இலங்கையின் நெருக்கடிக்கு IMFன் கடன் தீர்வாகுமா?

தமிழில்: விஜயன்

இலங்கையின் நெருக்கடிக்கு IMFன் கடன் தீர்வாகுமா?

அந்நியக் கடன் பத்திரங்கள் – பிசாசுடன் வாழ்வது போன்றதாகும்

குறை வளர்ச்சியடைந்த நாடுகள், அரசின் கடன் பத்திரங்களை பெற்றுக் கொண்டு கடன் வழங்குபவர்களை அதிகம் சார்ந்திருப்பதென்பது கடன் நெருக்கடிக்கு வழிவகுத்ததோடல்லாமல் தற்காலிக தீர்வை (கடன் மறுசீரமைப்பு) கூட கிட்டதட்ட சாத்தியமற்ற ஒன்றாக மாற்றிவிட்டது.


கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. IMF-ன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் மூலம் 4 வருட காலப்பகுதியில் 29 பில்லியன் டாலர்களை கடனாகத் தருவதற்கு உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு நிலுவையில் இருக்கக்கூடிய 51 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்நியக் கடனோடு ஒப்பிடும்போது தற்போது வழங்கப்படவுள்ள நிதி என்பது குறைவான ஒன்றே. எரிபொருள் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு முதல் அரசின் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க வரி வசூலை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்தப் பிறகே இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடுமையான மக்கள் எதிர்ப்பை சந்தித்துள்ள ஒரு அரசாங்கம் இது போன்ற நிபந்தனைகளை அமல்படுத்துவதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.


அந்நிய முதலீட்டார்களையும், கடன் கொடுத்தவர்களையும் இணங்கச் செய்து தங்களது நாட்டில் மீண்டும் வந்து முதலீடு செய்வதற்கான ஒரு முயற்சியாக இது அமையக் கூடும் என்ற காரணத்தால் IMF-ன் நிர்வாகக் குழுவில் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கை அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. உண்மையில் சொல்லப்போனால், இது அந்நியக் கடன் சுமையை அதிகப்படுத்த மட்டுமே செய்துள்ளது.


எனினும், இது தற்காலிக தீர்வுக்கான முதற்படியாக கூட அமையப்போவதில்லை. இலங்கை அரசு ஏனைய கடன் வழங்குநர்களிடம் தான் பெற்றுள்ள முந்தையக் கடனை நீண்ட காலத்திற்கு பிறகு திரும்பத் தருவது மற்றும் வட்டி குறைப்பு போன்ற கடன் மறுசீரமைப்பு கோரிக்கையை அவர்களிடம் முன்வைத்து இணங்கச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இந்தக் கடன் உதவியை வழங்க IMF முன்வந்துள்ளது.


அரசியல் ரீதியிலான அதிகாரப்பூர்வ இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள் வழியாக கடன் வழங்கியவர்கள் இந்த மறுசீரமைப்பு கோரிக்கைக்கு உதவக்கூடும். இலங்கை தனது மொத்த கடனில் 80% சதவீதத்திற்கும் மேலாக தனியார் கடனீட்டாளர்களிடமே கடன் பெற்றுள்ளது. அரசின் கடன் பத்திரங்களை பெற்றுக்கொண்டு கடன் வழங்கிய தனியார் முதலாளிகள் இழப்பை ஏற்றுக்கொண்டு “கடன் மறுசீரமைப்பு”க்கு உதவ முன்வர தயங்குவார்கள் என்பதே நிதர்சனம். குறைந்தபட்சம் சில தனியார் கடன் முதலாளிகளாவது இதற்கு, நிச்சயம் சம்மதிக்க மறுப்பார்கள்.


