாருக்காக? முதலாளிகளுக்காகத்தானே!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் அரசியல் உரிமையையே அனுமதிக்காத ஒரு அரசு பாசிசத்தை எதிர்க்கும் கூட்டணிக்கு தலைமை என்பது கேலிக்கூத்து மட்டுமல்ல பித்தலாட்டமும் கூட.
இந்த முரண்களை எல்லாம் ஜனநாயகப்படி பேசவும் தீர்க்கவும் கூட தயாராக இல்லாதது திமுக எனும் கட்சி.
பதிலாக! கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில வை! எனும் கதையாக இன்னொரு முறை ஓட்டுப் போடுங்கள்! அடுத்த ரவுண்டு வந்து பார்த்துக் கொள்கிறேன் என்பது ஏமாற்று வேலை.
இந்த சந்தர்ப்பத்தில் பாசிச பாஜகவை எதிர்ப்பதற்காக திமுக எனும் பெரிய கட்சியுடன் ஐக்கிய முன்னணி தேவை என்பவர்கள் நேர்மையாகவும் ஜனநாயகமாகவும் செய்ய வேண்டிய வேலை, ஒவ்வொன்றிலும் மாநில ஆட்சி உரிமைகளையே ஒடுக்கும் ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் தொழிலாளர் பக்கம் இணைந்து நின்று வெகுமக்கள் போராட்டத்துக்கு வர வேண்டும்!
தொழிலாளர் வர்க்க இயக்கம் மற்றும் பாசிச எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு தர வேண்டும்! அடக்குமுறை கூடாது! பாட்டாளி வர்க்க இயக்கத்துடன் சேர்ந்து பயணிக்காவிட்டால் நீங்கள் உரிமைகளை இழப்பது மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கு அடிபணிந்தே போக வேண்டும்! மக்கள் அரங்கில் இருந்து ஒழிந்து போய்விடுவீர்கள் எனும் அரசியல் உண்மைகளை அந்தக் கட்சியுடன் பேசும் உரிமைக்காகவாவது போராட வேண்டும்.
இதில் எதுவுமே இல்லாமல் பொதுவாக 67 காலத்து திமுகவின் முழக்கங்களை ரசித்துக் கொண்டு பழைய நினைப்புதான் பேராண்டி என்பதால் பயனில்லை.
ஆனால் இத்தகைய அரசியல் உரிமைகளை பேசுவதை கூட அனுமதிக்காத வர்க்க அடித்தளம் கொண்ட கட்சியாக திமுக வளர்ந்து விட்டது என்பதுதான் எதார்த்த உண்மை.
இந்த உண்மைகளையும் கூட மக்களுக்கு இயல்பாக வெளிப்படுவதை மூடி மறைக்கும் சமரச சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் புறந்தள்ளத்தான் செய்வார்கள்.
பாசிச பாஜகவின் ஒருங்கிணைந்த அரசு பாசிச கட்டமைவு வேலைகளை எதிர்ப்பதற்கு எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் இப்போது இருந்தே மாற்று சக்தியாக கம்யூனிஸ்டுகள் மக்களை திரட்டுவதற்கான வேலையில் அதிகபட்ச முனைப்பு காட்டுவது, தங்களுக்குள் அரசியல் வேலை திட்ட அடிப்படையில் ஐக்கிய முன்னணியை அமைத்துக் கொள்வது அவசியம் என்பதை சூழல் தொடர்ந்து சொல்லித் தருகிறது.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/1aNLAYnfVM/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு