தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை - தீவிரமடையும் பனிப்போர்

தமிழில்: மருதன்

தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை - தீவிரமடையும் பனிப்போர்

தைவானுக்கு 1.1பில்லியன் டாலர் அளவில் அமெரிக்கா ஆயுத உதவி

அமெரிக்க காங்கிரசு உறுப்பினர் நான்ஸி பெலோசியின் தைவான் சந்திப்பை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக தைவான் தனது எல்லைக்குள் காணப்பட்ட அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்றை சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது. சீனாவிற்கும் தைவானிற்கும் இடையே போர் மூளும் சூழலில் அமெரிக்கா தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத தளவாடங்களுக்கான உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விற்பனையில் தரை மற்றும் வான்வழி தாகுதலுக்கு பயன்படும் 85 மில்லியன் டாலர் மதிப்பிலான சாண்ட்விண்டர் ஏவுகனைகள், 335 மில்லியன்  டாலர் மதிப்பிலான கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹார்பூன் ஏவுகனைகள், தைவானின் உளவு மற்றும் எல்லை கண்காணிப்புக்கான கருவிகள் 665 மில்லியனுக்கும் வழங்கப்போவதாக பென்டகனின் தற்காப்பு மற்றும் பாதுகாப்புகான ஒத்துழைப்பு முகமை (DSCA) கூறியுள்ளது. 

அமெரிக்காவினால் வழங்கப்படும் கருவிகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ஏற்கனவே சீனா மற்றும் தைவானிடையே நிலவி வரும் இராணுவ சமநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தது. தைவானின் இறையாண்மை பற்றிய அமெரிக்காவின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளது. 

இந்த உதவியானது தைவானின் இராணுத்தை நவீனப்படுத்துவதற்கு அவ்வப்போது நடைபெறும் வழக்கமான ஒன்றுதான் என்றும் அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

பெலோசியின் சந்திப்பிற்குப் பின் தொடர்ச்சியான சீன இராணுவ அச்சுறுத்தல்களால் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் தனது எல்லைகளை கவனித்துவருகிறது தைவான். அடையாளம் தெரியாத பலவகையான ட்ரோன்களைக் கொண்டு சீனா தைவான் எல்லையை ஊடுருவதாகவும், தைவானின் தலைநகரமான தாய்பேயின் மீதே ஏவுகணைகளை செலுத்தியதாகவும் புகார் கூறி வரும் நிலையில் தற்போது ட்ரோன் ஒன்றை தைவான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

தனது இறையான்மையின் தவிர்க்க முடியாத பகுதியாக தைவானை கருதிவரும் சீனா அமெரிக்காவின் இந்த இராணுவ உதவிக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த உதவியை உடனே திரும்ப பெற்றுக் கொள்ளும்படியும் எச்சரித்துள்ளது. 

இந்த உதவியானது தைவான் பிரிவினை சக்திகளுக்கு தவறான உற்சாகத்தை அளிக்க கூடியதாகவும், ஏற்கனவே அதளபாதாளத்தில் இருக்கும் சீன-அமெரிக்க உறவுகளை மேலும் சேதப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும், இது போன்ற நடவடிக்கைகள் தைவான் ஜலசந்தியின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், இது தொடர்ந்தால் தகுந்த எதிர்வினைகள் சீனாவினால் ஆற்றப்படும் என்றும் வாஷிங்டனில் உள்ள சீனாவின் அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியூ பெங்யூ தெரிவித்தார். 

எந்த ஒரு சூழலிலும் தனது உரிமையை விட்டுக் கொடுக்காத சீனாவின் தொடர் அழுத்தங்கள் தைவான் மீது நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த ஆணை தைவானின் பிரிவினைவாதத்திற்கு தன் முழு உதவியயையும் வழங்கும் ஏற்பாடாகவே பார்க்கபடுகிறது.

பெலோசியின் சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த சந்திப்பிற்கும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பெலோசி அமெரிக்க அரசு சார்பாக இந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை என்றும், காங்கிரசானது அமெரிக்க நிர்வாகத்தின் தனிக் கிளை என்றும் கூறி சீனாவை ஆற்றுப்படுத்தியது. 

ஆனால் தற்போது அமெரிக்க ஆளும் நிர்வாகத் தரப்பிடமிருந்தே தைவான் இராணுவ உதவிக்கான ஆணை வந்திருப்பது, அமெரிக்காவின் 1979 ஆம் ஆண்டு நிலவிய கொள்கை அடிப்படையில் அதாவது தைவானின் நிர்வாகத்தை பொறுத்தவரை அது சீனாவின் நிலைபாட்டை ஆதரிப்பதாகவும் அதே சமயம் தைவானின் தற்காப்புக்கான உரிமையையும், திறனையும் பாதுகாப்பதுமான ஒரு முரண்பாடான நிலைப்பாடின் அடிப்படையில், எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது. 

ஆனால் சமீபத்தில் தனது டோக்யோ பயணத்தின் போது அமெரிக்க அதிபர் பைடன் பல பத்தாண்டுகளாக நிலவிவரும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு நேரெதிராக தைவானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அமெரிக்கா அதன் நேரடி தற்காப்பிற்கு உதவி புரியும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பைடன் உதவியாளர்கள் உடனடியாக அந்த கருத்திலிருந்து பின் வாங்கிய நிலையில் அமெரிக்காவின் தைவான் கொள்கை மிகவும் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. 

மறுபுறம் சீனாவோ தைவான் தனது இறையாண்மைக்குட்பட்ட பகுதி எனவும் தேவை ஏற்பட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்தியேனும் அந்நிலப்பரப்பை தனது இறையாண்மைக்குட்படுத்த தமக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் கருதிவருகிறது. தோழர் மாவோவின் புரட்சி படைகளால் நாடு கடத்தப்பட்ட சியாங்கேஷேக் தைவானில் தஞ்சம் புகுந்து தனக்கென ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொண்டதிலிருந்தே தைவான் பெயரளவில் மட்டும் ஜனநாயகமான தனி நிர்வாகத்தை நடத்திவருகிறது.

அமெரிக்க உளவுத்துறை தலைமை அதிகாரியான பில் பர்ன்ஸ் சீன அதிபர் ஜின்பிங் தைவானை ஆக்கிரமிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும், நிலவிக் கொண்டிருக்கும் உக்ரைன் போரை கண்காணித்து வருவதாகவும் அதன் அடிப்படையில் தனது இராணுவத்தின் தாக்குதலுக்கு சாதகமான சூழலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

- மருதன் (தமிழில்)

மூலக்கட்டுரை: Mint