பத்தாண்டுகளுக்கு முன்பு, அரசின் கடன் பத்திரங்களை பெற்றுக்கொண்டு (bond holders) நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்கிய தனியார் முதலாளிகளின் கடன் என்பது மொத்த கடனில் 55% சதவீதம் என்பதாக இருந்தது. அதே போல, கடன் பங்குகளை (Debt stocks) பெற்றுக்கொண்டு நீண்ட கால அடிப்படையில் கடன் கொடுத்த தனியார் முதலாளிகளின் கடன் என்பது மொத்தக் கடனில் 28% சதவீதமாக இருந்தது. அதாவது, 2012 முதல் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் நிலுவையில் உள்ள நீண்ட கால கடன் அளவானது 26 பில்லியன் டாலர்கள் என்பதிலிருந்து 46 பில்லியன் டாலர்கள் என்பதாக அதிகரித்துள்ளது. கடன் பங்குகளை பெற்றுக்கொண்டு கடன் வழங்கிய தனியார் முதலாளிகளின் கடன் 37 % சதவீதத்திற்கும், கடன் பத்திரங்களை பெற்றுக்கொண்டு தனியார் முதலாளிகள் கொடுத்த கடன் 84% சதவீதத்திற்கும் அதிகரித்துள்ளது. இவையே அந்நாடு சிக்கியுள்ள புதைக்குழியிலிருந்து மீண்டு வருவதற்கு பெருந்தடைகற்களாக அமைந்துள்ளன.

பேரிடர்

இலங்கையை பீடித்துள்ள இந்த சிக்கல் அந்நாட்டிற்கு மட்டுமே உரிய குறிப்பான பிரச்சினை அல்ல. வளர்ச்சி குன்றிய நாடுகள் முழுவதையும் இந்த பேரிடர் பரவலாக பாதித்துள்ளது. குறிப்பாக சில நாடுகளில் மிகத் தீவிரமாக பாதித்துள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளே தனியார் முதலாளிகளிடமிருந்து நீண்டு கால அடிப்படையிலான கடன்களை அதிகம் பெற்றுள்ளதாக உலக வங்கி ஆய்வு கண்டறிந்தள்ளது. 2012 முதல் 2020 ஆம் ஆண்டிற்குள்ளாக மட்டும் இந்தக் கடன் 1.04 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிலிருந்து 2.18 டிரில்லியன் டாலர்கள் என்பதாக கிட்டதட்ட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக உலக வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது.


இந்த தனியார் முதலாளிகள் கொடுத்த மொத்தக் கடனில் கடன் பத்திரங்களை பெற்றுக்கொண்டு வழங்கப்பட்ட கடன் மட்டும் 2013 ஆம் ஆண்டு முதல் (63% சதவீதத்தில் இருந்து) 2020 ஆம் ஆண்டு வரையில் (80% சதவீதம் என்பதாக) அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் பார்த்தோமானால் இலத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் கடல் பகுதியை சுற்றியமைந்துள்ள நாடுகள், ஆசியா மற்றும் பசிபிக் பிரதேசத்தில் வளர்ந்து வரக்கூடிய நாடுகளே தனியார் முதலாளிகளிடமிருந்து (Private Moneylenders) அதிக கடன்களைப் பெற்றுள்ளன. ஆசியா – பசிபிக் பகுதியைப் பொறுத்தமட்டில் சீனாவே அதிகமான கடன்களை வழங்கியுள்ளது.


வெவ்வேறு பிரதேசத்தில் உள்ள அரசுகள் கடன் பெறுவதற்காக வெளியிடப்படும் பத்திரங்களில் வேறுபாடுகள் உள்ளன என்பது இங்கு கவனிக்கத்தக்க விசயமாகும். தொகுத்தறிந்து பார்த்தோமானால், தாராளமயமாக்கல் கொள்கையை ஒட்டி தனியார் நிதி நிறுவன முதலாளிகளும் நிதி நிறுவனம் அல்லாத முதலாளிகளும் கடன் பத்திரங்களை வெளியிட்டு கடன் பெறும் நடைமுறைக்கு மாறிச்செல்வதற்கு ஏற்ப வேகமாக வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் (Emerging Markets and Developing Economies – EMDEs) முழுவதிலும் அந்நியக் கடன் பெறுவதற்காக வெளியிடப்படும் கடன் பத்திரங்களின் அளவானது 2002 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 65% சதவீதத்திலிருந்து 48% சதவீதமாக குறைந்துள்ளது.


இந்த மாற்றத்தை நோக்கி ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது பெரிதும் ஐரோப்பாவில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் குறைந்த அளவிலான கடன் பத்திரங்களின் வெளியீடு (85% சதவீதத்திலிருந்து 66% சதம்), இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபீயன் பகுதியில் உள்ள வளரும் நாடுகளில் குறைந்த அளவிலான கடன் பத்திரங்களின் வெளியீடுகளால் மட்டுமே பெரிதும் கீழே நோக்கி வீழ்ச்சியடைந்துள்ளன என்பதும் தெரிய வருகிறது.


