ஈரானை அச்சுறுத்துவதற்காக மத்திய கிழக்கு பகுதியில் போர் விமானங்களையும் போர்க் கப்பல்களையும் களமிறக்கும் அமெரிக்கா

தமிழில்: விஜயன்

ஈரானை அச்சுறுத்துவதற்காக மத்திய கிழக்கு பகுதியில் போர் விமானங்களையும் போர்க் கப்பல்களையும் களமிறக்கும் அமெரிக்கா

ஹவ்தி போராளிகளுக்கு வழங்கி வரும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தெளிவான எச்சரிக்கை செய்தியை ஈரானுக்கு உணர்த்தும் நோக்கத்திற்காகத்தான் ஏமனில், அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களைத் சமீபத்தில் தொடுத்தது என்று அதிபர் டிரம்ப் கூறினார். 

ஏமனில் அமெரிக்க இராணுவம் தொடர்ந்து ஹவ்தி போராளிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாலும், ஈரான் மீதான அழுத்தத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதாலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தங்களது இராணுவ இருப்பை விரைவாக அதிகரித்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. இந்த விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அப்பிராந்தியத்திற்கு கூடுதல் போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் அனுப்பப்படுகின்றன. 

ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காமலும், தனது அணுசக்தி நடவடிக்கைகளை கைவிடுவதற்கு மறுக்கும் எனில், ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த உத்தரவிட நேரிடலாம் என அதிபர் டிரம்ப் அண்மைய நாட்களில் எச்சரிக்கை விடுத்து வந்தார். எனினும், கூடுதல் இராணுவப் படைகளை அனுப்பியதன் நோக்கம் ஈரானுக்கு எதிராக உடனடித் தாக்குதலைத் தொடுப்பது அல்ல என இரண்டு அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். மாறாக, ஏமனில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதோடு, ஈரான் மேலும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பது ஆகியவையே இதன் முக்கிய நோக்கங்கள் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ பலத்தை பெருக்கும் நடவடிக்கையில் இப்போது அதிநவீன F-35 போர் விமானங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அப்பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மறைந்திருந்து குண்டுவீசும் B-2 விமானங்கள், கொன்றொழிக்கும் ட்ரோன்களுடன் சேர்ந்து பயன்படுத்தப்படவுள்ளன என்று தாக்குதல் திட்டங்கள் குறித்து நன்கு அறிந்த அமெரிக்க அதிகாரிகள் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அப்பகுதியில் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் களமிறக்கப்படவுள்ளன. கடந்த இலையுதிர்காலம் (fall) முதல் மத்திய கிழக்கில் USS ஹாரி S. ட்ரூமன் (USS Harry S. Truman) என்ற விமானம் தாங்கி போர்க் கப்பல் ஏற்கனவே அங்கு களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஆசியாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த USS கார்ல் வின்சன் (USS Carl Vinson) என்ற விமானம் தாங்கி கப்பலும் இவற்றுடன் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுக்கள் ஒவ்வொன்றும், சீர்வேக(குரூஸ்)ஏவுகணைகள் பொருத்தப்பட்ட அழிப்புக் கப்பல்கள் (destroyers) மட்டுமல்லாது கூடுதல் போர்க்கப்பல்கள் என பிற சக்திவாய்ந்த கடற்படைப் இராணுவ பலத்தின் (naval forces) துணையோடு செல்கின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களும், நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்காக பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் (Patriot missile defense systems) களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ட்ரம்ப் நிர்வாகம் மார்ச் 15 அன்று ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தமது வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை (airstrike campaign) தொடங்கியது. அப்போதிருந்து, யேமன் தலைநகர் சனா (San’a) மற்றும் பிற முக்கிய பகுதிகளைச் சுற்றி அனுதினமும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் முக்கியமாக ஹவ்தி தலைவர்களையும் அவர்களின் இராணுவ தளவாடங்களையும்  குறிவைத்து நடத்தப்படுகின்றன.

ஏமனில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களின் போது, செவ்வாயன்று, ஒரு அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் கூறினர். பென்டகன் இந்தக் கூற்றை ஒப்புக்கொண்ட போதிலும், அது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கவில்லை. வார தொடக்கத்தில், ஹவ்திகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தனர். எனினும், அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்பே இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தவறினால் ஈரான் மீது குண்டுவீசுவோம் என்று அச்சுறுத்துவதோடு, ஈரான் ஹவ்திகளுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கியுள்ள காரணத்தால் ஹவ்திகள் அமெரிக்கப் படைகளைத் தாக்கினால் அதற்கு ஈரானை பொறுப்பாக்குவோம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

“பிராந்திய மோதலை விரிவுபடுத்தவோ அல்லது தீவிரப்படுத்தவோ முயலும் எந்தவொரு அரசு அல்லது அரச-சாரா அமைப்பிற்கும் பதிலடி கொடுக்க அமெரிக்காவும் அதன் பங்காளி நாடுகளும் தயாராக உள்ளன. ஈரான் அல்லது அதன் பினாமி குழுக்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பணியாளர்களுக்கும், அமெரிக்க உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்தால், தங்கள் மக்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியான நடவடிக்கை எடுக்கும்,” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக எந்தத் தாக்குதல் தொடுத்தாலும், அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க உடைமைகளைத் தாக்கும் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.