இதற்கு மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களின் அளவானது அதிகரித்துள்ளது.(1996 ஆம் ஆண்டு முதல் 39% சதவீதம் என்பதிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 64% சதவீதம் என்பதாக அதிகரித்துள்ளது.  மேலும், அதே ஆண்டுகளில் ஆசிய – பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரையில் 14% சதவீதம் என்பதிலிருந்து 24% சதவீதம் என்பதாக அதிகரித்துள்ளது.


குறைந்த வட்டி மற்றும் கடன் பத்திர சந்தைகளை எளிதாக அணுக முடிவது போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு வளரும் நாடுகள் தங்களது செலவினங்களுக்காக அந்நியக் கடன் பெறும் பொருட்டு பத்திரங்களை வெளியிடுகின்றனர்.


2014ஆம் ஆண்டு வெளிவந்த IMF –ன் ஆய்வறிக்கை இவ்வாறு குறிப்படுகிறது: சஹாரா பாலைவனத்திற்கு கீழ் அமைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகள் மூலதன சந்தைகளில் (குறுகிய கால) கடன் பெறுவது கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னேறிய பொருளாதாரங்களை உடைய நாடுகளில் வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பது மற்றும் உலகளவில் சவாலான இடர்களை கண்டு அஞ்சியோடுவது குறைந்து வருதல் முதலியன அதிக சவால் (risk) அதிகப் பலன்கள் (Yields) ஈட்டும் என்ற போக்கிற்கும், முதலீட்டு வாய்ப்புகளை தேடித்தேடி பங்குகளை முதலீடு செய்வதற்கும் வழிவகுத்துள்ளது.


இதுபோன்ற சிக்கலற்ற நிதி சார்ந்த புறநிலைமைகள், உலக அளவில் நிலவி வருவதால் சஹாரா பாலைவனத்திற்கு கீழ் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச மூலதன சந்தைகளில் இருந்து (நீண்ட கால) கடன் பெறுவதற்கு சுலபமாக வழியமைத்துத் தந்துள்ளது.


ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளம்,மேம்படுத்தப்பட்ட தேசியப் பொருளாதாரக் கொள்கைகள், வளர்ச்சி வாய்ப்பு பற்றிய அனுகூலங்கள் நன்றாக இருக்கும் காரணத்தால், முதல் முறையாகவோ அல்லது தொடர்ச்சியாக கடன் பத்திரங்களை வெளியிடுவது என்றாலும் கூட அது போன்ற நாடுகளை ஆராய்ந்து வரும் பலர் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அதிகத் திறனுள்ள நாடுகளாக அவற்றை அங்கீகரித்துள்ளனர்.
எப்படியிருந்தபோதிலும், கடன் பத்திரங்களை கொண்டு திரட்டப்படும் கடன் ஒருபோதும் நிதி திரட்டலுக்கான சிறந்த வழிமுறையாக இருக்கப்போவதில்லை. சுதேசிய முறையில் உள்நாட்டு மக்களிடம் கடன் பெறுவதை போலல்லாமல். அந்நியக் கடனுக்கான நிபந்தனைகள் என்பது அந்நாட்டு நாணயத்தைக் கொண்டு மட்டுமே திருப்பித் தரப்படுவதாக இருக்கும். இதுவே நாம் முதலில் புரிந்து கொள்ளக்கூடிய விசயமாகும்.

கடன் நெருக்கடி

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் எந்தவொரு கொந்தளிப்பும் அந்நிய செலாவணிகள் ஈட்டுவதை பாதிக்கும். இது கடன் நெருக்கடியில் சிக்குவதை துரிதபடுத்துகிறது. இது மட்டுமல்லாமல் சொந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு எதிர்பாராத விதமாக குறையும் போது, உள்நாட்டு நாணயத்தைக் கொண்டு அந்நியக் கடனை செலுத்துவதென்பது அதிக செலவை ஏற்படுத்துவதோடு கடன் சுமையை அதிகரிக்கவே செய்கிறது.

தொடர்புடையவை: இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -1)

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -2)

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -3)

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -4)


கடன் பத்திரங்கள் மூலமாக பெறப்படும் கடன்களை பொறுத்தவரை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு எளிதாக பத்திரங்களை பறிமாற்றிக்கொள்ள (விற்றுவிட) முடியும். இந்த பத்திரங்கள் நிதிச் சந்தைகளுக்குள் வரும்பொழுது, அதிக லாபத்தை தேடி அலையும் சில்லரை முதலீட்டாளர்களால் (Sundry Investors) வாங்கிக் கொள்ளப்படுகிறது. இது போன்ற ஊக வாணிபத்தில் ஈடுபடக்கூடிய முதலீட்டாளர்கள் சிறியளவிலான நிச்சயமின்மை தென்பட்டாலும் முதலீடுகளை திரும்பப்பெற்றுக் கொள்வதற்கே விரும்புவர். அவர்களே கடன் பெற்றுள்ள நிதி சந்தையாக இருந்தாலும் இதையே தான் செய்வர்.


வளர்ந்த நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இது பணச் சந்தையில் (குறுகிய கால கடன்) அதிகமாக புழக்கத்தில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது. இது குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களை தங்களது முதலீட்டு பங்கை விற்று வெளியேறுவதற்கு வழிவகுத்துள்ளது. இது கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான தேவையை குறைத்த காரணத்தால் (முன்னேறிய நாடுகளில் அதிக வட்டி கிடைப்பதால்) கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகப்படுத்தி பத்திரங்களை வெளியிடுவதென்பது கடன் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பழைய கடன்களை செலுத்துவதற்காக வாங்கப்படும் புதிய கடன்களுக்கான ஒப்பந்த செலவும் அதிகரித்துள்ளது. இறுதியாக, இலங்கையை பொறுத்தவரை கடன் நெருக்கடி தீவிரமடைந்து திரும்பச் செலுத்த முடியாமல் போகும் போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கைகள் ஒத்திப்போடப்படுவதோடு மட்டுமல்லாமல் கடன் வழங்கியவர்களுக்கு சாதகமான நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை இலங்கையின் கோரிக்கைகையை அவர்கள் மறுக்கவும் செய்வர்.


இலங்கை அரசின் சர்வதேச கடன் பத்திரங்களை கொண்டு வாங்கப்பட்ட கடன் தொகையான 250 மில்லியன் டாலருக்கும் அதிகமான கடனை திரும்பச் செலுத்தத் தவறியதால் Hamilton ரிசர்வ் வங்கி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது. Hamilton நிறுவனம் இலங்கையின் மொத்த கடனில் 25% சதவீத கடன் பத்திரங்களை கொண்டுள்ளதால், கடனை மறுசீரமைப்பு (வட்டி குறைப்பு & கால நீட்டிப்பு)க்கான எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த முடியும். இது ஏற்கனவே இலங்கை அனுபவித்து வரக்கூடிய பேரிடரை நீட்டிப்பதோடு தற்காலிக தீர்வைக்கூட எட்டாக்கனியாக்கிவிடும்.
அந்நியக் கடன் பெறுவதென்பதே பெருந்தவறு என்றாலும் கடன் பத்திரங்களை வெளியிட்டு கடனை பெற முயற்சிப்பது பிசாசை கூட்டிக்கொண்டு தனியார் நிதிச் சந்தையின் கருவறைக்குள் நுழைவது போன்றதாகும்.இவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதிலும், சிறந்த தேசிய அளவிலான பொருளாதாரக் கொள்கையை பின்பற்றக்கூடிய எந்த ஒரு வளர்ச்சி குறைந்த நாடும் கடன் பத்திரங்கள் மூலமாக அந்நியக் கடன் பெறுவதை IMF ஒருபக்கம் ஆதரிக்கவே செய்கிறது.இங்கு சொல்லப்படாத விசயம் என்னவெனில் தேசிய பொருளாதார கொள்கை அடிப்படையில் பார்க்கும் போது அரசு கடன் பத்திரங்களின் மூலம் கடன் பெற முயல்வதென்பதே முட்டாள்தனமான விசயமாகும்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: thehindubusinessline.com