"அமெரிக்கர்கள் ஈரானின் இறையாண்மையை மீறத் துணிந்தால், ஆயுதக் கிடங்கில் எழும் ஒரு சிறு தீப்பொறிபோல் ஒட்டுமொத்தப் பிராந்தியமும் வெடித்துச் சிதறும்," என்று தெஹ்ரானில் ஆற்றிய உரையொன்றின் போது, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் கூறினார்.

எங்களின் எந்தவொரு பதிலடியும், முக்கியமாக பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையே குறிவைக்கும் என்று ஓர் ஈரானிய அதிகாரி குறிப்பிட்டிருந்தார். "ஒவ்வோர் அமெரிக்கச் சிப்பாயும் தனித்தனியாக குறி வைக்கப்படுவார்கள்" என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

ஜனவரி 2020-இல், பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட ஒரு வான்வழித் தாக்குதலில், ஈரானின் உயர்மட்ட குட்ஸ் படையை வழிநடத்திய தளபதி காசிம் சுலைமானியைக் படுகொலை செய்யுமாறு முதல்முறை அதிபராக இருந்த போது டிரம்ப் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப்’ன் முந்தைய நடவடிக்கைகள் காரணமாக அவருடன் ஒரு முழுமையான மோதலைத் தொடங்குவதில் ஈரான் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது என்பது சில அரசியல் வல்லுநர்களின் கணிப்பாக இருக்கிறது. 

 

கடந்த வார இறுதியில், ப்ளானெட் லேப்ஸ் பிபிசி எடுத்த சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றின்படி, டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள ஓர் அமெரிக்க விமானப் படைத் தளத்தில் நான்கு B-2 ஸ்டெல்த்(ஒளிந்து மறைந்து) குண்டுவீச்சு விமானங்கள் களமிறக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

(புகைப்படம் ஆதாரம்: ப்ளானெட் லேப்ஸ் பிபிசி/அசோசியேட்டட் பிரஸ்)

மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க மத்திய தலைமைப் படைத் தளபதியான ஜெனரல் மைக்கேல் “எரிக்” குரில்லா, ஹவுதி தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஒரு கடுமையான பதிலடியைத் தரவேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்தத் தாக்குதல்கள், குறிப்பாக செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்வழிகள் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்படுபவை; 2023 இல் இஸ்ரேல்-காஸா போர் தொடங்கியதிலிருந்து இவை அதிகரித்துள்ளன.

ஏமனில் பரந்துபட்ட நிலப்பரப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவ்தி போராளிகள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் காஸாவில் ஒரு குறுகிய கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர். ஆனால், அந்த ஒப்பந்தம் முறிந்ததும் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்ததும், தாங்களும் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதாக ஹவ்திகள் அறிவித்தனர்.

இஸ்ரேலும் ஹமாஸும் மோதிக்கொண்டிருந்த சூழலில் ஒரு பெரிய மத்திய கிழக்கு பிராந்தியப் போர் வெடிப்பதைத் தவிர்க்க முயன்ற பைடன் நிர்வாகம், சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பியதுடன், ஹவுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது. ஆனால் டிரம்ப் நிர்வாகமோ மிகவும் முரட்டுத்தனமான அணுகுமுறையைக் கையாள்வதோடு, ஹவ்தி இராணுவத் தலைவர்கள் உட்பட குறிவைக்கப்படுபவர்களின் பட்டியலையும் விரிவுபடுத்தியுள்ளது.

 

யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் பொதுவாக ஆசியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, எனினும் ஓரிரு வாரங்களுக்குள் அது மத்திய கிழக்குக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்க பென்டகன் பல ஆண்டுகளாக படைகளை பசிபிக் பகுதிக்கு மாற்ற முயன்று வந்தபோதிலும், மத்திய கிழக்கு இன்னமும் ஒரு முக்கிய கவலையாகவே நீடிக்கிறது என்பதையே அமெரிக்காவின் இந்தப் புதிய களமிறக்கும் நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

சமீப நாட்களில் அமெரிக்காவும் ஈரானும் பதிலுக்கு பதில் எச்சரிக்கைகளை விடுத்துவந்த நிலையில், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் பரபரப்பாக செயல்படத் துவங்கியுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் உள்ள ஒரு விமான தளத்திற்கு B-2 குண்டுவீச்சு விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. பைடன் நிர்வாகம் அக்டோபரில் ஏமனில் உள்ள ஹவ்தி நிலத்தடி ஆயுதக் கிடங்குகளைத் தாக்குவதற்கு B-2 விமானங்களையே பயன்படுத்தியது.

விமானப் போக்குவரத்து கண்காணிப்புத் தரவுகளின்படி, ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி விமானப்படைக்கான சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள் தொடர்ந்து பறந்து வந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

- நான்சி, யூசுப், மைக்கேல் கார்டன், பெனோய்ட்

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.wsj.com/world/middle-east/u-s-sends-warplanes-ships-to-the-middle-east-in-warning-to-iran-f72fcaff